உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, November 13, 2017

சொல்லத்தான் வேண்டும்.சொல்லுவேன்...

சொல்லத்தான் வேண்டும்.சொல்லுவேன்...
கல்லோ முள்ளோ அம்போ எறியுங்கள்.ஆனால் கொஞ்சம் சிந்தியுங்கள்.
சில தினங்களிற்கு முன் பெண்களுக்கான ஒரு அமர்வில் உரையாற்றக் கிடைத்தது.அமர்வின் இறுதியில் ஒவ்வொரு பெண்ணாக தயங்கித் தயங்கி,வெட்கப்பட்டுக் கொண்டு வந்து என்னிடம் கேட்டார்கள்,"சகோதரி,உடலுறவின் போது ஓதுவதற்கு துஆ இருப்பதாக சொன்னீர்களே,அதை எழுதித் தருவீர்களா?"
இதுதான் இன்றைய முஸ்லிம் சமூகத்தின் பெண்கள் நிலை.

புற்றீசல்கள் போல ஆயிரம் பெண்கள் மத்ரசாக்கள்.மகள் கெட்டுப் போய்விடுவாள் என அஞ்சி பூப்படைந்ததுமே மத்ரசாக்களில் விடப்பட்ட பெண்பிள்ளைகள்.வெறுமனே மவ்லவியாக்கள் என்றும் ஹாபிழாக்கள் என்றும் ஆலிமாக்கள் என்றும் வாங்கிய பட்டங்கள் சுருட்டி வைக்கப்பட்ட நிலையில் பத்திரமாய் இருக்கின்றன.ஆனால் கற்றவை கற்பிக்கப் பட்டவை எத்தி வைக்கப்படவில்லை என்றே சொல்லுவேன்.
மத்ரசாக்களின் நோக்கம் கொஞ்சம் அரபும்,தஜ்வீதும் கற்பிப்பதா?
அதனுடன் சேர்த்து தையலும்,கைவேலையும்,சமையலும் கற்பிப்பதா?

