உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, July 26, 2016

4000 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச சந்தையாக விளங்கிய துபை

துபை கடற்கழிமுகம் (Creek) தற்போது முன்னேற்றம் அடைந்ததன் விளைவாகத் தான் நவீன உலகில் சர்வதேச சந்தை முனையமாக விளங்குகிறது என்று நினைப்பது தவறு என்பதை நிரூபித்துள்ளது 'சாரூக் அல் ஹதீத்' (Saruq Al Hadid) எனும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்.
சர்வதேச கடற்வழி மற்றும் நில வழித்தடத்தின் (Trade Link Cross Roads of Sea Route & Land) மையமாக விளங்கும் துபை நகரிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில், அபுதாபி எல்லையருகே அமைந்துள்ள 'ருப் அல் காலி' (Rub Al Khali) பாலைவன பிராந்தியத்தில் அமைந்துள்ள 'சாரூக் அல் ஹதீத்' எனும் அகழ்வாய்வு பகுதியில் கிடைத்திருக்கும் சுமார் 900 வகையான பழமையான பொருட்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய துபை பல்வேறு உலக நாடுகளான எகிப்து, சிரியா, மெசப்படோமியா (ஈரான், ஈராக்), பஹ்ரைன் (Current Dilmun Area), இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் கிழக்கத்திய மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் அன்று கொண்டிருந்த வர்த்தக தொடர்புகளையும், சர்வதேச சந்தை முனையமாக இன்று போல் அன்றும் கலியுக கால (Iron Age) துபை திகழ்ந்துள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.


சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மூன்றாம் துத்மோஸ் (Thutmose III [the sixth pharaoh of the 18th dynasty] என்கிற 18வது வம்ச பாரோ (பிர்அவ்ன்) மன்னனின் அரசு முத்திரை, இந்தியாவின் ஆபரணங்கள் மணிமாலைகள், பஹ்ரைனின் பாம்பு சிற்பங்களுடைய மண் பாண்டங்கள், சிரியாவின் ஒலிவ (Olive) மரச்சாமான்கள், மெசப்படோமியாவின் நறுமண தூபக் கால்கள் (Incense Burners) என பண்டைய சர்வதேச வணிகப் பொருட்களுடன் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், ஷார்ஜாவின் 'அல் மஹிலா' அகழ்வராய்வு பகுதியில் கிடைத்ததை போன்ற தங்க இழை ஆபரணங்களும், அல் அய்ன் ஓமன் எல்லையில் அமைந்துள்ள அல் ஹஜர் மலை பிராந்திய விவசாய பொருட்களும், ஒட்டக எலும்புகளும் கிடைத்துள்ளன ஆனால் அவர்கள் கடற்பயணம் செய்ததற்கான படகு போன்ற எத்தகைய ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.


பொதுவாக, மனித நாகரீகம் என்பது ஆறு மற்றும் கடல் பிரதேசங்களை ஒட்டியே தழைத்தோங்கும் ஆனால் 'சாரூக் அல் ஹதீத்' நாகரீகமும் வணிகமும் பாலைவனத்தின் உள்ளே நிகழ்ந்திருப்பது ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது. இன்னும் தோண்டத் தோண்ட பல்வேறு முடிச்சுக்கள் அவிழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.துபை ஷின்டாகா அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் நடப்பு ஜூலை 3 ஆம் தேதி (03.07.2016) அன்று துபை ஆட்சியாளர் ஷேக். முஹமது அவர்கள் பொதுமக்கள் பார்வைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 'சாருக் அல் ஹதீத்' சிறப்பு அரும்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.


'சாரூக் அல் ஹதீத்' அகழ்வாராய்ச்சியை ஒட்டி எழும்பியுள்ள விடைதெரியாத அல்லது எதிர்காலத்தில் விடை கிடைக்கலாம் என நம்பக்கூடிய புதிர்கள் சில,

1. எங்கிருந்து இந்த மக்கள் வந்தார்கள்? அவர்களின் இனமென்ன? மொழி என்ன? மதமென்ன?

