உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Saturday, December 29, 2012

இலங்கை வெள்ள நிவாரண கோரிக்கை தொடர்பான அறிவிப்பு

எல்லாம் வல்ல ரஹ்மானின் நல்லடியார்களே! உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...


 
மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்திருந்தோம். தொடர்ந்து எங்களை அலைபேசி மூலம் தொடர்பு கொள்ள பலரும் முயன்றிருப்பீர்கள், தற்போது எங்களில் பலர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளில் கடந்த 6 நாட்களாக ஈடுபட்டுள்ளதால் எங்களுடைய அலைபேசிகளின் பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டன மேலும் மறுபடியும் சார்ஜ் செய்வதற்குறிய வசதிகளோ, மின் இணைப்புகளோ மேற்படி பிரதேசங்களில் இல்லை என்பதையும், பலவேளைகளில் தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருப்பதாலும் எங்களை தொடர்பு கொள்வதில் தங்களுக்கெல்லாம் சிரமம் ஏற்பட்டிருக்கும் என்பதையும் நினைத்து வருந்துகிறோம்.

என்றாலும் எங்களுடைய வங்கிக்கணக்கிற்கு அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தாங்கள் உதவிகளை அனுப்பிவிட்டு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் எங்களை அலைபேசிகள் வழியாக பேசக்கூடிய வாய்ப்புள்ள வேளைகளில் தகவல் தருமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
 
 
மௌலவி முஹம்மது நாஸர் 0094755216164 0094774224217
தௌபீக் ஆசிரியர் 0094713555993
அஸ்மல் டெய்லர் 0094775993812

Account Details:
T Thahir Mohammed Nasar
A/C No. 8148001279
Commercial Bank of Ceylon
Puttalam Branch
Sri Lanka
 
ஜஸாக்குமுல்லாஹூ ஹைரன்

Friday, December 28, 2012

உணவுக்கான அவசர உதவி கோரி மடல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
என் அன்புச் சகோதரர்களுக்கோர் வேண்டுகோள்..

السلام عليكم ورحمة الله وبركاته

தற்போது இலங்கை முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் அதனால் மக்கள் அடைந்துவரும் சிரமங்களும் செய்தி ஊடகங்கள் வழியாக தாங்கள் அறிந்திருப்பீர்கள். இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பமுடியாமல் மக்கள் மிகுந்த சிரமப்பட்டுவருகின்றனர். இதற்கிடையில் எமது ஊரான மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்குட்பட்ட கரடிக்குளி மற்றும் அதைச்சூழவுள்ள பகுதிகளான மறிச்சுக்கட்டி, பாலைக்குளி போன்ற பகுதிகள் நான்கு பக்கங்களும் வெள்ளத்தினால் பாதைகள் மூடப்பட்ட நிலையில் சுமார் ஓரு வார காலமாக மிகவும் கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எற்கனவே 22 வருட அகதி வாழ்வை அனுபவித்த இவர்கள் மிக அண்மையில் தான் ஓலைக்குடிசைகளில் மீண்டும் தம் வாழ்வை தொடங்கினார்கள். இதற்கிடையில் மீண்டுமொரு சோதனை.

இந்நிலையிலிருந்து விடுபட இவர்களுக்காக பிரார்த்திக்குமாறு வேண்டிக்கொள்வதோடு. முடியுமாக இருந்தால் இந்த மூன்று ஊர்களிலும் மொத்தம் 800 குடும்பங்கள் வாழ்கிறார்கள் இவர்கள் மிகவும் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள். மின்சாரம் போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் இதுவரை அங்கு செய்து கொடுக்கப்படவில்லை. இவர்களின் மிக அத்தியாவசியமான உணவுக்கு தங்களில் யாராவது தனியாகவோ கூட்டாகவோ ஏற்பாடு செய்தால். அதனை மிக அவசரமாக கடல் வழியாக அந்த மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் தயாராகவுள்ளோம்.இது மனிதாபிமான அடிப்படையில் அவசரமாக செய்யப்பட வேண்டிய உதவியாகும். குறைந்தது மூன்று நாட்களுக்கு தேவையான உணவு ஏற்பாட்டினை மூன்று கிராமங்களுக்குமோ அல்லது மூன்றில் ஒரு கிராமத்துக்கோ செய்வதற்கு உதவி செய்யுமாறு தங்களை அல்லாஹ்வுக்காக வேண்டிக்கொள்கிறோம். அண்ணளவாக சராசரி ஒரு குடும்பத்திற்கான உணவுக்கு அவசியமான பொருட்களும் அதற்கான பெறுமதிகளும்


5 kg அரிசி (1 kg70/) 350

2 kg கோதுமை மாவு (1 kg100/) 200

2 kg சீனி 105(1 kg105/) 210

1 250g பால்மா 200/ 200

1 மீன்டின் 96/ 105

250g பருப்பு 55

200g தேயிலை 70

மொத்தம் 1190 (இலங்கை ரூபாய்)

ஒரு குடும்பத்திற்கு சராசரி 1190 (இலங்கை ரூ) தங்களின் இயல்புக்கு ஏற்ப குடும்பங்களை பொறுப்பேற்கலாம்

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றன என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி 2442


தேவைப்படின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளவும்

மௌலவி முஹம்மது நாஸர் 0094755216164 0094774224217

தௌபீக் ஆசிரியர் 0094713555993

அஸ்மல் டெய்லர் 0094775993812

Account Details:
T Thahir Mohammed Nasar
A/C No. 8148001279
Commercial Bank of Ceylon
Puttalam Branch
Sri Lanka

தகவல்: மௌலவி முஹம்மது நாஸர்

தொலைபேசி 0094774224217
Email: ttmnasar@yahoo.com / ttmnasar@gmail.com
Website / www.onlinenasar.com

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்..