தெருவிலுள்ள நான்கு பிள்ளைகளுக்கு ஓத சொல்லிக் கொடுத்து விட்டால்,இருபது பிள்ளைகளுக்கு மக்தப் நடத்தி முடித்து விட்டால் அவர்கள் சத்தியப்பிரமாணமாய் சொன்ன தஃவாவின் பணி நிறைவுற்றதாய் அர்த்தமா?
ஒரு வகையில் அந்த மவ்லவியாக்களை சாடுவதில் அர்த்தமே இல்லை.ஏனெனில் அவர்களது பானையில் போடப்பட்ட பண்டம் அவ்வளவுதான்.பிரசங்கம் செய்ய அவர்கள் பயிற்றுவிக்கப் படவில்லையே.அவர்களிடமும் விஷய ஞானமும் இல்லை.அதை தேடும் ஆர்வமும் அவர்களிடம் இல்லை.வினைத்திறனான தாஇயாக்கள் மன்னித்து விடுங்கள்.அல்லாதவர்கள் மாறிவிடுங்கள்.
சில காலங்களின் முன் இலங்கையின் பிரபல மத்ரசாவில் பட்டம் பெற்ற ஒரு பெண்ணிடம்,மாரியதுல் கிப்திய்யா மூலம் நபிகளாருக்கு இப்றாஹீம் என்ற மகன் பிறந்திருக்கிறதென்றால், அடிமை என்பதன் பூரண விளக்கத்தை" கேட்டிருந்தேன்.நான் சொன்ன பதினொரு மனைவியருள் ஒருவரை விலக்கிவிட்டு மாரியதுல் கிப்தியாவை மனைவியாக நிரூபிக்க முயன்றாரே தவிற விளக்கம் தரவேயில்லை.
இதே போல இன்னொரு மவ்லவியா,"நபிகளார் எத்தனை முறை ஹிஜ்ரத் செய்தார்கள்?" என என்னிடம் சந்தேகம் கேட்கிறார்.
இவை சில எடுத்துக் காட்டுகள் தான்.இன்னும் நிறைய சம்பவங்கள் இருக்கின்றன.
இவர்களிடம் போய் இன்னும் ஆழமாய் எப்படி இஸ்லாத்தை தெரிவது...?
இலங்கையில் ஆண்கள் மத்ரசாக்கள் போல பெண்கள் மத்ரசாக்களில் (ஓரிரு ஆண்கள் மத்ரசாக்கள் தவிற ஆண்கள் மத்ரசாக்களும் ஒன்றும் சாதித்ததில்லை) தரமாய்,ஆழமாய் போதிக்கப்படுவதே இல்லை.
பல்கலைக்கழக தரத்திலுள்ளது,பல்கலைக்கழக நுழைவு வீதம் இத்தனை என விளம்பரம் செய்கிறார்களே தவிற தாஇயாக்களை வெளியாக்கும் விகிதம் பெரும்பாலும் பூச்சியம் தான்.
எங்கள் மத்ரசாக்கள் தரமானவை.நாங்களும் தாஇயாக்கள் என்று சத்தம் போட முன் சகோதரிகளே, ஒரேயொரு முறை சகோதரி அஸ்மா ஹுதா,சகோதரி தைமிய்யா சுபைரின் வட்ஸப் குழுமங்களையும்,யூடியூப் சனல்களையும் உருது,ஹிந்தி மொழிமூல குழுமங்களையும் எட்டிப் பாருங்கள்.அத்தனை ஆழமாய் அழகாய் தெளிவாய் எத்தி வைக்கிறார்கள் என்று.உங்களின் தரமும் சாதனைகளும் தலைகுனியலாம்.
தமிழகத்திலும் அத்தனை தரமாய் மவ்லவியாக்கள் இருக்கிறார்களோ தெரியவில்லை.இல்லையென்றே தோன்றுகிறது,இருந்திருந்தால் அல் இஸ்லாஹ்,அஸ்ஸுன்னா போன்ற வட்ஸ் அப் ஆலிமாக்களுக்கான குழுமங்களின் பாடங்களை ஏன் மவ்லவி மார் கற்பிக்கப் போகிறார்கள்?
தேடிப் படிக்கும் ஆர்வமுள்ள சில பெண்கள் தவிற நிறைய பெண்களுக்கு ஐந்து வேளை தொழுவதும்,ரமழானில் நோன்பு நோற்று குர்ஆன் ஓதுவதும்,ஹபாயா பர்தாவும் தாண்டி இஸ்லாம் தெரியாது.
பெண்ணென்றால் பித்னா,நரகத்தில் உங்களைத்தான் நபிகளார் கண்டார்கள் என மவ்லவிமார் நம்பிக்கையிழக்கச் செய்தார்களே தவிற பெண்களுக்கென்று தனியான மார்க்க விளக்க வகுப்புகள் நடைபெறுவதில்லை.
ஒவ்வொரு ரமழானிலும் தராவிஹ் தொழ வந்தவர்களுக்கு தஃலீமை வாசித்துக் காட்டியதற்கு பதில் ஹைழுடைய,நிபாஸுடைய சட்டங்களை சொல்லித் தந்திருக்கலாம்.
ஜனாஸாவுடைய சட்டங்களை சொல்லித் தந்திருக்கலாம்.குளிப்பாட்டுகிறோம் என்ற பெயரில் நோவினை செய்து கொண்டிருக்கிறார்கள்.
யூத சதித்திட்டம்,உலக வரலாறு என ஆராய்ச்சி செய்து அறிக்கைகளை துப்பியவர்கள் அகீதாவை அணுவணுவாய் போதித்திருக்கலாம்.
பெண்கள் பாடசாலைக்கு,பல்கலைக் கழகத்திற்கு போவது ஹராம் என பத்வா வழங்கியவர்கள் பிக்ஹையாவது சொல்லித் தந்திருக்கலாம்.
ஆண்கள் எங்களை மிகைத்து விட்டார்கள்,பெண்களுக்கு போதிப்பதற்காய் தனியான ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்ட பெண்களுக்கு தனியான ஒரு நாளில் போதித்த தூதரின் வழிமுறை ஏன் காணாமல் போனது ?
ஆண்களை வாரமொரு முறை குத்பாக்களில் சந்தித்தவர்கள் பெண்களுக்காக இரு பெருநாள் தினங்கள் போதும் என ஏன் வரையறுத்துக் கொண்டார்கள்.?
ஒரு சமூகத்தினர் தானாக தன்னை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களை யாராலும் மாற்ற முடியாது.
அன்றைய அன்சாரிப் பெண்கள் தாமாகத்தான் கல்வியை தேடிப் போனார்கள்.தமக்கென ஒரு நாளை ஒதுக்கித் தாருங்கள் என்றும் கேட்டார்கள்.
ஆனால் இன்றைய எமது பெண்கள் மார்க்கத்தை படிப்பதற்கென்றால் கொஞ்சம் பின்வாங்கியே நிற்கிறார்கள்.
எங்கோ தையலுக்கும் ,சமையலுக்கும்,facial ற்கும் நேரகாலமின்றி,வயது பேதமின்றி,வெட்கம் கூச்சமின்றி,பெருமிதமாய் வகுப்புகளுக்கு செல்பவர்களுக்கு மார்க்க விளக்க வகுப்புகளென்றால் "இந்த வயதில் படிப்பதா?"என்ற வெட்கம் வந்து விடுகிறது,பாவம்.
மணிக்கணக்காய் செலவிட்டு டைல்ஸை துடைப்பவருக்கும்,புதிய ரெசிப்பி ஒன்றால் குடும்பத்தை மகிழ்விப்பவளுக்கும் பத்து நிமிடம் ஒதுக்கி மார்க்கத்தை படிக்கவும் முடியவில்லைதான், பாவம்.
வட்ஸ் அப்,டெலிக்ராம்,பேஸ்புக் போன்ற ஊடகங்களில் cookery,shopping,கவிதை குழுமங்களில் அவர்கள் காட்டும் ஆர்வம் மார்க்க விளக்க குழுமங்களில் இல்லை.
சகோதரிகளே,
கற்க அனுமதிக்கவில்லை,வகுப்புகள் நடைபெறவில்லை,அடுப்படியில் அடைத்து வைத்து விட்டார்கள் என புலம்பியது போதும்.