2. பண்டைய நகரீக மக்கள் தெரிவு செய்தது போல் கடலோரத்தையோ மலையடிவாரங்களை தேர்வு செய்யாமல் நட்டநடு பாலைவன வாழ்வை தேர்ந்தெடுத்ததேன்?

3. அவர்களின் தினசரி வாழ்வு எப்படிப்பட்டது? எத்தகைய உணவு, உடை அவர்களுடையது?

4. அவர்களின் உறைவிடம் எது? கல்லறை எங்கே?

5. அவர்கள் எங்கிருந்து உலோகங்களையும், தங்கத்தையும், இரும்பையும் இங்கு கொண்டு வந்தார்கள்?

6. போக்குவரத்திற்கு ஒட்டகத்தை தவிர வேறு என்ன வகை வாகனங்களை பயன்படுத்தினார்கள்? படகுகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளார்களா?

7. அவர்கள் உபயோகித்த பல பொருட்களின் மீதும் பாம்பு உருவம் பதிக்கப்பட்டுள்ளது ஏன்? பாம்பு புனிதமா அதை வணங்கினார்களா?

8. சிப்பிகளின் மீது 6 கால் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ள புதிரென்ன?

9. காப்பு போன்ற பெரிய அளவிலான அணிகலன்கள் எதற்காக? ஓட்டகத்தை அலங்கரிக்கவா அல்லது வேறு நோக்கத்திற்கா?

10. ஏன் அவர்கள் பித்தளை கைப்பிடியுடன் இரும்பு கத்தி / வாள்கள் போன்றவற்றை இரு உலோக இணைப்புடன் தயாரித்தனர்?

11. ஓலிவ மரச்சாமான்களை அவர்கள் சிரியாவிலிருந்து இறக்குமதி செய்தார்களா? அல்லது ஒலிவ மரங்களையே இங்கு விளைவித்தார்களா?

12. நடைபெறவுள்ள துபை 2020 எக்ஸ்போவின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்கத்தில் செய்யப்பட்ட பொத்தான் (கீழே படத்தில் காண்க) போன்ற பொருள் அந்த மக்களிடையே வாழ்ந்த செல்வந்தர்கள் அல்லது அரசர்களுடைய உடைகளை அலங்கரித்தவையா?


13. விரல்கள் போன்று உலோகத்தில் செய்யப்பட்டுள்ளவை என்ன? அவை குழந்தைகள் விளையாடும் பொம்மைகளா அல்லது யதார்த்தமாக கொல்லர்களால் செய்யப்பட்டதா?

14. பிரமாண்ட பானைகள் (தாழிகள்) எதற்காக பயன்படுத்தினார்கள்? வெறும் அலங்காரப் பொருளா? அல்லது தண்ணீர், எண்ணெய் சேமிக்கவா?

15. எப்போது அவர்கள் வாழ்வும், நாகரீகமும் முற்றுப்பெற்றது? அங்கிருந்து அவர்கள் சென்ற காரணமென்ன?

என அகழ்வாராய்ச்சியாளர் எழுப்பும் கேள்விகளும் இன்னும் முற்றுப் பெறவில்லை, நடந்து கொண்டிருக்கும் அகழாய்வு பணியும் முற்றுப் பெறவில்லை.

மூலமும் படங்களும்: கல்ஃப் நியூஸ்

கருப்பொருள் தமிழாக்கம்: அதிரை அமீன்

Thursday, July 21, 2016

துபையில் நாளை 22.07.2016 வெள்ளி காலையில் 'ரமலானுக்கு பிறகு' எனும் சிறப்புத் தர்பியா மவ்லவி. அப்துல் பாசித் வழங்குகிறார்.

இன்ஷா அல்லாஹ், நாளை 22.07.2016 காலையில் 8.45 to 11.00 வரை துபை, தெய்ரா, அல் பரஹா பகுதியில் அமைந்துள்ள அல் மனார் குர்ஆன் ஸ்டடி சென்டரில் சிறப்புத் தர்பியா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


Wednesday, July 20, 2016

APJ அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டாம் சிலை! வேண்டாம் நினைவிடம்!!