அல்லாஹ்வின் அடியார்களே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் கபுருக்குச் சந்தனம் பூசுவதற்காகக் கடந்த 23.12.2012 பகல் 2.45 மணியளவில் மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து லெப்பை அலாவுத்தீன் இறந்து விட்டார்!  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).  இந்த இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஒரு வீட்டிலுள்ள குளியலறைக்குள் குளிப்பதற்காகச் சென்ற ஒருவர் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் வெளிவராவிட்டால், அந்த வீட்டார் என்ன செய்வார்கள்?  அதுவும், குளிக்கச் சென்றவர் இரத்த அழுத்த நோயாளியாகவும் சர்க்கரை நோயாளியாகவும் இருப்பாராயின், எவ்வளவு கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள்? வழக்கமாகப் பதினைந்து நிமிடத்தில் தம் குளியலை முடித்துக்கொண்டு வெளிவரவேண்டியவர், அரைமணி நேரமாகியும் வெளிவராவிட்டால்?
 
ஒரு மணி நேரம் தாண்டிய பின்னரும் உள்ளே சென்றவர் என்னவானார் எனும் கவலையற்று இருந்துவிட்டு, கடைசியில் அவரை உயிரிழந்தவராகத் தூக்கிவந்து போட்டு, அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டு, எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல், தம் குற்றங்களை அல்லாஹ்வின்மீது திசை திருப்புவது அறிவற்றவர்களின் செயலாகும்.  அப்படிப்பட்ட ஓர் அறிவீனம்தான் மர்ஹூம் அலாவுத்தீன் விஷயத்தில் அரங்கேறியது.  வழக்கமாக, ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்று மணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து அல்லது உடைத்துப் பார்ப்பதற்கு தர்ஹாவில் குழுமியிருந்தவர்களைத் தடுத்து நிறுத்திய அறிவீனம் எது?  அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மௌட்டீகக் கொள்கையான தர்ஹா வழிபாட்டு நம்பிக்கை நிகழ்த்திய அநியாம்தான் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான்:

"மனிதர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்." (அல் குர்ஆன் 10:44).

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக நம்மை ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துவிட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, அல்லாஹ்வுடைய மௌத்து’ என்று கூர் மழுங்கிப்போய் கூறுதல் முறையல்ல.
 
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்.  நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் (4:78) எச்சரிப்பது, மௌத்துக்கு அஞ்சி ஓடி எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்ற பொருளிள்தானே அன்றி, நம்முடைய மடமையினால் ஓர் உயிரை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவல்ல.
 
என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும், அந்தக் கபுருக்குச் சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை இன்னும் ஏற்க மறுப்பது மடமையின் உச்ச கட்டமாகும்.

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரால் ஆண்டு தோறும் கந்தூரி எடுப்பதும், அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன.  அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளக்கும் இதோ சில நபிமொழிகள்:

 وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا 

"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கிவிடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்." அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746 .

 َنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ

"... இறைவா, எனது சமாதியை வழிபடும் இடமாக ஆக்கிவிடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்." அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
 
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ 

"சமாதிகளை தரிசிக்கச் செல்லும் பெண்களையும், அவற்றில் வழிபாடு செய்யும் பெண்களையும், (சமாதிகளில்) விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்." இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

  لَعْنَ اللَّه الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றியும் எச்சரித்தார்கள்" - அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
 
கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவங்கள் என்பதை நம் ஊர் மக்களுக்குத் தெளிவாக - உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும்.  ஏனெனில், மறுமையில் அவர்களுக்கு இது பற்றிக் கூடுதல் கேள்வியுண்டு!  ஜமாஅத்தின் பொறுப்பாளர்களுக்கும் அவ்வாறே கூடுதல் கேள்விகள் மறுமையில் காத்திருக்கின்றன!
 
தம் மூதாதையரின் மட நம்பிக்கையை ‘இபாதத்’ என்று நம்பிப் பின்பற்றி, உயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர், அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டியினரும், அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்து ஆதரவளித்த ஜமாஅத் பொறுப்பாளர்களும், கந்தூரி ஆதரவாளர்கள் அனைவரும் அவ்லியாவின்  பெயரால் கந்தூரி எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெற்றே ஆகவேண்டும்!
 

வெளியீடு 3/2012 - நாள் : 28.12.2012
 
அறிவுறுத்தும்,
 

அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East) Street, P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email : salaam.adt@gmail.com

Thursday, December 27, 2012

மூளைச் சாவடைந்தவர்கள்

கூகுள் தலைமுறையை நினைத்தால் பயமாக உள்ளது : ட்ரெவர் பெய்லிஸ்

 
 
கூகுள் தலைமுறையை நினைத்தால் பயமாக உள்ளது என்று பல்வேறு கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான ட்ரெவர் பெய்லிஸ் கூறியுள்ளார்.
 
இன்வென்டர் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்த விஞ்ஞானி ட்ரெவர் பெய்லிஸ் கூறியதாவது, பிள்ளைகளுக்கு தற்போதெல்லாம் இணையதளங்கள் வாயிலாகவும், மொபைல் போன் வாயிலாகவும் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால், அவர்கள் இணையத்தில் கூகுளுக்கு அடிமையாகியுள்ளனர். எதையும் மனப்பாடம் செய்யவோ, நினைவில் வைத்துக் கொள்ளவோ இயலாத மூளைச் சாவடைந்தவர்களைப் போல் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு கற்பித்தலை முந்தைய காலத்தைப் போல கொண்டு வர வேண்டும் என்று பெய்லிஸ் கூறியுள்ளார்.
 
Thanks to : Dinamani
First Published : 27 December 2012 05:57 PM IST


மூளை செத்துப் போன கூகுள் தலைமுறை.. கண்டுபிடிப்பாளர் பெய்லிஸ் வருத்தம்

லண்டன்: இன்றைய குழந்தைகளை இன்டர்நெட், குறிப்பாக கூகுள் மூளை வறட்சியுடையவர்களாக மாற்றி விட்டது. இது பெரும் வருத்தமாகவும் வேதனையாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளார் பிரபல இங்கிலாந்து கண்டுபிடிப்பாளர் டிரெவர் பெய்லிஸ்.

