உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, August 20, 2014

இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமிய பெண்களின் பங்கு!


இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது பலரின் கூட்டு ஒத்துழைப்பினாலும், விடா முயற்சியாலும், பலரின் உயிர் தியாகத்தினாலும் கிடைத்தது என்பதனை நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். அப்போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட பல தியாகிகள், மாவீரர்கள் என்று பலரும் போராடி, உயிர் நீத்த பின்னரே, இன்றைய சுதந்திர இந்தியா அயல் நாட்டவரின் அடிமை தளத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.

இப்படிப்பட்ட ஒரு மாபெரும் சுதந்திரம், ஒரு தனி மனிதானலோ அல்லது ஒரு தனி மதத்தவராலோ கிடைத்தது என்று கூறினால், அது பச்சப் பொய்யாகவே தான் இருக்க முடியும். வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல், இந்திய சுதந்திரத்திற்கு அடித்தளமும், பொருள் வசதியும் அளித்தவர்களில் இஸ்லாமியர்களே முதல் இடம் வகிப்பார்கள். இதில் வரலாற்றில் வெளிவந்தது சில பெயர்கள், மறைக்கப்பட்டதோ பல பெயர்கள்.

இவ்வீரமிகு போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும் தங்கள் வீரத்தை, உயிர் தியாகத்தை, அறிவு பலத்தை பயன்படுத்தினார்கள் என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

இந்த திருநாட்டில் உள்ள மக்களும், சமுதாயமும் சுதந்திரமாக மேலை நாட்டவரின் அடிமை தளத்தில் இருந்து மீட்டெடுக்க போராடிய வீரமிக்க முஸ்லிம் சமூகப் பெண்களின் வரலாற்றை ஒரு குறுகிய தொகுப்பாக இங்கு காணப் போகிறோம்.

#பேகம்_ஹஜ்ரத்_மஹல்-
இவர் ஒத் மாநிலத்தின் ராணி, நவாப் வாசித் அலி ஷாவின் மனைவியுமாவர். ஒத் என்பது இப்போது உள்ள உத்திர பிரதேச மாநிலம் ஆகும். இந்தியா பிரிடிஷ் காரர்களால் அடிமை பட்டுக் கிடந்த காலத்தில், அவர்களின் அடிமை தளத்தில் முழு மாநிலமும் உறைந்த நிலையில் இருந்த பொழுது துணிந்து எழுந்து இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர்.

பேகம் என்பது இவரது பெயர், “ஹஜ்ரத் மஹல்” என்பது மற்றவர்களால் போற்றி வழங்கப்பட்ட பெயர். அம்மாநிலத்தை ஆண்டு கொண்டு ராஜாவாகிய அவரது கணவரை பிரிடிஷ்காரர்கள் கொல்கத்தாவுக்கு நாடு கடத்திய பிறகு, அம்மாநிலத்தையே தன் கையில் எடுத்து ஆண்டவர். அம்மாநிலத்தை காக்க தன்னுடைய மகன் பிரிஜிஸ் காதரை மன்னனாக்கிவிட்டு, நாட்டை காப்பதற்காக அவர் சுதந்திர போராட்டத்தில் களம் இறங்கினார்.

இந்தியாவின் முதலாம் உலக போரின் போது முக்கிய பெறும் தலைவர்களுடன் இணைந்து பல சாதனைகளை செய்து உள்ளார். ஒரு சமயம் பிரிட்டிஷ் தலைவர்களில் ஒருவரான சர் ஹென்றி லாரன்ஸ் என்பவரையும், அவரை சுற்றி இருந்த மற்றும் சில அதிகாரிகளையும் வளைத்து பிடித்து ஒரு தனி பெண்மணியாக எதிர் கொண்டு, அவர்களுடன் நடந்த போராட்டத்தில் பேகம் ஹஜ்ரத் மஹல் சர் ஹென்றி லாரன்ஷை தன் கையால் சுட்டு வீழ்த்தினார்.

