உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, September 25, 2014

பாலைவனச் சோலை 'அல் அய்ன்' சுற்றுலா - படங்களுடன் ஓர் பார்வை

சென்ற முறை கொர்பக்கான் வட்டார சுற்றுலா குறித்து ஓரளவு அறிந்து கொண்டோம் அதுபோல் இம்முறை பாலைவனச் சோலை என அழைக்கப்படும் 'அல் அய்ன்' நகரின் சுற்றுலா முக்கியத்துவமுள்ள பகுதிகளை பார்வையிடுவோம் வாருங்கள்...

ஓமன் நாட்டின் புரைமி நகரத்தை எல்லையாக கொண்டுள்ள அபுதாபி எமிரேட்டுக்கு உட்பட்ட அல் அய்ன் நகரத்தை பொறுமையாக சுற்றிப்பார்க்க குறைந்தது 2 நாட்களின் மாலை நேரங்கள் தேவைப்படும் ஏனெனில் இங்குள்ள பல சுற்றுலா தலங்கள் மாலை வேளைகளில் மட்டுமே சுற்றிப் பார்ப்பதற்கு எற்ற தன்மைகளில் அமைந்துள்ளதே அதன் காரணம். 'அல் அய்ன்' நகரமும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சுற்றுலா வர மிக ஏற்ற நகரமே.

மலேஷியாவில் (மலாய் மொழியில்) ஒரு சொல்வழக்கு உள்ளது சம்பாரிக்க சிங்கப்பூர் போகனும், செலவழிக்க கோலாலம்பூர் போகனும் கடைசியில் மவுத்தாக மலாக்கா போகனும் (மத்தி மலாக்கா - மரணிக்க மலாக்கா) என்பதாக சிலாகித்து சொல்வார்கள். (எனக்கு சொல்வழக்கு மறந்துபோய் விட்டது ஞாபகத்தில் இருந்ததை வைத்து ஒப்பேற்றியுள்ளேன், சொல்வழக்கை சரியாக தெரிந்தவர்கள் பகிர்ந்தால் அனைவரும் ரசிக்க முடியும்) மலாக்காவிற்கு அமைதியில் இணையான  நகரம் அல் அய்ன்.

துபையிலிருந்து பசுமை எழில் கொஞ்சும் அல் அய்ன் நகருக்குள் நுழைந்தவுடன் இந்த கோட்டை வடிவ அருட்காட்சியகம் நம்மை வரவேற்கும் - காலை 9 மணிமுதல் 5 மணிக்குள் செல்ல வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே கதவு திறந்திருக்கும் என்பதை கவனத்தில் கொள்க.


அல் அய்ன் (யுஏஇ) - புரைமி (ஓமன்) எல்லையில் அமைந்துள்ள அமீரக குடிநுழைவு அலுவலகம் (HILI BORDER UAE IMMIGRATION OFFICE)



அமீரகத்தையும் ஓமனையும் பிரிக்கும் நீண்ட... வேலி. அந்த அழகிய தெரு விளக்கு கம்பங்கள் உள்ள பகுதி தான் புரைமி நகர்.


இதுவே இந்திய, பாகிஸ்தான் எல்லையாக இருந்தால் இரு நாட்டு எல்லைவாழ் மக்கள் படும் துயர 'இரு நாட்டு ஆட்சித் தலைமைகளின் அரசியலை' நினைக்கவே பயமாக இருக்கிறது.


சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் வரை ஓமனின் புரைமி நகருக்குள் மட்டும் விசா, சோதனைகள் போன்ற எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி அனைவரும் எளிதாக போய்வர முடிந்தது. 


அல் அய்னின் ஹீலி பிரதேசத்தில், ஓமன் எல்லையிலிருந்து சற்று தூரத்தில் அமைந்துள்ளது 'HILI FUN CITY' எனும் Amusement Park. இங்கே அனைவரும் வயது வித்தியாசமின்றி விளையாட பல்வேறு நவீன சாதனங்கள் உள்ளன. என்ன எதிலும் ஏறி விளையாட பணம் தான் வேணும் ஒரு சின்ன மூட்டையில் கட்டிக் கொண்டு உள்ளே போங்க. பணமில்லாதவர்கள் நிறைந்த மனம் உள்ளவர்களாக பிறர் விளையாடுவதை ரசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளே போங்க. மாலை சுமார் 5 மணிக்கு பிறகு செல்வதே ஏற்ற நேரம்.