75வயதான பெய்லிஸ் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்.அதில் முக்கியமானது வைன்ட்அப் ரேடியோ. அவர் இன்றைய குழந்தைகளின் நிலை குறித்து ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,இன்றைய குழந்தைகள் செயல்திறன் பயிற்சியும், திறமையும் அற்றவர்களாக வளர்கின்றனர். எதையும் யோசித்துச் செய்யும் மன நிலையில் அவர்கள் இல்லை.

இன்டர்நெட்டையே முழுமையாக சார்ந்திருக்கும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக கூகுளுக்கு அடிமையாகி விட்டனர். கூகுள் மூலம்தான் எதையும் தேடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களது மூளை வளர்ச்சிக்கு பெரும் குந்தகமாக அமையும், மூளை வறட்சிக்கு வித்திடும்.

குழந்தைகள் எதையும் சிந்தித்து செயல்பட வேண்டும். அதற்கேற்ப அவர்களைப் பழக்க வேண்டும். மொபைல் போன், கம்ப்யூட்டர் என்று எதற்கெடுத்தாலும் அதற்கு அடிமையாகியிருக்க கூடாது.

ஆனால் இன்றுள்ள குழந்தைகள் அப்படியா இருக்கிறார்கள். அவர்களை நினைத்தாலே எதிர்காலத்தை நினைத்துப் பயமாக இருக்கிறது என்றார் பெய்லிஸ்.

Thanks to: Thatstamil
Posted by:
Updated: Friday, December 28, 2012, 12:27 [IST]
 

Tuesday, December 25, 2012

எனது அன்பான கணவனுக்கு!
எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).
 
எனது உள்ளம் கவலையினால் ஆட்கொண்டு, இரண்டு கண்களும் கண்ணீர் மல்க (கண்கள்) இரத்தம் மட்டும் சிந்தாத நிலையில் இம்மடலை உங்களுக்கு வரைகிறேன்.
 
என்னை நம்புங்கள்! நான் எப்படி இதை எழுதுவது? நாம் இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையை அடைந்த பின்னரும என்னால் எப்படி எனது உளக்குமுறலை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும். இது ஏனென்று உங்களுக்கு தெரியுமா? நாமிருவரும் ஓருடலும் ஈருயிருமாக அல்லவா இருந்தோம்? எதற்காக எமது வாழ்வு இப்படியான ஒரு அவல நிலையை அடைந்தது? நமது வாழ்க்கையை வழப்படுத்த வேண்டிய சுபிட்சத்தை நாம் ஏன் இழந்தோம், நாமிருவரையும் பிரித்து வைப்பதில ஷைத்தான் வெற்றி பெற்றுவிட்டான். ‘உனக்கு ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கத் தவறிய உனது மனைவி எந்தப்பயனும் இல்லாமல் மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுக்க காரணமாக இருந்து விட்டாள்’ என்று உங்களை நம்பவைத்து விட்டான் அந்த ஷைத்தான்.
 
உங்களது இரண்டாவது வாரிசான பெண் பிள்ளையைப் பெற்றெடுக்க நான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? அப்போதே நான் நினைத்தேன் இது பெண் குழந்தை என்பதற்காகத் தான் நீங்கள் என்னைப் பார்க்க வரவில்லை. ஒரு பெண் அந்த நேரத்தில் படும் வேதனையை நீங்கள் நன்றாக அறிந்திருந்தும் என்னை ஆறுதல் படுத்துவதற்காவது நீஙகள் வரவில்லை. ஒவ்வொரு மனைவியும் அந்த நேரத்தில் கணவனின் வருகையை எதிர்பார்ப்பாள். ஆனால் அந்தப்பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை அது என்னை பெரிதும் பாதித்தது.
 
நான் உங்களிடம் மனம் வருந்திய போது நான் நினைத்திருக்கவில்லை நாம் இன்றைக்கு வாழும் நெருக்கடி மிக்க வாழ்க்கைக்கு இது தான் ஆரம்பம் என்று! என்றாலும் பின்னர் நீங்கள் இதை எண்ணி வருந்தினீர்கள். எனது உணர்வை புரிந்து கொண்டீர்கள். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
 
நமக்கு அல்லாஹ் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பாக்கியமாக தந்த போது நான் அவமானத்தையும், இளிவையும், பரிகசிப்பையும் தவிர வேறு எதையும் பெறவில்லை. நீங்கள் ஒரு நாள் சொன்னீர்கள் உனக்கு பெண் குழந்தைகளை பெற்றெடுக்கத்தான் தெரியும் பெண் குழந்தைகளை பெற்றெடுப்பவர்களுக்கு இந்த வீட்டில் எந்த உரிமையுமில்லை என்று நீங்கள் சொன்ன வார்த்தைகள் எனது உள்ளத்தில் ஈட்டியால் குத்திய வார்த்தைகளாகும். அந்த வார்த்தைகளை நீங்கள் மறந்திருந்தாலும் எனது உள்ளத்தை விட்டு அவைகள் மறைந்து விடவில்லை. என்னைப் பெற்றெடுத்த எனது அன்பு தந்தை மரணிக்கும் வரை நோயிலே இருந்தார். அவரை இறுதி வரையிலும் பார்க்க விடாமல் என்னை தடுத்தீர்கள்…
 
