உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, December 19, 2014

தொடர்-4: (பீஜேயின்) ஒரு துரோக வரலாறு மீண்டும் திரும்புகிறது


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
இந்த கட்டுரையை நான் தொடர்ந்து எழுதுவதன் நோக்கத்தை மறுபடியும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வழி நடத்த ஒரு தலைவர், ஒரு இயக்கம் என்ற நிலை இருந்திருக்குமேயானால் இந்த சமூகம் என்றோ அனைத்து மட்டங்களிலும் தன்னிறைவையும், அரசு அதிகாரங்களில் தன் பங்களிப்பையும், தனது சமூக பாதுகாப்பையும் உறுதி செய்துகொண்டிருக்கும். ஆனால் முக்கியமான ஒரு கால கட்டத்தில் இந்த சமூகம் இரண்டு தலைவர், இரண்டு இயக்கம் என்று உடைந்தது. அப்துஸ் சமது அவர்கள் தலைமையில் ஒன்றும், அப்துல் லத்தீப் அவர்கள் தலைமையில் ஒன்றுமாக இரண்டாக உடைந்தது. மற்றுமொரு அரிய சந்தர்பமாக தமிழ் பேசும் முஸ்லிம்களின் எழுச்சியாக உருவாக ஆரம்பித்த த.மு.மு.க. மறுபடியும் ஒரு சாபக்கேடாக இன்று இரண்டு தலைமைகளில் ஒன்று த.மு.மு.க. வாகவும் மற்றொன்று த.த.ஜ வாகவும் உடைந்து நிற்கிறது. எந்த அளவிற்கு என்றால் இரண்டு இயக்கங்களும் பரம எதிரிகளாக, ஸலாம் கூட சொல்லக்கூடாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. சாந்தியையும் சமாதானத்தையும் போதித்த மார்க்கத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட மக்கள் நாங்கள் என்று சொல்லிக்கொள்வதற்கு வெட்கமாக இருக்கிறது.
இன்றைக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களை கண்முன்னே காணும்போது சற்றே பயமாகத்தான் இருக்கிறது. இனி எதிர் காலத்தில் நம் பிள்ளைகள் எப்படிப்பட்ட சவால்களை சந்திக்க இருக்கிறார்களோ என்று நினைக்கும்போது எங்கோ மனதின் ஒரு ஓரத்தில் வலிக்கிறது. நாளை நம் இன பெண்கள் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டால் கூட இது த.மு.மு.க. வீட்டுக்காரன் பெண்கள், இது சுன்னத்ஜமாத் வீட்டுக்காரன் பெண்கள் என்று தரம்பிரித்து ஒதுங்கிக்கொள்ளும் நிலைக்கு தவ்ஹீத் என்ற பெயரில் சமுதாயத்தில் வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு உள்ளது. தவ்ஹீத் என்று வந்துவிட்டால் உன் தந்தையானாலும் வெட்டி சாய்த்துவிடு, உன் சகோதரனாக இருந்தாலும் அவனை தள்ளிவைத்துப்பார். அவன் மானம் மரியாதையோடு விளையாட தயங்காதே என்று போதிக்கப்பட்டுள்ளது. தவ்ஹீதை சரியாக போதித்தார்கள் என்று நியாயம் பேசினாலும் அதன் அணுகுமுறை தவறாக போதிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த நிலை என்று நினைக்கும்போது, சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் சமூக தன்னிறைவு, சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று வரும்போது ஓரணியில் உறுதியாக நிற்பதற்கு பதிலாக ஒரு சமுதாயம் பிளவுபட்டு நிற்பதற்கு அதன் மக்களோ, தொண்டர்களோ காரணமல்ல. எந்த காலகட்டத்திலும் இரண்டு தலைவர்களில் ஒரு தலைவர்தான் காரணமாக இருந்திருக்கிறார். ஒரு உரையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்று சொல்வார்கள்.
