உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, April 27, 2015

மறக்கப்பட்ட உயிர்த் தியாகம்! அந்த இளைஞன் யார்? அவன் பெயர் என்ன?

டிசம்பர் 19, 1927-ம் ஆண்டு.

அது ஒரு துயரமான நாள். என்னவோ தெரியவில்லை, இந்திய நாட்டுக்கும் டிசம்பருக்கும் ஏழாம் பொருத்தம்! ஒரு ஆண்டின் முடிவுதான் டிசம்பர் என்று நாம் நினைத்திருந்தோம். ஆனால், நம் நாட்டில் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள் முடிந்துபோனதும் இந்த மாதத்தில்தான்.

ஆழிப்பேரலை சுநாமியாகட்டும், ஜன்ம பூமி என்று சொல்லி வன்ம பூமியாக்கிய பாபர் பள்ளிவாசல் இடிப்பாகட்டும், அழிப்புக்காக இயற்கையும் மனிதனும் தேர்ந்தெடுத்துக்கொண்ட மாதமாக இருக்கிறது டிசம்பர். இதுபற்றி யாராவது ஆராய்ச்சி செய்வது நல்லது. அதை டிசம்பர் மாதம் தொடங்காமல் இருப்பது அவசியம்.

மேலே சொன்ன டிசம்பரில் நடந்தது என்ன?


குளிர்காலச் சூரியன் தாமதமாக உதித்தது அன்று. விடியல் நேரத்தில் ஃபைசாபாத் மாவட்டச் சிறையின் அதிகாரிகள் ஒரு இளைஞனின் உயிரை எடுப்பதற்கு ஆயத்தமாயினர். கயிறு, மணல் பைகள், இன்னபிறவெல்லாம் சரியாக உள்ளதா என்று தலைமைச் சிறை அதிகாரி வந்து கவனமாகப் பார்வையிட்டார். எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஏற்பாடுகளில் ஒரு குறையும் சொல்லமுடியாது. எல்லாவற்றையும் பார்வையிட்டபின் தனக்குக் கீழிருந்தவர்களை அழைத்து, ‘குற்றவாளியை இங்கே கொண்டு வாருங்கள்’ என்று உத்தரவிட்டார்.

ஒரு கைதியை அழைத்துவர பத்து ராணுவ வீரர்களோடு பாதுகாப்பாக அதிகாரிகள் சென்றனர். அன்றைக்கு சாக இருந்தவனின் சிறை அறைக்கதவு கடைசி முறையாக அவனுக்காகத் திறக்கப்பட்டது. கைதியோ சாதாரண ஆள் அல்ல. தேசபக்தன். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டவன். அவன் தன் இறுதி அழைப்புக்காகக் காத்திருந்தான். அழைப்பு வந்தவுடன், ‘எல்லாம் தயாராக உள்ளதா?’ என்று கேட்டான்.

அவன் இறப்பதற்குத் தயாராக இருந்தான் என்பதை அவனுடைய குரலின் உறுதி காட்டியது. அவன் சொன்னதைக் கேட்டவர்களுக்குத்தான் ஒருமாதிரியாகிப் போனது. கொஞ்சம் சிரமத்துடன் அதிகாரி, ‘ஆமாம், எல்லாம் தயாராக உள்ளது’ என்றார்! தான் ஓதிக்கொண்டிருந்த குர்’ஆனை அந்த இளைஞன் மூடி தன் கைகளில் வைத்துக்கொண்டான். எழுந்து நின்று, ‘போகலாம்’ என்றான்.