அப்துல் கலாம் சிலை, நினைவிட விவகாரமும் முஸ்லீம் மற்றும் பிற மத சகோதர அமைப்புகள் முன்னுள்ள கடமைகளும்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இந்திய மக்களின் இதயங்களில் வாழ்பவர், இந்தியாவை சர்வதேச அரங்கில் தலை நிமிர செய்தவர், தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் நாயகர், கல்வியின் தூதுவர் என எத்தனையோ சிறப்புக்களை இன்னும் சொல்லிக் கொண்டே செல்லலாம். அவை காலத்தால் அழியாதவை. 

இந்தியாவில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த தலைவர்களுக்கு அவர்களின் இறப்புக்குப் பின் சிலையும், நினைவிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அதற்கு அவர்கள் சார்ந்த ஜாதி மத கட்டமைப்பும், அவர்களின் நம்பிக்கையும் அதற்கு அனுமதிக்கின்றன.

அப்துல் கலாம் அவர்களுக்கு முன்னும் இரு இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்து மரணித்திருந்தாலும் அவர்களுக்கு இன்று வரை சிலைகள் இல்லை என்பதையும், அதற்காக இது வரை யாரும் கோரிக்கை எழுப்பவில்லை, போராடவில்லை என்பதையும் நடுநிலையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்துல் கலாம் அவர்கள் ஒரு முஸ்லிமாக பிறந்தவர், முஸ்லிம் என்ற நிலையிலேயே மரணித்தவர் என்பதை யாரும் மறுக்க மாட்டீர்கள் எனும் போது அவர் சார்ந்த மார்க்கம் (மதம்) அனுமதிக்காத, விரும்பாத ஒன்றை அவர் குடும்பத்தினரே அறியாமையினால் விரும்பினாலும் சிலையையும், நினைவிடத்தையும் எழுப்புவது முறையா? இவற்றை அவர் சார்ந்த சமூகமும், அதன் அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா?

கடந்த சுமார் ஒரு வருடமாக, சாதாரணமாக உள்ள அடக்கத்தலத்தால் அப்துல் கலாம் அவர்களின் சாதனைகளுக்கோ, புகழுக்கோ ஏதேனும் குறை எற்பட்டதா? இனி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சிலையினாலோ, நினைவிடத்தாலோ அவருக்கு புதிதாக ஏதேனும் பெருமைகள் சேர்ந்து விடப்போகிறதா? பொதுமக்களின் அல்லது அவரது குடும்பத்தினரின் வாழ்வாதரத்தில் ஏதும் ஏற்றம் வந்துவிட போகிறதா?

எத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதராக இருந்தாலும் சரியே, வாழும் போதே மிக எளிமையான மனிதராக இருந்த ஒருவருடைய 6 அடி சமாதிக்காக பல ஏக்கர் நிலங்களை வீணடிப்பது அறிவுடைய செயலா? நியாயமா?

பொதுவாக தலைவர்களின் சிலைகள் காகங்களின் கழிப்பிடமாகவும், சிலைகள் அவமதிக்கப்பட்டுவிட்டன என்ற பெயரில் மனிதர்களின் மத்தியில் கலவரங்கள் ஏற்படவே உதவும் என்பது நடைமுறை நிஜமாகவும் இருக்கும் நிலையில், இஸ்லாம் விரும்பாத ஒன்றை பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோருவதையும், மத்திய ஆளும் கட்சி அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் உடனே நிறுத்த வேண்டும்.

அப்துல் கலாம் அவர்களின் பெயரால் நடைபெறவுள்ள வீண் விரயங்கள் நிறுத்தப்படவும், சிலைக்காக செலவழிக்கப்பட உள்ள தொகையை அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ஏழை குழந்தைகளின் கல்வி உயர்வுக்காக செலவிடப்பட வேண்டும், இதற்காக முஸ்லீம் சமூகமும் அதன் அமைப்புகளும், தோழமை சகோதர மக்களும் உடன் கைகோர்த்து தண்டச் செலவுகளையும், வீண் வேலைகலையும் தடுக்க முன்வர வேண்டும்.