பின்னர் பிரிட்டிஷ்காரர்களின் சார்பில் ஜெனரல் ஹவ்லாக் என்பவரின் கண்காணிப்பில் மீண்டும் அம்மாநிலத்தை கைப்பற்ற முயன்று பெரும் தோல்வியை தழுவினார்கள். இறுதியில் சர் கேம்பால் தலைமையில் லக்னவை மீண்டும் பிரிட்ஷ்காரர்களே கைபற்றினர். இந்த சூழ்நிலையில் பேகம் ஹஜ்ரத் மஹல் பிரிட்ஷ்காரர்களால் பின் வாங்கிக் கொள்ளும் படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் வீரப் பெண்மணியான அவரோ இவர்கள் கொடுக்கும் “பொது மன்னிப்பில்” வெளி வந்து மீண்டும் இவர்களின் அடிமைத்தனத்திற்கு ஆளாவதை விட இங்கு இருந்து இடம் பெயர்வது மேல், என்று முடிவு எடுத்த துணிச்சல் மிக்க பெண்மணி.

#அஜிஜன்-
இவரை என்னவென்று புகழ்வது, தமிழ் அகராதியில் இத்துணை தைரியமிக்க மகத்தான பெண்ணுக்கு என்ன வார்த்தை உள்ளது என்றால் கிடைக்குமா என்று தெரியவில்லை தைரியத்தை தன் இரத்தமாக கொண்டு வாழ்ந்தவர். லக்னோவில் பிறந்த இவர் 1832-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நானா ஸாஹிப் அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்து மக்களும் ஒன்றினைந்து போரடா வேண்டி, இந்து முஸ்லிம் மக்களை ஒற்றுமைக்காக அழைத்த போது நாட்டிற்காக இவர் வீட்டை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்.

தன் ஒருத்தியின் வாழ்க்கை பல பேருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தவர். பெண்கள் அனைவரையும் போருக்கு தயார்படுத்தியவர், பெண்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்த கற்றுக் கொடுத்தவர். பிரிட்ஷ்க்காரர்களின் ரகசியங்களை ஒன்று திரட்டி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அனுப்புவராக பணி புரிந்தவர். இறுதியாக பிரிட்டிஷ் அரசாங்கம் இவர்களை சிறை பிடித்த போது இவர்களுக்கு எதிராக செயல்பட்டதை துணிச்சலோடு ஒப்புக்கொண்டு, பிரிட்டிஷாரின் மன்னிப்பை ஏற்க மறுத்து, உயிர் தியாகம் செய்வதே மேல் என்று முழக்கமிட்ட வீர மங்கை.

#பி_அம்மா (அபாடி பேகம்)
இந்தியாவை பிரிட்டிஷ்காரர்கள் கைபற்றிய போது, மிக துணிந்து போராடிய பெண்மணிகளில் இவரும் ஒருவர். இவருடைய மகன் முகமது அலி 1921-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் பொது மன்னிப்பில் சிறையை விட்டு வெளியே வருவதாக கேள்விபட்ட பி அம்மா உரைத்த பதில், “முஹம்மது அலி வெறும் சாதாரண மனிதன் அல்ல, அவன் இஸ்லாத்தின் மகன், அவனால் ஒரு போதும் மற்றவர்கள் கொடுக்கும் மன்னிப்பு பிச்சையில் வருவதை சிந்திக்க முடியாது. ஒரு வேலை அவன் அதை விரும்பினாலும் இந்த வயது முதிர்ந்த தாயின் கைகள் பலம் இழந்து கிடந்தாலும் அவனை எதிர் கொள்ள இது பலம் பெறும்” என்று உரைத்தவர்.

அவர் அயல் நாட்டின் பிடியில் இருந்து தன் தாய்நாட்டை காப்பற்ற அயராது உழைத்தவர். சுதந்திரத்திற்காக போராடியவர்களுடன் மிக துணிந்து செயல்பட்டவர். அவர்கள் அயல் நாட்டின் ஆடைகளை அணிவதை தவிர்த்து மற்றவர்களையும் காதி துணியை அணிய வைக்க முயற்சித்தவர். இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பெரிதும் போராடியவர், இத்துணை போராட்டத்திலும் தன்னுடைய ஈமானை ஒருபோதும் தளர விடாதவர்.

