உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, January 30, 2012

புகைப்பழக்கம்

Post image for புகைப்பழக்கம் நெடுங்காலமாக தொடர்ந்து ஆராய்ந்து தெளிந்து புகைப்பிடிப்பதால் உடலுக்கு விளையும் ஊறுகளையும், நோய்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் மருத்துவ வல்லுனர்கள் எடுத்துச் சொல்லியும் எழுதியும் வருகிறார்கள். புகைப்பிடிப்பவர்கள் மாத்திரமின்றி அவர்களைச் சூழ்ந்திருப்பவர்களும் கூட அப்புகையை சுவாசிக்க நேரிடுவதால் பல்வேறு உடல் கோளாறுகளுக்கும், வியாதிகளுக்கும் ஆளாகிறார்கள்.
   
சுயமாக புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கும் புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையை அவர்களின் அருகில் þருந்தமையால் அவர்கள் விடும் புகையை உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி, அதன் காரணமாக அவர்களுக்கும் நோய் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மையில் அவர்கள் புகைப்பிடிக்காவிட்டாலும் அருகில் இருந்து சுவாசிப்பதால் அவர்களை செயல் அற்ற புகைப்பிடிப்பவர்கள் (Passive Smokers) என்று மறுத்துவ ரீதியாக வகைப்படுத்தியுள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் இவ்விதம் பயங்கர கேடுகளை விளைவிக்கும் ஒரு ‘சமூக விரோதி’ புகைப்பிடித்தல் ஆகும் என்கின்றனர்.

    இறைமறையிலும், நபிமொழிகளிலும் புகைப்பிடித்தல் பற்றிய நேரடியான அறிவிப்புகள் காணப்படவில்லை எனினும், அது உடலுக்கு ஊறுகளையும், உயிருக்கு ஆபத்தையும் விளைவிக்கும் கொடிய பழக்கம் என்ற உண்மையின் அடிப்படையில் புகைப்பிடிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்பதை யார் மறுக்கமுடியும்?

    இஸ்லாமிய அடிப்படையில் உயிரை துரிதமாகவோ, படிப்படியாகவோ போகவல்ல  நஞ்சு போன்ற பொருட்களையும், உடல் ஆரோக்கியத்தை பாதிக்கவல்ல அல்லது உடல் கோளாறுகளை விளைவிக்க வல்ல பொருட்களையும் உண்ணுவதும் பருகுவதும் தவிர்க்கப்பட வேண்டும் என்பது பொதுவான நியதி.

    நீங்கள் உங்களையே கொலை செய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:29)
    இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு சொல்லாதீர்கள்.  (அல்குர்ஆன் 2:195)
    உண்ணுங்கள் பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7:31)

    மேலே கண்ட இறைவசனங்கள் மூலம் புகைபிடிப்பது மற்றும் கேடு விளைவிக்கக்கூடிய பழக்க வழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது உறுதியாகவில்லையா?

     மார்க்கம், மருத்துவம், ஒழுக்க ரீதியில் தீய பழக்கம் என கருதப்படுவதை முஸ்லிம்கள் தாமும் தவிர்த்து, சமுதாயத்தினரையும் தவிர்க்கத் தூண்டுவதை விடுத்து, தாமே அக்கொடிய பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது இஸ்லாத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்திற்கும் கேடாகும்.
  
  புகைப்பிடிப்பவர்களிடம் அதன் தீமைகளை எடுத்துரைத்து அப்பழக்கத்தை விட்டுவிடும்படி வேண்டினால் சாதாரணமாக அவர்கள் கூறுவது “புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் தெரியாமலில்லை; உடல் பாதிக்கப்படுவது உணராமலுமில்லை; ஆனால் பாழாய்ப்போன வழக்கத்தை விட முடியவில்லையே” என்பதுதான். புகைப்பிடிக்கும் அறிஞர்களும் கூட இதையே கூறுவது அவர்கள் கற்ற கல்விக்கும் பெற்ற அறிவுக்கும் அழகல்ல.

அப்துஸ்ஸமது  சென்னை

thaks to readislam.com

Friday, January 27, 2012

தகிடுதத்தத் தலையாறி ஆறுமுகம்

நமதூரின் வீட்டுமனைகள் நிலவில் இடம் வாங்கிப் போடும் விலைக்கு உயர்ந்ததற்கு பல்வேறு காரணிகள் உண்டு. குறிப்பாக சில,

1. பெண்ணுக்கு வீடு எனும் இஸ்லாத்திற்கு முரணான வரதட்சணை.
2. திடீரென பெருகிவிட்ட நில புரோக்கர்கள்.
3. கருணாநிதியில் இலவச நிலத் திட்டம் என பட்டியல் தொடர்ந்தாலும் இன்னுமொரு அதிபயங்கர காரணமும் உள்ளது. அது அல்ல அவர்,
4. ஏரிப்புறக்கரை தலையாறி ஆறுமுகம்

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் நிஜம்.

ஆளை நேரில் பாருங்கள் யாருமே நம்ப மாட்டார்கள் இந்த அப்பாவியா? சே;சசே இருக்காது என்பார்கள்.

அவர் வீட்டை நேரில் பாருங்கள், மூளையுடைய எவனும் சொல்ல மாட்டான் அவரை குடிசை வீட்டு கோடீஸ்வரன் என்று.

அதிகாலை 6 மணிக்கு அவர் வீட்டிற்கு சென்று பாருங்கள், பக்திப்பழமாக பூஜைகளில் 1 மணி நேரத்திற்கு மேல் ஈடுபட்டிருப்பார், இந்த பக்திமான் வேஷம் அவர் நம்புகிற கடவுளை ஏமாற்றவா அல்லது வெளியே கால்கடுக்க அவரை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களை ஏமாற்றவா என்பது விடைகாண முடியா வினா!

ஆனால் ஒன்று மட்டும் நிஜம், அந்த பூஜை நேரத்தில் மட்டும் தாங்க அவர் நல்லவர், யாரையும் ஏமாற்றுவதில்லை. அதற்கப்புறம் வரி செலுத்துவோரை வஞ்சித்து அரசாங்க சம்பளத்தையும் வாங்கிக் கொள்வார்.

அவர் மூலம் ஆக வேண்டிய நில அளவை போன்ற காரியங்களுக்காக போய் அழைத்துப் பாருங்கள், நாளொரு சாக்குப்போக்குகள் சாதரணமாக வந்து விழும், கலெக்டர் ஆபீஸ் போறேன், தாசில்தார் ஆபீஸ் போறேன் என மாதக்கணக்கில் இழுத்தடிப்பார். அதையும் மீறி கெஞ்சியோ கொஞ்சி அழைத்துப் பாருங்கள் வாரக்கணக்கில் இழுத்தடிப்பார். அதையும் மீறி அவர் வந்து விட்டால் நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள் நமது மனைக்கோ நமது பக்கத்து மனைக்கோ சம்பந்தமில்லாத அந்நியர்கள் சிலர் நமக்கு முன்பே ஆஜராகியிருப்பார்கள் இவர்களை நன்றாக கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள் இவர்கள் தான் நம்முடைய மனைக்கு தலையாறி ஆறுமுகத்தின் கைங்காரியத்தால் வில்லனாக வில்லங்கம் செய்ய இருப்பவர்கள்.

ரியல் எஸ்டேட் புரோக்கர் குழுவாக வலம் வரும் சிலருக்கு ஆறுமுகத்தின் ஆசி எப்போதும் உண்டு, ஊரில் இருந்த பெரும்பாலான அரசு புறம்போக்கு நிலங்களும் இந்த கும்பலுக்கு காட்டிக் கொடுக்கப்பட்டு களவு போயிருக்கக்கூடும், மாவட்ட நிர்வாகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா? நடவடிக்கை எடுக்குமா? 

