அதிரை நியூஸின் அன்பான வாசகர்ககளுக்கு நமதூர் பிரபல எழுத்தாளார் இப்ராஹிம் அன்சாரி அவர்களால் தீட்டப்பட்ட இந்த தலையங்கத்தை வாசிக்கும் முன்பாக அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கொடூர விபத்துகளின் தொகுப்பை ஒரு முறை கீழ்கண்ட சுட்டியின் இணைப்பில் உள்ள பதிவுகளை வாசித்துக்கொள்ள வேண்டுகிறோம்.
'அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கொடூர விபத்துகளின் தொகுப்பு !'
'அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கொடூர விபத்துகளின் தொகுப்பு !'
ஈசிஆரில் ( E C R ) எந்நாளும் விபத்துக்கள் !
ஒரு காலத்தில் இராஜாமடம் வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை
அமைச்சராக இருந்த போது தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலை யிலிருந்து
நியாயமாக அதிராம்பட்டினம் வழியாக வரவேண்டிய சேது ரோட்டின் ரூட்டை மாற்றி
பட்டுக் கோட்டை வழியாக திசை திருப்பி பின் சேதுபாவா சத்திரத்தில் அதை
இணைக்கச் செய்தார் என்று கூறுவார்கள். இதனால் போக்குவரத்து வசதிகள்
இல்லாமையால் அதிராம்பட்டினம் பொருளாதார ரீதியில் வணிக வளர்ச்சி இல்லாத
ஊராகப் போய் பட்டுக் கோட்டையை சார்ந்தே நிற்கவேண்டிய நிலைமைக்கு ஆளானது.
அதன்பின் பல ஆண்டுகள் காத்திருந்த பிறகு இ சி ஆர் என்கிற நாடு தழுவிய
ப்ராஜக்ட் போடப்பட்டபோது அந்த சாலை அதிராம்பட்டினம் வழியாகச் செல்லும்
என்கிற செய்தி கேட்டு மகிழாத மனங்களே இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு காலத்தில் இராமநாதபுரம், கீழக்கரை போன்ற ஊர்களுக்குச்
செல்லவேண்டுமானால் காரைக்குடி எல்லாம் சுற்றி ஆறிலிருந்து எட்டு மணிநேரம்
செலவழித்த காலமெல்லாம் போய் மூன்று மணி நேரத்தில் ஆனந்தமாக கடற்கரைக்
காற்றை சுவாசித்துக் கொண்டே போகும் காலம் ஏற்பட்டுள்ளது. . கேட்க ஆளின்றி
கிடந்த இ சி ஆர் பகுதிகளை ஒட்டி இருந்த அநாதை நிலங்கள் எல்லாம் இன்று
இமாலய விலைக்கு ஏறி வீட்டு மனைபோட்டு விற்கப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி துறை முகத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் சென்னை வரை செல்ல
வேண்டுமானால் அவை அதிரை வழியாக செல்வது சிக்கனமாக முடியுமென்பதாலும்
திருவனந்தபுரம் பகுதிகள் வழியாக கேரளத்திலிருந்து தர்ஹா சுற்றுலா வரும்
பேருந்துகள் யாவும் அதிரையைக் கடந்தே செல்வதாலும் அரவமின்றிக் கிடந்த
அதிரைப் பகுதியில் அர்த்த ராத்திரியில் கூட வாகனங்கள் வரிசையாகச் செல்ல
ஆரம்பித்தன. இத்தகைய வாகன ஓட்டிகளும் அவற்றில் பயணிப்பவர்களும் அதிரையில்
வாகனங்களை நிறுத்துவதன் காரணமாக புதிய புதிய உணவு விடுதிகளும் கணிசமான
வியாபார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதையும் நாம் மறுக்க இயலாது. அத்துடன்
அதிரையின் திசைக்கொருபக்கம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல்
பங்குகளும் தோன்றி ஊரின் வளர்ச்சியைப் பார்க்க ஒருவகையில் மகிழ்வாகத்தான்
இருக்கிறது.
அதே நேரத்தில் ஊரிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் கூட ஏற்பட்டுள்ள
பொருளாதார வளர்ச்சியால் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வண்டிகளின்
எண்ணிக்கையும் கணக்கின்றிப் பெருத்துவிட்டன; இன்னும் பெருகி வருகின்றன.