அவருடைய கல்லறையை அப்படியே விட்டு விடக்கோரியும், வரும் 2016 ஜூலை 27 அன்று மத்திய அரசு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள சிலை, நினைவிட வேலைகளை நிறுத்த அனைவரும் ஜனநாயக வழியில் போராடி மத்திய அரசுக்கும், அரசியல் கட்சியினருக்கு புரிய வைக்க முன்வருமாறு அனைவரையும்  வேண்டுகிறோம்.

இறைவனின் பொறுப்பில் சென்றுவிட்ட ஒரு ஆத்மாவிற்கு, சர்வதேச தரத்தில் மட்டுமல்ல உள்ளூர் தரத்தில் கூட வேண்டாம் சிலை, வேண்டாம் நினைவிடம்.

Monday, July 18, 2016

பிறை விவகாரம்: அதிரை ஆலிம்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்


இந்த வருட ஈதுல் ஃபித்ரு பெருநாளில் தான் எத்தனை சங்கடங்கள்! குழப்பங்கள்!

1. பெருநாளா? மறுநாளா?

2. கொண்டாட்டமா? திண்டாட்டமா?

3. நோன்பு வைப்பதா? விடுவதா?

4. நோன்பை விடுவது அல்லது பெருநாளை விடுவது ஹராமா? ஹலாலா?

5. ஒரே வீட்டினுள் சிலர் முதல் நாளும், சிலர் அடுத்த நாளும் என 2 நாட்கள் பெருநாள் கொண்டாடுவது சரியா?

6. ஒரே ஊருக்குள் 2 பெருநாட்கள் வருவது சரியா? (ஒரு குழுவினர் மிகச்சில வருடங்களுக்கு முன் 3 வது நாளும் தனித்து பெருநாள் கொண்டாடிய அதிசயமும் நடந்துள்ளது)

7. முதல் நாள் பெருநாள் அறிவிக்கப்பட்டதால் பேணுதலுக்காக நோன்பை விட்டுவிட்டு அடுத்த நாள் பெருநாளை மட்டும் கொண்டாடுவது சரியா?

8. 30வது இரவில் மஃரிப் தொழுகை முடிந்தது முதல் பிறை குறித்து (ஏற்று அல்லது மறுத்து) அறிவிப்பு வெளியிடுவார்கள் என இரவின் நெடுநேரம் வரை அதிரை அறிஞர்கள் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் காத்திருந்து கஷ்டப்பட்டது முறையா?

9. கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பெருநாள் தின சிறப்பு சமையல் குறித்து பெண்கள் முடிவெடுக்க முடியாது அல்லாடவிட்டது நியாயமா?

10. ஆண்களில்லா வீட்டிலுள்ள பெண்கள் இரவெல்லாம் அறிவிப்பை எதிர்பார்த்திருந்து விட்டு அடுத்த நாள் காலையில் சமையல் செய்வார்களா? அல்லது பெருநாள் தொழுகைக்கு தயாராவார்களா?

என இன்னும் மக்கள் சந்தித்த சங்கடங்களின் பட்டியலை நீட்ட முடியும் என்றாலும் அதிரை மக்களின் மனங்களை உணர்ந்து கொள்ள இதுவே போதுமானது.

மேற்படி புயலடித்து ஒய்ந்துள்ள இந்த சூழலே பிறை குறித்து நமதூர் ஆலிம்களுக்கு வேண்டுகோள் விடுக்க சரியான தருணமாக கருதுகிறோம். இந்த வருட ரமலான் பெருநாள் பலத்த பெரும் சர்ச்சைகளுக்கிடையே கடந்து சென்று விட்டது. சர்ச்சையின் பிரதான காரணங்களாக நாங்கள் 4 விஷயங்களை கருதுகிறோம்.

1. நம்பகமற்றவர்களாக மக்களால் கருதப்படும் ஒரு குழுவினரால் முதலில் பிறை அறிவிக்கப்பட்டது.

2. நம்பகமானவராக தெரிந்த தலைமை காஜியின் பிறை அறிவிப்பு பல்வேறு காரணிகளால் மக்களின் நம்பிக்கையை தகர்த்தது.