கடந்த திமுக ஆட்சியே இந்த நிலத்திருட்டுக் கும்பலின் பொற்காலம் எனலாம், ஏனெனில் கருணாநிதி கொண்டு வந்த இலவச நிலத் திட்டமே புறம்போக்கு நிலங்களை பட்டியலிட்டு காட்டியது. இந்த இலவச நிலங்களை முறைகேடாக பெற்றவர்களை கண்டறிவதுடன் இதில் ஆறுமுகத்தின் திருவிளையாடல் என்ன என்பதையும் கண்டறிய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

நமக்கு சொந்தமான மனைக்கு பக்கத்தில் ஏதாவது சிறிய துண்டு புறம்போக்கு நிலம் இருந்தால் உடன் நடவடிக்கையில் இறங்கி உங்கள் மனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் இல்லையேல் ஆறுமுகத்தின் உதவியோடு உங்கள் மனையின் ஒரு பகுதியை போலி ஆவணங்களை உருவாக்கி, களவாடி புறம்போக்குடன் இணைத்து மூன்றாவது பார்ட்டிக்கு விற்றுவிடுவார்கள் பின்பு வாங்கியவரும் நாமும் கோர்ட், கேஸ் என்று அடித்து கொண்டு தெருவில் நிற்க வேண்டும்.

பட்டுக்கோட்டையிலிருந்து நாம் முறைப்படி கட்டணம் செலுத்தி சர்வேயர்களை அழைத்து வந்தாலும் தலையாறி ஆறுமுகம் தன் உள்குத்து இருக்கும் மனைக்கு அவர் வரவே மாட்டார், மனையை அளக்க கடைசி வரை ஒத்துழைப்பும் தர மாட்டார்.

இப்போது சொல்லுங்கள், நம்மூர் மனை விலையேற்றங்களுக்கு தலையாறி அறுமுகமும் ஒரு காரணமா?  இல்லையா?

ஆறுமகத்தின் மீது துறைசார் நடவடிக்கைகான முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன, மேலும் என்னைப் போன்று பாதிக்கப்பட்டோர் யாருமிருந்தால் உடன் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கு புகார் அனுப்பும்படியும், விழிப்புணர்விற்காக இணையத்தில் பதியவும் வேண்டுகிறேன்.

டெய்ல் பீஸ்: ஆறுமுகத்திற்கு நெருக்கமான புரோக்கர் கும்பலைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய நிலத்தில் பள்ளிவாசல் ஒன்றை கட்டப்போகிறராம். ஆறுமுகத்தின் அதே டெக்னிக், தினமும் 1 மணி நேரம் பூஜை செய்து விட்டு எந்த அக்கிரமம் செய்தாலும் கடவுள் கண்டு கொள்ளாது என்று நினைப்பதை போல் நில வில்லங்கம் செய்து விட்டு அல்லாஹ்விற்காக பள்ளிவாசலை கட்டி கொடுத்து விட்டால் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என நினைக்கிறார் போலும், சகோதரா! விலகிக் கொள், அல்லாஹ்வின் தண்டனையை நாம் யாரும் தாங்க முடியாது.

முஹமது அமீன்
பிலால் (ரலி) நகர்
ஏறிப்புறக்கரை ஊராட்சி

Thursday, January 26, 2012

முஹம்மத் நபி (ஸல்) அவர்ளை நேசிப்பது எப்படி?

- உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

 • முஹம்மத் நபி (ஸல்) இறைத் தூதர் என்று முழுமையாக நம்புதல்.
 • நபியின் கட்டளைகளுக்கு முழுமனதுடன் ஏற்று கட்டுப்படுதல்
 • நபியின் வார்த்தைகளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் பின்பற்றுதல்.
 • நபி காட்டிய வழிமுறையை கூட்டல் குறைவில்லாமல் அப்படியே பின்பற்றுதல்.
 • நபியின் செயல்முறைகளுக்கு மேலதிகமாக எதையும் உருவாக்காமல் தவிர்ந்து கொள்ளல்.
 • நபியை சகல காரியங்களிலும் முன்மாதிரியாகக் கொள்ளல்.
 • நபியின் சுன்னாக்களை குறைக்காமல், கொச்சைப்படுத்தாமல் செயல்படுத்துதல்.
 • நபியை தன் உயிர், பொருள், பிள்ளை, பெற்றோரை விட நேசம் கொள்ளல்.
 • நபி காட்டிய வழியை ஏற்று நபி தடுத்த விடயங்களை விட்டும் தூரமாகுதல்.
 • நபி போதித்த மார்க்கத்தை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் கடைப்பிடித்தல்.
 • நபியின் மீது எப்போதும் ஸலவாத்து கூறல்.
 • நபி எத்திவைத்த குர்ஆனை தினம் தோறும் ஓதுதல்
 • நபி போதித்த குர்ஆனின் விளக்கங்களைப் படித்தல்.
 • நபியின் தூய வரலாற்றை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்தல்.
 • நபியுடன் தியாகங்கள் புரிந்த உத்தம ஸஹாபாக்களையும் குடும்பத்தாரையும் மதித்தல்.
 • நபியின் பெயரால் கூறப்படும் செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கேட்டல்.
 • நபியின் நம்பகத் தன்மையை நிரூபிக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மட்டும் பின்பற்றல்.
 • நபிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் ஆதாரமற்ற, போலியான ஹதீஸ்களை விட்டு விடுதல்
 • நபியை அல்லாஹ்வின் அந்தஸ்துக்கு உயர்த்துவதோ இணையாக ஆக்குவதோ ஆட்சேபித்தல்.
 • நபியை சாதாரண மனித நிலைக்கு -கீழ் தரத்துக்கு- பேசுவதை கண்டித்தல்.
 • நபியை இறுதி நபியாக அகில மக்களுக்கும் ரஹ்மத்தாக அனுப்பப்பட்டவர் என உறுதியாக நம்புதல்.
 • நபிக்கு பின் இன்னுமொருவர் தன்னை நபி என வாதிடுவதையோ போதிப்பதையோ கண்டால் பலமாக எதிர்த்தல்.
 • நபியுடைய தூதுத்துவத்தை மனித சமூகத்திற்கு எத்திவைத்தல்.
 • நபியுடைய வழிமுறைக்கு மாற்றமாக தோன்றும் அத்தனை பிரிவுகளையும் விட்டு ஒதுங்குதல்.
 • நபியை முழுமையாக ஒவ்வொரு வினாடியும் பின்பற்றுவதே நபிக்கு செலுத்தும் மரியாதையும் கௌரவமுமாகும்.
Thanks to islamkalvi.com

அதிரை நகைக்கடையில் கொள்ளை

நமதூர் ECR சாலையில் அமைந்துள்ள, ராமச்சந்திர பத்தர் என்பவருக்கு சொந்தமான KR ஜூவல்லரியில் நேற்றிரவு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதிரையில் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த நகைக்கடையை உடைத்து தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் மர்ம நபர்கள்.

வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் உள்ள ECR சாலையில் நடைபெற்றுள்ள இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் காவல்துறையின் செயல்பாட்டினை கேள்விக்குறியுடன் பார்க்கத் துவங்கியுள்ளனர். காவல்துறை துரித நடவடிக்கை எடுத்து உண்மை குற்றவாளிகளை கைது செய்யுமா? அல்லது வழமைபோல் வலைவீசி தேடிக் கொண்டிருக்குமா? என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒரே அச்சம்.

குறிப்பு : ராமச்சந்திர பத்தர் அவர்கள் பழக இனிமையானவர் மேலும் முஸ்லீம்களுடன் மிகவும் இயல்பாக பழகக்கூடியவர். நகைக்கடை வரை தன்னிலை உயர்ந்தாலும் தான் மேலத்தெருவில் நடத்தி வரும் பத்தர் தொழிலையும் இன்று வரையும் தொடர்பவர். சில ஆண்டுகளுக்கு முன் மகன் எனும் மக்கட் செல்வத்தை இழந்தவர் தற்போது தொழில் எனும் பொருட் செல்வத்தையும் இழந்து நிற்பது மிகவும் வருத்தத்திற்குரியது.

