அஸ்ஸலாமு அலைக்கும்
கண்ணியமிக்க அல்லாஹ் தன் திருமறையில்... ' நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் புரிந்தோருக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் உண்டு என அல்லாஹ் வாக்களித்துள்ளான்' (அல்குர்ஆன் 5:9)
நோன்புப் பெருநாளை ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடின்றி அனைவரும் மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக இஸ்லாம் காட்டியுள்ள அழகிய செயலே ஸதக்கத்துல் ஃபித்ர் என்னும் இந்த நோன்புப் பெருநாள் தர்மம். நோன்புப் பெருநாள் தர்மத்தை ஒவ்வொரு முஸ்லிமும் கொடுக்க வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
'அடிமைகள், அடிமை அல்லாதவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரித்தம்பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனும்(அளவை) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிட வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்' அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புஹாரி, முஸ்லிம்
மேலே கூறப்பட்ட ஹதீஸில், நோன்புப் பெருநாள் தர்மம் என்பது நமக்கெல்லாம் கட்டாயக் கடமை என்பதும், அதைப் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் கொடுத்து விட வேண்டும் எனவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும் பெருநாள் தர்மத்தின் நோக்கம் பற்றி நபி(ஸல்) அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்கள்.
'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்கு பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார் (பெருநாள்) தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும்' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத்
மேலே கூறப்பட்ட ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான் பெருநாள் தொழுகைக்கு முன்பு கொடுப்பதையும், பின்பு கொடுப்பதையும் நபி(ஸல்) அவர்கள் வேறுபடுத்திக் காட்டியுள் ளார்கள். பெருநாள் தொழுகைக்குப் பினனால் கொடுத்தால் ஏழைகளுக்கு பெருநாள் கொண்டாட உதவாது என்பதால் அதை சாதாரண தர்மம் எனக் கூறுகிறார்கள்.
யாருக்குக் கடமை?
மேற்கண்ட ஹதீஸில், நோன்பில் ஏற்படும் தவறுகளுக்கு பரிகாரமாக இந்த தர்மம் கடமையாக்கப்பட்டதாக கூறினாலும், நோன்பு நோற்காதவர்களுக்கும் இது கடமையாகும். மேலும் நோன்பின் தவறுகளுக்கு பரிகாரமாக வேண்டும் என்றும், ஏழைகள் பெருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்றும் இரு நோக்கங்கள் விளக்கப்பட்டுள்ளன. எனவே ஒருவர் தமக்காகவும், தமது பெற்றோர், மனைவி, பிள்ளைகள் மற்றும் தமது பராமரிப்பிலுள்ள அனைவருக்காகவும் இந்த பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும்.
ஃபித்ராவின் அளவு
தமது பராமரிப்பிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு 'ஸாவு' அளவு என நபி(ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்துள்ளார்கள். ஸாவு என்பது நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்த ஒரு முகத்தல் அளவையாகும். இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அந்த அளவே ஒரு 'ஸாவு' (சுமார் இரண்டரை கிலோ) எனப்படும். இந்த அளவு அரிசி அல்லது அதற்கான கிரயத்தை வழங்க வேண்டும். தமது பராமரிப்பில் பத்துப்பேர் இருந்தால் பத்து ஸாவு தர்மத்தை வழங்கிட வேண்டும்.
'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாள் தர்மமாக வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு தீட்டப்படாத கோதுமை, உலர்ந்த திராட்சை, பாலாடைக்கட்டி, பேரிச்சம்பழம் ஆகியவைதான்' அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) நூல்: புஹாரி
மேற்குறிப்பிட்ட ஹதீஸில் அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்பதனால், நம்முடைய உணவு எதுவாக இருக்கிறதோ அதையே வழங்க வேண்டும்.
எப்படி, எப்பொழுது கொடுப்பது?
'ரமளானின் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புஹாரி நாஃபிஉ(ரஹ்) கூறுகிறார்கள் .........மேலும் பெருநாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே நபித் தோழர்கள் (இந்த தர்மத்தைக்) கொடுத்து வந்தார்கள். (புஹாரி 1511)
'நபி(ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தில் ஒரு ஸாவு என்று நோன்புப் பெருநாள் தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்ட ரகமான பேரிச்சம்பழங்களை கொண்டு வந்தார். அதை நபி(ஸல்) அவர்கள் (பெற்றுக் கொள்ளாமல்) இந்த பழத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள்' அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரலி) நூல்கள்: ஹாகீம்.
இதன் மூலம் தர்மம் செய்யப்படும் பொருள் தரமானதாகவும், நிறைவானதாகவும் இருக்க வேண்டும். மேலும் ஃபித்ராவை குறிப்பிட்ட நேரத்திற்குள் கொடுத்துவிட வேண்டும் என்பதையும், கூட்டாக வசூலித்து வினியோகம் செய்யலாம் என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.
ஸதக்கத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மம் அனைத்து ஏழைகளுக்கும் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் ஆண்டுதோறும் நமதூரில் அனைத்து முஹல்லாவிலும் உள்ள ஏழைகளைச் தேடிச்சென்று பெருநாளை அவர்களும் மகிழ்வுடன் கொண்டாட வழிவகை செய்யப்படுகிறது. எனவே தங்கள் மற்றும் தங்களை சார்ந்தவர்களின் ஃபித்ரா தொகை திர்ஹம். 20 வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடன்...
அதிரை இஸ்லாமிக் மிஷன் (AIM)
தொடர்புக்கு:
சகோ. அப்துல் காதர் 055-2829759 - Dubai
சகோ. மீரா 050-5994180 - Sharjah
சகோ. அமீன் 050-8519008 - Abu Dhabi
அதிராம் பட்டினத்தில் மீண்டும் ஒரு புதிய இணையதளம் புத்தூனுர்ச்சியுடன் உதயமாகிவிட்டது அனைத்து இணைய தளங்களில் வெளிவரும் சிறந்த கட்டுரைகள் புதிய ஜொலிப்புடன் "ADIRAIFACT" ல் உடனுக்குடன் காணலாம்.
ReplyDelete