உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, October 20, 2011

புனிதமிக்க பதிமூன்று நாட்கள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவன் படைத்த நாட்கள் யாவும் சிறப்புக்குரியவையாகும். அவற்றுள் அடியார்கள் வணக்கங்கள் புரிந்து அதன்மூலம் மாண்பைப்பெற சில நாட்களை இறைவன் சிறப்பித்துள்ளான். ஏனைய சமுதாய மக்களின் வாழ்நட்களை ஒப்பிடும்போது நமது ஆயுள் மிகவும் குறைவானதாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :-
'எனது சமுதாய மக்களின் ஆயுட்காலம் அறுபது முதல் எழுபது வயது வரையாகும்' (திர்மிதி, இப்னு மாஜா)

இந்த மணிவாசகம் மிகவும் சிந்திக்கத்தக்கதாகும். எனவே குறைந்த ஆயுளில் நிறைந்த ஆயுளின் மாண்பைப்பெற, முஹம்மது நபி(ஸல்) அவர்களின் சமுதாய மக்களுக்கு இறைவன் புரிந்துள்ள மாபெரும் அருட்கொடைகளே சிறப்புக்குரிய சில நாட்கள்! அத்தகைய நாட்களில் தலையாயது ரமளானின் லைலத்துல் கத்ரு எனும் இரவு. இது ஆயிரம் மாதங்கள் வணக்கம் புரிவதை விட சிறந்தது என்று அல்குர்ஆனில் சூரா கத்ர் மூலம் அல்லாஹ் தெளிவுப்படுத்தியுள்ளான்.

அந்த வரிசையில், வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தங்களை பெற்றுத்தரவல்ல புனிதமிக்க நாட்களே துல்ஹஜ் மாதத்தின் முதல் 13 நாட்களாகும். ஹஜ்ஜுடைய கிரியைகள் அனைத்தும் இந்த 13 நாட்களினுள் அடங்கியுள்ளது. இந்நாட்களில் ஹஜ் நிய்யத்துடைய ஹாஜிகளின் ஒவ்வொரு செயலும் வணக்கங்களாகும். அவர்களுக்கு மட்டுமல்லாது ஹஜ்ஜுக்கு செல்லாத ஏனைய இஸ்லாமிய பெருமக்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வல்ல அல்லாஹ்வால் சிறப்பித்துக் கூறப்பட்ட இந்நாட்களில் செய்ய வேண்டிய நல் அமல்களை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நமக்கு செயல்படுத்திக் காட்டியுள்ளார்கள். இந்நாட்கள் துல்ஹஜ் மாதத்தின் தலைப்பிறையிலிருந்து ஆரம்பமாகின்றது.
துல்ஹஜ் முதல் பத்து நாட்கள்
 முதலில், 'அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா' (துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்) மிகவும் முக்கியமான நாட்களாகும். அல்லாஹ் வான்மறை அல்குர்ஆனில்...
'வல்ஃபஜ்ரி வலயாலின் அஷ்ர்' என்னும் 89:2 வசனத்தில் 'பத்து இரவுகளின் மீது ஆணையாக!' என ஆணையிட்டுக் கூறுவதும், 'வயத்குரு ஸ்மல்லாஹி ஃபீ அய்யாமின் மஃலூமாத்தின்' ஹஜ்ஜின் குறிப்பிட்ட நாட்களில் இறைவனை நினைவு கூறுவது (22:28)
என்ற வசனமும் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களையே குறிக்கின்றன என குர்ஆனின் விரிவுரையாளர்களில் இப்னு உமர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) போன்ற நபித்தோழர்களும், இமாம் இப்னு கதீர் போன்ற இமாம்களும் குறிப்பிடுகின்றனர். இந்த நாட்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில்...

'உலக நாட்களில் இந்த துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களைவிட மாண்புக்குரியது வேறு எதுவுமில்லை' எனக் கூறியபோது 'இறைவழியில் அறப்போர் செய்வதைவிடவா?' என நபித்தோழர்கள் கேட்டார்கள். 'ஆம்! போர் புரிவதை விடவும் தான்' என பதிலளித்துவிட்டு, 'இறைவழியில் தனது உயிர், பொருளைத் தியாகம் செய்து அறப்போர் புரிந்து திரும்பி வராதவரைத் தவிர' என்றார்கள் நபியவர்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969)
'உலகம் தோன்றிய நாட்களிலேயே மிகவும் சிறப்புக்குரிய நாட்கள் துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்களாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்தே அதன் மாண்பைப் புரிந்து கொள்ளலாம்.
அரஃபா நாள்
இந்த புனிதமிக்க மாதத்தில் 9வது நாளாக வருவதுதான் 'யவ்முல் அரஃபா' எனும் அரஃபா தினமாகும். புனிதமிக்க மக்காவின் அரஃபா பெருவெளியில் ஹாஜிகள் அனைவரும் சங்கமிக்கும் நன்நாள். இந்நாளில் பாவங்களுக்கு மன்னிப்பும், நரக விடுதலையும் கிடைக்கும் உயரிய நாள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
'அல்லாஹ் தனது அடியார்களை நரகிலிருந்து அதிகமாக விடுதலை செய்யும் நாள் அரஃபா நாளாகும். இதைவிட வேறு எந்த நாட்களிலும் இவ்வாறு விடுதலை செய்வதில்லை. இந்நாளில் இறைவனே இறங்கி வந்து எனது அடியார்கள் என்ன விரும்புகிறார்கள்? (கேட்பதைக் கொடுப்பதற்கு சித்தமாக உள்ளேன்.) என அமரர்களிடம் பெருமையோடு கூறிக்கொள்வான்' அறிவிப்பவர்: அன்னை ஆயிஷh(ரலி) நூல்: முஸ்லிம்
அரஃபா நாளில் நோன்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
அரஃபா நாளில் நோன்பு நோற்பது முந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும், பிந்தைய ஒரு வருடத்தின் பாவங்களையும் மன்னிக்கப்படும்'(அறிவிப்பவர்: அபூ கதாதா அல்- அன்ஸாரி(ரலி) ஆதாரம்:முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாவது நாளிலும், ஆஷ{ரா (முஹர்ரம் பத்தாவது) நாளிலும், ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீள் என்னும் 13,14,15 வது நாட்களிலும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: ஹுனைதா இப்னு காலித்(ரலி) ஆதாரம்:அஹ்மது, அபூதாவூது, நஸாயீ)

