உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, August 23, 2011

பிரார்த்தனைகளின் (துஆக்களின்) ஒழுங்குகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்களே!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மை படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிரார்த்தனை செய்து விடக் கூடாது. மேலும் அல்லாஹ்வும் தன்னைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்பதை அல்லாஹ் பல விதத்திலும் எச்சரிக்கின்றான்.
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 7: 197)
பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்
மேலும் அல்குர்ஆனின் பல்வேறு இடங்களில் அல்லாஹ் கூறுகிறான்...
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர்;. மேலும் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16: 20,21)
கியாம நாள் வரை(அழைத்தாலும்)தனக்கு பதில் கொடுக்க மாட்டாத அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறிய முடியாது. அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர். அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து(மறுத்து)விடுவர். (அல்குர்ஆன் 46: 5,6)
இந்த வசனங்கள் யாவும் அல்லாஹ்வையன்றி எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும் அதனால் எந்த பயனுமில்லை என்பதையும் மாறாக அது இணைவைக்கும் பெரும்பாவம் என்று விளங்கிக் கொள்ள முடிகின்றது. மேலும் அல்லாஹ்வை இவ்வுலகில் நாம் பார்க்க முடியாது. ஆதலால் நம்மை விட்டு அவன் தூரமாக இருக்கின்றான் என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக அல்லாஹ் நமக்கு மிகச் சமீபத்திலே இருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 2: 186)
நாம் அதிகம் பாவம் செய்கின்றோம் என்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கு தயங்கவோ அல்லது அவனுடைய அருளில் நிராசையோ அடையக்கூடாது. ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.
என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்;. மிக்க கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!)நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39: 53)
அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறு யாரும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 12: 87)
மேற்கூறியவாறு அல்லாஹ் நமக்கு மிக அருகிலுள்ளான். நாம் எத்தகைய தப்பு தவறுகளை செய்திருந்தாலும் அல்லாஹ்வின் அருளில் நிராசையடையாது உளப்பூர்வமாக நாம் திருந்தி வாழ வேண்டி பிரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறு அல்லாஹ்வை நம்பி ஒருவர் பிரார்த்திக்கும் போது எவர் முன்னிலையிலும் தமது சுய மரியாதையை இழக்க மாட்டார்கள் எவர் காலிலும் விழ மாட்டார்கள் காணிக்கை செலுத்தி எவரிடத்தும் ஏமாற மாட்டார்கள் மலஜலத்தைச் சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள் மதத்தின் பெயராலும் பிள்ளை வரம் என்ற பெயராலும் (பெண்கள்) கற்பை இழக்க மாட்டார்கள் எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள் திருட மாட்டார்கள் கொலை செய்ய மாட்டார்கள் பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள் லஞ்ச ஊழலில் ஈடுபடமாட்டார்கள். இவ்வாறு மனித சமுதாயம் பெறும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!
அல்லாஹ் நமக்கு சமீபத்தில் இருக்கின்றான் என்றும் அவனது அருளிலும் நிராசையடையாது பிரார்த்தனை செய்யும் பொழுது நமது கோரிக்கைகள் இறைவனால் ஏற்கப்படும். ஏனெனில் ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும்போது வெறுங்கையாக திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸீ(ரலி) நூல்: அஹ்மத், அபூதாவூத்
அதே நேரத்ததில் அதற்கு சில ஒழுங்களும் இருக்கின்றன.
ஹராமானவற்றைத் தவிர்க்க வேண்டும்:
நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு ஆடைகளும்-உடம்பும் புழுதி படிந்த நிலையில் யாஅல்லாஹ்! யாஅல்லாஹ்! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹராமானதாக இருக்கும் போது அவனது பிரார்த்தனை எவ்வாறு அங்கீகரிக்கப்படும்? என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 1686
மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட முறையில் பொருளீட்டி உண்பதால் ஒருவனது துஆ அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை இந்த ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்கின்றோம். ஆகவே நமது துஆ அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில் பொருளீட்டுவதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
பாவமானதைக் கேட்கக் கூடாது:
பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும் பிரார்த்திக்காத வரை அடியானின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 4918
அவசரப்படக் கூடாது:
நான் பிரார்த்தனை செய்தேன். அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறி அவசரப்படாத வரை உங்கள் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் என்று நபி(ஸல்) அவாகள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 6340
மரணத்தைக் கேட்கக் கூடாது:
உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த எந்தத் துன்பத்தின் காரணத்தினாலும் மரணத்தை விரும்பிட வேண்டாம். அவ்வாறு அவர் ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்றிருந்தால் இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின் என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து போய்விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின் எனக்கு இறப்பைத் தருவாயாக! என்று கேட்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரலி) நூல்: புகாரி 5671
இறந்தவருக்காகப் பிரார்த்தனை செய்தல்:
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன் கிருபைமிக்கவன் என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர். (அல்குர்ஆன் 59:10)
ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும். நிலையான தர்மம் பிறர் பயன்பெறும் கல்வி தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 3084
வலியுறுத்திக் கேட்க வேண்டும்:
நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது) ஏனெனில் அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி 6338
அனைத்தையும் கேட்க வேண்டும்:
(நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும். அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்தபோது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்) (அவர்)கூறினார்; என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன. என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. (அல்குர்ஆன் 19: 2.3,4)
சின்ன விஷயம் பெரிய விஷயம் என்று பார்க்காமல் எல்லாத்தையும் கேளுங்கள். அவனிடம் கேட்பதில் கஞ்சத்தனம் காட்ட வேண்டியதில்லை.
இரகசியமாகவும் பணிவாகவும் பிரார்த்தித்தல்:
(முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும் அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7: 55)
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும் அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (அல்குர்ஆன் 7: 205)
மேற்கூறப்பட்டுள்ள வசனத்திலிருந்து துஆ கேட்பதின் ஒழுங்கு கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து கூட்டாக சப்தமிட்டுக் கேட்பதும் அதற்கு பின்னால் உள்ளவர்கள் சப்தமாக ஆமீன் கூறுவது முறையான பிரார்த்தனை இல்லை என்பதையும் விளங்கிக் கொள்ள முடிகின்றது.
இரவின் கடைசி நேரம்:
நம்முடைய இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கிறேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி 1145
ஸஜ்தாவின் போது...
அடியான் அவனது இறைவனுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது ஸஜ்தாவின் போது தான். எனவே அதில் துஆவை அதிகப்படுத்துங்கள் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 744
மறைமுகமாக செய்யும் பிரார்த்தனை:
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக மறைவாக துஆச் செய்தால் அது அங்கீகரிக்கப்டும். அவனது தலைமாட்டில் ஒரு வானவர் இருப்பார். இவர் துஆச் செய்யும் போதெல்லாம் அந்த வானவர் ஆமீன் எனக் கூறிவிட்டு உனக்கும் அதுபோல் கிடைக்கும் எனக் கூறுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபுதர்தா(ரலி) நூல்: முஸ்லிம் 4912
தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ:
மூன்று துஆக்கள் ஏற்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பாதிக்கப்பட்டவனின் துஆ பிரயாணத்தில் செல்பவனின் துஆ  தந்தை மகனுக்காகச் செய்யும் துஆ என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: திர்மிதி 1828
பிரார்த்தனைக்குப் பலன் தெரியாவிட்டால்...
பாவமற்ற விஷயங்களிலும் உறவினரைப் பகைக்காத விஷயத்திலும் யாரேனும் அல்லாஹ்விடம் கேட்டால் மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியில் அதை இறைவன் அங்கீகரிக்கிறான். அவன் கேட்டதையே கொடுப்பான் அல்லது அதை மறுமையின் சேமிப்பாக மாற்றுவான் அல்லது அவனுக்கு ஏற்படும் தீங்கை நீக்குவான் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள் அப்படியானால் நாங்கள் அதிகமாகக் கேட்போமே! என்றனர். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ் அதை விட அதிகம் கொடுப்பவன் என்றார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: அஹ்மத் 10709
மேற்கூறப்பட்டுள்ள துஆக்களின் ஒழுங்குகளைப் பேணி நடந்தால் பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்ட மக்களாக நம் அனைவரையும் இறைவன் ஆக்கி அருள் புரிவானாக! அல்லாஹ்வை மட்டும் வணங்குவதோடு அவனிடம் மாத்திரமே உதவியும் தேடி அல்லாஹ்வின் திருப்பொருத்தத் தையும் பேரருளையும் பெற முயல்வோமாக!
வெளியீடு:  தவ்ஹீத் இல்லம் துபை

No comments:

Post a Comment