ஆறடி உயரம். அகலமான மார்பு. இரும்பு உடல். சிங்க நெஞ்சம். அவனுடைய தாடி அவனுக்கு மேலும் அழகு கூட்டியது. அவன் உதடுகளில் ஒரு புன்னகை எப்போதுமே இருக்கும். இப்போதும் அது இருந்தது. கைகளில் விலங்குடன் அந்த இளைஞன், ராணுவ வீரர்களுக்கு மத்தியில் மிடுக்காக நடந்துசென்று, தனக்காக தயாராக இருந்த தூக்குமேடைக்குச் சென்றான். அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர். தூக்கு மேடைக்கு அருகில் வந்தவுடன், இளைஞன் நடையைத் துரிதப்படுத்தினான். இரண்டே தாவலில் மேடைய அடைந்தான். விலங்குகளைக் கழற்றியதும், கையை நீட்டி தூக்குக் கயிற்றை தன்னை நோக்கி இழுத்து முத்தமிட்டான்.

தூக்குக் கயிறு அவனது கழுத்தைச் சுற்றியது. லிவரை அழுத்தியவுடன் அவன் நின்றுகொண்டிருந்த பலகை விலகியது. கீழே இருந்த குழிப்பகுதிக்குள் அவன் சென்றான். அவன் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. இறவாத இந்திய நாயகர்களின் வரிசையில் அவனும் சேர்ந்துகொண்டான்.

யார் அவன்? ஏன் அவனைக் கொன்றது ஆங்கிலேய அரசாங்கம்?

அவன் ஒரு கவிஞன். ஒரு புரட்சியாளன். இந்தியாவின் விடுதலைக்காகப் போரிட்டவன். உத்தரப் பிரதேசத்தில் இருந்த ஷாஜஹான்பூர் என்ற ஊரில் 1900-ல் அவன் பிறந்தான். மஹாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டங்களால் தூண்டப்பட்டான். எப்படியாவது இந்தியா, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற ஆசை. எனவே, அதே ஊரில் பிரபலமான விடுதலைப் போராளியாக இருந்த ராம்பிரசாத் என்பவரோடு சேர்ந்து நாட்டுக்காக ரகசியமாகப் பணியாற்றினான்.

அவன் ராம்பிரசாத்தோடு சேர்ந்ததற்கு அதுமட்டும் காரணமல்ல. முக்கியமான காரணம், கவிதைதான்! ஆமாம். அவன் ‘வர்ஸி’, ‘ஹஸ்ரத்’ ஆகிய பெயர்களில் உருது மொழியில் கவிதைகள் எழுதினான். முஷாயிரா என்று சொல்லப்படும் உருது கவியரங்கங்களில் கலந்துகொண்டு பிரபலமானான். ராம்பிரசாத்தும் ஒரு கவிஞர். அவர் ‘பிஸ்மில்’ என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார். தன் அண்ணன் மூலமாகத்தான் பிஸ்மில் பற்றி அவனுக்குத் தெரியவந்தது. முதலில் தயங்கிய ராம்பிரசாத், பின்னர் ஒரு மூத்த சகோதரனைப்போல் அவனோடு பழகினார். கடைசிவரை.

ககோரி ரயில் கொள்ளை
தம் நடவடிக்கைகளுக்குப் போதிய பணமின்றி போராளிகள் கஷ்டப்பட்டனர். என்ன செய்யலாம் என்று யோசித்தனர். ஒரு குறிப்பிட்ட ரயிலில் அரசாங்கப் பணம் சென்றுகொண்டிருந்ததை ராம்பிரசாத் பார்த்தார். ஒருநாள், ஷாஜஹான்பூரில் இருந்து லக்னௌவுக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தபோது அதை அவர் கவனித்தார். பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டப்பட்டது. செயல்வீரர்களைக் கொண்ட கூட்டத்தில் திட்டம் விளக்கப்பட்டது. எல்லோரும் அதை வரவேற்றனர்.