என் அன்புக் கணவரே! உங்களுக்கு ஏன் இந்த கல் மனம்? உங்களின் இந்தக் கோபத்தையும் அடக்கு முறையையும் என்னால் தாங்க முடியுமா என்ன?
எனது அன்புக் கணவரான உங்களின் மேலான கவனத்திற்கு நான் மூன்றாவதாகவும் பெண் குழந்தையை பெற்றெடுத்த போது அது ஆண் குழந்தை இல்லை என்ற உடன் உங்களைவிட அதிகம் நான் கவலைப்பட்டேன். ஏனென்றால் அது பெண் குழந்தை என்பதற்காகவோ அல்லது அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறைகாண வேண்டும் என்பதற்காகவோ அல்ல! மாறாக உங்கள் மீது எனக்குள்ள இரக்கத்தினாலும் உங்களின் உணர்வைப் புரிந்துகொண்டதாலும், உங்கள் மீதுள்ள அன்பின் காரணமாகவும் தான். இதனை நீங்கள் என்னை சொல்லாலும், செயலாலும் நோவினை செய்த போதெல்லாம் நான் பொறுமை காத்ததன் மூலம் நீங்கள் மிக தெளிவாக புரிந்திருப்பீர்கள்…
 
உண்மையில் என்னை நம்புங்கள்! நான் ஏதோ ஒரு பாவம் செய்தவிட்டேனோ தவறிழைத்து விட்டேனோ என்றெல்லாம் எண்ணினேன். சில வேளை உங்களது கவலைக்கும் மன உளைச்சலுக்கும் நான் தான் காரணமோ, என்னை நம்புங்கள்! ஆண் பிள்ளை பெற்றெடுக்க வேண்டுமென்ற உங்களின் கனவுக்கு நான் தான் தடைக்கல்லாக அமைந்து விட்டேனோ என்று கூட நான் எண்ணியதுண்டு. உங்களது உணர்வு இப்படி ஆனதனால் உங்களது உரிமை விஷயத்தில் நான் ஒரு பாவியாகி விட்டேனா என்று எண்ணிய சந்தர்ப்பங்களும் உண்டு…

Monday, December 24, 2012

அதிரையில் காரணம் அறிவிக்கப்படாத மரண அறிவிப்பு


நமதூர் கடற்கரை தெருவைச் சேர்ந்த சகோதரர் அலாவூதீன் (வயது சுமார் 45) நேற்று இரவு (23.12.2012) சுமார் 10 மணியளவில் வஃபாத்தானர்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்று (24.12.2012) மாலை அஸருக்குப் பின் கடற்கரை தெரு மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையையும், மன அமைதியையும் தந்தருள்வானாக!

இனி அறிவிக்க மறந்த காரணத்தை சற்று அலசுவோம், முத்தாய்ப்பாக ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் 'மடமை'.

மாற்றுமத கலாச்சாரமான தேர் திருவிழாவின் பிம்பமாக திகழும், இஸ்லாம் காட்டித்தராத கந்தூரி எனும் திருவிழாவை, இஸ்லாத்தின் தூய வடிவம் தெளிந்த நீரோடையாய் பாமரரும் பகுத்தறியும் வண்ணம் திகழும் இந்த 21ம் நூற்றாண்டிலும் சிலர் கட்டி இழுத்துக் கொண்டுள்ளனர். அதன் வழக்கப்படி நேற்றைய இரவு ஹத்தத்து இரவு என கொண்டாடப்பட்டுள்ளது.

ஹத்தத்து இரவுகளில் சிறப்பு நேர்ச்சைகள் செய்து கொண்டு 'மண்டகப்படி' எனும் இன்னொரு தெளிவான இணைவைத்தலை (ஷிர்க்) இன்னும் மிகச்சிலர் செய்து வருகின்றனர். இந்த ஷிர்க்கை செய்திட மறைந்த சகோதரர் அலாவூதீனுக்கு யாரோ தவறாக வழிகாட்டியுள்ளனர், நேற்றைய இரவு மண்டகப்படி எடுத்துக் கொண்டு, பல நூற்றாண்டுகளுக்கு முன் மறைந்து மண்ணோடு மண்ணாய் மக்கிப்போன இன்னொரு மனிதனின் மண்ணறைக்கு (தர்கா கபுர்) சந்தனம் பூசச்சென்றவர் மூச்சு திணறலால் ஜனாஸாவாக வெளியே தூக்கி வரப்பட்டுள்ளார்.

ஏற்கனவே லோ-ஷூகர் (Low Sugar) போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த சகோதரர் அலாவூதீன் அவர்களை சந்தனம், பத்தி மற்றும் சாம்பிராணி புகை மண்டலமாக இருந்த அறைக்குள் அழைத்துச் சென்று கதவை மூடியுள்ளனர். உடனிருந்தவர்களுக்கும் மார்க்க அறிவும் இல்லை ஒரு நோயாளியை புகை மண்டலத்திற்குள் அடைக்கின்றோமே என்ற மருத்துவ அறிவும் (உலக அறிவு) இல்லை.

இவர்களின் மூட நம்பிக்கைகளின் பலன் ஒரு தலைவனை அவனது குடும்பம் இழந்து தவிப்பது தான். இவர்களின் மடத்தனம் மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்காவிட்டால் இதற்காக உடனிருந்தவர்கள் மேல் கொலை குற்றம் சாட்ட முடியும் அல்லது குறைந்தபட்சம் சம்பவத்திற்கான சாட்சிகளாக்க முடியும் என்பதை உணர்ந்தாவது இதுபோன்ற பாதக, மடச்செயல்களில் இனிமேல் ஈடுபடாமல் இருப்பது அவர்களின் இம்மை, மறுமை வாழ்வுக்கு பயனுள்ளதாக அமையலாம்.

இஸ்லாம் என்பது அல்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் மட்டும். இஸ்லாத்திற்கும் தர்கா கலாச்சாரத்திற்கும் கிஞ்சிற்றும் சம்பந்தமில்லை. மூடத்தனங்களை ஒழித்த இஸ்லாத்தின் பெயராலேயே மூட பழக்க வழக்கங்களை அரங்கேற்றினால் நரகம் நிச்சயம். இன்னொரு உயிர் இதுபோன்ற மடத்தனங்களை ஆராதிப்பதனால் போகக்கூடாது என பொதுவாக அனைவரையும் வேண்டி முடிக்கின்றோம்.

ஓப்பற்ற ஓரிறையின் அடிமை
அதிரை

Friday, December 21, 2012

ஓரு நாள் வரும்


ஓரு நாள் வரும்

அன்று

நீ குளிக்க மாட்டாய்...
உன்னை குளிப்பாட்டுவார்கள்!