அடுத்தவீட்டுக்குப் போவதானாலும் கூட ஆட்டோவைக் கூப்பிடும் கலாச்சாரம்
மேலாங்கி வருகிறது. படிக்கிற பிள்ளைகளும் வெளிநாடுகளில் இருந்து பத்து
நாள் விடுமுறையில் வருபவர்களும் கூட இரு சக்கர வாகனங்கள் வாங்கிப்
பயன்படுத்துவதை ஒரு பெருமையாகவும் கலாச்சாரமாகவுமாக ஆக்கிவிட்டார்கள்.
இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கையின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில்
உள்ளூருக்குள் செல்லும் சாலை வசதிகள் பெருகவில்லை என்பது அனைவரும் ஒப்புக்
கொள்ள வேண்டிய உண்மை.
அத்துடன் நெருக்கடியான நேரங்களில் சாலை ஓரங்களில் காய்கறி முதல் வடை,
வாடா, சுண்டல் விற்கும் கடைகளும் பெருகிவிட்டன. வேலையற்றவர்கள்
கூட்டமாகக் கூடி நின்று கொண்டு சாலைகளை மறைத்துக் கொண்டு வெட்டிப்
பேச்சுப் பேசும் இடங்களாகவும் சாலைகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில் நமது
ஊருக்கு மட்டுமென்று ஒரு மக்கள் தொகை கணக்கு எடுப்போமானால் ஒப்பிடும்போது,
ஒரு நபருக்கு ஒரு நாய் வீதம் தெருவில் அலைகின்றன. நாய்களுடன் போட்டி
போட்டுக் கொண்டு கட்டிப் போடவும் கவனிக்கவும் ஆளின்றி ஆடு மாடுகளும்
அலைந்து கொண்டு இருக்கின்றன. முன்பெல்லாம் இப்படி அத்துமீறி அலையும்
ஆடுமாடுகளை அடைக்க பழஞ்செட்டித் தெருவில் பவுண்டு இருந்தது. இப்போது
அந்தப் பவுண்டு ஒரு நினைவுச் சின்னமாகிவிட்டது. . போதாக்குறைக்கு
வீடுகட்டுபவர்கள் தங்களின் கட்டிடப் பொருள்களான செங்கல், ஜல்லி, மணல்
ஆகியவைகளை கொட்டி வைத்து சாலைகளை கணிசமாக ஆக்கிரமிக்கிறார்கள். சாலைகளில்
பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைகளும் . தங்களுக்குரிய பங்கை செவ்வனே
செய்து வருகின்றன. ஊரின் எல்லைகள் அனைத்திலும் கொடி கட்டிப் பறக்கும் சாராய
சாம்ராஜ்யமும் தனது கோர முகத்தை காட்டி வருகின்றன.
மிகவும் வேதனையான விஷயம் என்ன வென்றால் குழந்தைகளை இருசக்கர வாகனங்களின்
முன்னாள் நிற்கவைத்து அல்லது எரிபொருள் டாங்க் மீது உட்காரவைத்து
அவர்களிடம் வண்டியை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் சொல்லிக் கொடுப்பது
அல்லது ஹாரன் அடிக்கச் சொல்லிக் கொடுத்து மகிழ்வது போன்ற அற்ப சந்தோஷத்தின்
விலை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் சில சமயங்களின் அந்த இளம் பிஞ்சுகளின்
உயிராகவும் இருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பொதுவாக அதிரையில், குறிப்பாக இ சி ஆர் -
ல் ஒரு நாளைக்கு ஒரு விபத்தாவது நடந்து விடுகிறது. இங்கு தரப்பட்டுள்ள
இணைப்புக்களை இதய வலிமை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்.
இந்த விபத்துக்கள் பல நேரங்களில் கோர விபத்துக்களாகி ஒரு சில உயிர்களைப்
பலி கொண்டு விடுகின்றன; பலரை ஊனமுற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன . அண்மைக்
காலத்தில் பல வாழவேண்டிய இளைஞர்கள் சாலை விபத்துக்களில் அகால மரணத்தைத்
தழுவினார்கள்’ கை கால்களை இழந்தார்கள். வெளியூர்களில் இருந்து சுற்றுலா
வந்தவர்கள் குடும்பத்துடன் கோரமாக நடு ரோட்டில் நசுங்கிக் கிடந்தார்கள்.