நபி(ஸல்)அலர்கள் நான்கு நற்செயல்களை எப்போதும் விடுவதேயில்லை. 1.துல்ஹஜ் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பது, 2.ஆஷ{ரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது, 3.ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீள் என்னும் 13,14,15 வது நாளில் நோன்பு நோற்பது, 4. ஃபஜ்ருத் தொழுகைக்கு முந்திய இரு ரகஅத்கள் சுன்னத் தொழுவது. (அறிவிப்பவர்: அன்னை ஹஃபஸா(ரலி) ஆதாரம்: அஹ்மது, அபூதாவூது.)
ஹாஜிகளுக்கு அரஃபா நோன்பு கிடையாது
நபி (ஸல்) அவர்கள் அரஃபாவுடைய நாளில் அரஃபா மைதானத்தில் (ஹாஜிகள்) நோன்பு நோற்கத் தடை செய்துள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) ஆதாரம்: அஹ்மது, அபூதாவூது, நஸயீ, இபனு மாஜா)
தக்பீர் சொல்வது
இறைவன் திருமறையாம் அல்குர்ஆனில்...
'அவர்கள் தங்களின் பயன்களைப் பெறுவதற்காகவும், சாதுவான (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளை அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் வருவார்கள்' (அல்குர்ஆன் 22:28)
மேலும் இந்த பத்து நாட்களில் அதிகமாக தக்பீர் சொல்வதையும், திக்ரு செய்வதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகையில்...
இந்த (துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் உவப்பான நாட்கள் உலகில் வேறு எதுவுமில்லை. ஆகவே இந்த நாட்களில் அதிகமதிகமாக 'லாயிலாஹ இல்லல்லாஹ்' என்னும் தஹ்லீலையும், 'அல்லாஹு அக்பர்' என்னும் தக்பீரையும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்னும் தஹ்மீதையும் ஒதி வருவீர்களாக! (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர், ஆதாரம்: தப்ரானி)
நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு தக்பீர் (தக்பீர் தஷ;ரிக்) கூறுவார்கள்:-
'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். அல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து'
அறிவிப்பவர்கள்: உமர்(ரலி), இப்னு மஸ்வூது(ரலி) (தமாமுள் மின்னா ஷய்க் அல்பானி, முசன்னப் இப்னு அபி செயிபா)
பெருநாள் (துல்ஹஜ் பிறை 10):
'நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய நாட்களில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்' அறிவிப்பாளர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) நூற்கள்: புகாரி (1991,1992) முஸ்லிம், திர்மிதீ.

அய்யாமுத் தஷ்ரீக் (தஷ்ரீக்குடைய நாட்கள்):
            அய்யாமுத் தஷ;ரீக் என்பது துல்ஹஜ் மாதம் பிறை 11,12,13 ஆகிய நாட்களை குறிக்கும். அந்நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது. பெருநாளைப் போன்று மகிழ்வோடு இருக்க வேண்டிய நாட்களாகும். மேலும், குர்பானி கொடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்களாகும் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
'தஷ;ரீக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும், அல்லாஹ்வை    நினைவு கூர்வதற்கும் உரிய நாட்களாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: நுபைஷh (ரலி) நூல்: முஸ்லிம் 2099
'அய்யாமுத் தஷ;ரீக் நாட்கள் முழுவதும் அறுப்பதற்கு ஏற்ற நாளாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முதஇம் (ரலி), நூல்: இப்னு ஹிப்பான்.
இறைவனுக்கு உவப்பான இந்த நாட்களில் குர்ஆன் ஓதுவது, தஹஜ்ஜுத் தொழுகை மற்றும் நஃபிலான வணக்கங்கள் புரிவது, திக்ர் செய்வது, அதிகமாக தர்மம் செய்வது, ஏழை எளிவர்களுக்கு உதவுவது, நன்மையை ஏவித் தீமையைத் தடுப்பது ஆகியவைகளை அதிகமதிகமாகச் செய்வதால் அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெறமுடியும் என்று இறைவன் வாக்களித்துள்ளான். அத்தகைய அருளைப்பெற எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக!

வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

No comments:

Post a Comment