#ஜுபைதா_தாவூதி-
இவர்கள் மௌலான ஷாபி தாவூதி அவர்களின் மனைவி, பீகாரை சேர்ந்தவர். பிரிட்டிஷ்க்கு எதிராக “துணிச்சலை” தங்கள் ஆடையாக உடுத்தி செயல்பட்டவர். மேலை நாட்டவர்களால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை ஒன்று திரட்டி பிரிட்டிஷ் காரர்களுக்கு முன் தன் எதிரித்துவத்தை காட்ட தீ வைத்து கொளுத்தியவர். பிரிடிஷ்க்காரர்களுக்கு எதிராக நடந்த அனைத்து கூட்டங்களிலும் பங்கெடுத்து, மற்ற பெண்ககளுக்கும் துணிச்சலை வளர்க்க தன்னை முன் மாதிரியாக செயல்படுத்திக் கொண்டவர்.

#சதாத்_பனோ_கிச்லேவ்-
இவர் பஞ்சாபை சேர்ந்தவர். மற்றவர்களை ஊக்குவிப்பதற்காக சுதந்திர போராட்டத்திற்காக பல கவிதைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியவர். சாதாரண பெண்மணியாக இருக்கும் நாம் நம் கணவர் சத்தியத்தின் பாதையில் போராடியோ அல்லது இறை நேர்மைக்காகவோ சிறையில் அடைக்கப்பட்டார் என்று கேள்வி பட்டால் அழுது, ஆர்ப்பாட்டம் செய்து நாம் வருந்துவதோடு அல்லாமல் நம் குழந்தை, பெற்றோர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி, தனிமையில் வீழச் செய்வோம்.

1920-ஆம் ஆண்டு சதாத் பனோ கிச்லேவ் தன் கணவர் டாக்டர்.கிச்லேவ் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அவர் தெரிவித்தது என்ன தெரியுமா? “அவர் தன் நாட்டுக்காக கைது செய்யப்பட்டதை எண்ணி நான் மிகவும் பெருமை படுகிறேன், அவர் ஒருவரின் வாழ்க்கையை கொடுத்து ஆயிரம் பேரின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்” என்று ஒரு துளிக் கூட வருத்தம் கொள்ளாமல் பெருமிதம் கொண்டார். அந்த கண்ணியமிக்க பெண்மணி. இவர் அரசாங்கத்தின் அத்து மீறல்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக குரல் கொடுத்தவர், டாக்டர். கிச்லேவ்-ஆல் நிறுவப்பட்ட “ஷுவராஜ் ஆசிரமத்தை” தன் கணவனுக்கு பின் வழி நடத்தி சென்ற பெருமையை கொண்டவர்.

#ஜுலைகா_பேகம்-
இவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் மனைவியாவார், மிகவும் தைரியமிக்க பெண்மணி. சுதந்திர போராட்டத்தில் காந்தியாலும், நேருவாலும் மிகவும் மதிக்கத்தக்க, உன்னதமான மனிதன் அபுல் கலாம் ஆசாத்தை 1942-ல் கைது செய்யப்பட்ட போது, ஜுலைகா காந்திக்கு ஒரு கடிதம் எழுதுகிறார்.

அதில் “என் கணவர் ஒரு வருடம் சிறைத் தண்டனை மட்டுமே பெற்றுள்ளார். அவர் தன் நாட்டின் மீது வைத்து இருந்த பற்றுக்கு, அவருடைய பக்குவப்பட்ட மனதிற்கும் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் குறைந்த தண்டனையே, ஆனால் நியாயம் இன்னும் கிடைக்கவில்லை என்றும், இன்று முதல் இந்த வங்காளத்தின் முழு கிலாபாத் அமைப்பையும் நானே பொறுப்பேற்று நடத்துவேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தன் கணவனின் பொறுப்பை மிக எளிதாக தனதாக்கி கொண்டு தன்னுடைய பங்கையும் சுதந்திரத்திற்காக முழுமையாய் வெளிக்கொணர்ந்தவர்.

