உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 27, 2011

இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?


பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

நம்மில் பெரும்பாலான மனிதர்களுக்கு செல்வம் சேர்த்தல், அழகான மனைவி-மக்கள், பொறுப்புக்களை கவனிப்பது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் இன்ன பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக பற்று வைப்பதே முக்கிய நோக்கமாக இருக்கும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூறவில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என பலர் தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியை செலவழித்து இளமையையும் இழந்து விடுகின்றனர். ஒரு மனித படைப்பின் நோக்கம் இது மட்டுமா?

நம்மைப் படைத்த இறைவனுக்கு பயந்து, அவனையே வணங்கி, அவனுடைய திருப்தியை பெற வேண்டி நல்லமல்கள் புரிவதுதான் மனித வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை அடைவதற்காக அவர் கடுமையாக முயற்சிகளை தனது ஆத்மாவிற்கு கொடுக்க வேண்டும். அதுதான் நம்மை படைத்த அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ் இந்த மனித சமுதாயத்தின் மீது ஏற்படுத்தியிருக்கின்ற தேர்வு (பரிட்சை) ஆகும். இந்த தேர்வில் நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டியது மறுமை வாழ்விற்கு மிக மிக அவசியமாகிறது.

'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி        நான் படைக்கவில்லை' (அல்குர்ஆன் 51:56)
ஒவ்வொருவரும் தவிர்க்க இயலாமல் மறுமையின் ஒரே நீதிபதியாகிய, ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ் ஸுபஹானத்தஆலாவின் முன்னிலையில் நிற்பதை அஞ்சக் கூடியவர்களாக இருப்பதையே 'இறையச்சம்' அல்லது 'பயபக்தி' என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.
'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட)முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்' (அல்குர்ஆன் 3:102)

 இந்த இறையச்சமே, நம்முடைய வாழ்நாளில் நற்கருமங்கள் செய்வதற்குத் தூண்டி, அதிக நம்மைகளைக் கிடைக்கச் செய்து, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தந்து, மறுமையில் நமக்கு இறைவன் வாக்களித்த சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும். இன்ஷh அல்லாஹ்.
 இந்த இறையச்சமே, நம்மை அல்லாஹ்வுக்கு கோபத்தை உருவாக்குகிற செயல்களைச் செய்வதை விட்டும் தடுத்துவிடும். இன்ஷh அல்லாஹ்.

தக்வா (இறையச்சம்) என்பது:-
• அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாத, அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு செயலைச் செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருப்பதும்,


• அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்கின்ற நற்கருமங்களைச் செய்வதும்,

• நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும், தவிர்க்க இயலாத மறுமை நாளில் நாம் நம்மைப் படைத்த இறைவனின் முன்னிலையில் நிறுத்தப்படுவோம் என்று உறுதியாக நம்புவதும்,

• நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவனுக்கு கணக்கு கூறக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம் என்றும் உறுதியாக நம்புவதும்,

• ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்னால், அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவானா அல்லது கோபமடைவானா என ஆராய்ந்து தீர்மானிப்பதற்கும்,

• அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவான் என கருதினால் அதை முழு மனதோடு இறை திருப்திக்காக மட்டுமே செய்வதற்கும்,

• அந்தச் செயலைச் செய்தால் இறைவன் கோபமடைவான் என கருதினால் அதைச் செய்வதை விட்டும் உடனடியாக தவிர்ந்துக் கொள்வதற்கும்,

• ஹராம்-ஹலால் பேணுதல் மற்றும் சந்தேகத்திற்கு உரியவைகளை விட்டும் தவிர்ந்திருத்தலுக்கும்,

• நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக என்ற எண்ணத்தின் அடிப்படையிலே நற்கருமங்கள் புரிவதற்கும்,

• நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்த ஒரு செயலை விட்டும் தவிர்ந்திருப்பதும் ஆகும்.
அல்குர்ஆனின் பல இடங்களில் சுவனபதியை வாக்களிக்கும் இறைவசனங்கள் தக்வா(இறையச்சத்தை)ப் பற்றிக் கூறுவதைப் பார்க்கலாம்.
இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)

(அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீப-மாக்கப்படும். இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது). எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது). (அல்குர்ஆன் 5: 31-33)
நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள். அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள். அன்றியும், அவர்-களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான். (அல்குர்ஆன் 52:17-18)

நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய)  சுவனச்சோலைகள் உண்டு. (அல்குர்ஆன் 68:34)
என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான். (அல்குர்ஆன் 16:31)
அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்' என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும். அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள். இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும். (அல்குர்ஆன் 25: 15-16)

நம்மைப் படைத்த இறைவனைப் பற்றிய பயம், அச்சம், பயபக்தி நம் உள்ளத்தில் இடம்பெறுவதற்கு, நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இறையச்சத்துடன் கூடிய வாழ்க்கை நெறியை மேற்கொள்வதற்குரிய மிகச் சிறந்த வழி அல்லாஹ்வின் அருள்மறையாம் திருக்குர்ஆனை பொருணர்ந்து படித்து, புரிந்து அல்லாஹ் கூறியிருக்கின்ற வாழ்வு நெறிமுறைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டு, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பின்பற்றி நடந்து, நம்முடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ் தன் திருமறையின் கட்டளைகளுக்கிணங்க மாற்றி அமைத்துக் கொள்வதேயாகும்.
யாரொருவர் தமது வாழ்நாட்களை அல்லாஹ்வை அதிகமாக வணங்குவதிலும், தொழுகையை நிலை நாட்டுவதிலும், ஜக்காத் கொடுப்பதிலும், ஹஜ் செய்வதிலும், சகோதரத்துவத்தைப் பேணுவதிலும் மேலும் அவரது ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திப்பொருத்தத்தை நாடுவதிலும், அல்லாஹ்வே நமது சாட்சி என்று அவனது வேதமாகிய அல்குர்ஆனுக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடக்கிறாரோ அவரே அல்லாஹ் வாக்களித்திருக்கும் சுவனத்திற்கு சொந்தக்காரர்களாவார்.

அல்லாஹ் ஸுபுஹானத்தஆலா உங்களுக்கும், எங்களுக்கும் மற்றும் முஃமினான ஆண் பெண் அனைவருக்கும் கருணை புரிந்து, அவனது திருப்தியுடன் சுவனபதியைப் பெற்றுத்தரவல்ல அவனது இந்த நேரான பாதையைத் தேர்ந்தெடுக்கும் மன உறுதியைத் தந்து, அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற அனைத்துச் செயல்களிலிருந்தும் தவிர்ந்திருக்கக் கூடிய மன வலிமையத் தந்தருள்வானாக!    

(நன்றி: சுவனத்தென்றல் இணையதளம்)

No comments:

Post a Comment