Abu Abdur Rahman

Friday, January 20, 2012

திருச்சி கட்... திருவனந்தபுரம் ஓகே, திசை மாறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு இயங்கி வந்த பல விமான சேவைகளை ஏர் இந்திய நிறுவனம் திடுமென நிறுத்திவிடவே, டெல்டா மாவட்ட பயணிகள் ஏக கடுப்பில் இருக்கிறார்கள்.

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேரடியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் இலங்கைக்கு விமான சேவைகள் நடைபெற்று வந்தன இந்த ஊர்களுக்கு நியாயமான கட்டணத்தில் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா தினந்தோறும் இயக்கி வந்த பல அயல்நாட்டு விமான சேவைகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருவதுதான் பயணிகளைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் திருச்சி மண்டலத் தலைவரான சுப்புவிடம் பேசினோம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு திருச்சியில் மட்டும் ஆண்டிற்கு 110 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடந்து வந்தது. திருச்சி வழியாக இந்த நிறுவனம் இயக்கிய அனைத்து விமானங்களிலும் இருக்கைகள் நிரம்பி,லாபகரமாகவே செயல்பட்டன, அப்படி இருந்தும் லாபக்ரமான வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த சில விமானங்களை முழுவதுமாக ரத்து செய்தும், சில வழித்தடங்களில் விமான சேவையைக் குறைத்தும் வருகின்றனர்.

திருச்சி, கோலாலம்பூர் தினசரி விமான சேவையும், திருச்சி - கொழும்பு தினசரி விமான சேவையும் முழுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம் 14 முறை இயங்கி வந்த விமான சர்வீஸில், ஐந்து சர்வீஸ் குறைக்கப்பட்டுள்ளது, திருச்சி - அபுதாபி விமான சேவை வாரம் ஒரு டிரிப் குறைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைபெற்று வந்த தினசரி விமான சேவை வாரம் ஐந்து டிரிப்பாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரூட்களில் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால்தான் சீட் கிடைக்கும் என்ற நிலை இருக்கும்போது, இந்த சேவைகளை ரத்து செய்ததன் மர்மம் புரியவில்லை.

நியாயமான கட்டணத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல தனியார் விமான நிறுவனங்கள் மிக அதிகக் கட்டணத்தை வசூலித்து இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்கி கொள்ளை லாபம் பார்க்கின்றனர். திருச்சியில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர் செல்ல இருவழி பயண கட்டணமாக 12 ஆயிரம் ரூபாயில் பயணம் செய்து வந்தவர்கள், தற்போது தனியார் விமானங்களில் ஒரு வழிப் பயணக் கட்டணமாக மட்டுமே 21 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், இருந்த சேவைகளையும் பறித்து விட்டார்கள் என்றார் வேதனையுடன்.

லாபத்தில் இயங்கிய திருச்சி வழியான ரூட்களை கட் செய்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், புதிதாக திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை துவக்கி உள்ளது. அந்த விமானத்திற்குப் போதிய பயணிகள் இல்லாமல், நஷ்டத்தில் இயங்கினாலும் நிறுத்தாமல் இயக்குகிறார்கள், மேலும் , பல புதிய அயல்நாட்டு பயண சேவைகளை திருவனந்தபுரத்தில் இருந்து துவக்கவும். திட்டம் வைத்துள்ளது.

தமிழக முதல்வரின் தொகுதி அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்துவற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். முதல்வர். அதில் சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற சென்டோசா பூங்கா திட்டமும் ஒன்று திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் முதல்வரின் எண்ணத்திற்கு எதிராகவே ஏர் இந்தியா செயல்படுகிறது. தனியார் விமான நிறுவங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க வசதியாக அவர்களிடம் பெரும் தொகையைப் பெற்றுகொண்டு விமானசேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியிருக்கலாமோ ? என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது' என்று டென்ஷன் ஆகிறார்கள் திருச்சியில் உள்ள விமான பயண ஏற்பாட்டாளர்கள்.

இதுகுறித்து பேசுவதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் திருச்சி மண்டல  மேலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம் நான் பிஸியாக
இருக்கிறேன். சிறிது நேரம் கழித்துப் பேசுங்கள் என்றவர், அதன்பிறகு பலமுறை அவரை தொடர்புகொண்டபோதும், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் போராடிக்கொண்டு இருக்கிறது இந்த சமயத்தில்,வான் வழி பயண சேவையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பல விமான சேவைகள் சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டு, கேரளாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது, பல கேள்விகளை எழுப்புகிறது.

மாநில அரசு உடனடியாக இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும் !

நன்றி : ஆனந்தவிகடன்

தகவல் : அதிரை M. அல்மாஸ்

Thanks to: adiraitiya.blogspot.com

Thursday, January 19, 2012

மார்க்கக் கல்வி கற்க வேண்டியதன் அவசியம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

 ஒவ்வொரு முஃமினுக்கும் புனிதமான அல்குர்ஆனையும், சுன்னாவையும் படித்து மார்க்க அறிவைப் பெறுவது கடமையாக்கப்பட்டுள்ளது. வல்ல அல்லாஹ் அல்குர்ஆனின் பல இடங்களில் பின்வருமாறு கூறுகின்றான்:-
'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை  தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது...' (அல்குர்ஆன் 2:185)

அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, இதை நாம் உம்முடைய மொழியில் எளிதாக்கினோம். (அல்குர்ஆன் 44:58)
ஹா, மீம். விளக்கமான இவ்வேதத்தின்மீது சத்தியமாக. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம். (அல்குர்ஆன் 43:1-3)

அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (அல்குர்ஆன் 12:1-2)
...மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது  நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (அல்குர்ஆன் 16:2)

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்-திலிருந்து இறக்கியருளப்பட்டது. அரபுமொழியில் அமைந்த இக்குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது.) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர்;. அவர்கள் செவியேற்பதும் இல்லை. (அல்குர்ஆன் 41:2-4)

தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். அது உறுதியான (வழியைக் காண்பிப்ப)து, அவனிடத்திலிருந்துள்ள கடினமான வேதனையைப் பற்றி அச்சமூட்டுவதற்காகவும் ஸாலிஹான (நற்)செயல்கள் செய்யும் முஃமின்களுக்கு நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி(யாக சுவனபதி) இருக்கிறது என்று நன்மாராயங் கூறுவதற்காகவும் (குர்ஆனை அருளினான்). அதில் (அதாவது சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். (அல்குர்ஆன் 18:1-3)

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர். நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 43:43-44)
கண்மனி நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
'ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப்   பெறுவது கடமையாகும்' (திர்மிதி)

'இஸ்லாத்தை மறுமலர்ச்சி அடையச் செய்வதற்காக,  இஸ்லாமிய அறிவை பெற்றுக் கொண்டிருக்கும்போது யார் உயிர் நீத்தார்களோ, அவர்கள் சொர்க்கத்தில் நபிமார்களுக்கு அடுத்த நிலையில் இருப்பார்கள்' என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். (முஸ்லிம்)
மேலும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:-
யார் ஒருவர் தன்னுடைய சகோதரனை இந்த உலக ஆசைகளின் துன்பங்களில் இருந்து நீக்குகிறாரோ, அவரை அல்லாஹ் மறுமை நாளின் துன்பங்களிலிருந்து நீக்குவான். யார் ஒருவர் இந்த உலகத்தில் ஒரு முஸ்லிமின் குற்றத்தை மறைக்-கிறாறோ, அல்லாஹ் மறுமை நாளில் அவருடைய குற்றத்தை மறைப்பான்;. தன் சகோதரனுக்கு பின்னால் இருந்து உதவி செய்யக் கூடியவனுக்கு, அல்லாஹ் அவரின் பின்னால் இருந்து உதவி செய்வான். அறிவைப் பெறுவதற்காக யார் நடந்து செல்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அவருடைய பாதையை இலகுவாக்குகிறான்; சொர்க்கத்திற்கான வழியையும் காட்டுகிறான்; யாரெல்லாம் அல்லாஹ்வின் இல்லத்தில் ஒன்று கூடி குர்ஆனை ஓதி, பிறருக்கும் கற்றுக்கொடுக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வின் அருள் சூழ்ந்து கொள்ளும் மலக்குகளும் சுழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தனக்கு அருகில் உள்ளவர்களிடம் அவர்களைப்பற்றி சிலாகித்துக் கூறுவான். (திர்மிதி)