நேரமின்மையால் (ஜெபல் ஹபீத் செல்ல திட்டமிட்டிருந்ததால்) இந்தமுறை HILI FUN CITY உள்ளே போகவில்லை


அடுத்து அல் அய்ன் மிருகக்காட்சி சாலையை பற்றி தெரிந்து கொள்வோம். மிக அழகாக பராமரிக்கப்படும் பரந்து விரிந்த மிருகக்காட்சி சாலைகளில் இதுவும் ஒன்று. அஸர் தொழுகைக்குப் பின் செல்வதே மிக ஏற்றது மேலும் விஷேச காலங்களில் இரவிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். தயவுசெய்து கோடைகாலத்தில் நுழைவு டிக்கெட் சும்மா கிடைத்தாலும் செல்ல வேண்டாம் ஏனெனில் உங்கள் உடல் சோர்வடைந்துவிடும், உங்கள் உடலின் நீர்ச்சத்து அனைத்தும் அந்த வெக்கையில் (Humidity) வெளியேறிவிடும் என்பதை சொல் பேச்சு கேட்பவர்கள் கவனத்தில் கொள்க!



இதெல்லாம் வெளியே உள்ளவை, கடந்த ரமலான் விடுமுறையில் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு டிக்கெட் கவுண்டர் முன் கூட்டமிருந்ததால் முந்தைய அனுபவம் பேசுகிறது



புரதான நீர்த்தேக்கம் (ANCIENT DAM) - ஜெபல் ஹபீத் (JEBEL HAFEET) மலையடிவாரத்தில் GREEN MUBAZZARAH PARK அருகே உள்ளது. பழைய நீர்த்தேக்கம் என்றவுடன் யாரும் கரிகாலனின் கல்லணையை கற்பனை செய்து கொண்டு செல்ல வேண்டாம் ஏனென்றால் பல்வேறு புதிய அரிதார பூச்சுக்களாலும், நீர்த்தேக்கத்தின் நடுவே பீச்சிடியக்கும் செயற்கை நீறுற்று அமைக்கப்பட்டுள்ளதாலும் இப்போது பார்க்க பழமையான நீர்த்தேக்கமாக இது தெரியவே தெரியாது. 

இந்த நீர்த்தேக்கத்தை சுற்றியுள்ள சிறிய பூங்கா குடும்பத்தினர் இளைப்பாரவும், குழந்தைகள் ஒடியாடி வியையாடவும் ஏற்ற பகுதி மேலும் மாலை 5.30க்கு மேல் சென்றால் அழகான சிவந்த சூரியன் மறையும் காட்சியை காணலாம்.



அடுத்து நாம் காணவிருப்பது தான் அல் அய்ன் நகரின் முக்கிய டூரிஸ்ட் அட்ராக்;ஷனாக திகழும் ஜெபல் ஹபீத் மலையும் (JEBEL HAFEET) அதன் மலைப்பாதையும்.

அல் அய்னின் ஸனயிய்யா பிரதேசத்தில் சிமெண்ட் பேக்டரி சாலையில் சென்றால் ஜெபல் ஹபீத் மலை தென்படும். இந்த மலைச்சாலை உலகின் மிக அழகிய மலைச்சாலைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பொறுங்கள் ஊட்டி, கொடைக்கானல் ரேஞ்சுக்கு சிறகடிக்க வேண்டாம். பசுமை என்ன விலை என கேட்கும் ஒரு வறட்சியான மலை தான் ஜெபல் ஹபீத். அப்புறம் எதுக்குத்தான் அங்கே போகனும்? நல்ல கேள்வி ஆனால் இதை நீங்கள் அனுபவித்தாலே தவிர எழுத்தால், சொல்லால் உணர முடியாது.

சூரியன் மறையும் அஸ்த்தமன நேரத்தில் உங்கள் வாகனத்தில் மலையேற ஆரம்பியுங்கள். அந்த DAY EFFECTல் மேலே செல்லும் நீங்கள் NIGHT EFFECTல் மலையிலிருந்து இறங்கும் வகையில் உங்கள் பயணத்திட்டம் அமையட்டும் உச்சிக்கு சென்றால் ஒரு காஃபிடேரியாவுடன் பரந்த திடல் மட்டுமே உண்டு ஆனால் அல் அய்ன் நகரை மலை உச்சியிலிருந்து இரவின் ஒளியில் பார்ப்பதே அலாதியானது மேலும் வரும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அடிக்கும் குளிர் கால காற்றை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர். கட்டாயம் குளிர்காலத்தில் மஃப்ளர், சுவெட்டர் போன்றவற்றை அணிந்து செல்வதே பாதுகாப்பு.

