உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, December 15, 2011

‘பித்அத்’களை எதிர்ப்பது பயங்கரவாதமா?


கான் பாகவி
முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவதுதிருமணநாள் கொண்டாடுவதுநினைவுநாள் அனுசரிப்பதுமுஹர்ரம் மாதத்தில் தீ மிதிப்பதுபஞ்சா எடுப்பதுஇறைச்சி கூடாது என நம்புவது,தர்ஹாக்களில் சந்தனக்கூடு தூக்குவதுசமாதிகளைச் சுற்றிவருவது,அங்கு குழந்தைகளை உருட்டிவிடுவதுசமாதிகளுக்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வதுகுழந்தைவரம் கேட்பதுதிருமண வரன் கேட்பதுகுழந்தைகளின் பிறந்தமுடி எடுத்து காணிக்கை செலுத்துவது,ஷைகுகள் மற்றும் பெரியவர்களின் கால்களைத் தொட்டுஅல்லது கால்களில் விழுந்து ஆசி கேட்பதுசிலவேளைகளில் அவர்களையே வணங்குவதுபெண்கள் ஷைகுகளின் கரம் பற்றி நல்லாசி பெறுவதுகத்னா (சுன்னத்) ஊர்வலம் நடத்துவதுதிருமணத்தில் பந்தல்கால் நடும் வைபவம்காதுகுத்து விழாமஞ்சள் நீராட்டு விழா,இறந்தவர்கள் பெயராலும் திருமணத்தை முன்னிட்டும் நடத்தப்படும் சில சடங்குகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாம் என்ன? இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்பு? இவையெல்லாம் நபிவழிகளா? குறைந்தபட்சம் மார்க்கம் இவற்றை அனுமதிக்கின்றதா? ‘பரக்கத்’ (வளம்) வேண்டி செய்யப்படும் இவற்றால் இறையருள் கிட்டுமா? அப்படி கிட்டும் என்றால், இறைவனோ இறைத்தூதரோ இறைத்தூதரின் அன்புத் தோழர்களோ சான்றோர்களோ யாராவது இவற்றைச் சொல்லியிருப்பார்களா? இல்லையா?
இதுபோன்ற கூத்துகளுக்கு மார்க்கத்தில் ஏதேனும் முன்மாதிரி இருக்க வேண்டுமா? இல்லையா? இவற்றைச் சொந்த விருப்பத்திற்காக -வாழையடி வாழையான ஒரு சம்பிரதாயத்திற்காக- பெண்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காகச் செய்கிறோம்; மார்க்கத்தின் பெயரால் அல்ல என்கிறீர்களா?
இந்தச் சடங்குகளால் நன்மை கிடைக்கும்; அல்லது ஆபத்து அகலும் என்று நம்புகிறீர்களா? இல்லையா?இந்த நம்பிக்கை, உங்களது ஏகஇறை நம்பிக்கைக்கு,இறைத்தூதர்மீது கொண்ட நம்பிக்கைக்கு, குர்ஆன்மீது கொண்ட நம்பிக்கைக்கு முரண்படுகிறதே! என்ன செய்வீர்கள்? அந்த நம்பிக்கையே இல்லை என்றாலும்,சடங்குகளுக்காகச் செலவழிக்கப்படும் பணம், நேரம்,உழைப்பு எல்லாம் வீண்தானே! இதற்கு மறுமையில் என்ன பதில் சொல்வீர்கள்?
ஆக, மார்க்கம் சொல்லாத, அல்லது மார்க்கத்தில் முன்மாதிரி இல்லாத ஒன்றை மார்க்கத்தின் பெயரால்,அல்லது நன்மையைக் கருதி உருவாக்குவதும் அதைக் கடைப்பிடிப்பதும்தான் ‘பித்அத்’ (அநாசாரம்) எனப்படுகிறது.
பித்அத் என்றால் என்ன?
‘பித்அத்’ எனும் அரபிச் சொல்லுக்கு, ‘முன்மாதிரியின்றி ஆரம்பிக்கப்பட்ட செயல்’ என்பது சொற்பொருளாகும். இஸ்லாமிய வழக்கில், மார்க்க ஆதாரமோ அடிப்படையோ இல்லாத செயலுக்கு‘பித்அத்’ என்பர். வணக்கவழிபாடுகள், மார்க்க அடையாளங்கள், மார்க்க விதிமுறைகள் ஆகியவற்றில் மக்களாக உருவாக்கும் நடைமுறைதான் பித்அத் எனப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்படும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள், சமாதிகளில் நடக்கும் அநாசாரங்கள், புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழுகைகள் மற்றும் நோன்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும். (புகாரீ)
மற்றொரு ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கின்றது: உரைகளில் சிறந்தது இறைமறை;நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறை;செயல்களிலேயே தீயது புதிதாக உருவாக்கப்படுவதுதான். புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்) ஒவ்வொன்றும் தவறான வழியாகும்; தவறான ஒவ்வொரு வழியும் நரகத்திற்குச் செல்லும். (முஸ்லிம், நஸயீ)
ஆக, ‘பித்அத்’ எனும் சொல்லுக்கு அநாசாரம், குருட்டு நம்பிக்கை, நவீன சித்தாந்தம் என்றெல்லாம் பொருள் செய்யலாம். இது எவ்வளவு பெரிய கேடானது என்பதற்கு நபிமொழிகளும் சான்றோரின் சொற்களும் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்,ஒவ்வொரு ‘பித்அத்’வாதியிடமிருந்தும் பாவமன்னிப்பை (தவ்பா) தடுத்துவிடுகிறான். (தப்ரானீ, ஷுஅபுல் ஈமான்)
ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு கூட்டம் தம் மார்க்க விஷயங்களில் அநாசாரம் ஒன்றை உருவாக்கினால், அதன் இடத்தை வகிக்கும் நபிவழியான சுன்னத்தை அல்லாஹ் அகற்றாமல் இருப்பதில்லை. பிறகு மறுமை நாள்வரை அந்த நபிவழி அவர்களிடம் திரும்பிவருவதே இல்லை. (தாரிமீ)
கப்றுகளில் சஜ்தா
அநாசாரங்களிலேயே மிகவும் கேடானது அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கு -மனிதருக்கோ சின்னத்திற்கோ கட்டடத்திற்கோ- ‘சஜ்தா’ எனும் சிரவணக்கம் செய்வதுதான்.
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: அல்லாஹ்வுக்கே சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்; (அவனையே) வழிபடுங்கள். (53:62)
அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (இராக்கிலுள்ள) ‘அல்ஹீரா’ எனும் ஊருக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள், தங்களிடையே இருந்த ஒரு மாவீரனுக்கு சஜ்தா செய்வதைக் கண்டேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்யப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்’’ என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன்.