ஆனால் அவன் மட்டும் எழுந்து நின்று, ‘நண்பர்களே, இது அவசர முடிவு. நம்முடைய பலம், அரசின் பலம் இரண்டையும் நாம் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். சாதாரணக் கொள்ளையில் இவ்வளவு பணம் கிடைப்பதில்லை. எனவே, கொஞ்சமாக பணம் காணாமல் போனால் அதை அரசு பெரிதாக எடுத்துக்கொள்ளாது. காவல் துறை பார்த்துக்கொள்ளட்டும் என்று இருந்துவிடும். ஆனால் அரசுக்குச் சொந்தமான பெரும் பணத்தை நாம் எடுக்கும்போது, அரசு யந்திரம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு நாம் தேடப்படுவோம். எப்படியும் பிடிபட்டுவிடுவோம். தண்டனையில் இருந்தும் தப்பிக்க முடியாது. நம் அமைப்பு அவ்வளவு உறுதியானதாக இன்னும் மாறவில்லை. எனவே இந்தத் திட்டம் வேண்டாம் என்று நினைக்கிறேன்’ என்று கூறினான்.

ஆனால் புரட்சியாளர்கள், உணர்ச்சியின் பிடியில் இருந்தனர். இளைஞன் சொன்னதன் பின்னால் இருந்த உண்மையை உணர அவர்களுக்கு அப்போது அவகாசமில்லை. நீண்ட விவாதத்துக்குப் பிறகு, திட்டத்தைச் செயல்படுத்தலாம் என்ற முடிவுக்கே அவர்கள் வந்தனர். மாற்றுக் கருத்து சொன்னாலும் அமைப்பின் முடிவுக்கு அவன் கட்டுப்பட்டான்.

ரயில், ககோரி என்ற ஊரில் வந்து நின்றது. அதுவாக நிற்கவில்லை. போராளிகள் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள். ஏன் ரயில் நின்றது, யார் நிறுத்தினார்கள் என்று விசாரிப்பதற்குள், தங்கள் காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டார்கள்.

ஆனால், பணம் இருந்த இரும்புப்பெட்டியை மற்ற போராளிகளால் உடைக்கவே முடியவில்லை. கடைசியில், அவன்தான் சம்மட்டி கொண்டு அடிமேல் அடிகொடுத்து அதை உடைத்து பணத்தை எடுக்க வழிகோலினான். அபரிமிதமான பணம் கிடைத்துவிட்டது.

ஆனால் ஒரு மாதம் கழித்து, அரசாங்கம் ஸ்காட்லாந்து யார்டு காவல் துறையின் உதவியுடன், ராம்பிரசாத்தையும் மற்றவர்களையும் கைது செய்தது. அவன் மட்டும் பிடிபடவில்லை. அவன் பிஹார் சென்று அங்கே ஒரு கிளர்க்காக வேலை பார்த்தான். பத்து மாதங்கள் ஓடிவிட்டன. அங்கே நடந்த முஷாயிராவில் கலந்துகொண்ட அவனுடைய கவித்திறனைக் கண்டு, முதலாளி அவன் சம்பளத்தைக்கூட உயர்த்தினார்! இந்தக் காலகட்டத்தில் ஹிந்தியும் பெங்காலியும் கற்றுக்கொண்டான்.

ஆனால், இந்தத் தலைமறைவு வாழ்க்கை அவனுக்கு சலிப்பூட்டியது. வெளிநாடு சென்று இந்திய விடுதலைப்போருக்கு ஆதரவு திரட்ட எண்ணினான். டெல்லி சென்று வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளைப் பற்றிய தகவல்களைத் திரட்டினான். தன் பள்ளிப்பருவ நண்பன் ஒருவனை அங்கு சந்தித்தான். அந்த நண்பன் இவனுக்கு சாப்பாடெல்லாம் வாங்கிக்கொடுத்து உபசரித்தான். இரவு 11 மணிக்கு மேல் தன் அறைக்குத் திரும்பிய இவனை போலீஸ் வந்து கைது செய்தது. விலைபோய்விட்ட பள்ளி நண்பனின் துரோகம்!