நீ உடை அணிய மாட்டாய்...
உனக்கு அணிவிக்கப்படும்!

நீ பள்ளிவாசல் போக மாட்டாய்...
உன்னை பள்ளிக்கு கொண்டு செல்வார்கள்!

நீ தொழ மாட்டாய்...
உன்னை வைத்து தொழப்படும்!

நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய்...
உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள்!

அன்று உன்னை தனியாக விட்டு விட்டு...
உன் உறவினர்கள் அனைவரும் சென்றுவிடுவார்கள்!

அதற்கு எந்நேரமும் (நல் அமல்களுடன்) தயாராக இருங்கள்...
அது தான் (நீ விரும்பாத) மௌவுத் (எனும் மரணம்)!

நன்றி : எழுதியவருக்கு

குறிப்பு : அடைப்புக்குறிகளில் உள்ளவை மட்டும் நம்முடைய பிற்சேர்க்கை.

Wednesday, December 19, 2012

20.12.2012 துபையில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வியாழக்கிழமை 20.12.2012 இஷா தொழுகைக்குப்பின் 8.30 P.M. துபை, தேரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) ஆலோசணை கூட்டம் நடைபெறவுள்ளது.

அனைத்து அதிரை தவ்ஹீத் சகோதரர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
தவ்ஹீத் இல்லம்

டேரா, நைஃப் ரோடு,

அல் புத்தைம் பள்ளி (AL FUTTAIM MASJID) எதிர்புறம் அமைந்துள்ள டல்ஃப் (DULF) ஹோட்டல் பின்புறமுள்ள அல் ஜர்வானி பில்டிங்,

அறை எண்:109,

இடைத்தளம். (MEZZANINE FLOOR)

Contact:
Mr. Abdul Khader 055 2829759
Mr. Ameen 050 8519008

Tuesday, December 18, 2012

நாளை மகாராஷ்டிராவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாபெரும் பேரணி: முதல்வரிடம் மனு

சென்னை: மகாராஷ்டிரா மாநில சிறைகளில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுவிக்கக் கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாளை அம்மாநிலத்தில் மாபெரும் பேரணியை நடத்துகிறது.
 
மகாராஷ்டிரா மாநில மைனாரிடி கமிஷன் சமீபத்தில் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயன்ஸ் (டி.ஐ.எஸ்.எஸ்.) என்னும் நிறுவனத்தாரிடம், மகாராஷ்டிரா மாநில சிறைச்சாலைகளில் அடைபட்டுள்ள கைதிகள் குறிப்பாக முஸ்லிம் கைதிகள் பற்றிய விவரங்களைச் சேகரித்துத் தரும் பொறுப்பை ஒப்படைத்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த கிரிமினாலஜி எனப்படும் குற்றச் சட்டயியல் மற்றும் நீதித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் விஜய் ராகவன், ரோஸ்னி நாயர் இருவரும் அந்தப் பொறுப்பை ஏற்று, ஓராண்டு காலம் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்தனர்.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகளில் 70 சதவீதம் பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் ஆண்கள் 64.5 சதவீதம்; பெண்கள் 5.2 சதவீதம் பேராவர். இவர்களில் 47.4 சதவீதம் பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 3.8 சதவீதம் பேர் மீதுள்ள வழக்குகள் மட்டுமே தீர்ப்பு கூறப்படும் அளவுக்கு வந்திருக்கிறது.
 
மகாராஷ்டிரா சிறைச்சாலைகளில் உள்ள மொத்த கைதிகளில் முஸ்லிம் கைதிகள் மட்டுமே 65.5 சதவீதம் பேர் உள்ளனர். இவர்கள் யாவரும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாவர். இவர்களில் 58.2 சதவீதம் பேர் ஆரம்ப பள்ளிப் படிப்பு அளவு படித்துள்ளனர்; மீதமுள்ள 31.4 சதவீதம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
 
பெண் கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள். சிறையில் உள்ள 96 சதவீதம் முஸ்லிம் கைதிகளுக்கு எந்தவொரு தீவிரவாதக் கும்பலுடனோ, கிரிமினல் கும்பலுடனோ தொடர்பு எதுவும் இல்லை. 50 சதவீதம் பேருக்கு 2013ல் தண்டனை காலம் முடிகிறது. 38 சதவீதம் பேர் தாங்கள் கைதானதைத் தங்கள் குடும்பங்களுக்குத் தெரிவிக்க காவல்துறையினர் உதவவில்லை.
 
பல பேர், எந்தக் குற்றமும் செய்யாமல் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏதாவது ஒரு குற்றத்தைப் பார்த்ததாக சாட்சி சொல்ல முன்வராததாலும், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவர் குற்றம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டால், அவருக்குப் பதிலாக அந்தக் குடும்பத்தில் உள்ள இன்னொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளுக்கு நியாயம் வழங்கக் கோரியும், அப்பிராணிகளை விடுவிக்க வேண்டியும் விதர்பா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நாளை பிரமாண்டப் பேரணி நடத்தப்படுகிறது. இந்தப் பேரணியின் இறுதியில் அம்மாநில முதல்வரிடம் இது குறித்து மனு அளிக்கவுள்ளனர்.
 
Thanks to : Thatstamil

Sunday, December 16, 2012

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது

மூடநம்பிக்கை என்பது எப்போது தோன்றியது என்று சரியாகத் தெரியவில்லை. ஏதேனும் ஒரு காரியம் தனக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ அமைந்திட, அல்லது நல்லதாகவோ தீயதாகவோ அமைந்திடக் காரணமாக குறிப்பிட்ட சில நாட்கள், நேரங்கள், விஷயங்கள், செயல்கள், அனுஷ்டானங்கள், பொருள்கள், உயிரினங்கள், போன்றவைதாம் காரணிகள் என்று மனிதன் நம்புவதற்குப் பெயர் மூடநம்பிக்கையாகும்.
 