நான் மதீனா திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் அந்த ஊரில் கண்டதைச் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சஜ்தா செய்வதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்களாயிற்றே?’’ என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் இறந்து அடக்கம் செய்யப்பட்டபின்) என் அடக்கத்தலம் அருகில் நீங்கள் செல்ல நேர்ந்தால், அதற்கு நீங்கள் சஜ்தா செய்துவிடுவீர்களா?’’ என்று வினவினார்கள். நான்‘இல்லை’ என்றேன்.
அப்போது நபியவர்கள், ‘‘அப்படிச் செய்துவிடாதீர்கள். (அதாவது நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்தபிறகும் எனக்கு சஜ்தா செய்ய வேண்டாம்.) ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு சஜ்தா செய்ய நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவனுக்கு அதைச் செய்யுமாறு மனைவிக்கு உத்தரவிட்டிருப்பேன். பெண்கள் தம் கணவன்மார்களுக்கு அந்த அளவுக்குக் கடமைப்பட்டுள்ளார்கள்’’என்று விளக்கினார்கள். (அபூதாவூத், ஹாகிம், தாரிமீ, தாரகுத்னீ, ஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சஜ்தா செய்த ஒட்டகம்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது. அதுதான் அவர்களின் தோட்டத்தில் நீர் இறைக்கும். ஒரு தடவை அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தது. நீர் இறைக்க மறுத்தது.
அந்த அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபியவர்கள் தம் தோழர்களிடம் ‘எழுந்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு, தோட்டம் வந்துசேர்ந்தார்கள். ஒட்டகம் ஓர் ஓரத்தில் நின்றிருக்க, அதை நோக்கி நபியவர்கள் நடந்தார்கள். தோட்ட உரிமையாளர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயாக மாறியிருக்கிறது. உங்கள்மீது பாய்ந்துவிடும் எனப் பயப்படுகிறோம்’’ என்று தடுத்தார்கள்.
ஆனால் நபியவர்கள், அதனால் எனக்கு எந்தத் தீங்கும் நேராது என்று சொல்லிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒட்டகம் கூர்ந்து பார்த்துவிட்டு, அவர்களை நோக்கி நேராக வந்து, அவர்களுக்கு முன்னால் அப்படியே சரிந்து சஜ்தா செய்தது. பின்னர் அதன் நெற்றியில் வருடிக்கொடுத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அது அடங்கிவிட்டது. தன் பணியைத் தொடங்கியது.
இக்காட்சியைக் கண்ட தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ இந்த அறிவற்ற விலங்கு உங்களுக்கு சஜ்தா செய்கிறது. நாங்கள் ஆறறிவு உள்ளவர்கள். உங்களுக்கு சஜ்தா செய்ய நாங்களே பொருத்தமானவர்கள்’’ என்றார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள்: எந்த மனிதரும் எந்த மனிதருக்கும் சஜ்தா செய்வது தகாது. அப்படித் தகும் என்றிருந்தால், பெண் தன் கணவனுக்கு சஜ்தா செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருப்பேன். அவனுக்கு அவள் அந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.
என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! கணவனின் பாதத்திலிருந்து தலைவரை கொப்புளம் இருந்து, அதில் சீழும் சலமும் வடிந்துகொண்டிருக்க, மனைவி வந்து அதைத் தன் நாக்கால் சுத்தம் செய்தாலும், கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை தீராது. (முஸ்னது அஹ்மத்)
என்ன செய்ய வேண்டும்?
அநாசாரங்களைத் தடுப்பதும், அநாசாரங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்வதும் கற்றறிந்தவர்களின் தலையாய கடமையாகும். அதை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற குருட்டு நம்பிக்கைகளுக்கும் தவறான செயல்முறைகளுக்கும் பரிந்துபேசுவதும் வக்காலத்து வாங்குவதும் கடுமையான குற்றமாகும்; பெரும்பாவமாகும். கற்றவர்கள் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது சாமானியர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துவிடும்; அவர்கள் அநாசாரங்களிலிருந்து மீள வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
ஒரு செயல் சரியா, தவறா என்ற சர்ச்சை எழுந்துவிட்டால் நாம் செய்ய வேண்டியது என்ன? இதோ அல்லாஹ்வே கூறுகின்றான்:
ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புகிறவர்களாயின், அதை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் விட்டுவிடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். (4:59)
அதாவது இறைமறையிடமும் இறைத்தூதரின் வழியிடமும் விட்டுவிட வேண்டும். அல்லாஹ்வோ அவன் தூதரோ என்ன சொல்கிறார்களோ அதையே தீர்வாக ஏற்க வேண்டும்.
மற்றொரு வசனம், ‘‘நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டாலும் அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது’’ (42:10) என்று கூறுகின்றது.
இவ்வாறிருக்க, இறைவசனத்திற்கும் நபிமொழிகளுக்கும் மனவிருப்பத்திற்கேற்ப விளக்கமளிப்பதும்,அவற்றை வளைத்து ஒடிப்பதும் எவ்வாறு தகும்?
இது பயங்கரவாதமா?