நபி நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:-
இரவில் ஒரு மணி நேரம் மார்க்க அறிவைப் பெறுவதற்காக வெளியே செல்வது முழு இரவிலும் நின்று வணங்கி செலவழிப்பதை விட சிறந்தது. (திர்மிதி)
இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெறுவது ஒவ்வொரு பருவ வயதை அடைந்த, புத்தி சுவாதீனமுள்ள முஸ்லீம்கள் அனைவருக்கும் கடமையாக்கப்பட்டுள்ளது என்று எல்லா இஸ்லாமிய அறிஞர்களும் சட்ட வல்லுனர்களும் ஒரு மனதாக குரல் கொடுக்கின்றனர். ஒரு சில மக்கள் தான், மார்க்க அறிவைப் பெருவதில் இருந்து தவிர்ந்து கொள்வதற்காக, வெட்கப்பட்டு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை சொல்லி தங்களுடைய செயல்களை நியாயப்படுத்துகின்றனர்.

முன்பெல்லாம் பள்ளிவாசல்-மதரஸாக்ககளில் குழந்தைகளுக்கு மக்தப் வகுப்புகள் நடைபெறும். காலையில் எழுந்தவுடன் அங்கு சென்று அல்குர்ஆனை ஆரம்ப நிலை முதல் கற்று வருவர். பின்னர் பள்ளிக்கூடம் செல்வர். ஆனால் இன்றைய நிலையோ மார்க்க கல்வி என்றாலே என்னவென்றே அறியாத குழந்தைகளாகத்தான் பெரும்பாலும் வளர்கின்றனர். இதில் பெற்றோர்களும் சற்று அலட்சியப்போக்கையே கொண்டு-ள்ளனர். காரணம் உலகக்கல்வி என்ற பெயரில் குழந்தைகளின் கவனத்தை ஒரு பக்கமாக திருப்பிவிட்டதேயாகும்.

பள்ளிக்கூடத்தில் ஒருமணிநேர குர்ஆன் வகுப்பு என்று வைத்துள்ளார்கள். அதில் படித்தால் போதும்??! என்று திருப்தியுற்ற பெரும்பாலான பெற்றோர்களின் மனநிலை மற்றும் நல்ல பள்ளிக்கூடம் என்று வெகுதொலைவுக்கு பிள்ளைகளை அனுப்புவதனால் ஏற்படுகின்ற நேரச்சுமை போன்ற காரணிகளால் இன்று பெரும்பாலான பள்ளிவாசல்களில்-மதஸாக்களில் மக்தப் வகுப்புகளே நடைபெறுவதில்லை.

எனவே இந்நிலை மாறி (மாற்றி) மார்க்க அறிவைப் பெறுவதற்கு ஒவ்வொரு இஸ்லாமியனும் முயற்சிக்க வேண்டும் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளதை உளமாற உணர்ந்து மார்க்க்கல்வியை கற்று பயன்பெற்று இருஉலகிலும் வெற்றியடைய முயற்சிப்போமாக!

(நன்றி: islamhelpline.com)
வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

Thursday, January 12, 2012

நன்மையின் பக்கம் விரைந்தோடுவோம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

இந்த உலகில் தோன்றிய, தோன்றவிருக்கிற மனிதர்கள் அனைவரும் மரணத்தை சுவைப்பவர்களே! அந்த மரணத்திற்கு பின் இறைவனின் நீதி விசாரணைக்கு பின் சுவனம் எனும் சுக வாழ்க்கையை அடைய வேண்டுமெனில், அதற்கான சேமிப்பு நன்மை மட்டுமே!
இறைவன் வழங்கிய ஆயுளைக்கொண்டு இருக்கும் காலத்தில் நன்மைகளை சேகரித்து வைத்தால்தான் மறுமையில் சுவனத்தின் திறவுகோலாக அது அமையும். அதைவிடுத்து மனம்போன போக்கில் நமது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் மறுமையில் கைசேதப்படும் நிலைவரும். எனவேதான் வல்ல அல்லாஹ் கூறுகின்றான்;

'ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான)  ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின்பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்' (அல்குர்ஆன் 2:148)

இந்த வசனத்தில் அல்லாஹ் நன்மையின் பக்கம் முந்திக்கொள்ளுமாறு நம்மைப் பணிக்கின்றான். நற்செயல் என்பது நாம் நினைப்பது போன்று தொழுகை-நோன்பு-ஹஜ் போன்றவை மட்டுமல்ல. இதுபோன்ற அமல்களோடு நம் அன்றாட வாழ்வை இறைமறை-இறைத்தூதர்(ஸல்) வழியில் அமைத்துக் கொள்வது, நாம் பேசும் பேச்சுக்களை உண்மையானதாகவும், பொய்கள்-புறம்-அவதூறுகள்-வீண் தர்க்கங்கள் தவிர்ந்து கொள்வது, நம்முடைய நடை-உடை-உணவு-வியாபாரம்-இல்லறம்-உறவுமுறை பேணல் போன்ற-வற்றை குர்ஆன்-ஹதீஸ் வழியில் அமைத்துக் கொள்வது இவை யாவும் நமக்கு நன்மையானதாக மாறிவிடும்.
உதாரணமாக ஸலாம் கூறுவதை எடுத்துக் கொண்டால், ஒருவர் அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொன்னால் 10 நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் என்றால் 20 நன்மைகளும், அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து{ஹ என்றால் 30 நன்மையையும் கிடைக்கின்றது. இந்த நன்மைகளை பெறுவதற்காக பலமணி நேரம் நாம் செலவளிக்கவேண்டியதில்லை. ஒரு சில நிமிடங்களில் இந்த நன்மை நமக்கு கிடைத்துவிடும். நம்மில் எத்துனை பேர் ஸலாம் சொல்லுவதில் கவனம் செலுத்துகிறோம்..?

இதுபோன்ற நன்மையை அள்ளித்தரும் பல்வேறு சின்ன சின்ன செயல்கள் நம்மால் பாராமுகமாக விடப்-பட்டதற்கு காரணம் அவற்றை சேகரிப்பதில் நமக்கிருக்கும் ஆர்வமின்மைதான். சின்ன சின்ன செயல்களுக்கும் பெரிய கூலியை அல்லாஹ் வழங்குகின்றான்.அருமை சஹாபாக்கள் நன்மையை அடைந்து கொள்ளும் அமல்கள் என்ன என்பதை ஆர்வத்துடன் நபியவர்களிடம் கேட்டதோடு, அதை உடனடியாக அமுல்படுத்தியும்
காட்டியுள்ளார்கள்.

நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) நூல்: புஹாரி 2784

ஆண்கள் அறப்போரில் பங்கெடுத்து அதன்மூலம் மிகப்பெரிய நன்மையை ஈட்டிக்கொள்கிறார்களே என்று ஆதங்கம் அடைந்த அன்னையவர்கள் பெண்களுக்கும் இந்த நன்மை கிடைக்காதா என்ற ஆர்வத்தில் அதுபற்றி நபியவர்களிடத்தில் கேட்கிறார்கள் எனில், சஹாபாக்களின் நன்மையை தேடும் தாக்கத்தை புரிந்துகொள்ளலாம்.