இலட்சக் கணக்கான பணமதிப்புள்ள வாகனங்கள் குப்புறக் கவிழ்ந்து குப்பை மேடாக
காட்சி தந்தன.
ஒரு புறம் வளர்ச்சி! மறு புறம் அழிவு! இப்படி வளர்ச்சியும் தளர்ச்சியும்
போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஊரை சீரழிக்கவா புதிய புதிய போக்குவரத்து
வசதிகள் வேண்டுமென்று கேட்டோம்? இ சி ஆர் வந்த பிறகே இவ்வளாவு
விபத்துக்கள் என்றால் தவறு இ சி ஆரைக் கொண்டு வந்தவர்கள் மீதா ? அல்லது
அதைப் பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தி பரிதாபமாக சாகக் கூடாத நேரத்தில்
சாகத் தயாராகும் நம் மீதா ?
ஒரு பத்திரிகையில் படித்தேன்.
ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும்
பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், “ எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது
புறமாகச் செல்லும்” . இங்கிலாந்துக் காரர் சொன்னார், “ எங்கள் ஊரில் இடது
புறமாகச் செல்லும்” . இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், “
எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும் ”.
சாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது
போலாகிவிட்டது. . வாகனப் பயணத்தில் எப்போது எந்த ரூபத்தில் விபத்து
நடக்குமென்று அறியமுடியாத சூழல் நிலவுகிறது.
இந்திய சாலைகளில் மட்டுமே சுமார் மூன்று இலட்சம் விபத்துகள் வருடம் தோறும்
நிகழ்கின்றன. எண்பதாயிரம் உயிர்களைக் கொல்லும் இந்த சாலை விபத்துகள் மூலம்
ஆண்டுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகின்றது என்பது
அதிர்ச்சியளிக்கிறது. சாலைகளைப் பயன்படுத்துவோரின் அலட்சியமே தொன்னூறு
விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாகிறது என்று இந்தியாவிலும், உலக
அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில்
இத்தகைய சாலை விபத்துக்களில் அறுபத்தாறு சதவீதம் மதுவைக் குடித்து விட்டு
வண்டி ஒட்டுவதாலும் முப்பது சதவீதம் தொலைபேசியில் பேசிக் கொண்டு வண்டி
ஒட்டுவதாலும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
அனைவரும் யோசிக்க வேண்டும். ; சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சாலைபாதுகாப்பு விதிகள் சரியாகப் பயன் படுத்தப் படுகின்றனவா ? ஒரு
வண்டியில் அனுமதித்த அளவுக்கு மட்டும் ஆட்கள் ஏறிச் செல்கின்றனரா ? சாலை
ஓரங்களில் ஏன் இத்தனை ஆக்கிரமிப்புகள்? கைகளைக் கோர்த்துக் கொண்டு நடுச்
சாலைகளில் இரண்டு மூன்று இரு சக்கர வண்டிகளை இளைஞர்கள் கூக்குரலிட்டு
கும்மாளமிட்டுக் கொண்டு ஓட்டும்போது கரணம் தப்பினால் மரணம் என்பது
அவர்களுக்கு மறந்து போய்விட்டதா? இப்படிப்பட்ட இளைஞர்களின் கோரிக்கைக்கும்
கண்ணீருக்கும் பதில் கொடுத்து அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கித்தரும்
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்கும் சக்தியை இழந்துவிட்டார்களா ?
அல்லது பெற்றோரறி மதிக்கும் பழக்கம் மரணித்துவிட்டதா ? மறு உலகம் போவதற்கு
அதிவேகத்தில் செல்லும் இளைஞர்கள் இந்த உலகத்தில் உள்ள ஒரு இடத்துக்கு
சற்று தாமதமாகச் சென்றால் யார் குடி முழுகிவிடும் ?
வளரும் இளைஞர்களுக்கு இதன் மூலம் வைக்க விரும்பும் வேண்டுகோள் இவைதான்.
