உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, October 7, 2014

நெஞ்சினிலே....இஸ்லாமிய அறிவுப் போட்டிகள்

அல் மகாதிப் நடத்தும் இரண்டாம் ஆண்டு கிராஅத் போட்டிகள் சிறப்புடன் நிறைவடைய அல்லாஹ் அருள் புரிவானாக என்று பிரார்த்தித்து எங்கள் நினைவு மலர்களை உங்கள் முன் சமர்பிக்கின்றோம்.

 Image courtesy: http://www.adiraixpress.in/

அல் மகாதிப்பின் இனிய அறிவிப்பு எங்களை சுமார் 25 ஆண்டுகளுக்கு பின் இழுத்துச் சென்றது. மேலத்தெருவில் பழைய ஜூம்ஆ பள்ளியை மையமாக கொண்டு 'சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் சங்கம்' என்ற பெயரில் அன்றைய மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து செயல்பட்டோம், இந்த சங்கம் புதுப்பள்ளியை மையமாக கொண்டு இன்றும் இயங்கி வரும் 'ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கத்தினை' முன்மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் எங்கள் சக்திக்குட்பட்டு பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்துள்ளோம். நிற்க!

80களின் மத்தியில் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் பள்ளியில் படித்தபோது, அய்யம்பேட்டையில் ஊர் ஜமாஅத் சார்பாக வருடந்தோறும் நடைபெறும் இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டியில் கலந்து கொண்டு எங்கள் பள்ளியின் சக மாணவர்கள் பரிசுகளை அள்ளி வருவார்கள் அதனால் உந்தப்பட்ட எங்கள் உள்ளங்களும் நம்முடைய அதிரையிலும் இதைப்போன்ற இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டிகளை நடத்த வேண்டும், மாணவர்களின் இஸ்லாமிய அறிவுத்திறன் வளர நம்மால் இயன்றதை செய்வதுடன் நாமும் கற்றுக் கொள்ள வேண்டும் என அவா கொண்டதை 'சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர்கள் சங்கம்' வழியாக நிறைவேற்றிக் கொள்ள அல்லாஹ் நாடினான், அல்ஹம்துலில்லாஹ்.

80களின் இறுதியில் என்று நினைக்கின்றேன், மேலத்தெரு ஜூம்ஆ பள்ளியின் பின்புறம் அமைந்துள்ள மைதானத்தில் இஸ்லாமிய அறிவுப் போட்டிகள் என்ற தலைப்பின் கீழ் 'பேச்சுப் போட்டி' 'வினாடி வினா' 'கிராஅத் போட்டி' (இக்ராஹ் அல் குர்அன் என்பதே சரியான சொல் என்பதை பின்பு அறிந்து கொண்டோம்) பாங்கு சொல்லும் போட்டி என 4 பிரிவாக, மாணவ மாணவியருக்கு தனித்தனியாகவும் நடத்தினோம்.

முதல் நாள் மேலத்தெரு சங்கத்தில் வைத்து தேர்வு போட்டிகளும் மறுதினம் மக்கள் முன் மேடையில் இறுதிப்போட்டிகள் எனவும் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றவர்கள் இமாம் ஷாபி பள்ளி மாணவ, மாணவிகளே. அவர்களுடன் போட்டியிட்டி காதிர் முகைதீன் பள்ளி மாணவர்களும் பல பரிசுகளை பெற்று நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்தனர். அதிரை அளவில் மட்டுமே நடத்தப்பட்ட இப்போட்டிகளில் தனிப்போட்டியாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டிகளின் நடுவர் பெருமக்களாக காலம்சென்ற அதிரையின் அறிஞர், கண்ணியத்திற்குரிய அலி ஆலீம் அவர்களும், செய்யதலி ஆலீம் அவர்களும், பேராசிரியர் பரக்கத் அவர்களும், பேராசிரியர் அப்துல் காதர் அவர்களும், காதிர் முகைதீன் பள்ளியின் ஆசிரியப் பெருந்தகைகளான ஹாஜா முகைதீன் சார் அவர்களும், ஷேக் தாவூது சார் அவர்களும், மும்தாஜ் டீச்சரும் நடுவர்களாக சிறப்புடன் செயலாற்றினர்.