தாருல் உலூம் தேவ்பந்த் அரபிக் கல்லூரி
எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை என்னவென்றால், குருட்டு நம்பிக்கைகளையும் அநாசாரங்களையும் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களையெல்லாம் ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதுதான்.
இதற்கு இவர்கள் கையாளும் தந்திரம் என்னவென்றால், அநாசாரங்களைச் சாடுபவர்கள் வஹ்ஹாபிகள்; வஹ்ஹாபிகள் பயங்கரவாதிகள் என்ற சொத்தை வாதம்தான். அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் எல்லாரும் வஹ்ஹாபிகள் என்பது பொய்;வஹ்ஹாபிகள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்பதும் பொய்.
கடந்த மாதம் உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் நகரில் ஒரு மாநாடு நடந்தது. மாநாட்டின் பெயர்: சூஃபி மகா பஞ்சாயத்துக் கூட்டம். முக்கியப் பேச்சாளர்: மஷாயிக் வாரியத்தின் தலைவர். அவர் பேசியதுடன் மாநாட்டின் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்ட சில வரிகள்:
தேவ்பந்த் மதரசா, ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு, வஹ்ஹாபிஸம் எல்லாம் பயங்கரவாத இயக்கங்கள்.
இவர்களின் பிடியில் சிக்கியுள்ள பள்ளிவாசல்களையும் மதராசக்களையும் கைப்பற்ற வேண்டும்.
வக்ஃப் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.
காங்கிரஸ் கட்சியை நம்பக் கூடாது; தோற்கடிக்க வேண்டும். இதற்காக மஷாயிக் வாரியம் அரசியலில் குதிக்க வேண்டும்.