You tube ல் சமையல் ரெசிப்பி தேடிய அதே விரல்களால் islamkalvi.comqurankalvi.com,al quran open college என்றும் கொஞ்சமாய் தட்டிப் பாருங்கள்.நிறையவே தொடர் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.அகீதா,பிக்ஹ்,தப்ஸீர்,தஜ்வீத்,ஹதீஸ்,ஸீரா என அத்தனையும் கற்றுக் கொள்ளலாம்.இன் ஷா அல்லாஹ்.(உபயோகமான links இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்)
மவ்லவியாக்கள்,ஆலிமாக்கள் உங்களுக்கு தெரிந்த பத்து பேரை வைத்து வட்ஸப் குழுமங்களை ஆரம்பியுங்கள்.என்றோ மத்ரசாவில் படித்த கொப்பியை பார்த்தாவது வாசியுங்கள்.காலப் போக்கில் தேர்ச்சியடைந்து விடலாம்.இன் ஷா அல்லாஹ்.
நேரத்தில் கொஞ்சம் அர்ப்பணிப்பும் வேலையில் கொஞ்சம் திட்டமிடலும் தேவைப்படலாம்.
நினைவில் கொள்ளுங்கள் திரிகையில் கோதுமையை கையால் அரைத்து,குடிக்கும் தண்ணீருக்காகவும் இயற்கை தேவைகளுக்காகவும் எங்கோ பல மைல் நடந்து போன அந்த பெண்கள் தான் படிப்பதற்காகவும் நேரம் ஒதுக்கிக் கொண்டார்கள்.
ரப்பின் வழியில் ,வெற்றியின் பால் அழைப்பதற்கு மத்ரசாவில் ஓதி எடுத்த பட்டங்களோ,சான்றிதழ்களோ தேவையில்லை.
"லாஇலாஹ இல்லல்லாஹ் " என்று மொழிந்த அந்த ஷஹாதா மட்டும் தான் அன்றைய ஸஹாபாக்களின் ஒரே தகுதியாக இருந்தது.

கலீமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தஃவா என்பது கடமையே.அதுவே காலத்தின் கட்டாயமும்.அதற்கு பெண்கள் நாங்களும் விதிவிலக்கில்லை.
islamkalvi.com for online islamic library
ISLAMKALVI.COM