சுமார் 500 கேள்விகள் அடங்கிய வினாடி வினா போட்டிக்கான கேள்வி பதில்களை குர்ஆனிலிருந்தும் ஹதீஸிருந்தும் அல்லாஹ்வினுடைய உதவியால் தொகுத்தேன் மேலும் இமாம் ஷாபி பள்ளி உஸ்தாதாக்களும் அவர்களே மனமுவந்து விரும்பி உதவினர். கேள்வி பதில் தொகுப்பை போட்டியாளர்களிடம் வழங்குமுன் கண்ணியத்திற்குரிய அலி ஆலீம் அவர்களிடம் காட்டி ஒப்புதல் பெற்றுக் கொண்டோம்.

80களின் இறுதியில் நாங்கள் நடத்திய முதலாம் ஆண்டு போட்டியில் வெற்றி பெற்ற சகோதரிகள் இருவர் இன்று அதிரை பேரூராட்சி மன்ற கவுன்சிலர்களாக உள்ளனர் அதிலும் ஒருவர் தான் பெற்ற மார்க்கக் கல்வியை இன்று பலரும் பெற்றும் பயனடைய வேண்டும் என்ற நன்னோக்கில் அதிரை தாருத் தவ்ஹீத் நடத்தும் பிலால் நகர் தர்பியா சென்டரில் சம்பளமில்லா ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டுள்ளார், அல்லாஹ் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக. அதேபோல் தொடர்ந்து பல வருடங்கள் பரிசு  பெற்ற சேக்கனா நிஜாம் அவர்களும் வெற்றிகரமாக ஒரு இணையதளத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் கலந்து கொண்ட, வெற்றிபெற்ற பலரும் பல்வேறு உயர்நிலைகளில் இருப்பீர்கள் என நம்புகிறேன் (அனைவருடைய பெயரையும் ஞாபகத்தில் கொண்டுவர இயலவில்லை என்ற என் குறையை தவிர பிறருடைய பெயரை மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை).

காலச்சூழலால் பலரும் பல திசைகளுக்கு சென்று விட்டதாலும், அப்போது தொடங்கப்பட்ட, பேராசிரியர் பரக்கத் அவர்களின் தலைமையிலான பைத்துல்மால் அமைப்பு அதிரையில் திருக்குர்ஆன் மாநாடுகளில் இதுபோன்ற போட்டிகளை சுவீகரித்துக் கொண்டு இன்னும் மெருகுடன் தொடர்ந்து நடத்தி வருவதாலும் நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம். அது இன்று அல் மகாதிப் போன்றோர்களாலும் முன்னெடுத்து செல்லப்படுவதால் மிக்க அகம் மகிழ்கின்றோம், ஒரு நல்ல காரியத்திற்கு தூண்டுகோளாய் அமைந்ததற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துகின்றோம்.

அன்று சில வருடங்கள் நாங்கள் இதுபோன்ற இஸ்லாமிய அறிவுத்திறன் போட்டிகளை நடத்திட உறுதுணையாய் இருந்த சக சுன்னத்வல் ஜமாஅத் இளைஞர் சங்க நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், நன்கொடைகள் பரிசுகள் என வழங்கியோர்களையும், நடுவர்களாய் பணியாற்றியோரையும், இன்னும் போட்டிகளில் கலந்து கொண்ட அனைவரையும், பெருமளவில் வருகை தந்து போட்டிகள் நிறைவுறும் வரை பொறுமையுடன் காத்திருந்து நல்லாதரவு அளித்த பொதுமக்களையும், அனைத்திற்கும் மேலாக எல்லாம் வல்ல ரஹ்மானையும் நன்றியுடன் நினைவுகூர்ந்து நிறைவு செய்கின்றோம்.

குறிப்பு: 
விழாவை ஆடியோ பதிவாகவோ, புகைப்படமாகவோ சேமிக்கவில்லை மாறாக எங்கள் மனங்களில் பசுமையாக தங்கிவிட்ட நினைவுகள் மட்டுமே உங்களுடன் எழுத்துக்களாய் பகிர்ந்துள்ளோம். கமெண்ட் எழுத நினைத்து நீண்டுவிட்டதால் தனிப்பதிவாகிவிட்டது..

அதிரைஅமீன்
&
S.அப்துல் காதர்

No comments:

Post a Comment