உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, March 2, 2012

ஆமா, இவரு பெரிய விஞ்ஞானி!

தன்னை பார்த்து ஏளனமாக சொல்லப்பட்ட மேற்படி தலைப்பையும் தாண்டி 'ஆமாம், இவர் நல்ல மனிதர்' என்ற நிலையில் நம்மை விட்டும் கடந்த வருடம் மறைந்துவிட்ட KSM முஹம்மது இஸ்மாயில் அவர்களை குறித்த ஒரு சிறிய நினைவலை.

நாங்கள் அறிந்து மேலத்தெருவிலிருந்து முதன்முதலில் SFO(Social Forest Officer), Acting Deputy BDO-வாக அரசாங்க உத்தியோகம் பார்த்தவர். முறைகேடாக தானும் சம்பாதிக்காமல் மற்றவர்களையும் சம்பாதிக்கவிடாதவர் (பிழைக்கத் தெரியாதவர்) என்று சக அலுவலர்கள் மத்தியில் சிறப்புப் பெயர் பெற்றவர்.

விருப்ப ஓய்வுக்குப்பின்னும் வீட்டோடு முடங்கிவிடாமல் அதிரை பைத்துல்மால், தேசிய லீக், மேலத்தெரு சங்கம், அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல் நிர்வாகம் என பறந்த தேனீ.

அதிலும் தன் இறப்புக்கு முன், அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசலுக்காக நிலம் வாங்குதல், கட்டுமானம், நிர்வாகம் என அனைத்து வகையிலும் தான் முறையாக பாரமரித்து வந்த பள்ளியின் கணக்கு வழக்குகளை முறைப்படி ஒப்படைத்த நம் சம காலத்திய அதிரையின் ஒரே நேர்மையாளர். இறுதி மூச்சு வரை உண்மையை மட்டுமே எங்கும் பேசியதால் இயற்கையான எதிர்ப்புகளின் சொந்தக்காரர். தன்னை எதிரியாக பாவித்த தெருத்தலைவர்களை கூட முகத்துக்கு முகம் மட்டுமே சந்தித்தவர், அதே தலைவர்களை சகோதர வாஞ்சையுடன் தெருவின் நன்மைக்காக மீண்டும் மீண்டும் வலியச்சென்று சந்திக்கத் தயங்காதவர்.

எங்கள் நட்பு வட்டாரத்தால் இஸ்மாயில் மாமா என அன்புடன் அழைக்கப்பட்டவர், தன் இரத்த சொந்த பந்தங்கள் மட்டுமின்றி மேலத்தெரு குடும்பங்களின் தலைமுறை கடந்த உறவுகளையும் புள்ளி பிசகாமல் எடுத்து சொல்லும் நினைவாற்றல் மிக்கவர்.


(செடியன்குளம் இந்த வருட மழைநீரால் நிரம்பிய போது எடுத்த படம்) நன்றி : சேக்கனா M. நிஜாம்

அதெல்லாம் சரி, தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது சகோதரர்களே! நமக்காக, நமது வாரிசுகளுக்காக ஒருமுறை தனி மனிதராக போராடியபோது கிடைத்த அவமரியாதை சொல் ஆனால் பொருந்தியதோ தெருகூடிச் செய்த பாவத்தில் பங்கில்லா நம் சந்ததிகளுக்கு.

குளிரிலும் இதமான, சுற்றிலும் பனை, தென்னை, மூங்கில், தாழை, கருவை, மருதம், அழிஞ்சி, வேப்பை என மரங்கள் நிறைந்த பசுஞ்சோலைக்கு நடுவே ஏரியின் பொழிவில் ஓர் குளம், ஒன்றாம் கரை, இரண்டாம் கரை, மூன்றாம் கரை, பெரிய கரை (ஐந்தாம் கரை), (பாதுகாப்பான) பெண்கள் கரை எனவும், காலை முதல் மாலை வரை பல்லாயிரக்கணக்கானோர் விரும்பி குளித்த நிலையிலும் தெளிவான தண்ணீராக வருட முழுவதும் நிறைந்திருந்த செடியன்குளம் காட்சிகளை உங்கள் மனத்திரையில் சற்றே ரீவைண்ட் செய்து பாருங்கள், நம் சந்ததிகள் நிரந்தரமாய் இழந்துவிட்ட அருமை புரிகிறதா?