காவல் துறை அவனைத் தன் பக்கம் இழுக்க முயன்றது. வழக்கம்போல பிரித்தாளும் சூழ்ச்சிதான். தசத்துர் கான் என்ற ராணுவ அதிகாரியை அவனிடம் பேச அனுப்பியது. ‘ராம்பிரசாத் ஒரு ஹிந்து. ஹிந்துக்கள் அவர்களுடைய ராஜ்ஜியத்துக்காக போராடுகிறார்கள். நாம் எதற்காக அதில் கலந்துகொள்ள வேண்டும்?’ என்ற ரீதியில் அவனை மூளைச்சலவை செய்ய கான் முயன்றார். ஆனால், ‘கான் சாஹிப், ஆங்கிலேயர்களின் இந்தியாவைவிட, ஹிந்து இந்தியா மிகச்சிறந்ததாக இருக்கும்’ என்று கூறி அவர் வாயை அடைத்தான் அவன்.

தண்டனை


ராம்பிரசாத், ராஜேந்திர லஹரி, ரோஷன் சிங், நம் இளைஞன் நால்வருக்கும் தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. ராம்பிரசாத்தும் அவனும், ஒரே நாளில் வேறு வேறு சிறைகளில் தூக்கிலிடப்பட்டனர்.

    இறப்பு என்பது ஒருமுறைதான் வரும்
    அதைக்கண்டு ஏன் அஞ்சுகிறாய்?
    ஆங்கிலேயரின் கொடுங்கோலாட்சியில் நொந்துபோய் நாங்கள்
    ஃபைசாபாத் சிறையிலிருந்து நேராக
    சொர்க்கத்துக்கு நடந்து போகிறோம்
என்று கவிதை எழுதினான் நம் இளைஞன்!

‘நான் போனபிறகு சகோதரர்களும் நண்பர்களும் எனக்காக அழுவார்கள். ஆனால், நம் தாய்நாட்டை நேசிக்காமல், அதற்கு உண்மையாக இல்லாமல், அதைப்பற்றிய உணர்ச்சியற்றவர்களாக இருக்கிறார்களே என்பதற்காக நான் அழுகிறேன்’ என்கிறது அவனுடைய ஒரு கவிதை!

சிறையில் இருந்தபோதுகூட விடாமல் ஐவேளையும் தொழுகையை அவன் நிறைவேற்றினான். நோன்புகாலத்தில் நோன்பு பிடித்தான். தினமும் குர்’ஆன் ஓதும் பழக்கமும் அவனிடம் இருந்தது.

‘என் கைகளால் நான் யாரையும் கொல்லவில்லை. என் மீதான குற்றச்சாட்டு பொய்யானது. அல்லாஹ் எனக்கு நீதி வழங்குவான்’ என்று சொல்லிவிட்டு, ‘லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்’ என்று இறுதியாக இஸ்லாத்தின் மூலமந்திரமான கலிமாவை ஓதிவிட்டுத்தான் அவன் தூக்குக் கயிறுக்கு கழுத்தைக் கொடுத்தான்.

அந்த இளைஞன் யார்? அவன் பெயர் என்ன?

அஷ்ஃபாக்குல்லா கான்
அவன் பெயர் அஷ்ஃபாக்குல்லா கான். இந்திய விடுதலைப் போராட்டம் என்றால் ஒரு சில பெயர்கள் மட்டும்தான் நம் நினைவுக்கு வரும். ஏனெனில், அவை திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக்கொண்டே இருப்பதால். ஆனால், அறியப்பட வேண்டிய எத்தனையோ அஷ்ஃபாகுல்லா கான்களும் ராம்பிரசாத் பிஸ்மில்களும் இருக்கின்றனர். மறக்கப்பட்ட இவர்கள்தான், வரலாறு படைத்த விடுதலை வரலாற்றின் நாயகர்கள்.

By நாகூர் ரூமி

Thanks to News Source:
http://www.dinamani.com/junction/varalaaru-padaitha-varalaaru/2015/04/14/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE/article2762445.ece

No comments:

Post a Comment