உதாரணத்திற்கு ஒரு பூனை குறுக்கே செல்வதால் தனக்கு ஏதாவது கெடுதி ஏற்படும் என்று நம்புவது; அல்லது தான் நாடிய/நடக்கவிருந்த நல்ல காரியம் நடைபெறாமல் போகக்கூடும் என்ற ஒரு சஞ்சலம், அல்லது ஒரு ஆந்தை அலறுவதால் ஒரு கெட்ட காரியம் நிகழும் அல்லது மரணம் நடைபெறும் என்று கருதுவது ஆகிய இவை காலங்காலமாக மனிதனிடம் காணப்படும் மூடநம்பிக்கையாகும்.
 
ஒருவர் தும்மினால் நல்லது நடக்கும் அல்லது நடக்காது என்று நம்புவது; வீட்டை விட்டு வெளியே போகும்போது எதிரில் விதவைகள்/குருடர்களைக் கண்டால் தனது காரியம் கெட்டு விடும் என்று கருதுவது; தனக்குப் பாதகமாக ஏதேனும் நிகழ்ந்தால், "காலையில் யார் முகத்தில் விழித்தோனோ?" என்று கருதி அந்த முகத்தை இணைத்து சம்பந்தப்படுத்துவது போன்றவையும் மூடநம்பிக்கையே.
 
இதேபோல்தான் ஒரு பொருளை, ஒரு நிறத்தை, ஒரு எண்ணை, ஒரு நாளை அல்லது நேரத்தை நல்லதாகவோ தீயதாகவோ மனிதன் கருதுவது இன்றைய நவீனகாலத்திலும் அன்றாட நிகழ்வுகளாகக் காண முடிகிறது. 13 என்ற எண் தீமை பயப்பது என்பதாகக் கருதி அதைத் தமது இல்லங்களுக்கோ வாகனங்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ தவிர்த்துக் கொள்ளக்கூடிய மக்களை இன்றும் மேற்குலகில் பரவலாகக் காணமுடிகிறது. சில முன்னேற்றமடைந்த நாடுகளிலும் வீட்டு எண்ணிக்கையில் 13ஐத் தவிர்ப்பதும், மாடிக் கட்டடங்களிலும் 12ஆவது மாடியை அடுத்து 13ஐத் தவிர்த்து அடுத்த எண்ணான 14ஐத் தருவது போன்றவையும் மூடநம்பிக்கையாகும்.
 
அதேபோல் ஒரு சில எண்களை/பொருள்களை அதிர்ஷ்டமானதாகக் கருதி அந்த எண்களை/பொருட்களைத் தேடி அதிக விலைகொடுத்துப் பெறுதலும் அந்த எண்/பொருள் தனக்கு அதிகமான இலாபத்தை அல்லது பாதுகாப்பை வழங்கிடும் என்று கருதும் மூடநம்பிக்கையும் நடப்பில் உள்ளது.
 
அறிவியல், கல்வி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்று எல்லாவிதத்திலும் வளர்ச்சியின் உச்சியில் இருப்பதாகக் கருதப்படும் தற்போதய காலத்திலும் இந்த மூடநம்பிக்கை எனும் நோய் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.
 
இதுபோன்ற மூடநம்பிக்கைகளைக் கல்வியறிவில் பின்தங்கியவர்கள் முதல் ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் நன்கு படித்த இளைஞர்கள் முதியவர்கள் என்ற அனைவர்களிடமும், பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அறிவுஜீவிகள் முதல் ஆன்மீகவாதிகளிலும் பரவலாகக் காணமுடிகிறது. சிலர் இதற்கு மதச் சாயம் பூசிடுவதும் அதன் மூலம் இதைச் சரிகாணுவதும் இம்மடமையை ஆதரிக்கும் சிலருடைய துணையுடன் இதைத் தொடர்ந்து நிலை நாட்டிவருவதும் சுய இலாப நோக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒரு துர்ப்பாக்கியமான காரியம் ஆகும்.
 
ஒரு நாள் என்பது நல்லநாள் அல்லது கெட்டநாளாக; ஒரு நேரம் என்பது நல்லநேரம் அல்லது கெட்டநேரமாக எப்படி அமையும்? ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு நல்லதும் மற்றவர்களுக்குத் தீயதும் இழப்புகளும் ஏற்படத்தான் செய்கின்றன என்பதை எவரும் மறுத்திட இயலாது.
 
உதாரணத்திற்கு ஒரே நேரத்தில் பிறப்புகளும் இறப்புகளும் இவ்வுலகத்தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சிலர் நோயுறுவதும் நிலர் நிவாரணம் பெறுவதும், சிலர் கல்வியில் தேர்ச்சி பெறுவதும் சிலர் தோல்வியுறுவதும், சமுதாயத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகள் ஆகும். அதே போல் ஒரே நேரத்தில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் இரு அணிகளில் ஒன்று வெல்வதும் ஒன்று தோல்வியுறுவதும் இயல்பானதும் தவிர்க்க இயலாத ஒன்றுமாகும்.
 
இன்னும் குறிப்பிட்ட ஒருநேரத்தில் ஒரே வீட்டில் திருமணம் அல்லது பிறப்பு போன்றதும் அதே வீட்டில் அதே குறிப்பிட்ட நேரத்தில் இறப்புகளும் ஏற்படுவதையும் காண்கிறோம். குழந்தை பிறக்கும்போது மரணித்த தாயும், தாய் இருக்க மரணித்த குழந்தையும் பிறந்த இரு குழந்தைகளுள் ஒன்று மரணித்தும் மற்றொன்று உயிருடனும் இருக்கவும் காண்கிறோம். மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் சில பிறப்புகள் சில இறப்புகள் போன்ற எண்ணற்ற நேர்மறை எதிர்மறையான நிகழ்வுகள் என்பதெல்லாம் ஒரே நேரத்தில் நடந்து, "நேரம் என்பதில் நல்லதோ கெட்டதோ இல்லை" என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகின்றன,
 
ஒரு நேரம் நல்லது எனில் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு கெடுதியும் இழப்பும் துன்பமும் கவலையும் நோயும் கஷ்டமும் ஏற்படக் கூடாது. அப்போதுதான் அது "நல்ல நேரம்" ஆகமுடியும். அப்படி ஒரு நேரம் இருக்கிறதா என்றால் இல்லையென்பதே உண்மை. அதேபோல் ஒரு நேரம் கெட்ட நேரம் என்றால் அதில் எங்கும் யாருக்கும் எந்த ஒரு நல்லதும், இலாபமும், பலனும், சந்தோஷமும், இன்பகரமானதும் நிகழவே கூடாது. அப்போதுதான் அது கெட்ட நேரம் என்றாகும். இந்த நிலையும் இல்லை என்பதே மறுக்க இயலாத உண்மை.
 