த.மு.மு.க. ஆரம்பிக்கப்பட்டபோது அதன் ஆரம்ப செயல்பாடுகளை கிட்டே இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பை உணர்வு நிருபர் என்ற வகையில் அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தி தந்திருந்தான். சிறப்பாக தன்னுடைய சமுதாய பணியை துவக்கிய த.மு.மு.க. ஏன் உடைந்தது என்று பலநாள் நான் யோசித்திருக்கிறேன். சமூக அக்கறை கொண்ட ஒரு நிருபரின் பார்வையில் எதை நான் கண்டேனோ அதை இனி வருங்கால சந்ததிகள் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக பதிவு செய்கிறேன். யூகங்கள் செய்தோ, இட்டுக்கட்டியோ, மிகைப்படுத்தியோ எழுத முற்படவில்லை. நீங்கள் உன்னிப்பாக படித்துக்கொண்டு வந்தீர்களானால் நான் சொல்லக்கூடிய அனைத்து செய்திகளுக்கும் சம்பவங்களுக்கும் அதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் முடிந்தவரை பதிவு செய்து வருகிறேன். இன்றைக்கும் அவர்களிடம் கேட்டால் நான் சொல்வதை உண்மைபடுத்துவார்கள். இன்ஷாஅல்லாஹ்.
த.மு.மு.க. உடைந்ததற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக இருந்தவர்கள் என்று நாம் இரண்டு பேரைத்தான் சொல்ல முடியும். ஒன்று அதன் தலைவராக இருந்த ஜவாஹிருல்லாஹ். மற்றொன்று அதன் நிறுவனராக இருந்த பி.ஜே. அவர்கள். த.மு.மு.க. வை மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்ற சிந்தனைபோக்கில் இரண்டு பேரும் இருவேறு துருவங்களாக செயல்பட்டார்கள் என்பதுதான் என்னுடைய பார்வை.
ஜவாஹிருல்லாஹ் அவர்கள் த.மு.மு.க. வை அரசியல்ரீதியாக அங்கீகாரம் பெறக்கூடிய ஒரு வெகுஜன மக்கள் இயக்கமாக கொண்டு செல்ல நினைத்தார்கள். அரசியல் தலைவர்களின் கவனஈர்ப்பும், மனித உரிமை, தமிழ் மொழி ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் தோழமையுடனும், ஊடகங்களின் முக்கியத்துவத்துடனும் த.மு.மு.க. வை வழி நடத்திச் செல்லும் நோக்கம் தெரிந்தது. பி.ஜே. அவர்களை பொறுத்தவரையில் பொதுவாகவே அவர்களுடைய கடந்த கால வாழ்க்கை மார்க்க ரீதியான செயல்பாடுகளிலும், அதுகுறித்தான அறிவு, ஆய்வுகள் என்று இருந்ததனால் அதை தாண்டி வெளி உலக பரிச்சயங்களோ, தொடர்புகளோ பெரும்பாலும் இல்லை என்பது தெரிந்தது. ஆகவே அவர்கள் தன்னை மட்டுமே முன்னிறுத்தியும், தன் சீர்திருத்த கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களையும், தன் விசுவாசிகளையும் மட்டுமே பக்க பலமாக கொண்டும் த.மு.மு.க. வை வழி நடத்திச் செல்லும் நோக்கம் தெரிந்தது. த.மு.மு.க. மக்களிடம் செல்வாக்கு பெற ஆரம்பித்திருந்த நேரத்தில் இருவேறு துருவங்களாக இருவரின் சிந்தனைகளும் செயல்பாடுகளும் இருந்தது என்பது என்னுடைய பார்வை. இதை நான் யூகம் செய்து சொல்லவில்லை. தகுந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே சொல்லுகிறேன்.
இவர்களின் இந்த மாறுபட்ட சிந்தனை போக்கு உணர்வில் இடம்பெறுகின்ற செய்திகளிலும் எதிரொலித்ததை காண முடிந்தது.