பெருநாள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வாகன நெரிசலை சந்திக்க வேண்டி வரும் மேலும் நாம் மலையேறிய பின் உச்சிக்கு செல்ல சுமார் 3 கிலோமீட்டருக்கு முன்பாக, மெர்குரி ஹோட்டல் அருகிலுள்ள 'U' TURN அருகிலிருந்து போக்குவரத்து போலீஸார் உங்களை திருப்பி விட்டுவிடுவார்கள் எனவே மலைச்சாலையில் போக்குவரத்து நெரிசல் தெரிந்தாலே மேலே போகாமல் திரும்பி விடுதல் நலம். மலையேறும் போதும் இறங்கும் போதும் சாலை ஓரங்களில் பல பார்க்கிங் பகுதிகள் வரும் தேவையான இடங்களில் இறங்கி, இளைப்பாரி, சுற்றுப்புறத்தை ரசித்து செல்லுங்கள்.




மெர்குரி ஹோட்டல் முன்புறமுள்ள பாறையில் மனித வளத்தால் உருவாக்கப்பட்ட சிறிய பூங்கா











இறுதியாக நாம் பார்க்க உள்ளது ஜெபல் ஹபீத் மலையடிவாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள 'GREEN MUBAZZARAH' எனும் செயற்கை புல்வெளி பூங்கா. இந்த பூங்கா இரவில் ரசிப்பதற்கேற்ற வகையில், பரந்த வெளியிலும் பாறைகள் மேலும் புற்களை நட்டு வளர்த்துள்ளனர்.

 GREEN MUBAZARAH பூங்கா நுழைவு வாயில்
 மின்னொளியில் புல்வெளி
 பூங்காவிலிருந்து ஜெபல் ஹபீத் மலைப்பாதையின் எழில்மிகு தோற்றம்



 வென்னீர்

அமீரக மக்கள் ஈக்களாய் மொய்க்கும் இடங்களில் இதுவும் ஒன்று, மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கு கட்டண விளையாட்டு சாதனங்களும், ஓட்டகம், குதிரை, கோவேறு கழுதை, ஜட்கா வண்டி போன்றவையும் உள்ளன. மேலும் ஆங்காங்கே செயற்கை வென்னீர் சுனைகளில் கொட்டும் வென்னீர் ஒரு வாய்க்கால் வடிவில் பூங்காவை சுற்றி ஓடுகிறது. குளிர் காலத்தில் வெறும் காலுடன் இந்த வென்னீர் வாய்க்காலில் நிற்பது பாதத்திற்கு மட்டுமல்ல இதயத்திற்கும் இதம் (மனமகிழ்வு) தரும். நீங்கள் விரும்பினால் முழு இரவையும் சந்தோஷமாக அங்கு செலவிடலாம்.











நம் உள்ளங்கள் எத்தனை மகிழ்ந்தாலும் இவை அனைத்தையும் அனுபவிக்க நமக்கு வாய்ப்பையும் வாழ்வையும் ஆரோக்கியத்தையும் வழங்கிய ஏகன் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்த வசதியாக ஓர் இறையில்லமும் இருக்கிறது.

பூங்காவிலுள்ள மஸ்ஜிதின் உட்புறத் தோற்றம்


ஜெபல் ஹபீத், GREEN MUBAZZARAH பூங்கா மற்றும் புரதான நீர்த்தேக்க பகுதிகளில் கார் பார்க்கிங் உட்பட அனுமதி இலவசமே. எதிர்வரும் சனிக்கிழமையும் (04.10.2014) ஞாயிற்றுகிழமையும் (05.10.2014) தனியார் நிறுவனங்களுக்கான ஹஜ்ஜூப் பெருநாள் பொது விடுமுறை தினங்களாக உள்ளது,  என்ன அல் அய்னுக்கு போய் வர பிளான் போட்டாச்சா?

அதிரை அமீன்

No comments:

Post a Comment