அதேபோல், "அவருக்கு நேரம் சரியில்லை; இவருக்கு நல்ல நேரம்; நல்ல காலம்; கெட்ட காலம்" என்று நிகழ்வுகளை நேரத்தோடு தொடர்பு படுத்துவதும் தவறான அடிப்படையில் அமைந்த ஒரு மூடநம்பிக்கையேயாகும். "இந்த மாதத்தில் இந்த நாளில் அல்லது இந்த நேரத்தில் சில புதிய காரியங்கள், திருமணம், புதிய வீடு புகுதல், வியாபாரங்கள் போன்ற நல்லவற்றை துவக்கக் கூடாது; அது நிறைவேறாது; அது நஷ்டமானதாக அமையும்; இழப்பை ஏற்படுத்தும்" என்று கருதி அவற்றைத் தவிர்த்து எச்சரிக்கையாக நல்லநாள், நல்லநேரம் பார்த்து துவங்கப்பட்ட திருமணம் போன்ற எத்தனையோ காரியங்கள் கெடுதியையும் மண விலக்குகளையும் கொலை, தற்கொலை போன்ற உயிரிழப்பையும் பெரும் நஷ்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைப் பரவலாக சமுதாயத்தில் காணமுடிவதும் மூடநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் சான்றுகளாகும்.
 
"எல்லாம் இறைவிருப்பப்படி நமக்கு நிகழ்கின்றன; அந்த இறைவனின் நாட்டமின்றி எந்த ஒரு நன்மையும்-தீமையும் நோயும்-நிவாரணமும், இலாபமும்-நஷ்டமும், இன்பமும்-துன்பமும், பிறப்பும்-இறப்பும், என்று எதுவுமே ஏற்படுவது இல்லை. எல்லாம் அவன் நாட்டப்படியே நடைபெறுகின்றன" என்று போதிக்கும் இறைமார்க்கமாம் இஸ்லாத்தில் மூடநம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லையென்ற போதும் "நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம்" என்று கூறிக் கொள்ளும் முஸ்லிம்கள் சிலரிடமும் இதுபோன்ற ஒருசில மூடநம்பிக்கைகள் காணப்படுகின்றன என்பது வருத்தத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.
 
முழு மனிதசமுதாயத்திற்கும் வழிகாட்டிட ஏக இறைவனால் வழங்கப்பட்ட இஸ்லாம் எனும் மார்க்கமும் குர்ஆன் நபிவழிகள் எனும் இறை ஒளியின் மூலம் அனைவருக்கும் வழிகாட்டியாக வாழ வேண்டிய முஸ்லிம்களில் சிலர் இது போன்ற அறியாமை இருளில் மூழ்கியிருப்பது கைச்சேதமே.
 
"ஸஃபர் மாதம் என்பது பீடைமாதம்" என்று சில முஸ்லிம்கள் கருதுவதும் கூறுவதும் இந்த மாதத்தில் நல்ல காரியங்களைத் துவக்காமல் தள்ளிப் போடுவதும், திருமணங்கள், வியாபாரங்கள் போன்ற நல்ல நிகழ்வுகளைச் செய்தால் அது கேடாக முடியும் என்று தவிர்ப்பதும் புதிதாக மணமுடித்துள்ள தம்பதியரை இம்மாதத்தில் இல்லறம் நடத்த விடாமல் (நடத்தினால் பிறக்கும் குழந்தைக்குக் கேடு, அல்லது குழந்தையால் அவர்களுக்குக் கேடு ஏற்படும் என்று) பிரித்து வைத்தலும், புதுமனை புகுதல் அல்லது புதுவீடு கட்டுதல் போன்றவற்றைத் தள்ளிப் போடுதல் ஆகிய - சில முஸ்லிம்களிடம் நடைமுறையில் உள்ள - அனைத்தும் எவ்வித ஆதாரமுமற்ற கண்டிக்கப் படக்கூடிய மூடநம்பிக்கைகளாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
 
"அல்லாஹ்வையும் வானவர்களையும் வேதங்களையும் நபிமார்களையும் கியாமத் எனும் இறுதி நாளையும் நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விதித்த விதியின்படி நடக்கின்றது என்று ஈமான் (நம்பிக்கை)கொள்வதுதான் (உண்மையான) ஈமானாகும்" ஆதாரம் : முஸ்லிம்.
மேற்காணும் நபிமொழியின்படி "எல்லாவித நன்மையும் தீமையும் அல்லாஹ் வித்தித்துள்ள விதியின் படியே நிகழ்கிறது" என்று ஒரு மூஸ்லிம் நம்ப வேண்டும்.
அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்: 

 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும் பசியாலும், பொருள்கள் உயிர்கள் விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:155)

சோதனைகள் நன்மைகள் தீமைகள் ஆகிய அனைத்தும் அல்லாஹ்வின் விதிப்படியே நடக்கின்றன என நம்ப வேண்டிய முஸ்லிம்களுள் சிலர், ஸஃபர் மாதம் என்பது பீடையுள்ள மாதம் என்றும், அதில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்றும், பீடையைக் கழிப்பதற்காக ஸஃபர் மாதத்தின் மூன்றாம் புதன்கிழமை ஆற்றில் குடும்பத்துடன் குளித்து, சில சடங்குகளையும் செய்து அந்தப் பீடையைப் போக்கவேண்டும் என்று மூடநம்பிக்கை கொண்டு, பல வீண் விரயமான சடங்கு சம்பிரதாயங்களை ஸஃபர் மாதத்தில் செய்கின்றார்கள்.
 