3. காயல்பாட்டிணத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த மதுஹப் ஆதரவு மக்களின் நம்பகமான பிறை அறிவிப்புகளை, மக்களின் கவனத்திற்கு கூட கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

4. எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி, பிறை காணும் முன்பாகவே பெருநாள் விடுமுறை நாளாக வியாழக்கிழமையை (செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கெல்லாம் அரசு அலுவலகங்களில் சுற்றறிக்கை மூலம்) திணித்து விட்ட தமிழக அரசினரின் காரணம் அறிவிக்கப்படாத நிர்ப்பந்தம். (உண்மை நிலையை இதன் விபரமறிந்த த.ந.அரசு ஊழியர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது)

மேற்படி காரணிகளை பலரும் பலவாறாக ஆய்ந்துவிட்ட நிலையிலும், தூவானமாய் சிலர் அப்பாடா! நல்லவேளை எங்கள் கட்சி தற்போது ஆட்சியிலில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் மேலும் எங்கள் பங்கிற்கு உரசிக் கொண்டிருக்காமல் அதிரை ஆலிம்களிடம் சமர்ப்பிக்க நினைக்கும் எங்கள் கருத்தினுள் நுழைகிறோம்.

வரலாற்றுபூர்வமாக நம் அதிரை மக்கள் பிறை விஷயத்தில் நமதூர் ஆலிம்களின் தீர்ப்பை பின்பற்றியே நோன்பையும் பெருநாளையும் கடைபிடிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளோம்.

நமதூர் ஆலிம்கள் பிறை பார்க்க வேண்டிய நாட்களில் அன்றைய 'மரைக்கா பள்ளியில்' கூடி உள்ளூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது வெளியூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது அதிரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரமேயுள்ள இலங்கை பிறையின் (அன்றைய காலத்தில் நம் தொடர்பு எல்லைக்குள்ளிருந்த ஒரே சர்வதேச பிறை) அடிப்படையிலோ இன்றுபோல் தொலைத்தொடர்பு வசதிகளற்ற முந்தைய காலங்களில் பிறை அறிவிப்பை விடுத்து வந்தனர். 

இலங்கை பிறை என்பது பலமுறை இலங்கை வானொலியின் அறிவிப்பை 'கேட்டு' ஏற்பதாகவே இருந்ததும் உண்மை. ஊருக்கு ஒரு சில போன்கள் மட்டுமே அபூர்வமாக இருந்தபோதும் அவற்றினூடாகவும் பிறை பார்த்தலை கேட்டு உறுதி செய்து கொண்டுள்ளோம். நமதூர் ஆலிம்களின் மசூரா அடிப்படையிலான பிறை அறிவிப்பை மதுக்கூர், முத்துப்பேட்டை, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற நமது பக்கத்து ஊரார்களும் ஏற்று செயல்படுத்தி வந்தனர் என்பதும் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.

ஏன் அப்போது சர்ச்சைகள் எழவில்லையா? எழுந்தன, ஆனால் அவை ஏன் எங்கள் பகுதிக்கு நேரத்தோடு தகவல் சொல்லி அனுப்பவில்லை? ஏன் மிகத் தாமதமாக அறிவிக்கின்றீர்கள் என்ற அளவிலேயே இருந்தன என்றாலும் மக்கள் ஆலிம்களிம் பிறை தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் அறிந்து ஒரேயொரு வருடம் மட்டும் தகவல் அறிவிப்பு அவர்களிடம் நேரத்திற்கு சொல்லப்படாத காரணத்தால் ஆலிம்களின் பிறை அறிவிப்பை சில தெருக்கள் மட்டும் ஏற்கவில்லை என்பதாக எங்கள் ஞாபகம். சர்ச்சைகள் எத்தனை எழுந்து அடங்கினாலும் அதிரைக்கு பெருநாள் தினம் என்பது ஒரே தினமாகத் தான் இருந்தது.

பல வருடங்கள் மக்கள் சுபுஹூக்குப்பின் காலை வேளையை அடைந்த நிலையில் வெளியூர்களில் பிறை பார்த்த நம்பகமாக செய்திகள் தாமதமாக கிடைத்து அதிரை ஆலிம்களால் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதற்கு அல்லாஹ்வின் அருளால் இன்னும் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வாழும் சாட்சி.