#ரஜியா_காத்தூன்-
பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நின்ற வங்க தேசத்தின் முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றவர், இதனால் அவர்களை கைது செய்து களப்பணி என்ற இடத்தில அடைத்து வைத்தனர். அவருடைய கடைசி மூச்சை அவர் அங்குதான் நீத்தார்.

மேலே குறிப்பட்டவர்களை தவிர நிசதுன்னிஷா பேகம், அக்பரி பேகம், அஷ்கரி பேகம், ஹபீபா, ரஹீமி, அமினா குரைஷி, பாத்திமா குரைஷி, அமினா தயப்ஜி, பேகம் சகினா லுக்மணி, சாபியா சாத், பேகம் குல்சூம் சயானி, அஸ்மத் அரா காத்துன், சுகரா காத்துன், பீபி அமதுள் இஸ்லாம், பாத்திமா இஸ்மாயில், சுல்தானா ஹயாத் அன்சாரி, ஹழ்ரா பேகம் மற்றும் ஜுஹரா அன்சாரி இவர்களில் பல பேர் சிறையில் இருந்தும் பல சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும் தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்கள். இவர்களின் மகத்தான போராட்டத்தாலும், வீரத்தாலும் இன்று நம் சுதந்திர இந்தியாவை காண முடிகிறது.

Engr. Sulthan

Monday, August 18, 2014

திடீர் புழுதிப் புயல்! அமீரகவாசிகள் மகிழ்ச்சி!!? (வீடியோ காட்சிகளுடன்)

  
அபுதாபி, முஸஃபா, ICAD 2 பகுதியில் அடித்த நேற்றைய புழுதிப் புயலின் கணொளி காட்சிகள் உங்கள் பார்வைக்காக!

தமிழகத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி என்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரே மாதிரி செய்தி வாசிப்பார்கள் அல்லவா, அதே தோரணையில் நமது தலைப்பையும் படித்துவிட்டு உள்ளே வருக!


நேற்று காலையிலிருந்து என்றுமில்லாத வகையில் வெயில் சுட்டெரித்து சோதனைக்குள்ளாக்கிய வேளையில், மாலையில் அமீரகத்தின் பல பகுதிகளிலும் திடீர் புழுதிப் புயல் அடித்து ஊரெல்லாம் ஒரே குப்பைமயமானது அதிலும் பாலைவனமும் நகரும் அற்ற ரெண்டும்கெட்டான் பகுதியில் வாழ்வோர் வாரியிறைக்கப்பட்ட பொடி மணலால் (அழுக்கு நிறைந்த தூசியால்) மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர் என்றாலும் அமீரகவாசிகளிடம் ஒரு மகிழ்ச்சி கோடிட்டது ஏன்?

கடந்த சுமார் நான்கு மாதங்களாக கடும் வெயிலால் தகித்த அமீரகத்தின் தட்பவெப்பத்தில் மாற்றம் வரப்போகிறது என்ற முன்னறிப்பே இந்த கடும் மணற்காற்று, செப்டம்பர் 15ந் தேதிக்கு மேல் கடும் வெப்பம், வெக்கையற்ற ஒரு சமநிலை சீதோஷ்ண நிலைக்கும் அதனை தொடர்ந்து குளிர் காலத்திற்கும் திரும்பவுள்ள அமீரகம் மீண்டும் இதுபோல் மீண்டும் ஒரு காற்றை மிக சமீபத்தில் சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது. 


நேற்றைய புழுதிப்புயலுக்குப்பின் அமீரகத்தின் ஒரு சில இடங்களில் தூரல் மழை விழுந்துள்ளன, இதன் மூலம் புயலால் ஏற்பட்ட புழுதி மண்டலம் அடங்கியுள்ளது.

நாம் வெளிநாட்டு வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு கஷ்டங்களில் ஒன்றான அமீரகத்தின் புழுதிப்புயலை பற்றி இவ்வாறு விவரித்து எழுத வேண்டிய அவசியமென்ன?