ஏழை மக்கள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'பொருளாதாரச் செல்வம் பெற்றவர்கள் நாங்கள் தொழுவது-நோன்பு வைப்பது போன்றே அவர்களும் நோன்பு நோற்கின்றனர். ஆயினும் அவர்கள் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் ஹஜ் உம்ரா செய்கின்றனர்; அறப்போரிடுகின்றனர்;. தர்மமும் செய்கின்றனர். (ஏழைகளாகிய நாங்கள் இவற்றைச் செய்ய முடிவதில்லை)' என்று முறையிட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும்; ஸுப்ஹானல்லாஹ் 33 முறையும், அல்ஹம்துலில்லாஹ் 33 முறையும் அல்லாஹு அக்பர் 33 முறையும் கூறுங்கள் என்றார்கள். அல்லது 'ஸுப்ஹானல்லாஹி வல் ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர்' என்று 33 முறை கூறுங்கள். இதனால் ஒவ்வொரு வார்த்தையையும் 33 முறை கூறியதாக அமையும்' என்று விளக்கம் தந்தார்கள்.            அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 843
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...

நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது அல்லது உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது 33 முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், 33 முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், 34 முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள்.   அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: புஹாரி 5361

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'சுப்ஹானல்லாஹ் வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) ஆதாரம்: புஹாரி 6405

எனவே நன்மையை அள்ளித்தரும் அமல்களை அறிவோம். அதை செயல்வடிவில் கொண்டு வந்து மறுமைக்கான சேமிப்பாக்குவோம் இன்ஷh அல்லாஹ்.

(நன்றி: mugavaiexpress.blogspot.com)

வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

Wednesday, January 11, 2012

துபையில் அதிரை தாருத் தவ்ஹீத் ஆலோசணை அமர்வு அழைப்பு

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

கனண்ணியத்திற்குரிய அதிரை தவ்ஹீத் சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.

சிதறுண்டு போனாலும் இன்னும் சிந்தனையிலும் செயலிலும் ஏகத்துவவாதிகளாய் நீடிக்கும்

 அதிரையை சேர்ந்த அனைத்து தவ்ஹீத் சகோதரர்களையும் ஒன்றிணைக்க,

 ஏகத்துவ பிரச்சாரத்தை இன்னும் வலிமையுடன் ஓருங்கிணைத்து கொண்டு செல்ல,

 இளந்தலைமுறையுடன் இணைந்து செயலாற்றிட,

 பிரிவுகளின் காரணிகளை களைந்திட,

 மனம் விட்டுப் பேசிட ஏதுவாய்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.01.2012) மஃரிப் தொழுகைக்குப் பின் துபை மாநகரில் அமைந்துள்ள தவ்ஹீத் இல்லத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட் மற்றும் மர்கஸ் குறித்த மிக முக்கிய ஆலோசணை அமர்வு நடைபெறவுள்ளது.

அதுபோது பொதுவான மற்றும் பல்வேறு அமைப்புகளில் அங்கம் வகிக்கின்ற அதிரையை சேர்ந்த அனைத்து தவ்ஹீத் சகோதரர்களும் அனுதாபிகளும் ஆதரவாளர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் விரும்பி அழைக்கின்றோம்.

இந்நிகழ்வில் தாங்கள் அறிந்த அமீரகம் வாழ் அதிரையின் தவ்ஹீத் சொந்தங்களையும் அனுதாபிகளையும் ஆதரவாளர்களையும் அழைத்து வருமாறு வேண்டுகிறோம்.

இடம்:

தவ்ஹீத் இல்லம்

தேரா துபை, நைஃப் ரோடு, அல் புத்தைம் மஸ்ஜித் நேர் எதிரில், DULF ஹோட்டல் பின்புறம், லூத்தாஹ் பில்டிங் அறை எண் : 109

தொடர்புக்கு :  

ஜமாலுதீன்  055 2177618   &   04 2981931 

அப்துல் காதர் 055 2829759

அதிரை தாருத் தவ்ஹீத் டிரஸ்ட் மற்றும் மர்கஸ் குறித்து நமது வலைதளத்தில் பதியப்பட்டுள்ள ஆக்கங்களை வாசிக்க கீழே சுட்டுக!Tuesday, January 10, 2012

தொழில் தரும் தன்னம்பிக்கை


நமது நாட்டில் பெரும்பாலான குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் தக்க கல்வியறிவுபெற்று வருவது பெருமைக்குரியதே. அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தைப் படிப்பு, விளையாட்டு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது என்றே செலவிடுகின்றனர்.
மிகச் சிலரைத் தவிர, பிறர் தங்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறு வேலைகளைக்கூட (உதாரணமாக அவர்களது துணிகளை அவர்களே சலவை செய்வது, இஸ்திரி போடுவது, காலணிகளைத் தூய்மையாய்த் துடைத்து பாலிஸ் போடுவது, உடைந்த பட்டன்களை மாற்றுவது தங்களது வாகனங்களைத் தூய்மையாய்த் துடைத்துப் பராமரிப்பது போன்றவைகளை செய்ய முன்வருவதும் இல்லை. செய்வதும் இல்லை.
படிப்பைத்தவிர, நேர்மையான ஏதாவது ஒரு தொழிலை, படிக்கும் காலத்திலேயே, கற்றுத் தன்னம்பிக்கையை வளர்த்துப் பயன்பெறுவோம் என்ற ஆர்வத்தில், பெற்றோர் செய்யும் நல்ல புதிய தொழிலையோ அல்லது நேர்மையான பரம்பரைத்தொழிலிலேயோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வபர்கள் எத்தனைபேர்?  மிகச் சிலர்தான் என்பதில் ஐயமில்லை.
காரணம், உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் எந்த நல்ல பரம்பரைத்தொழிலாயினும், பெருவாரியானவர்கள் அதனை மதிப்பதில்லை. நன்கு வேளாண்மை செய்யும் விவசாயிகூட, தனக்குப் பின்னர், தன் வாரிசுகள் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை விரும்புதில்லை. எப்பாடுபட்டேனும் தனது மக்கள் படித்துப் பட்டம் பெற்று, மின் விசிறிக்கடியில் குறைந்த உழைப்பில் அதிகம் சம்பாதிப்பதையே விரும்பிச் செயல்படுகின்றனர்.
படிக்கக் குழந்தைகளை அனுப்புவதன் நோக்கமே, கல்வியறிவோடு ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, தேசப்பற்று போன்ற உயரிய குணங்களையும் கற்று, மனிதனாய் முழுமை பெறத்தான்.
நல்ல தொழிலுக்காக மட்டுமே கல்விகற்பதில் பயனில்லை.  கற்ற கல்வியால் நல்ல தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.  அல்லது தெரிந்த தொழிலை கற்ற கல்வியால் மேம்படுத்தி வெற்றி காணலாம்.  கற்றவர் அனைவருக்கும் அரசாங்கம் வேலை தருவது என்பது இயலாத காரியம்.