ஜவாஹிருல்லாஹ் அவர்களை பொறுத்த வரையில் அனைத்து தரப்பு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்துடன் கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை எழுதியும், அதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவமும் கொடுப்பார். பி.ஜே. அவர்களை பொறுத்தவரையில் சமுதாயமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும், நாட்டு நடப்பாக இருந்தாலும் தனக்கு எந்த கருத்து சரி என்று படுகிறதோ அதை எழுதி மக்களும் அந்த கருத்துக்கு இசைந்து வரவேண்டும் என்று எதிர்பார்ப்பார். மற்றவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோ, அதன் மூலம் அவர்கள் பிரபலம் அடைவதையோ அவர் ஒருக்காலமும் விரும்பமாட்டார். நான் இப்படி சொல்வதற்கு ஆதாரமாக வைக்கக்கூடிய செய்திகளை சீர்தூக்கி பார்த்துவிட்டு பி.ஜே. அவர்களின் குணாதிசயத்தையும், பி.ஜே. என்கின்ற ஒரு தனி மனிதரின் மனஇச்சை போக்கினாலும், தான் இருக்கக்கூடிய இடத்தில் தனக்கு இரண்டாவது இடத்தில் கூட இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்ற இறுமாப்பினாலும், தானே எல்லாம் என்ற அகம்பாவத்தினாலும் த.மு.மு.க. உடைந்தது என்ற உண்மையை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வார நாட்களில் வாணியம்பாடி கல்லூரிக்கு சென்றுவிட்டு சனி, ஞாயிறுகளில் அலுவலகத்திற்கு வருவார்கள். அந்த வாரம் உணர்வில் இடம்பெற வேண்டிய செய்திகளை எழுதி கொடுத்துவிட்டு, அதில் முக்கியத்துவம் பெற்ற செய்தி இருந்தால் அதை தலையங்கமாக போடுங்கள் என்று சொல்லி விட்டு செல்வார்கள். உண்மையில் அந்த செய்திகள் சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள செய்திகளாக இருக்கும். தலையங்கத்தில் போடுவதற்கு தகுதியான செய்தியாக இருக்கும். உணர்வு பத்திரிக்கையில் இடம்பெறும் செய்திகளை பொறுத்தவரையில் இறுதியாக பி.ஜே. அவர்கள்தான் முடிவு செய்வார். எழுத்துப்பிழைகளையும் ( PROOF ) அவர்கள்தான் திருத்துவார்கள். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எழுதித்தந்த செய்திகளில் பாதிக்கு மேற்பட்டதை தவிர்த்துவிட்டு தலையங்கத்திலும், மற்ற பக்கங்களிலும் தான் எழுதிய செய்திகளை போட்டு நிரப்பிவிடுவார்கள்.
ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஒரு சிறந்த பத்திரிக்கையாளர். ஊடகம் சம்பந்தமான அறிவும், அனுபவமும் அவர்களுக்கு சிறப்பாக இருந்ததை நான் அறிந்திருக்கிறேன். பி.ஜே. அவர்களை பொறுத்தவரையில் மார்க்கம் சம்பந்தமான பத்திரிகையில் சிறந்த அனுபவம் பெற்றவர்கள். இந்த இரண்டு இருவேறுபட்ட நிலையில் உணர்வில் எது போன்ற செய்திகள் இடம்பெற வேண்டும் என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததை மறுக்க முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம்.
குளோனிங் முறையில் ஆட்டு குட்டி ஒன்றை உருவாக்கிய விஞ்ஞானிகளின் சாதனையை அப்போது ஊடகங்கள் பரபரப்பாக செய்திகள் வெளியிட்டுக்கொண்டிருந்தன. இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, திருக்குர்ஆன் இதை உண்மைபடுத்துகிறது என்ற கருத்தில் ஈஸா ( அலை) அவர்கள் பிறப்பு குளோனிங் முறையில் ஏற்பட்டதுதான் என்று ஒரு கட்டுரையை பி.ஜே. அவர்கள் எழுதி உணர்வில் வெளியிட்டார். பொதுவாக ஜவாஹிருல்லாஹ் அவர்கள் வார நாட்களில் வாணியம்பாடி கல்லூரிக்கு சென்றுவிட்டு சனி, ஞாயிறுகளில் அலுவலகத்திற்கு வருவார்கள். வந்தவுடன் அன்றைய வார உணர்வு பத்திரிக்கையை படிப்பார்கள். அதேபோன்று அன்றைய வார உணர்வில் வெளியான குளோனிங் கட்டுரையை படித்துவிட்டு, என்னை அழைத்து, இந்த கட்டுரையை அண்ணன் உணர்வில் போடச் சொல்லி தந்தார்களா? என்று கேட்டார். ஆமாம் என்று சொன்னவுடன் வேறு எதுவும் பேசாமல் மௌனமாக இருந்துவிட்டார்கள். பத்திரிகை வெளியாகி சில நாட்களில் இந்த கட்டுரை குறித்து மார்க்க அறிஞர்களிடமிருந்து விமர்சனம் வந்தது. ஈஸா ( அலை) அவர்கள் பிறப்பு குறித்த குர்ஆன் வசனத்தை பி.ஜே. தவறாக புரிந்துக்கொண்டு விளக்கம் தந்திருக்கிறார் என்றும், உணர்வில் ஏன் இதுபோன்ற செய்திகளை போடவேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்தன.