அறிந்தும் அறியாமலும் நாம் எத்தனையோ தவறு செய்கிறோம் அதிலொன்று நமது பிள்ளைகளின் மீது கொண்டுள்ள அளவுகடந்த பிரியம், தேவையான அனுபவமில்லாத நிலையில், நம்மில் பலர் நமது பிள்ளைகளுக்கு பைக் வாங்கிக் கொடுக்க, அவர்களும் கண் மண் தெரியாமல் பறந்து சென்று அடிக்கடி விபத்துக்குள்ளாவது அதிரையின் அன்றாட செய்தியாக வருவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே.

இளமையை வெளிநாடுகளில் தொலைத்த நமக்காவது இறைவனின் கிருபையால் கை, கால்கள் நல்ல முறையில் இருக்கிறது பொருளாதாரத்தை திரட்டிக் கொள்ளதொரு வாய்ப்பாக ஆனால் நமது பொறுப்பற்ற தனத்தால் நமது பிள்ளைகள் விபத்தால் கை, கால்களை இழக்க நேரிட்டால்...? எனவே, இதுபோன்ற பல்வேறு கஷ்டங்களுக்கிடையே திரட்டும் பொருளாதாரம் நமது குடும்பத்திற்கு குழி பறிக்கும் ஒன்றாக அமைந்து விடக்கூடாது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் எம்பெண்களின் வீண் ஆடம்பரத்தையே திட்டுவது?

(எதை கொண்டு வந்து எதில் முடிச்சுப் போடுகிறேன் என திட்டாதீர்கள், புழுதிப் புயலை ஒரு செய்தியாக தர வேண்டும் என நினைத்த பொழுது இதையும் சேர்த்து பயனுள்ள செய்தியாக தரலாமே என்று என் மனம் நாடியது).

அதிரைஅமீன்

Wednesday, August 13, 2014

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களின் நிகழ்ச்சிகள் - ஓர் செய்தித் தொகுப்பு

கடந்த வாரம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்திருந்த மார்க்க அறிஞரும் உளவியல் ஆலோசகருமான அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நாடு திரும்பினார்கள்.

முதலாவதாக, 03.08.2014 நெல்லை ஏர்வாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று 'இஸ்லாத்தின் பார்வையில் பெண்களின் பிரச்சனைகள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்கள்.

தொடர்ந்து, 04.08.2014 அன்று தஞ்சை மாவட்டம் அதிரையில் உள்ள AL மெட்ரிக் பள்ளி ஆசிரியைகள் மற்றும் அலுவலர்களுக்கு 'மாணவர்களை கையாள்வது' குறித்து உளவியல் வகுப்பை நடத்தினார்.

05.08.2014 அன்று அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில், பிலால் நகரில் 'நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்' எனும் தலைப்பில் விழிப்புணர்வு உரையாற்றினார்.

06.08.2014 அன்று காலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் அமைந்துள்ள 'அல்மஹா பெண்கள் அரபிக் கலலூரியில்' 'இஸ்லாத்தின் பார்வையில் சூனியம்' என்ற தலைப்பில் உரையாற்றினார் தொடர்ந்து மாணவிகளின் சூனியம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.



06.08.2014 அன்று மாலை மதுக்கூரில் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான நிகழ்ச்சியில் 'இஸ்லாமிய குடும்பம்' என்ற தலைப்பில் உரையாற்றினார். நிகழ்ச்சி பெண்களின் ஆர்வத்தால் இஷா வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது.





07.08.2014 அன்று மாலை கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள திருவிதாங்கோடு முஸ்லீம் கலை கல்லூரி மாணவிகள் மத்தியில் 'மூளையின் சிறப்பும் - ஞபாக சக்தியை அதிகரிக்கும் வழிகளும்' என்ற தலைப்பில் அறிவியல் புல மாணவிகள் மத்தியில் உளவியல் வகுப்பெடுத்தார்.


08.08.2014 அன்று மீண்டும் அதே முஸ்லீம் கலை கல்லூரியின் கலைப்பிரிவு மாணவிகள் மத்தியில் 'மன அழுத்தத்தை (டென்ஷனை) குறைப்பது எவ்வாறு?' என்ற தலைப்பில் உளவியல் பாடம் நடத்தினார். 