நேர்மையான முறையில் செய்யும், எந்த் தொழில் ஒரு குடும்பத்தைக் காக்ககிறதோ. அத்தொழிலைப் பெற்றோர்கள் தம் வாரிசுகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே பயிற்றுவித்து ஓரளவு அதில் பண்டிதனாக்குவதும் அவசியம்.
இதனைக் கற்றுக்கொண்ட இளைய தலைமுறைக்கு எதிர்காலத்தில் படிப்பு முடித்தவுடன் ஏற்ற வேலை கிடைக்காவிடினும்கூட, தன்னம்பிக்கையோடு இவ்வுலகில் வாழ்ந்துகாட்ட தொழில் இருக்கிறது என்ற மனோபாவம் வரும்.
ஆதலால், ஒரு விவசாயி வேளாண்மை பற்றியும், முடிவெட்டும் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்புத் தைக்கும் தொழிலாளி எல்லாம் தம் வாரிசுகளுக்கு தொழிலைக் கற்றுக்கொடுப்பது எள்ளளவும் கேவலமில்லை. இதனைக்  கேவலாமாய் நினைப்பவர்கள் அறிவிலிகள்.
இத்தொழிலைக் கற்றால் இதையே செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.  அவன் திறமைக்கும் கல்விக்கும் வேறு தொழில் கிடைத்தால் நிச்சயம் செய்யட்டும். ஆனால் இதுவும் ஒரு தகுதியாய் இருப்பது அவனுக்கு மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
நேர்மையான எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்ற மனப்பக்குவம், தளராத முயற்சி, சலைக்காத உழைப்பு இவையெல்லாம் முன்னேற்றப்படியின் முக்கியப் படிக்கட்டுக்கள்.
ஆக, பெற்றோர்களே!  ஒவ்வொரு வாரிசுக்கும் பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே தக்கதொரு தொழிலைக் கற்றுக்கொடுங்கள். மாணவ மாணவியரே!  நீங்களும் சிரமம்  பாராது, விருப்பத்தோடு கற்றுக்கொள்ளுங்கள்.
பெற்றோரின் தொழில் கற்க (உதாரணமாக தூர அலுவலகங்களில் பணி புரிவோர்) வாய்ப்பில்லையெனில், அருகிலுள்ள அச்சகம், கணிப்பொறி மையம், வாகனப் பட்டறை, தையற்கூடம், இயந்திரத் தொழிற்கூடம், பலபொருள் விற்பனையங்காடி, எலக்ட்ரானிக் சாதனங்களைப் பழுதுபார்க்கும் கூடங்கள் போன்ற ஏதாவதொரு தொழிலகத்திற்குச் சென்று கற்றுத்தேறலாம்.
கற்றுத்தெளிவோம் என்ற ஏக்கத்தோடு கண்ணைத் திறவுங்கள்! ஏரளமான, தொழிலுக்கான வாய்ப்புகள், சற்றே மறைந்திருப்பதைக் காணலாம்.
அட ஒன்றம் இல்லையென்றால்கூட, நமது வீட்டிலேயே துவைத்தல், இஸ்திரிபோடுதல், சமைத்தல், குழந்தைகளுக்கு முடிவெட்டிப் பார்த்தல், வீட்டைப் பெருக்கித் தூய்மையாய் வைத்திருத்தல் போன்ற வேலைகளை திறம்படத் தெரிந்து வைத்திருந்தால்கூட இதனை அடிப்படையாக்க் கொண்டு, தொழில் தொடங்க அல்லது வேலையில் சேர நிறைய வாய்ப்புண்டு.
ஒவ்வொரு வேளை உணவை உண்ணுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உண்பேன், என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்தால் நாட்டில் சோம்பேறிகளும் இருக்கமாட்டார்கள். நாடும் வேகமாய் முன்னேறிவிடும்.
தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறுதான் ஊதியம் ஒவ்வொருவருக்கும் கிட்டும் எல்லோரும் இந்நாட்டின் முதல்வராவதோ முதலாளியாவதோ, மருத்துவ பொறியாளர் என்றாவதோ இயலாத காரியம்.  எல்லாத்துறைகளிலும் தக்கவாறு உழைக்க, உழைப்பாளி இருந்தால் தான் நாடு முன்னேறும்.

படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே என்று தாடி வளர்த்து வருந்திப்பயனில்லை. பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு முயற்சிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவரை வெட்டியாய் பொழுதைப் போக்கி காலங் கழிக்காமல் நூறு ரூபாய் தின வேலைக்குப் போவதிலும் தப்பில்லை.

கிராமத்தில் பிறந்து வேளாண் தொழிலையும்,, பள்ளிப் பருவத்திலேயே செய்து வந்தமையால் இன்றும் கூட மருத்துவத் தொழில் விட்டு என்னால் திறம்பட விவசாய வேலைகளையும் செய்து முன்னேற முடியும்.
வாழ்வில் எந்த நிலையிலும், இடிந்து போய் தளர்ந்து விடாமல் எப்படியும் உழைத்து வாழ்ந்து காட்டும் மனோதைரியமும், தன்னம்பிக்கையும் எனக்குத் தந்ததே இளமையில் வறுமையும், அதிலிருந்து மீளக் கற்றுக்கொண்ட கடுமையான தொழில்களும்தான் என்றால் அது மிகையாகாது.
துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்கி இந்தியாவை முன்னேற்ற இளஞ்செடிக்கு உரமிடுவோம்! இளையதலைமுறையைத் தொழில் கற்கச் செய்வோம்!

Thanks to Ameen (MKR)

Thursday, January 5, 2012

அல்குர்ஆன் தோற்றுவித்த சமுதாயம்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மனித சமூகத்தில் மிக மோசமானவர்களாக நடமாடிய ஒரு சமூகத்தை நேர்வழியில் கொண்டு வந்ததைப் பற்றி அல்குர்ஆன் இங்கே எடுத்துரைக்கின்றது. படுபாதகத்தில் வாழ்ந்தவர்ளை காப்பாற்றியதை நினைவூட்டி நேர்வழியின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது

அல்குர்ஆன்.
 'அல்லாஹ் உங்கள் மீது புரிந்த அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) விரோதிகளாக இருந்த சமயத்தில் அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப்பிணைப்பை உண்டாக்கினான். ஆகவே அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்பு) நீங்கள் நரக நெருப்பு குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள். அதிலிருந்தும அவன் உங்களை காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 3:102)

யார் அந்த சமூகம்?!
நாளாப் பக்கங்களிலும் பாராங்கற்களினால் சூழப்பட்ட பகுதிகளில் வாழ்ந்தவர்கள். தோற்றத்தில் மனிதர்களாகவும் செயற்பாட்டில் அசிங்கமாகவும்; இயங்கியவர்கள். கற்பாரைகளைப் போன்றே அவர்களின் உள்ளங்களும் கடுமையாகவே இருந்தன. வரலாறு அவர்களை ஜாஹிலியா சமூகம் என்று அழைக்கிறது!