பொதுவாக பி.ஜே. அவர்களிடத்தில் ஒரு குணாதிசயம் உண்டு. தன்னை மையப்படுத்தி செயல்படுகின்ற ஒரு இடத்தில் தன்னை விமர்சனம் செய்தாலோ அல்லது தன் கருத்தை ஏற்கவில்லை என்றாலே கோபித்துக்கொண்டு தொடர்புகளை துண்டித்துக்கொண்டு வனவாசம் போல் சென்றுவிடுவார். சமயத்தில் இந்த வனவாசம் சில மாதங்கள் கூட நீடிக்கும். தன்னை கொண்டே த.மு.மு.க. இயங்கிக்கொண்டிருக்கிறது. தான் இல்லை என்றால் த.மு.மு.க. இல்லை என்பதுபோல் நடந்துக்கொண்டு, தன் எடுத்த முடிவை நிலைநிறுத்த மறைமுகமாக நிர்பந்திப்பார் என்பதுதான் அவருடன் பழகிய அனைவரும் அறிந்த உண்மை. இன்னொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் மிரட்டும் தொனியில் நடந்துக்கொள்வார். சில நாட்களுக்கு பிறகு பாக்கர் அவர்கள் சென்று சமாதானப்படுத்தி அழைத்து வருவார்கள். அவரை தூர நின்று பார்த்து, அவருடைய மார்க்க பயான்கள் மூலம் கவரப்பட்டு, அவரை தன் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு வேண்டுமானால் இதை நம்புவதற்கு கஷ்டமாக இருக்கும். இதுதான் உண்மை என்பதற்கு அவர் தந்த வாக்குமூலமே சாட்சியாக இருக்கிறது.
த.மு.மு.க. விலிருந்து அவர் பிரிவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு தன்னிலை விளக்க கடிதத்தை உணர்வில் வெளியிட்டிருப்பார். அந்த உணர்வு பிரதி கிடைக்கப்பெற்றால் படித்துப்பாருங்கள். நான் சொல்வதன் உண்மை தெரியும். ஒரு தடவை அல்ல இரண்டு தடவை அல்ல பலமுறை இதுபோல் நடந்திருக்கிறது என்பது அங்கிருந்த அனைவரும் அறிந்த ஒன்றுதான். நான் போய் விடுவேன், நான் போய் விடுவேன் என்று அடிக்கடி மிரட்டிக்கொண்டிருந்தபோது ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நிர்வாகிகள் போனால் போய் கொள்ளுங்கள் என்று சொன்னதன் விளைவுதான் த.மு.மு.க. உடைந்து ததஜ பிறந்தது என்ற உண்மையை இந்த சமுதாயம் தெரிந்துக்கொள்ளவேண்டும்.
அன்றைய த.மு.மு.க. நிலைமையும் அப்படித்தான் இருந்தது. பி.ஜே. மட்டுமே மக்களிடத்திலே பிரபலமானவராக இருந்தார். அவரை மையப்படுத்தியே த.மு.மு.க.வில் கணிசமான தொண்டர்களின் பலமும், செயல்பாடுகளும் இருந்தன. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை.
த.மு.மு.க. விலிருந்து பி.ஜே. அவர்கள் வெளியேற்றப்பட்டப்பிறகு, அவர் வைத்த குற்றச்சாட்டுகளில் பிரதானமான குற்றச்சாட்டு த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக இருக்கிறது என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார். அதை எழுத்துப்பூர்வமாகவும் தந்தார். ஆகவே தான் விலகுவதாக சொன்னார். உண்மையில் த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாகத்தான் இருந்ததா? பி.ஜே. அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மைதானா? என்பது குறித்தெல்லாம் யூகத்தின் அடிப்படையில் இல்லாமல், விருப்பு வெறுப்பு இல்லாமல்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும்.
இதன் தொடர்ச்சியை த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக இருந்தது என்பது உண்மையா என்ற தலைப்பில் உள்ள பதிவில் தொடர்ந்து படிக்கவும்.
இன்ஷாஅல்லாஹ் உண்மை வரலாறு தொடரும்.....


முந்தைய தொடர்களை வாசிக்க கீழுள்ள சுட்டியை சுட்டுங்கள்.

No comments:

Post a Comment