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் இணைத்து நடத்தப்பட்ட இவ்விரு நிகழ்வுகளிலும் பிற மதத்தை சேர்ந்த சகோதரிகளே அதிகளவில் மிக ஆர்வமுடன் பங்கேற்று பயனடைந்தனர்.


மீண்டும் 08.08.2014 இரவு அன்று நெல்லை மேலப்பாளயம் நகரில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் 'பெண்களின் பிரச்சணைகளும் இஸ்லாமிய தீர்வும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

09.09.2014 அன்று காலை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில், புதிதாக இஸ்லாத்தை தழுவிய ஆண்களுக்கு மத்தியில் 'ஈமானை அதிகரிப்பது எவ்வாறு?' என்றும் தொடர்ந்து இஸ்லாத்தை தழுவிய பெண்களுக்கு 'ஈமானின் சுவை' என்ற தலைப்பிலும் சிறப்பு தனித்தனி வகுப்புக்களை நடத்தினார்.

அனைத்து நிகழ்ச்சிகளின் இறுதியிலும் பிரத்தியேகமான நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இன்ஷா அல்லாஹ், அதிரை மற்றும் மதுக்கூர் நிகழ்ச்சிகளின் வீடியோ பதிவுகள் விரைவில் பதிவேற்றப்படும்.

தொகுப்பு: அதிரைஅமீன்

Saturday, August 9, 2014

பர்துபையில் நேற்று (08.08.14) ஏமாந்த கதை

எத்தனையோ வித பிராடுகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், சந்தித்திருப்பீர்கள் அப்படியான ஒரு நூதன ஏமாற்றுப் பேர்வழிகள் குறித்து எச்சரிப்பதே நோக்கம்.

நேற்று காலை பர்துபை பஸ் நிலையம் அருகிலுள்ள கிளினிக்கில் கண்ணுக்கு மருத்துவம் பார்க்கச் சென்ற எனது நண்பர் கூட்டுக்களவானிகளிடம் தலைமுடிக்கு மருந்து வாங்கி ஏமாந்த விதம் பற்றி... சொல்கிறேன் கேளுங்கள்!

தலை முடியுதிர் காலத்தில் இருக்கின்றவர்கள் அல்லது சொட்டையாய் போனவர்கள் அல்லது இளம் நரைக்கு உள்ளானவர்கள் மீண்டும் எப்படியாவது பழைய கரு கரு முடி வளர்ந்து விடாதா என ஏங்குவது இயல்பு அதற்காக அவர்கள் மார்க்கெட்டில் உலா வரும் எண்ணற்ற போலி மருந்துகளை எவ்வளவு விலை கொடுத்தாவது வாங்கி ஏமாறுவதும் வெளியே சொல்ல முடியா வெட்கம்.

இளஞ்சொட்டையும் இளம் நரையுமாக வந்து கொண்டிருந்த என் நண்பரை பேச்சுக் கொடுத்து மடக்கிய ஒரு நீண்ட தாடியுடன் தொப்பி, ஜூப்பா அணிந்த ஆசாமி நரையை பற்றி யதார்த்தமாக விசாரிப்பது போல் விசாரித்துள்ளார் பின்பு அவருடைய முடி நிறைந்த கருமையான தலையை காட்டி நானும் உன்னைப் போல் தான் இருந்தேன் 'நாட்டு மருந்து வாங்கி தேய்த்தேன் 15 நாட்களில் இப்படி ஆகிவிட்டது' அள்ளி விட்டுள்ளார். தோற்றத்தையும் அறிவுரையையும் பார்த்து நம்பித் தொலைத்த நண்பர் அந்த மருந்து எங்கே கிடைக்கும் என யதார்த்தமாக கேட்க..

இது தான் குரோசரியில் வாங்கிய ஆயில்கள்

ஜுப்பா ஆசாமி ரொம்ப நேர்மையா... நம்ம ஆளா கையோட கூட்டிக்கொண்டு போய் ஒரு குரோசரி கடையில் 10ம் 10ம் இருபது திர்ஹத்திற்கு ரெண்டு எண்ணெய் பாட்டிலை வாங்கி கொடுத்திருக்காரு... இருங்க, இருங்க இன்னும் கதை முடியல...