அகில இந்திய மஷாயிக் வாரியம், பத்திரிகையாளர் சந்திப்பு
இந்தக் கூட்டத்தின் கோஷங்களும் தீர்மானங்களும் இந்துத்துவா சக்திகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாகும். இவ்வாறு ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டு, ஒருவர்மீது ஒருவர் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டு, இன்னும் சொல்லப்போனால், ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தால்,இரு பக்கமும் அழியப்போவது ‘கலிமா’ சொன்ன முஸ்லிம்கள்தான்.
இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லை? அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் அல்லவா? மூடநம்பிக்கை, சமூகத்தீமை ஆகியவற்றைக் களைய பாடுபடுவோர் நாலு பேர் இருப்பதால்தான், சமுதாயம் சிறிதளவாவது மார்க்க வழியிலும் பகுத்தறிவு பாதையிலும் நடைபோட முடிகிறது.
உங்களுக்கு அநாசாரங்கள் பிடிக்கும் என்றால், அறிவால், வாதத்திறமையால், உண்மையால்,ஆதாரங்களால் நிரூபியுங்கள். அது முடியவில்லை என்பதற்காக பயங்கரவாத முத்திரை குத்துவதும் அபாண்டங்களைச் சுமத்துவதும்தான் நாகரிகமாக? அல்லது நீங்கள் சொல்லும் ஆன்மிகமா?
வெளியேற்றாதீர்கள்!
அதே நேரத்தில், பித்அத்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நிதானமிழந்து செயல்படுவோர் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பித்அத்களை எதிர்க்கும் சாக்கில் சமுதாயத்தில் பிளவை உண்டாக்குவதையும் முஸ்லிம்களையே இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுவதையும் இவர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
‘ஈமான்’ என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். பித்அத் செய்யும் ஒருவர், ஓரிறைக்கொள்கை, இணை கற்பிக்காமை, முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதான நம்பிக்கை முதலான அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருந்தால், அவரை எப்படி இஸ்லாத்திலிருந்து வெளியேற்ற முடியும்? இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி ‘காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால்,அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். (புகாரீ)
அதாவது காஃபிர் என்ற சொல்லுக்கு உண்மையிலேயே அவர் தகுதிபெற்றவராக இல்லை என்றால்,அச்சொல் சொன்னவரையே திருப்பித் தாக்கும்.
எனவே, பரப்புரை (தஃவா) வெறுப்பேற்றக்கூடியதாக இருக்கலாகாது; சிந்திக்கத் தூண்டக்கூடிய வகையில் நளினமானதாகப் பிரசாரம் அமையம் வேண்டும். புரிந்துகொள்வார்களா...?
 
- கான் பாகவி

என்றும் மாறா அன்புடன்...
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

No comments:

Post a Comment