உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, October 25, 2013

அதிரை ஈத் மிலன் கமிட்டியின் நன்றி அறிவிப்பு !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர்,    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்... அது சமயம் கலந்து கொண்ட பல சமுதாயத்தை சார்ந்த அனைவருக்கும் ஈத் மிலன் கமிட்டி சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவி புரிந்த வளைகுடா வாழ் அதிரை சகோதரர்களுக்கும் குறிப்பாக அமீரக மற்றும் சவூதி வாழ் அதிரை சகோதரர்களுக்கும், மேலும் ஆஸ்திரேலியா & இலண்டன் வாழ் அதிரையர்களுக்கும் மற்றும் அனைத்து வெளிநாடு வாழ் அதிரை சகோதரர்களுக்கும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக.

இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நமதூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத் மிலன் நிகழ்ச்சி.

சமீப காலமாக, அதிரையின் ஒரு சில பகுதிகளைச் சார்ந்த சகோதரர்கள் பெருநாட்கள் தோறும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதற்கு ஏதுவாக நம் சமுதாயச் சகோதரர்களை மட்டும் அழைத்து விருந்தளிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் கடந்த நோன்புப்பெருநாளைத் தொடர்ந்து நிகழ்ந்த விருந்தில் கலந்து கொண்ட நம் இளைஞர்கள் சிலரின் மனதில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக, இதுபோன்ற விருந்தைப் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக மாற்றவேண்டும் என்று கருதி, அன்றிரவே ஒத்த கருத்துடைய, இயக்கம் மற்றும் அரசியல் சாராத மார்க்கப் பிடிப்புள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து, ஓர் ஆலோசனை அமர்வை ஏற்படுத்தி, அதன் முடிவில் இனி வரும் காலங்களில் இது போன்ற பெருநாட்களில் அனைத்து மத அன்பர்களையும் அழைத்துப் பெருநாள் சந்திப்பை ஏற்படுத்துவதென்றும், அதில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள கிராமங்களின் பஞ்சாயத்து நிர்வாகிகள், பள்ளி & கல்லூரி ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி கல்லூரி வகுப்புத்தோழர்கள், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய பல தரப்பட்ட மக்கள், உள்ளிட்ட பல தரப்பட்ட பிற சமுதாய அன்பர்களை அழைத்து, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த அதிரை ஈத் மிலன் கமிட்டிக்கு இயக்கம் மற்றும் அரசியல் சார்பற்ற பல தரப்பட்ட இளைஞர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு, கடந்த ரமலான் முடிந்ததிலிருந்து பல ஆலோசனை அமர்வுகள் நடத்தி, அதில் கீழ்க் காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

1. 2013-ம் வருடம் ஹஜ்ஜுப் பெருநாளைத் தொடர்ந்து வரக்கூடிய விடுமுறை தினங்களில் இந்த நிகழ்ச்சியை நடத்துவதெனவும்,

2. இந்நிகழ்ச்சிக்குத் தேவைப்படக்கூடிய பொருளாதாரத்தை வெளிநாடுவாழ், வெளியூர்வாழ் மற்றும் உள்ளூர்வாழ் அதிரையர்களிடம் வசூலிப்பது, மேலும் தனிப்பட்ட நபரிடம் மட்டும் இந்நிகழ்ச்சிக்குத் தேவையான தொகையைப் பெறக்கூடாது எனவும், காரணம், தனிப்பட்ட நபரின் கருத்துத் திணிப்பிற்கு உள்ளாக நேரிடும் என்றும் அதைத் தவிர்ப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் தேவைப்படும் தொகைக்கு மிகுதியாக வசூலிப்பதில்லை எனவும் முடிவு செய்யப்பட்டது.

3. இந்நிகழ்ச்சியை எந்தவொரு தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கும் ஆளாகாத வகையில் ஏற்பாடு செய்வதெனவும் அதே சமயம் அனைத்து சமுதாயத்தினரையும் அழைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது,