அதற்கப்புறம் அந்த ஜூப்பா 'வாயில நொழயாத' ரெண்டு மூணு இந்திப்பேர சொல்லி இந்த மூலிகை பொடிகளை வாங்கி இந்த எண்ணெயில கலந்து தேச்சுகிட்டு வாங்கன்னு அப்புராணியா மூஞ்சவச்சுக்கிட்டு பீலா விட அசந்து போன நம்ம நண்பரு 'ஜீ அந்த மருந்து கிடைக்கிற கடைய கொஞ்சம் காட்டி விடுங்களேன்னு' கேட்க, அடுத்தவங்களுக்கு உதவி செய்யிறதுக்கே பிறப்பெடுத்த அந்த ஜூப்பா ஒரு நாட்டு மருந்து கடைய காட்டிவிட்டுட்டு 'எஸ்' ஆயிருச்சு.

 டுபாக்கூர் மருந்து கலக்கிய எண்ணெய் பாட்டில்கள்

நாட்டு மருந்து கடைக்காரனும் ஏதோ ரெண்டு மூணு பொடிகளை மூக்குல திணிக்கிற அளவுக்கு வாங்கிட்டுப் போன 2 எண்ணெய் பாட்டிலில் கொட்டி கலந்து விட்டுட்டு எடு முன்னூறு திர்ஹத்தை என்று சொல்ல துபையில் அடிக்கிற வெயில்ல கூட அப்படி ஒரு மயக்கம் வராத குறையா தல சுத்திப் போயி தெண்டத்த அழுதுட்டு வந்தவரு, தெய்ரா பகுதியில இருக்கிற இன்னொரு நாட்டு மருந்து கடையில போயி அந்த ஜூப்பா சொன்ன மருந்த பத்தி விசாரிச்சா, அப்படி மருந்தே இல்லையாம்.

நீங்களாவது பரவாயில்லை 300 தான் தினமும் ஐநூறு ஆயிரம்னு இந்த கூட்டு களவானி கும்பல்களிடம் பலபேர் பணத்த இழக்குறாங்க என்கிற தகவலையும் சேர்த்து சொன்னாருங்க,

ஏமாந்த நம்ம நண்பரு அந்த ஜூப்பா ஆசாமிய கண்டிப்பா போலீஸ்ல புடிச்சி கொடுக்கணும்னு தீவிரமா இருக்காருங்க!

படிப்பினை:
பர்துபை பக்கம் குறிப்பா பஸ் ஸ்டேண்ட் பக்கம் போறவங்க கொஞ்சம் சூதனமா நடந்துக்குங்க! 

(இல்லாட்டி நம்மள மாதிரி முடி இருக்கும் போது சீவுனோம் இப்ப இல்லை, மசுறு போச்சின்னு அப்படியே விட்ருங்க, சந்தோஷம் தலையில இல்லைங்க மனசுலங்க!)

கூடுதல் எச்சரிக்கை:
இதே பர்துபை பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஏகப்பட்ட பாகிஸ்தானிகள் புதுப்புது பிராண்ட் மொபைல்களை இருநூறுக்கும் முன்னூறுக்கும் கூவி கூவி விற்பார்கள் வாங்க வேண்டாம் எல்லாம் டுபாக்கூருங்க!

Tuesday, August 5, 2014

அதிரையில் நடைபெற்ற மவ்லவி அப்துல் ஹமீது ஷரயி அவர்களின் இரு நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

ஏக இறைவனின் அருளால் இன்று (05.08.2014) அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞரும் உளவியல் மருத்துவருமான S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் கலந்து கொண்டு 'நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்' என்ற தலைப்பின் கீழ் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) உரையாற்றினார்கள்.



இன்றைக்கு யூத, நஸரானிக்களின் பிடியில் அறியாமல் சிக்குண்டு, அவர்களின் நடை, உடை , பாவனை மற்றும் அவர்களின் நம்பிக்கையில் நாமும் ஊரித்திளைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் மற்றும் அதன் அடிப்படை காரணிகாய் அமைந்துள்ள பல்துறை சமூக ஊடகங்களின் போக்கையும் பங்களிப்பையும் சுட்டி விவரித்ததார்.


