அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்
பெற்றோர்கள், கல்வியாளர்கள், எந்த இரத்தபந்தமும் இல்லாவிட்டாலும் மாணவ சமுதாயம் முன்னேறவேண்டும் என பல்வேறு ஊக்கங்களை வழங்கி வரும் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் என பலதரப்பட்ட மக்கள் மீதும் தனது பிற்போக்கான முடிவை திணித்துள்ளது தேர்தல் கமிஷன்.
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்புக்களுக்கான தேர்வு தேதிகள் 02.03.2011 துவங்கி 11.04.2011 முடிவுறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தேர்வுகளும் நடைபெற்று வரும் நிலையில், தேர்வுகளை கருத்திற்கொள்ளாமல் தமிழக தேர்தல் தேதி எதிர்வரும் 2011 ஏப்ரல் 13 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம் இதே தேர்வு காலகட்டத்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் சூதாட்டங்கள் (போட்டிகள்) நம் மாணவர்களில் அதிகமானோரை படிப்பிலிருந்து அப்புறப்படுத்தியுள்ள நிலையில் தேர்தல் தொந்தரவுகள் எஞ்சிய, ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளை கட்டாயம் படிக்கவிடாது.
கிட்டதட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே ஏதோவொரு காரணத்திற்காக தேர்தல் நாள் குறித்து தேர்தல் கமிஷனிடம் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையிலும் மே மாத மத்தியில் முடிவடைகின்ற தமிழக சட்டமன்றத்திற்காக, போதிய அவகாசமிருந்தும் ஒரு மாதம் முன்பாகவே தேர்தலை வைத்து தொல்லைதருவதேனோ? இதில் தேதியை மாற்ற மாட்டோம் என அலுச்சாட்டியம் வேறு.
நாம் ஒரு பக்கம் மாணவர்களுக்காக கல்வி விழிப்புணர்வு பணிகளை முடிக்கி மாணவ சமுதாயம் முன்னேறாதா? என ஏங்கும் வேளையில்; பொறுப்பற்ற முறையில் தேர்தல் கமிஷன் முடிவெடுப்பது சரியல்ல. அங்கீகாரம் பெற்ற கொள்ளையர்களாக மக்கள் கருதும் 234 பேரை தேர்வு செய்வதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் படிப்போடு, எதிர்காலத்தோடு விளையாடுவது எந்த வகையில் நியாயம்? படிக்காத எவனும் தேர்தல் கமிஷனராய் கூட வரமுடியாது என்று அறிந்து வைத்துள்ள நீங்கள் எங்கள் மாணவர்களை ஒழுங்காக பரீட்சைக்கு படிக்க விடுங்கள்.
என்னதான் அதிருப்தி இருந்தாலும் தேர்தல் நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துவிட்டால் அரசியல் கட்சிகள் ஒட்டுக்காக அனைத்து ஜகஜ்ஜால முறைகளையும் கையிலெடுப்பர்களே தவிர மாணவர்களின் எதிர்காலம் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டர்கள் அது அவர்களுக்கு அனாவசியமும் கூட, எனவே நாம் தான் நம்மளவில் மாணவர்களின் நலனுக்காக சில கட்டுப்பாடுகளை செயற்படுத்திட முன்வர வேண்டும். பொதுவான வேண்டுகோளாக இருந்தாலும் குறைந்தபட்சம் நமதூரில் மட்டுமாவது நடைமுறைப்படுத்திட சில யோசனைகள்...
1. மத்திய மற்றும் மாநில தேர்தல் கமிஷன்களுக்கு நிலைமையை விளக்கி, தேர்தலை தேர்வுக்குப்பின் நடத்தக்கோரி மனுக்களை, தந்திகளை, ஈமெயில்களை உடனே அனுப்புவது.
2. நமது கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கானால் நமக்கு நாமே கீழ்க்காணும் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்வது.
3. அனைத்துவகை ஒலிபெருக்கி பிரச்சாரத்திற்கும் ஊருக்குள் அனுமதியில்லை.
4. பரஸ்பர விட்டுக்கொடுத்தல்களின் அடிப்படையில், நமது உணர்வுகளுக்கு அரசியல் கட்சிகள் மதிப்பளித்தால் நாமும் விட்டுக் கொடுத்து இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்காக கடைசி 2 நாட்கள் மட்டும் ஊருக்குள் ஒலிபெருக்கியை அனுமதிக்கலாம்.
5. தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களை பேருந்து நிலையத்தில் மட்டுமே நடத்த அனுமதிப்பது.
6. ஊர்வலங்கள், பேரணிகளை தேர்வு நடைபெறும் நாட்களின் மாலை வேளையில் மட்டும் அனுமதிப்பது மாறாக தேர்வு நடைபெறாத நாட்களில் அதாவது அடுத்த தேர்வுக்கு தயாராகும் நாட்களில் அனுமதிக்கக்கூடாது.
7. நமது முடிவுகளை காவல்துறை மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முறைப்படி தெரிவித்து அவர்களின் ஆதரவையும் கேட்பது.
8. மாணவ சமுதாயம் நலம் நாடி நாம் விடுக்கும் கோரிக்கைகளை நிராகரிக்கும் கட்சிகளை நாமும் நிராகரிப்பது, மக்களையும் நிராகரிக்கத் தூண்டுவது.
9. அனைத்து கட்சிகளும் அப்படித்தான் என்றால் நமக்கு இந்த தேர்தலே வேண்டாம் என முழுமையாக புறக்கணிப்போம் ஏனென்றால் எந்த அரசியல் கட்சிக்கு நாம் ஒட்டுப்போட்டாலும் நமக்காக ஒன்றும் செய்யப்போவதில்லை மாறாக அது நம் ஜனநாயகக் கடமைகளில் ஒன்றே என்பதை மட்டும் நினைவில் கொள்வோம்.
10. எச்சரிக்கின்றோம்! தேர்தல் கமிஷன்களே! உங்களின் முடிவுகளால் தேர்வில் தோற்கும் மாணவன் கடைசியில் அரசியலுக்கே வரக்கூடும், இறுதியில் அவன் முன் கூழைகும்பிடு போடும் இழிவும் வரலாம்.
11. பூனைக்கு மணி கட்டும் இந்நிகழ்வை யார் நடத்திக் காட்டுவது? உங்களுக்கு எங்கள் ஆலோசணைகள் சரியெனபடுகிறதா அல்லது இன்னும் சிறந்த ஆலோசனைகள் உங்களிடம் உள்ளதா? தேர்தல்களில் போட்டியிடாத அமைப்பினர்களே! ஒன்று கூட்டுங்கள் ஊரை, வருபவர்களை வைத்து முடிவெடுப்போம், வென்று காட்டுவோம். அதிரை அனைவருக்கும் ஓர் முன்னுதாராணமாக திகழட்டும்.
12. 2011 தேர்வுகால அட்டவணை
அக்கறையுடன்
அதிரையின் மைந்தன்
உங்களுடைய மனுக்கள், குரல்கள் எட்ட வேண்டிய முகவரிகள்
மத்திய தேர்தல் கமிஷனின் முகவரி, ஈமெயில் முகவரி, தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்கள்
Nirvachan Sadan,
Tel: 011-23717391 Fax: 011-23713412
தமிழக தேர்தல் கமிஷனின் முகவரி, ஈமெயில் முகவரி, தொலைபேசி மற்றும் தொலைநகல் எண்கள்
Elections Department, Secretariat,
Fort St
George, Chennai - 600 009.
Ph: 044-25670390 Fax:044-25670989
E-Mail: ceo@tn.gov.in
No comments:
Post a Comment