அதனடிப்படையில், பல சகோதரர்களின் நீண்ட நாள் தியாக உழைப்பின் விளைவாக, அதிரை ஈத் மிலன் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அல்லாஹ்வின் அருளால் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியின்போது, பல பணிகளைக் குழுக்களாகப் பிரித்து, ஒவ்வொரு குழுக்களுக்கும் 10 பேர் வீதம் அனைத்து முஹல்லாக்களைச் சார்ந்த இளைஞர்களால் பணிகள் அனைத்தும் சிறப்பாகச் செய்து முடிக்கப்பட்டது, அல்ஹம்து லில்லாஹ்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, சகோ. ஹாபிள் முஹம்மது சாலிஹ் இறைவசனம் ஓத, சகோ. ஜமீல் முஹம்மத் சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்த, சகோ. இப்ராஹீம் அன்சாரி தலைமையேற்க, சகோ. வழக்குரைஞர் A. முனாப் முன்னிலை வகித்து சிறப்பு அழைப்பாளர்களான மாவட்ட நீதிபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட சென்னை புதுக்கல்லூரி வேதியல் பேராசிரியர் சகோ. பரீத் அஸ்லம், மற்றும் மௌலவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றி மாற்று மதச் சகோதர சகோதரிகளின் வினாக்களுக்கு பதிலளித்தார்கள். இறுதியாக அதிரை கா.மு கல்லூரி அரபித்துறை பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இவ்விழாவில் நமதூரை சார்ந்த நேரில் மற்றும் தொலைபேசியின் மூலமாக அழைக்கப்பட்ட மாற்று மத அன்பர்கள் மற்றும் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் பொழுது, அவர்களை வரவேற்ற விதம் மேலும் அவர்களிடமிருந்து மேலான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்கு ஏதுவாக ஆலோசனைப் படிவத்தைக்கொடுத்து அமர வைத்தது வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உணவு பரிமாற்றத்தின்பொழுது சைவ/அசைவ உணவு வகைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மனமாறப் பரிமாறியது, வந்திருந்த அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும் நம் சமுதாய இளைஞர்களின் தன்னலமற்ற சகோதர வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ வைத்தது,

நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து மாற்றுமத அன்பர்களுக்கும் வாசனைத் திரவியங்கள், இனிப்பு வகை மற்றும் இஸ்லாத்தைப்பற்றிய அறிமுக புத்தகங்கள் அடங்கிய அன்பளிப்புப் பெட்டியொன்றும் வழங்கப்பட்டது.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ஆலோசனைப் பெட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாற்று மத அன்பர்களின் ஆலோசனைகளும் நிகழ்ச்சியை பற்றிய மேலான கருத்துக்களும் நமதூரில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அவைகளுள் சில கருத்துக்களும் ஆலோசனைகளும் கீழே தரப்பட்டுள்ளது;

செ. கோப்பெருஞ்சோழன், அன்னவாசல், சொன்னது...
இதுவரையில் என்னை பொருத்தவரையில் நடைபெறாத ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி, அனைவரும் சமத்துவம் என்று வாய்மொழியாக பேசுபவர்கள் மத்தியில் இது உண்மை என்று நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். நன்றி. எல்லா பிரச்சனைகளும் முதலில் பள்ளியில் தான் ஏற்படுகிறது, முதலில் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாணவர்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும்.

N.R.ரெங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர், பட்டுக்கோட்டை, சொன்னது....
மனிதநேயம், சமூக நல்லிணக்கம் ஒங்க பயனடையும் நிகழ்ச்சி.
அனைவரிடத்தில் ஒற்றுமை மனப்பான்மை வளர வேண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.

D. ரமேஷ், தமிழன் T.V சொன்னது...
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மதம் வேறாக இருந்தாலும் இறைவன் மட்டும் ஒருவனே என்ற செய்தி மிக சிறப்பாக இருந்தது.
இந்த மக்கள் சந்திப்பு நமது ஊரை மட்டும் இல்லாமல் அனைத்து ஊர் மக்களுக்கும் சேர்ந்து அடைய வேண்டும்.

G.பிரபாகர், அதிரை, சொன்னது....
அனைவரையும் ஒற்றுமையோடு சிந்தித்து வாழ வழிவகுத்த இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது எனது அருமை அதிரை நண்பர்களுக்கு நன்றி. அனைவரும் ஒற்றுமையோடு போட்டி,பொறாமை இன்றி வாழ வேண்டும்.

N.வேணுகோபாலன், ஆசிரியர், கா.மு.ஆ.மே.நி பள்ளி சொன்னது....
தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒரு கூட்டம் இது மிகவும் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒருநாள் இதுபோன்ற கூட்டம் நடத்தினால் சமூக நல்லிணக்கம் நிச்சயம் வளரும்.

S.கார்த்திகேயன், அதிரை, சொன்னது....
இது போன்ற நிகழ்ச்சிகள் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் அதிரை ஈத் மிலன் கமிட்டிக்கு என்று நன்றிகள்.
இது போன்ற நிகழ்வுகள் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோதான் நடத்த முடியும் ஆனால் நாம் அன்றாடம் மதபேதம் பாராமல் உதவி கரம் நீட்ட வேண்டும்.

K. சொக்கலிங்க பத்தர், அதிரை, சொன்னது...
பல மத சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக யாவரும் பின் பற்ற வேண்டும்.
எல்லாம் வல்ல இறைவன் நம்மிடம் ஷைத்தான் வராமல் இருக்க இறைவனிடம் துவா கேளுங்கள்.