இன்றைய நவீன கால தகவல் பரிமாற்ற சாதனங்களான பேஸ்புக், டிவிட்டர், மொபைல் போன், இன்டெர்நெட், டிவி, பத்திரிக்கை போன்ற விடயங்களில் இன்றைய இளைய சமுதாயம் மூழ்கிப்போய் நேரத்தை தொலைப்பதையும் மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களில் ஈடுபடுவதையும் சுட்டி விளக்கி இதுபோன்ற சாதனங்களை எவ்வாறு மார்க்கத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்வதற்காக பயன்படுத்த முடியும் என்பதையும், பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை சரியான வழியில் கண்காணித்து இஸ்லாமிய அடிப்படையில் வளர்ப்பதற்குரிய முறைகளையும் குர்அன் ஹதீஸ் ஒளியில் விளக்கினார்.

இறுதியாக, பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதில் ஒன்று ஜனாஸாவின் சட்டஙகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்வி நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) அமைப்பினர் இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை விரிவாக செய்திருந்தனர்

ALM பள்ளியில் நடைபெற்ற ஆசிரியைகளுக்கான உளவியல் பயிற்சி

04.08.2014 திங்கள் அன்று மாலை ALM பள்ளியின் ஏற்பாட்டின் கீழ் அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியைகள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கான உளவியல் ஆலோசணை முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞரும் உளவியல் அறிஞருமான S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள் கலந்து கொண்டு, மாணவமணிகள் ஆசிரியைகளுக்கிடையேயான உறவு, மாணவமணிகளை அவர்கள் பயிற்றுவிக்கும் போது கைகொள்ள வேண்டிய அணுகுமுறைகள், மாணவமணிகளை தேர்வுக்காக தயார் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என பல்வேறு உளவியல் ஆலோசணைகளை வழங்கினார்.

முகாமின் இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் குறிப்பாக மாற்றுமத ஆசிரியைகள் கூட மிகுந்த ஆர்வத்துடன் தங்களின் சந்தேகங்களுக்கு பதில் பெற்றுச் சென்றனர்.

இம்முகாம் சிறப்புடன் நடைபெற அதிரை தாருத் தவ்ஹீத் ஒத்துழைப்புடன் சிறப்பு ஏற்பாடுகளை ALM பள்ளியின் தாளாளர் அப்துல் ரஜாக் அவர்கள் செய்திருந்தார்கள்.

06.08.2014 அன்று மதுக்கூர் நகரில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்ஷா அல்லாஹ், நாளை 06.08.2014 புதன்கிழமை அஸருக்குப்பின் (மாலை சுமார் 4.30 அளவில்) மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளையின் (MTCT) சார்பாக பெண்களுக்கான சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

சிறப்புரை
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான
S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

தலைப்பு
இஸ்லாமிய குடும்பம்

இடம்
NMS. அப்துல் காசிம் அவர்கள் இல்லம், 
சூரியத் தோட்டம், 
மதுக்கூர்

நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்

பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள வாரீர் என அன்புடன் அழைக்கிறது.

மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை (MTCT)

Monday, August 4, 2014

05.08.2014 - அதிரையில் இன்று அஸருக்குப்பின் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ், (05.08.2014 செவ்வாய்கிழமை) இன்று மாலை அஸர் தொழுகைக்குப் பின் அதிரை தாருத் தவ்ஹீத் ஏற்பாட்டில் பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சி மையத்தில் (ITC) சிறப்பு மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.


சிறப்புரை: 
இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள உளவியல் அறிஞரும் மவ்லவியுமான
 S.M. அப்துல் ஹமீது ஷரயி அவர்கள்

தலைப்பு: 
நவீன சாதனங்களால் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பு: 
சொற்பொழிவின் நிறைவாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும்.

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் நடைபெறயிருக்கின்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நற்பயன் அடைய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது.

அதிரை தாருத் தவ்ஹீத் - ADT
கடைத்தெரு (கிழக்கு), அதிரை