அரசுகளுக்கோ அது அட்சய பாத்திரம். பயன்படுத்துவோருக்கோ அது பிச்சா பாத்திரம். தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டு வருமானம் 15 ஆயிரம் கோடி. கடைகள் 6696. மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை 8,200. விற்பனையாளர்கள் 16 ஆயிரம். உதவியாளர்கள் 6 ஆயிரம். இதை நம்பி வாழும் குடும்பங்கள் 1 லட்சம். நம்பிக் கெட்ட குடும்பங்களோ பல கோடி.
என்ன அந்தக் காலத்து குடும்பக் கட்டுப்பாடு ரேடியோ விளம்பரம் போல் இருக்கிறதா?
இதை நம்பி சிலர் அல்ல அரசே …. இல்லை இல்லை அரசின் இலவச திட்டங்களின் உயிரே உள்ளது. ரொம்ப பேரின் உயிரையும் வாங்குகிறது. அது மது. அதுவும் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மது. அதாவது தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் சீமைச் சாராயம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கப்பல்களில் வந்த யவனர்களின் மதுக் குப்பிக்கு மயங்கி கிடந்த மன்னர்களின் கதையை சோழமண்டல கடற்கரை வரலாறு சொல்கிறது. பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர் என மதுவைக் காட்டி மயக்காத படையயடுப்பாளர்கள் எவரும் இல்லை.
பண்டைய ஆரிய இலக்கியங்களே சோமபானம் – சுராபானம் என சுவையோடு மதுவை தரம் பிரித்தன. ஆனால் அகநானூறு தொடங்கி திருக்குறள் வரை போதை தரும் கள்ளை தொடாதே என்று சொன்ன தமிழ் இலக்கியங்கள் அதிகம்.
ஆங்கிலேயன் இந்தியாவை அரசாண்ட காலங்களில் மேல்தட்டு மக்களின் உற்சாக பானமாக இருந்த சீமைச் சாராயத்தை 1937ல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரிமியர் அதாவது முதலமைச்சர் ராஜாஜி காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கேற்ப தடை செய்தார். அதாவது மதுவிலக்கை கொண்டுவந்தார். அதற்கு காரணமும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் மதுக்கடை மறியலை காங்கிரஸ் நடத்தியது. சென்னை மாகாணத்தில் கள்ளுக்கடை மறியல். தந்தை பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாவும் கள்ளுக்கடை மறியலில் முன் நின்றனர். தந்தை பெரியாரோ தனது தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னை மரங்களைகள் இறக்க பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லி வெட்டிச் சாய்த்தார். இதன் எதிரொலியாகவே இரட்டை ஆட்சி முறையில் ஆட்சிக்கு வந்த ராஜாஜி மது விலக்கை கொண்டுவந்தார். அதற்கும் முன்னர் இந்திய வரலாற்றில் தனது ஆட்சி பகுதி முழுவதும் மதுவை தடைசெய்த ஒரே மன்னன் மாவீரன் திப்புசுல்தான் மட்டுமே.