சாலை விதிகளை மதித்து உங்கள் உயிர்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள
உங்களுக்கே உதவிக் கொள்ளுங்கள். பிறப்பவர்கள் இறப்பது இயற்கை ஆனால் அந்த
இறப்பைத் தேடி நீங்களே வலியப் போக எத்தனிக்காதீர்கள்.. “ இளம் கன்று
பயமறியாது ” என்றும் “ கல்லைத் தின்றால் செறிக்கிற வயது “ என்றும் உங்களை
உசுப்பிவிடும் சில பழமொழிகளை உங்களைக் கெடுப்பதற்காகவே சொல்லி
வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை உணருங்கள். நில்! கவனி! செல்!
என்கிற புதிய பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். ! உங்களை நம்பி - நீங்கள்
ஆசைப்பட்டீர்கள் என்று உங்களுக்கு வாகனம் வாங்கித்தந்த உங்கள்
பெற்றவர்களின் கனவை உங்களின் சாலைவிதிகளை மீறிய போக்குகளால் தரைமட்டமாக்கி
விடாதீர்கள்.
உங்களது உற்சாகத்தை உங்கள் வண்டியின் ஆக்சிலேட்டரில் காட்டாதீர்கள் ;
உங்களின் மார்க் சீட்டுகளில் காட்டுங்கள். முக்கியமாக நீங்கள் ஓட்டும்
வண்டியின் பெட்ரோல் செலவை நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் செய்யவில்லை .
எங்கோ பாலைவனத்தில் கூலித் தொழிலாளியாக வியர்வை வடிக்கும் உங்கள் தகப்பனின்
வியர்வைத்துளிகளே உங்களின் வண்டிகளில் பெட்ரோலாக ஊற்றப்படுகிறது என்று
எண்ணிக் கொள்ளுங்கள். வெளியே போன நீங்கள் வீடு வந்து சேரும்வரை உங்களின்
தாய்மார்கள் இன்னொரு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்றும் எண்ணிக் கொள்ளுங்கள்.
காவல்துறை நண்பர்களின் கண்காணிப்பு சாலை விபத்துக்களைத் தடுப்பதில்
இன்றியமையாததாக இருக்கிறது. நிச்சயமாக இது அவர்களின் கடமை என்றாலும் கூட
நாமும் நினைவூட்ட வேண்டி இருக்கிறது. டாடா ஆஸ் போன்ற வாகனங்களில் கூட்டமாக
வேலையாட்களை ஏற்றிச் செல்வது, லோடு லாரிகளின் மீது ஏற்றப்பட்ட மூட்டைகள்
மீது லோடு மேன்கள் ஏறி உட்கார்ந்து செல்வது, இருவருக்கு அனுமதி
அளிக்கப்பட்ட இரு சக்கர வண்டிகளில் மூன்று நான்கு பேர்கள் ஏறிப் போவது,
ஆட்டோவில் ஓட்டுனருக்கு அருகில் இடைச் சொருகலாக ஒருக்கணித்து ஒருவர் உட்கார
அனுமதிப்பது ஆகிய அத்துமீறல்கள் காவல்துறை உடனே கண்காணிக்க
வேண்டியவைகளாகும். மேலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை கைது செய்து
அவர்களின் உரிமத்தை ரத்து செய்வது, உரிமமே இல்லாமல் இரண்டு சக்கர மற்றும்
கார்களை ஓட்டுபவர்களை தடுத்து வழக்குப் பதிவு செய்வது, ஓவர் ஸ்பீடில்
செல்பவர்களின் உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையும்
அவர்களது பணிகளுக்குள்ள கடமை விதிகளை கண்டிப்பாக செயல்படுத்த இறங்க
வேண்டும்.
சாலை விதிகளை மதிப்போம் ! நமது உயிர்களைக் காத்துக் கொள்வோம். !
இப்ராஹிம் அன்சாரி
தொடர்புக்கு: ebrahim.ans8@gmail.com
தொடர்புக்கு: ebrahim.ans8@gmail.com
Thanks to new source:
http://www.adirainews.net/2014/06/blog-post_6826.html
No comments:
Post a Comment