மேலும், தலைமை காஜி அல்லது மாவட்ட காஜி அல்லது டவுன் காஜி அல்லது உள்ளூர் காஜி என்பன போன்ற தமிழக அரசு ஊழியர்களின் அறிவிப்பின் அடிப்படையில் அதிரையில் பிறை அறிவிப்புகள் செய்யப்பட்டதே இல்லை என்பதையும் பிறை ஆலோசணை அமர்வுகளில் பங்கு கொண்டு வந்த, இன்னும் அல்லாஹ்வின் அருளால் ஹயாத்துடன் உள்ள ஆலிம்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம். ஒருவேளை இத்தகவல் பிழையென்றால் எங்கள் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்.

அரசு காஜிகள், அமைப்பு காஜி, (அரசியல் கூட்டணி தர்ம) ஹிலால் கமிட்டி, அனைத்து தேசிய, மாநில இயக்கங்களின் பிறை அறிவிப்புகள், கணிப்புகள் போன்ற குழப்பங்கள் பெருகியுள்ள நிலையில் அவைகளின் அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், அதேவேளை இன்று தகவல் தொழிற்நுட்பங்கள் பெருகியுள்ள நிலையில், திறந்த மனதுடன் சர்வதேசப் பிறை முதல் உள்ளூர் பிறை வரை நாம் ஏற்று ஆலோசித்து அதிரையில் முன்பு அமல்படுத்தியவர்கள் என்ற கடந்த கால வரலாற்றை மீண்டும் நம்மால் செயல்படுத்திட இயலும் என்ற இறை சார்ந்த நம்பிக்கை மேலோங்குவதாலும் அதிரை ஆலிம்கள் மீண்டும் அதிரைக்கான ஒரு பிறை கமிட்டியை ஏற்படுத்தி அதின் புற உறுப்பினர்களாக பள்ளிக்கு ஒருவரையும், உங்களோடு பிறை விஷயத்தில் ஒத்துவருகின்ற உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இடம் பெறச்செய்து, பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் சர்வதேசம் முதல் உள்நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், உள்ளூர் என அனைத்து நம்பகத் தகவல்களையும் திறந்த மனதுடன் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆய்ந்த மசூரா முடிவினை அதிரைக்கான பிறை மற்றும் பெருநாளாக அறிவிக்க முன்வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.

இனியொரு முறை இயக்கங்களோ, காஜிகளோ, அரசோ நமது அதிரையின் பிறை நாட்களை தீர்மானிக்க நாம் இடமளிக்க வேண்டாம். பிறை பார்த்த, பார்த்ததை கேட்ட நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் நோன்பை நோற்கவும், பெருநாளை கொண்டாடவும் மீண்டும் அதிரையர்கள் அனைவரும் முன்வர வேண்டும் அதற்கு முன்முயற்சிகளை அதிரை ஆலிம்கள் இப்போதே துவங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

வரும் ஹஜ்ஜூப் பெருநாளாவது அதிரையர் அனைவரும் முன்பு போல் ஒரே நாளில் கொண்டாடிய பெருநாட்கள் போல் அமைய எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கின்றோம்.

வேண்டுதல்: 
ஆலீம்களுடன் தொடர்புடைய உள்ளூர் சகோதரர்கள் இந்த வேண்டுகோளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இது பல நல்ல புரிந்துணர்வுகளுக்கு இனிய துவக்கமாய் அமையட்டும்.

இவண்
அமீரகம் வாழ் அதிரை சகோதரர்கள்

Saturday, July 9, 2016

அதிரையில் மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு படங்கள்


அதிராம்பட்டினம், ஜூலை-09

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம், மேலத்தெரு சானாவயல், பிஸ்மி காம்ப்ளக்ஸ் எதிர்புறம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) புதிய பள்ளிவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று [ 09-07-2016 ] சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

இதில் இஸ்லாமிய மார்க்க பிரசாரகர் மவ்லவி அலி அக்பர் உமரீ கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். பள்ளியில் முதன் முதலாக மஹ்ரிப் தொழுகை நடத்தப்பட்டது. இதில் அனைவரும் கலந்துகொண்டனர்.