அந்த சமூகத்தினர் அல்குர்ஆன் மூலம் அடைந்த மாற்றங்கள், உயர்நிலைகள் வரலாற்றில் எந்த சமூகமும் பெற்றதில்லை. அச்சமூகத்தில் அல்குர்ஆன் செய்த புரட்சி பசுமையானது. இனிமை சேர்க்கும் அந்த வரலாற்றின் ஒரு சில பக்கங்களை கொஞ்சம் கவனியுங்கள்.
கல்லையும், மண்ணையும் வணங்கி பூஜித்து அறியாமையில் மூழ்கிக் கிடந்து மூடர்களாகவும், முரடர்களாகவும் கல்நெஞ்சம் படைத்தவர்களாகவும் வாழ்ந்த அந்த மக்கள் அல்குர்ஆனை கேட்டு மனமுறுகினார்கள். கண்ணீர் வடித்தார்கள். ஒரே இறைவனாம் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முன் மண்டியிட்டார்கள். மனிதர்களாகவும் புனிதர்களாகவும் மாற்றியமைப்பதில் அல்குர்ஆன் தனியான பங்கை வகிக்கின்றது என்பதை உறுதியாக நம்பி செயற்பட்டார்கள்;. அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொண்டார்கள். தங்கள் வீட்டையும் சூழலையும் குர்ஆனிய மத்ரஸாவாக மாற்றிக் கொண்டார்கள். இதென்ன சாதாரண மாற்றமா?
• அகம்பாவம், ஆணவம், மமதை, அரக்கத்தனத்துடன் பலவீனர்களை அடக்கியாண்டு அட்டகாசம் புரிந்தவர்களை அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டவர்களாக, அன்பாளர்களாக, பண்பாளர்களாக, மறுமைச் சிந்தனை உடையவர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
• சுகபோகவாழ்வு, உலகமோகத்தில் மூழ்கி குறிக்கோளின்றி சென்றவர்களை  அல்லாஹ்வின் தீனை நிலைநாட்டும் தியாக செம்மல்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
• ஷைத்தானின் சுலோகங்களில் கட்டுண்டு காட்டேரிகளாக வாழ்ந்தவர்களை நாடாளும் மன்னர்களாக நம்பிக்கைவான்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
• நாஸ்தீக பட்டறைக்குள் பதுங்கியிருந்தவர்களை ஒரே ஒரு கடவுளாகிய அல்லாஹ்வின் வல்லமைகளை எடுத்தோதும் பகுத்தறிவாளர்களாக, அழைப்பாளர்களாக நடமாடச் செய்தது அல்குர்ஆன்.
• இனவெறிப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிந்து கிடந்தவர்களை சகோதர நேசர்களாக சமாதானத்தின் தூதுவர்களாக காட்சியளிக்கச் செய்தது அல்குர்ஆன்.
• உயர்வு-தாழ்வு பேசி உயிர்களை மாய்த்துக் கொண்டவர்களை  தக்வா எனும் இறையச்சமுடையவர்களே அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையில் உறுதியுள்ளவர்களாக பாசபிணைப்புள்ளவர்களாக உருவாக்கியது அல்குர்ஆன்.
• மது-மங்கை என மயங்கி ஆடிக் கொண்டிருந்தவர்களை ஒழுக்கச்-சீலர்களாக நாகரீகத்தின் காவலர்களாக மாற்றியது அல்குர்ஆன்.
• பொதுவுடமை பேசி, பொதுமக்களின் சொத்துக்களை சூரையாடி, நிலமானியம் பேசி நிலங்களை கொள்ளையடித்து, அரசியல் பேசி அராஜகம் பண்ணி அரசாண்டவர்களை நீதியாளர்களாக, உலகம் போற்றும் நீதிமான்களாக உயர்த்திக் காட்டியது அல்குர்ஆன்.
• பெண் குழந்தைகளை இழிவாகக் கருதி உயிருடன் புதைத்து, பெண்களின் உரிமைகளை உரித்தெடுத்து, உல்லாசபுரி வாழ்க்கையில் திளைத்திருந்தவர்களை நற்பண்புகளுக்கு நற்செய்தி சொல்லக் கூடியவர்களாக மாற்றியது அல் குர்ஆன்.
• ஆணுக்கும், பெண்ணுக்கும் அர்த்தமுள்ள சம அந்தஸ்துகளை வழங்கி உரிமைகளை, கடமைகளை பகிர்ந்து கொடுத்து தனி மனித குடும்ப சமூக வாழ்க்கையை பண்படுத்தி ஒழுக்க விழுமியங்களுடன் வாழச் செய்தது அல் குர்ஆன்.
• நரகப் படுகுழியின் பக்கத்தில் இருந்தவர்களை சுவனத்துப் பூங்காவில் நிழல் பெறும் சமூகமாக மாற்றிக் காட்டியது அல் குர்ஆன்
• இருண்ட உள்ளங்கள் அல்லாஹ்வின் ஒளி பொருந்திய வசனங்களை கேட்டு சிரம்பனியச் செய்தது அல் குர்ஆன்.
• உலக மக்கள் தங்களுடைய விடிவுக்காகவும், விடுதலைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் இவர்களை தேடி தூது அனுப்பக் கூடியதாக எடுத்துக் காட்டியது அல்குர்ஆன்.
• நாகரீகத்தையும், அறிவியலையும், ஒழுக்க மாண்புகளையும் இவர்களிடமிருந்தே உலகம் கற்றுக் கொண்டது. இந்த மாபெரும் அதிசயத்தை ஆற்றிய பெருமை மாமறை அல்குர்ஆனுக்கே உண்டு. மனித சமூகத்தில் தனிப் பெரும் செல்வாக்கை செலுத்தக் கூடியதாக முத்திரை பதித்து அல்குர்ஆன்.
• ஒரு காலத்தில் உலக மக்கள் இவர்களை கண்டு அஞ்சினார்கள். ஒதுங்கி நின்றார்கள். குறுகிய காலத்தில் அவர்களை கண்டு அரவணைக்கவும், ஆதரவு தேடவும் புறப்பட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் 23 வருட காலங்களில் குர்ஆனிய போதனைகளின் அடிப்படையில் தோற்றுவித்த சமுதாயம் இது. இவர்களை 'சஹாபாக்கள்' என்று சரித்திரம் இன்று சான்று பகிர்கின்றது.
'அல்லாஹ்வும் அவர்களை பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வை பொருந்தி கொண்டார்கள்' (அல்குர்ஆன் 98:8)
    அதே அல்குர்ஆன் இன்றும் நமக்கு மத்தியில் இருக்கிறது. ஆனாலும் எந்த மாறுதல்களும் நமக்குள் உருவாகவில்லை எனில் அது குர்ஆனின் கோளாறு அல்ல. நமது கோளாறு.

நாமோ அல்குர்ஆனை முறையாக ஓதுவதில்லை, படிப்பதில்லை, விளங்குவதில்லை, பின்பற்றுவதில்லை என்றால் என்ன மாற்றம் நமக்குள் வந்துவிடப் போகிறது? ஆகவே எனதருமை சகோதர சகோதரிகளே! மேற்கண்ட வரலாறுகள் யாவும் அல்குர்ஆன் மாற்றிய சமுதாயத்தின் உண்மை நிகழ்வுகள். அதை நாம் உணர்ந்து அல்குர்ஆனோடு நமக்குள்ள தொடர்பை அதிகப்படுத்தி அல்லாஹ் விரும்பும் உண்மை சமூகமாக வாழ முயற்சிப்போமாக!

(நன்றி: மவ்லவி. இம்தியாஸ் ஸலபி - islamkalvi.com)
வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

Wednesday, January 4, 2012

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!

அன்பிற்குரிய அதிரைவாசிகளே!  அஸ்ஸலாமு அலைக்கும்.

இப்பொது மடல் உங்களை வாழ்வின் வளத்துடனும் உடல் நலத்துடனும் சந்திக்கட்டுமாக!  'நன்மையைப் பிறருக்கு எடுத்துக் கூறி, தீமையை விட்டுத் தடுக்கும் ஒரு கூட்டம் உங்களில் இருக்கட்டும். அவர்களே வெற்றியாளர்கள்' என்று அருமறை அல்குர்ஆன் கூறுகின்றது.  இதன் அடியில்  செயல்பட விரும்புவோர் முதலாவதாகச் செய்ய வேண்டிய பணி, நமது உயிரினும் மேலான வாழ்க்கை நெறியான இஸ்லாம் மார்க்கத்தை அதன் தேட்டமுடையோருக்கும் தேவையுடையோருக்கும் எடுத்துரைக்கும் 'தஅவா'ப் பணியாகும். 

இந்தப் பணியின் இன்றியமையாமையை உணர்ந்த நமதூர்ச் சகோதரர்களுள் சிலர் அண்மைக் காலமாக இது பற்றிச் சிந்தித்து, அதற்கான முயற்சிகளில் களமிறங்கியுள்ளனர் என்ற சிறப்பான தகவலை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.  இதன் முதல் கட்ட முயற்சியாக, ஏற்கனவே நமதூரில் எந்த இயக்கச் சார்புமின்றிப் பல்லாண்டுகளாக 'தஅவா'ப் பணி செய்துவரும் அமைப்பான 'தாருத் தவ்ஹீத்' எனும் அமைப்பை ஒரு பரந்த நிர்வாகமாகத் தரம் உயர்த்தி, 'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்' எனும் பெயரில் தொடங்கி, அதற்கான செயல் திட்ட வரைவுகளை உருவாக்கி, அதன் கீழ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம் ஒன்றை நிறுவ முனைப்புடன் செயலில் இறங்கியுள்ளனர்.

இதற்கான இடம் மட்டும் வாங்கிக் கொடுத்தால், கட்டிடம் கட்டித் தரக் கொடையாளர்கள் சிலர் ஆயத்தமாக உள்ளனர்.  தற்காலச் சூழலில், இடம் மட்டுமே ஒரு பெருந்தொகையை விழுங்கும் அளவுக்கு உள்ளதை அனைவரும் அறிவர்.  இதனை ச் சாதிப்பது எப்படி?  தொடக்க முயற்சியாக, சகோதரர்கள் சிலர் கடனாகத் தந்து, அந்த இடத்தைக் கையகப் படுத்தும் முயற்சிக்கு உறுதுணையாக நிற்கின்றனர்.  அல்ஹம்து லில்லாஹ்!  இப்போது அவர்கள் அளித்த கடன் தொகைகளைத் திருப்பிச் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்.