மேலும் மாவிலையில் குங்குமப் பூவின் மையினால் சில வாசகங்களை எழுதிக் கரைத்துக் குடிப்பதும் அதன் மூலம் பலா-முஸீபத்துகள், பீடைகள், நோய்கள், கஷ்டங்கள் ஆகியவற்றில் இருந்து பாதுகாவல் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.
 
இது இஸ்லாத்திற்கு முற்றிலும் மாற்றமான செயலும் மூடநம்பிக்கையுமாகும். இஸ்லாத்திற்கு மாற்றமான இவ்வாறான மூடநம்பிக்கைகளை விட்டுவிட்டு "அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றது" என்று ஒவ்வொரு முஸ்லிமும் நம்ப வேண்டும்.
ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்றிருந்தால் அதை அல்லாஹ்வோ நபி(ஸல்) அவர்களோ நமக்கு அறிவித்திருப்பார்கள். அப்படிப்பட்ட எந்த இறைவசனமோ நபிமொழியோ கிடையாது. மாறாக ஸஃபர் மாதம் பீடையுள்ள மாதம் என்று நம்புவதைத் தடுக்கும் நபிமொழியைத்தான் நாம் காண் முடிகிறது.
 
அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இஸ்லாத்தில் தொற்றுநோய் என்பதில்லை; துர்ச்சகுனம் பார்ப்பது கூடாது; ஆந்தை சாஸ்திரம் பார்ப்பதும் கூடாது; ஸஃபர் (மாத பீடையும்) கிடையாது, நட்சத்திர சகுனம் பார்ப்பதும் கிடையாது, கொள்ளி வாய்ப் பிசாசு என்பதெல்லாமில்லை" ஆதாராம்: முஸ்லிம்.
 
ஸஃபர் மாதத்தைப் பீடையுள்ள மாதம் என்பதற்கு, சிலர் கூறும் காரணம், "நபி(ஸல்) அவர்கள் ஸஃபர் மாத முற்பகுதியில் நோயுற்றிருந்து அம்மாதத்தின் மூன்றாம் வாரத்தின் புதன் கிழமை நோயிலிருந்து குணமடைந்தார்கள். ஆகவே அம்மாதம் பீடையுள்ள மாதமாகும், மூன்றாம் வாரத்தில் நபி(ஸல்) அவர்கள் நோயிலிருந்து குணமடைந்ததுபோல், நாமும் பீடையை மூன்றாம் வாரத்தில் நீக்க வேண்டும்" என்று கூறுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான வாதமாகும். நோயுறுவது பீடையன்று.
 
நோயும் நிவாரணமும் அல்லாஹ்வின் விதிப்படி ஏற்படுபவை; "நான் நோயுற்றால் குணப்படுத்துபவன் அவனே" (அல்குர்ஆன் 26:80) என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.
 
நபி(ஸல்) அவர்கள், ஸஃபர் மாதத்தில் மட்டுமா நோயுற்றிருந்தார்கள்? ரபீஉல் அவ்வல் மாதத்திலும்தான் நோயுற்றிருந்தார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு முன் கிட்டத்தட்ட 17 நாட்கள் நோயுற்றிருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12ல் மரணித்தார்கள். அந்த மாதத்தை/நாளை யாராவது பீடையுள்ள மாதம்/நாள் என்று கூறுகின்றார்களா? மாறாக, அந்த நாளை, எவருடைய பிறந்த நாளையும் சிறப்பித்துக் கொண்டாடாத நபி(ஸல்) அவர்களுக்கே பிறந்த நாளாக - மீலாது விழா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். ஏன் இந்த முரண்பாடு? நோய் வரும், தீரும். மரணம் அவ்வாறில்லையே!
 
பல அறிவிப்புகளின்படி நபி (ஸல்) அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ரபீஉல் அவ்வல் பிறை 12இல்தான். அந்த நாளையோ வேறு எந்த நாளையுமோ நல்லநாள்/கெட்டநாள் என்று ஏற்படுத்திக் கொண்டு, கொண்டாட்டம்/சோகம் போன்றதை அனுஷ்டிப்பதற்கு மார்க்கத்தில் சிறிதும் இடமில்லை.
 
ஆகவே ஸஃபர் மாதத்தைப் பீடைமாதம் என்றோ கெட்டமாதம் என்றோ கூறாமல் மற்ற மாதங்களைப் போன்று நினைத்து நமது அன்றாட காரியங்களைத் தொடரவேண்டும்
 
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்:
"ஆதமுடைய மகன் (மனிதன்) காலத்தைக் குறை கூறுவதன் மூலம் என்னை (அல்லாஹ்வை) குறை கூறுகிறான். ஏனெனில் நானே காலமாக (காலத்தை இயக்குபவனாக) இருக்கிறேன்" ஆதாரம் : புகாரி 4826.
 
காலத்தையும் நேரத்தையும் குறை கூறுவது மூடநம்பிக்கை மட்டுமின்றி நம்மைப் படைத்த அல்லாஹ்வைக் குறைகூறும் ஒரு பாவமான காரியமாகும் என்பதை உணர்ந்து இதைப் போன்ற அனைத்து வீணான மூடநம்பிக்கைகளைக் களைந்து நமது பொன்னான நேரத்தையும் செல்வத்தையும் அவனது உண்மையான மார்க்கத்தை அறிந்து பின்பற்றிச் செலவழித்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற்றிட வழி வகுப்போமாக.


-ஆக்கம் : இபுனு ஹனீஃப்

http://www.satyamargam.com/1402?utm_source=feedburne