சில வருடங்களுக்கு முன், ஜூம்ஆ பள்ளியில் செடியன்குளத்தை புல்டோசர் இயந்திரம் மூலம் ஆழப்படுத்த, சுத்தம் செய்ய ஒரு ஆலோசணை நடைபெறுகிறது. விஷயத்தை கேள்விப்பட்ட KSM இஸ்மாயில் மாமா அவர்கள் அழைப்பின்றி விரைந்தோடுகின்றார். புல்டோசர் வேண்டாம் என மன்றாடுகிறார், வேண்டுமானால் குளத்தின் மத்தியில் உரையும் சேற்றை அப்புறப்படுத்த மட்டும் புல்டோசரை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கெஞ்சுகிறார்.

காரணம், அழுக்கை உண்டு நீரை சுத்தம் செய்யும் வேலம் பாசிகளை ஒருமுறை அடியோடு அப்புறப்படுத்தினால் மீண்டும் அதே இடத்தில் வளரச் செய்ய இயலாது. புல்டோசர் மூலம் ஆழப்படுத்தினால் தண்ணீரை சுத்தப்படுத்தும் பாசிகளும் குளத்து மண்ணுள் கலந்திருக்கும் பாசியின் விதைகளும் அப்புறப்படுத்தப்பட்டுவிடும், கரைகள் மறைந்துவிடும், மரங்கள் அழிந்துவிடும் இதனால் தண்ணீர் கெட்டுவிடும் என சுற்றுச்சூழலை அனுபவத்தில் படித்த மேதை பதறுகிறார் அப்போது குழுமியிருந்தோரில் ஒரு சில கருத்துக் குருடர்கள் வழங்கிய பட்டம் தான் 'ஆமா! இவரு பெரிய விஞ்ஞானி'

மீன் வளர்ப்பு மற்றும் மண் வளத்தை சுரண்டுவதன் மூலம் வரும் லாபத்தை மட்டுமே பார்த்தவர்களால் புல்டோசர் கொண்டு அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்டன. இன்று செடியன்குளம் என்பது பாசியில்லா, கரைகளில்லா, மரங்களில்லா, தண்ணீர் வரத்திற்கு வழியற்ற, குளிக்க லாயக்கற்ற, நாதியற்ற, அசுத்த நீர் தேங்கியுள்ளதோர் பிரமாண்ட பள்ளம்.

இது மழை நீரால் வருடந்தொறும் ஒருமுறை நிரம்பும் மீண்டும் இருமாதங்களுக்குள் நாற ஆரம்பித்துவிடும், தானாக நாற தாமதித்தாலும் மீன்களின் இரட்சகர்கள் நாறவைத்துவிடுவார்கள்.

நமதூர் CMP வாய்க்கால் நீர் வரத்தின்றி தூர்ந்தது போலவே CMP லைனிலிருந்து தென்னந்தோப்புகள் வழியாக செடியன்குளத்திற்கு தண்ணீர் வந்த பாதைகளின் மேல் மார்க்கத்தற்கு மாற்றமாய் மகளுக்கு சீதனம் கொடுக்க காங்க்ரீட் புதர்காடுகள் வேறு மண்டிவிட்டன.

நமக்காக நல்லுள்ளம் கொண்டு மறைந்த KSM இஸ்மாயில் மாமாவிற்காக நாமும் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கலாமே.

இங்கு நீச்சல் பழகி தான் சென்னையில் நான் பயின்ற பள்ளியில் நடந்த ஒரு நீச்சல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வெல்ல முடிந்தது என்ற நன்றியுடனும், நெஞ்சம் நிறைந்த வலியுடனும், சகோதரர் யாக்கூப் அவர்களின் தகவல் உதவியுடன்

அதிரை அமீன்

1 comment:

  1. சகோ. அமீன் அவர்களே,

    நல்ல ஒரு “நினைவூட்டல்”...............................!

    வாழ்த்துகள்........! தொடர்ந்து எழுதுங்கள்...............

    ஊரில் உள்ள அனைத்து மக்கள்களைக் குளிர வைக்கும் இக்குளம்........... முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் அடியில் உள்ள பகுதியிலிருந்து கசிந்துகொண்டிருக்கும் நீரால் அருகில் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கக்கூடிய மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கிக்கொண்டு இருப்பதைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் !

    ReplyDelete