இதற்காகத் தற்காலிகத் திட்டமொன்றை வகுத்துள்ளோம்.  அதன்படி, ஒவ்வொருவரும் ஒரு வருடக் கடன் அடிப்படையில், ஒரு ஐந்தாயிரம் ரூபாயைத் தந்து உதவினால், இன்ஷா அல்லாஹ், அதனை ஓராண்டில் திருப்பித் தந்துவிடலாம்.  இது அடிமட்ட உதவிதான்.  இந்தத் தொகை வருகிற ஜனவரிக்குள் கிடைத்துவிட்டால், நாம் நிலத்தைக் கையகப் படுத்தும் முயற்சியில் முழுமையாக இறங்கலாம்.  அடுத்த ஜனவரியில் உங்கள் உதவித் தொகையான ஐந்தாயிரம் ரூபாய் உங்களுக்கு வந்து சேரும், இன்ஷா அல்லாஹ்.

நமதூர் சகோதரர்கள் இல்லாத இடமில்லை எனும் அளவுக்கு உலகம் முழுவதும் வியாபித்துள்ளனர்.  மாஷா அல்லாஹ்!  அதனால்தான், இந்த முயற்சியை முன் வைத்து, 'நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்' என்று தலைப்பிட்டுச் சிறு தொகையைக் கடனாகத் தந்துதவும்படிக் கேட்கிறோம். 
மேற்கொண்டு தகவல் அல்லது ஐயத் தெளிவு பெற விழைவோர், பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

adiraiahmad@gmail.com

  மிக்க அன்புடன்,
புத்தமைப்புச் செய்யப்பட்ட

'அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்'
நிர்வாகக் குழு

Sunday, January 1, 2012

தவ்ஹீத் கொள்கையை அழகாய் பேணுங்கள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
 
நேர்வழியின் சத்திய மார்க்கம் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் என்பது பலரும் அறிந்த உண்மை. அறிந்தும் சிலர் ஏற்க மறுக்கிறார்கள். அறியாமலிலே பலரும் இருக்கிறார்கள் அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழியை வழங்குவானாகவும்!
 
 நமது சுற்றுப்புறங்களிலே தவ்ஹீத் கொள்கைகளைப்பற்றி விளக்கத்துடன் அவ்வப்பொழுது ஆங்காங்கே  நடைபெற்றுக்கொண்டுருக்கிறது. அவர்களின் வாழ்க்கைக்கும் அவர்கள் எடுத்துரைக்கும் உண்மையான செயலுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவான்.
 
தவ்ஹீத் கொள்கையை எடுத்துரைக்கும் நாம் பொறுமையாகவும், புரியாதவர்களுக்கு புரியக்கூடிய வகையிலும் தன்னுடைய இறைவனுக்கு பயந்தும் எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும். ஒரு சில ஹதீஸ்களை தெரிந்துக்கொண்டும், யூகத்தின் அடிப்படையிலும் இஸ்லாத்தில் இல்லாத  கருத்துகளையும் குர்ஆன் மற்றும் நபி(ஸல்) அவர்கள் கூறாத கருத்துக்களையும் தன் மனம் விரும்பிய போக்கில் சொல்லவும் வேண்டாம். இஸ்லாம் என்றுமே உண்மையானது. இதை யாருமே மறுக்கமுடியாது. ஆனால் இஸ்லாமிய (முஸ்லிம்) மனிதர்கள் பலரின்  போக்குகள்  உலக வாழ்க்கைகாக இன்றைய காலத்தில் சற்தே மாறுபட்டிருக்கிறது. இதன் போக்கிலே தவ்ஹீத் கொள்கைகளை கொண்டு செல்லாமல் அல்லாஹ்க்கு அஞ்சி அவனுடைய நேரான (தவ்ஹீத்) வழிகளை மக்களிடையே எத்திவைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும் 
 இன்றைய அமைப்புகளில்  தவ்ஹீத் கொள்கைகள் எப்படி பிரச்சாரம் செய்யப்படுகிறது சற்று சிந்தித்து பாருங்கள்.
 
சில மாற்றுமத சமுதாயத்தவர்களிடம் இஸ்லாமிய கொள்கைகளை எத்தியவைக்க அமைக்கப்பட்ட கூட்டத்தில் நடந்தவற்றை பெருமையாய் கூறுகிறார்கள்.
 
 * கிருத்துவர்களிடம் கேள்வி கேட்டு மூச்சுத்திணவைத்த இஸ்லாமிய அமைப்பு
 
 * எங்களின் கேள்விக்கு பதில் சொல்லத்தெரியாமல் விழிப்பிதுங்கி நிற்கும்        மாற்றுமதத்தவர்கள் என்று உலகெங்கும் பெருமையாய் செல்லும் 
     மின் அஞ்சல்கள். இது போன்று வார்த்தைகள் அவர்களுக்கு கோபத்தைதான்      
              தூண்டுமே தவிர சிந்திக்க தூண்டாது.
 ஏன் நம்முடைய நிலைபாடுகள் அழகான முறையில்  தர்க்கம் செய்யுங்கள் என்ற இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமாய் சென்று கொண்டிருக்கிறது?
 
 * அடாவடித்தனமான வார்த்தைகள், காவல்நிலைய நடவடிக்கைகள் இது போன்ற       செயல்பாடுகள் மக்களுக்கு அதிகபடியான தவறுகள் செய்ய                    தூண்டுகோலாயிருக்கிறது.
 
 * தேவையில்லாத யூகங்களை தோன்ற வைப்பது.  தேவையில்லாத உலக        நடவடிக்கைகளை இஸ்லாத்துடன் ஒப்பிட்டு பார்ப்பது.
 
 * தன்னுடைய  அவசர கோலத்தல் இஸ்லாமிய கொள்கைக்கு சம்மந்தமில்லாத       வார்த்தைகளை கூறி அதை தன் பேச்சுத்திறமையால் மறைக்க         நினைப்பது.(அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்)
 
 * தற்பெருமைகளுக்காக எதனையும் செய்ய முயற்சிக்காதீர்கள, பெருமைக்கும்,       புகழுக்கும் உரியவன் அல்லாஹ் மட்டுமே.
 
 * அரசியல்வாதிகளுக்காக அவரிடம் பணத்தை பெற்றுகொண்டு வாகனத்திற்கு        பெட்ரோல் போட்டுக்கொண்டு ஓட்டுகேட்க வாருங்கள் என்று அழைத்து செல்வது.
 
அல்லாஹ் அஞ்சி அவனுடைய நேர்வழியை எத்திவைக்க நினைக்கும் நம்முடைய  நிலைபாடுகளை யோசித்து பார்ப்போம். தவறான வழிமுறைகளை உணர்ந்துக்கொண்டும் பெருமைக்கும், புகழுக்கும் உரியவன் அல்லாஹ் மட்டுமே என்று அல்லாஹ் அஞ்சி இன்ஷா அல்லாஹ் நம்முடைய கொள்கையை அழகாகவும், தவறை உணர்த்துக்கூடிய வகையிலும் இருக்க முயற்சிப்போம். நேர்வழியில் அனைவரையும் அழைப்போம். அனைத்திற்கும் அல்லாஹ் போதுமானவன்.
 
ஒரு முஸ்லிமான மனிதனின் மேன்மை, அவனுக்கு தேவையில்லாத காரியங்களை விட்டு ஒதுங்கியிருப்பதிலே அடங்கியிருக்கிறது  என ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (அறிவிப்பவர்: ஹஜரத் அபூஹூரைரா(ரலி), நூல் :திர்மிதி, இப்னுமாஜா).
 
 DIGITECH. sena muna
Thanks to adiraibbcTtha