பள்ளியில் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டதால் பள்ளிவாசல் வரண்டா பகுதியில் அமர வைக்கப்பட்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மஸ்ஜித் ஃபாத்திமா ( ரலி ) நிர்வாக கமிட்டியினர் செய்து இருந்தனர்.

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த ஆஸ்திரேலியா வாழ் அதிரையர் முஹம்மது மீரா சாஹிப் அவர்கள் மகன் முஹம்மது யாசின் அவர்களால் இந்த பள்ளி வக்ப் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
 

 
 
 

Friday, July 8, 2016

அதிரை ஈத் கமிட்டி நடத்திய பெருநாள் திடல் தொழுகை குறித்து அதிரை நிருபர் தளத்தில் பதிவான செய்தி

பிறை பார்த்து நோன்பை துவங்குங்கள் பிறை பார்த்து நோன்பை நிறைவு செய்யுங்கள் ! - நபிமொழிஅல்ஹம்துலில்லாஹ்...!

பிறை கண்டதற்கான நம்பகமான சாட்சியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து உறுதி செய்யப்பட்டதால்... அதிரை ஈத் கமிட்டியின் சார்பாக அதிரையில் மிகச் சிறப்பான முறையில் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது !


ஆண்களும் பெண்களும் வழமைபோல் திரளாக வந்து கலந்து கொண்டனர்...!
இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்துணர்வூட்டும் தலைப்பில் இன்றைய தவ்ஹீத் வாதிகளால் சிறுக சிறுக சுருக்கி கொள்ளப்பட்ட பிராத்தனையின் பலத்தையும் அதனை இறைவன் எவ்வாறு நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறான். நாம் எவ்வாறு பிரார்த்தனைகளை அல்லாஹ்விடம் மட்டுமே வைக்க வேண்டும் என்று அருமையானதொரு பெருநாள் உரை அமைந்து இருந்தது.

இன்றைய பெருநாள் தொழுகையின் முத்தாய்ப்பாக தாருத் தவ்ஹீத் செயலாளரின் அறிவிப்பு கலந்து கொண்ட அனைவரையும் உவகை கொள்ளச் செய்தது அதுதான் ‘ஏழு சகோதரர்கள் புதிதாக இறைமார்க்கத்தை ஏற்க இருப்பதாக’ இருந்த அந்த அறிவிப்பு.


அல்ஹம்துலில்லாஹ்... அந்த எழுவருக்கும் ஏகத்துவ மார்க்கத்தை எடுத்துரைத்த சகோதரர் தவ்ஃபீக் வெண்கலக் குரலில் உரக்க உரைத்தார் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் இறுதித் தூதரும் அல்லாஹ்வின் அடியாரும் ஆவார்கள்’ அதனை அந்த எழுவரும் ஏழு வானங்களைப் படைத்தவனின் மார்க்கத்தில் இனிதே இணைந்தனர்.

பெருநாள் திடல் தொழுகைக்குப் பின்னர் அனைவரும் தங்களுக்குள் அன்பை பரிமாரிக்கொண்டனர்.

அபூஇப்ராஹிம்

Thanks to news source:  http://adirainirubar.blogspot.ae/2016/07/airai-eidulfitr-2016.html

அதிரையில் நாளை (09.07.2016) புதிய பள்ளிவாசல் திறப்பு அழைப்பு


அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ், அதிராம்பட்டிணம் மேலத்தெரு சாணாவயல் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'மஸ்ஜித் பாத்திமா (ரலி)' என்ற புதிய பள்ளிவாசல் (முஸல்லா எனும் தொழுகைக்கூடம்) நாளை சனிக்கிழமை (09.07.2016) அஸர் தொழுகை முதல் பொதுமக்களின் ஐவேளை தொழுகை பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படுகிறது.


சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்துபவர்
மவ்லவி. அலி அக்பர் உமரி அவர்கள்


அனைவரையும் அன்புடன் திறப்பு நிகழ்விற்கு அழைப்பது

நிர்வாகம்
மஸ்ஜித் ஃபாத்திமா (ரலி)
மேலத்தெரு, சாணாவயல்
அதிராம்பட்டினம்

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி உண்டு

Photo Courtesy: http://www.adirainews.net/