بِشْمِ اللّهِ الرّحْمَنِ الرَّحِيْم
தண்டனைக்கு ஆளாக நேரிடும்: தவறைத் தடுக்கத் தவறும் போது அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் அந்தத் தண்டனை தீயவர்களை மட்டுமன்றி நல்லவர்களையும் பீடித்துக் கொள்ளும். இதனை, 'உங்களில் அநியாயக்காரர்களுக்கு மட்டுமே ஏற்படாது (அனைவருக்கும் சேர்த்து ஏற்படுகின்ற) தண்டனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்' (8:25) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.
ஒரு தவறு பகிரங்கமாக நடந்து அதனைத் தடுப்பதற்கான ஆற்றல் இருந்தும் தடுக்கப்படவில்லையானால் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்பதை பல நபி மொழிகள் உணர்த்துகின்றன.
எப்படிச் செய்வது? அழைப்புப்பணி புனிதமானதுதான். அதற்கு ஈடுஇணையற்ற நற்கூலியுள்ளது. ஆயினும் அனைவரும் இப்பணியை ஆற்றமுடியுமா? எல்லோருக்கும் மேடையில் ஏறி நின்று பயான் பண்ண முடியுமா? இது சாத்தியம்தானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவது இயல்பு.
தஃவத் என்றதும் குத்பா ஓதவேண்டும்; பயான் செய்யவேண்டும் என்று கருதுவதே இதற்குக் காரண மாகும். தஃவாவில் மேற்குறித்தவை அடங்கினாலும் அவை மட்டும்தான் தஃவத் என்பதற்கில்லை. தான் அறிந்த மார்க்கச் செய்தியை பிறருக்கு எடுத்துக் கூறுவதே தஃவத்தாகும். இதற்காக முழுமையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் சொல்லும் விடயத்தில் மட்டும் தெளிவு இருந்தாலும் போதுமானதாகும். இதை உணராத பலர் அழைப்புப்பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர்.
ஆலிம்களைவிட அதிகமாக தனிநபர் தஃவாவை செய்யும் வாய்ப்பை பொதுமக்கள் பெற்றுள்ளனர். பள்ளிக்கூட தோழர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றுகின்ற அனைவரிடமும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு முன்கூட்டியே தலைப்புத் தெரிவு செய்து திட்டமிட்டு உரையாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. பேச்சோடு பேச்சாக, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன்வைக்க முடியும். அவரிடம் காணப்படும் தவறான கருத்துக்களைக் களைய முடியும் இதற்கு யூசுப்(அலை) அவர்களது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறமுடியும்.
நபி யூசுப்(அலை) அவர்கள் சிறையில் நீண்டகாலம் இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவுகளுக்குரிய விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக யூசுப் நபியிடம் வந்து தாம் கண்ட கனவுகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். யூசுப்(அலை) அவர்கள் விளக்கம் கூறுவதற்கு முன்னரே பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாளும் அல்லாஹ் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பைப் பதியச் செய்தார்கள்.
இதனைத் தொடந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை. அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அதுதான் சரியான மார்க்கம். என்ற கருத்துக்களை முன் வைத்தார்கள். (பார்க்க 12: 36-40)
இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்தவர்களிடமே யூசுப்(அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதைக் காணலாம். இத்தகைய வாய்ப்புக்கள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்
அழைப்புப்பணிக்காக தன்னால் முடிந்தவரை ஒத்துழைப்பு நல்குவதுகூட ஏற்றமான இபாதத்தாகவே திகழ்கின்றது. பின்வரும் இரண்டு சம்பவங்களும் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன.
ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர். அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். அவருடைய பெயரை ஹபீ புன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. அவர் வந்து தனது சமூகத்தவர்களைப் பார்த்து;
'மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லை' என்றார். அப்போது ஊர்மக்கள் 'நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?' என்று வினவுகின்றனர். 'என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இந்த போலி தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்' என்றார். ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் 'நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது' இப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். (பார்க்க 36: 13-29)
இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. சத்தியப் போதனைக்கு துணைநின்ற அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான்.
ஆலிம்கள் அழைப்புப்பணி செய்தால், அதற்கு துணை நிற்பவர்களாக பொது மக்கள் செயல்பட முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, அவர் கூறுவதைக் கேட்க மக்களை அழைத்துவருவது, அவருக்குப் பாதுகாப்பளிப்பது, பக்கபலமாக இருப்பது, அவர் விடயத்தில் எல்லைகடந்து செல்பவர்களை அடக்குவது ஆகிய அனைத்துப் பணிகளும் அழைப்புப்பணியின் வட்டத்துக்குள் அடங்கக் கூடியவையே.
மற்றுமொரு நிகழ்ச்சியையும் இங்கே இதற்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.
மூஸா(அலை) பிர்அவ்னிடம் பிரச்சாரத்துக்காக சென்றார்கள். அப்போது பிர்அவ்னின் சபையில் அவனது குடும்பத்தைச் சேர்ந்த மறைமுகமாக ஈமான் கொண்ட ஒரு மனிதரும் இருந்தார். மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பிர்அவ்ன், 'நான் மூஸாவைக் கொல்லப்போகிறேன்' என்றான். இந்த சந்தர்ப்பத்தில் ஈமானை மறைத்துக் கொண்டிருந்த அம்மனிதர் 'அல்லாஹ்தான் என் இரட்சகன் எனக் கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள். அத்தோடு அவர் உங்களது இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகளை வேறு கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லுகிறாரெனின் அவரது பொய் அவரோடே இருக்கட்டும். அவர் உண்மை சொல்லுபவராக இருந்து, அவரைத் தண்டித்து விட்டால் அவர் எச்சரிக்கை செய்வது போன்ற அழிவுகள் நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கூறினார். தொடர்ந்து பிர்அவ்னிடம் பேசி, கொலை செய்யும் முடிவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்.
(பார்க்க 40: 28-44)
(பார்க்க 40: 28-44)
ஒரு அழைப்பாளனுக்கு ஆபத்து ஏற்படும் போது சாதுரியமாகப் பேசி அதிலிருந்து அவரைக் காத்த இந்த மனிதரை அல்லாஹ் எமக்குப் படிப்பினையாக அல்குர்ஆனில் நினைவு கூறுகின்றான். இவ்வாறு செயல்படுவது கூட தஃவாவில் ஒரு அங்கம்தான். எனவே, அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும், மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்.
வஸ்ஸலாம்
By Aduthurai S.Hameed
No comments:
Post a Comment