பேரா. M.A. முஹம்மது அப்துல் காதிர், முன்னாள் முதல்வர், கா.மு. கல்லூரி, சொன்னது...
... சமூக நல்லிணக்கம், முஸ்லிம்களாகிய நம்மிடத்தில்தான் முதலில் வர வேண்டும், ஏற்படுத்த முயல வேண்டும். இது போன்ற நிகழ்ச்சி ஆண்டாண்டு தோறும் நடைபெற வேண்டும். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளும், அமைப்பும் மிக மிகச்சிறப்பு.

S.பாலசுப்ரமணியன், அதிரை, சொன்னது....
அனைத்து சமூகத்தையும் ஒன்றுபட செய்து ஒற்றுமை சமூதாய சகோதரத்துவத்தை ஒன்றுபட செய்து இவ்விழாவை ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
இதுபோன்ற என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வேற்றுமை இல்லாமல்.

V.காந்தி, அதிரை, சொன்னது....
இந்த நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது சாதி,மதம், வேறுபாடின்றி எல்லோரும் அண்ணன் தம்பி போல் வாழவேண்டும். நம் எல்லோரையும் படைத்த ஆண்டவன் ஒருவன்தான். அப்படி இருக்கும் பொழுது நாம்தான் பிரிவினையோடு வாழ்ந்துவருகிறோம் இதை மனதில் வைக்க நாம் ஒற்றுமையாக வாழவேண்டும்.

A.தாஜுதீன், மல்லிபட்டினம், சொன்னது...
காலத்திற்கேற்ப இந்துபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து மதத்தினர்களையும் ஒன்று இணைத்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்வதன் மூலம் சமத்துவமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் நாட்டின் வளர்ச்சியையும் காணலாம். இதுபோன்ற விழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கூட்டி அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து பிரிவினைவாதத்தின் சூழ்ச்சியில் விழாமல் பாதுகாக்க வேண்டும்.

சி. சுந்தர்ராஜு, ஆச்சாரி, சொன்னது...
முஸ்லீம், இந்து, கிறிஸ்டியன் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதுதான் என்னுடைய விருப்பம் என்னுடைய ஆசை.
இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

P.சங்கர், அதிரை, சொன்னது...
அனைத்து சமூகத்தினரையும் ஒன்றுபடுத்தியதற்க்கு இந்த சுப நிகழ்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது நன்றி.
இதேபோல் ஒரு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்றால் நமதூர் பெருமை உலகம் முழுக்க பெருமை சேர்க்கும்.

ராகேஷ், ஜோய் அலுக்காஸ், ஜுவல்லரி, தஞ்சாவூர், சொன்னது...
Good, thank you for giving opportunity to participate in this noble event and also understand Islam, we all are human.

A.L. அஷ்ரப் அலி, அதிரை, சொன்னது...
இந்த நிகழ்ச்சி முதன் முறையாக அதிரையில் நடைபெறுகிறது இதன் மூலம் அனைவரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்து நல்ல கருத்துகளை கேட்கும் வாய்ப்பாக அமைந்தது.
இதே போன்று நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

T. லெனின், பேராசிரியர், கா.மு.கல்லூரி, சொன்னது...
இந்த நிகழ்ச்சி சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள், சகோதர சகோதரிகள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மனப்பூர்வமாகவும் இதயப்பூர்வமகவும் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன். இதுபோல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

A.முஹம்மது முகைதீன், அதிரை, சொன்னது...
பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள், இது தாங்களுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த இறைவன் நமக்கு ஒற்றுமையை தந்தருள்வானாக.

R. தனபால், அதிரை, சொன்னது...
அழைப்பிதழ் பெற்றபோது எல்லோரும் சிறியவர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன், ஆனால் கலந்து கொண்டபோது இது போன்ற நிகழ்ச்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.
அதிரையில் உள்ள 21 வார்டுகளுக்கும் வார்டு 1-க்கு 2 நபர் வீதம் அமைப்பை ஏற்படுத்தவேண்டும்.

N.முஹம்மது ஜபருல்லாஹ், அதிரை, சொன்னது...
நல்ல ஒரு எடுத்துகாட்டு, எல்லா வருடமும் நடத்தக்கூடிய நிகழ்ச்சி.
ஊரில் உள்ள எல்லா முஹல்லாவும் ஒன்றுபட வேண்டும். எந்த முடிவாக இருந்தாலும் முஹல்லா அனைத்தும் சேர்ந்து எடுக்க வேண்டும், இயக்கங்கள் என்பது தேவையில்லை.

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நமக்கு உற்ச்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்திருந்தாலும், நாம் அல்லாஹ்வைத் துதித்து, அவனிடத்தில் பாவ மன்னிப்புக் கோருவோமாக..

இனி வரும் காலங்களிலும் நமதூர் அனைத்து சகோதரர்களும் ஒன்றினைந்து இந்நிகழ்ச்சியை நடத்த முன்வர வேண்டும்.

இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி
அதிராம்பட்டினம்
 
Thanks to: http://theadirainews.blogspot.ae

No comments:

Post a Comment