அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிராம்பட்டினத்தின் கடற்கரைத் தெருவிலுள்ள தர்ஹாவில் பெண்கள் தங்குவதற்காக மண்டபம் என்றொரு பகுதி உள்ளது. தர்ஹாவும் அதன் பெண்கள் பகுதியான மண்டபமும் வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்டவை என்று கூறப்படுகிறது.
மண்டபத்தில் கழிப்பிட வசதி இல்லாததால், மண்டபத்தில் தங்கும் பெண்கள் அங்குள்ள ஓர் ஓரப்பகுதியை தங்கள் அவசரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள நீண்ட நாட்களாகப் பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 18.1.2013 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுவதற்காகக் கடற்கரைத் தெரு ஜும்ஆப் பள்ளிக்குச் சென்றவர்களுக்கு அதிர்ச்சியான ஆச்சரியம் காத்திருந்தது!
தொழுகைப் பள்ளிக்குப் பின்புறத்திலுள்ள பெண்கள் மண்டபத்தில் கட்டுமான வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருந்தன. தொழுகை முடிந்து, அங்குச் சென்று பார்த்தபோது பல்லாண்டு காலமாகப் பெண்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த இடத்தில் செங்கற்களைக் கொண்டு புதிதாகக் கபுரு ஒன்றைக் கட்டும் பணியில் பிறமதத்துப் பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அடுத்த நாளான 19.1.2013 அன்று திடீர் கபுருக்கு சிமெண்ட் பூசும் வேலை நடந்தது. மறுநாள் 20.1.2013இல் டைல்ஸ் அலங்காரங்கள் பதிக்கப்பட்டன.
கூடிய விரைவில் அங்கு ஓர் உண்டியல் முளைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இருக்கின்ற சமாதிகள் போதாதென்று புதிதாக சமாதிகளை உருவாக்கி வயிறு வளர்க்கும் கூட்டம் இந்த இருபத்து ஒன்றாம் நூற்றாண்டிலும் தொடர்வது ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் அவமானமாகும்.
நபி (ஸல்) கூறினார்கள் :
نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ
"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளை மிதிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ
"சமாதிகளைச் சந்திக்கச் செல்லும் பெண்களையும் சமாதிகளில் வழிபாடு செய்யும் பெண்களையும் சமாதிகளில் விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் சபித்தார்கள்" இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.
அன்பான தாய்மார்களே!
அல்லாஹ்வின் தூதரின் சாபம் என்பது சாதாரண மனிதர்களின் சாபம் போன்றதல்ல. ரஸூல் (ஸல்) அவர்களின் சாபத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; சமாதி வழிபாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அல்லாஹ்வின் பாவ மன்னிப்புக் கிடைக்காத ஷிர்க் எனும் இணைவைத்தலில் விழுந்து, நரகவாசிகளுடன் சேர்ந்துவிடாதீர்கள்.
அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் அச்சமின்றி திடீர் கபுரை உண்டாக்குபவர்கள், திண்ணமாக மார்க்கத்தின் வரம்புகளை மீறிவிட்டவர்களாவர். வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் எச்சரிக்கின்றான்:
நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது (85:12).
பிறந்த உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் இறப்பு நிச்சயம். இறப்புக்குப் பின்னர் நமக்கான கேள்வி கணக்குகள் அதைவிட நிச்சயம்.
அல்லாஹ்வின் கடினமான பிடியிலிருந்து நாம் அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் தப்பித்துக் கொள்ளவதற்கும் சமாதி வழிபாடு உட்பட அனைத்து வழிகேடுகளிலிருந்தும் விலகி, நேர்வழியில் வாழ்ந்து ஈமானோடு இறப்பதற்கும் வல்ல நாயன் நம் அனைவருக்கும் தவ்ஃபீக் செய்வானாக!.
ஃஃஃ
குறிப்பு:இந்த நோட்டீஸின் பிரதிகள் தனி மடல்களில் இணைக்கப்பட்டு நிழற்பட சான்றுகளோடு வக்ஃபு வாரியத் தலைவர் தமிழ்மகன் ஹுஸைன், தலைமைச் செயலாக்க அலுவலர் அப்துல் ராஸிக் எம்ஏபிஎல், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் மற்றும் வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைவரும் கீழ்க்காணும் படிவத்தைப் பயன்படுத்தி, +91-44-25248888 எனும் எண்ணுக்குத் தொலைநகல் (Fax) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு:
"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------
To
Janab F. Abdul Razick, M.A.B.L,
CEO, Tamilnadu Wakf Board,
1, Jaffer Syrang Street, Vallal Seethakkathi Nagar,
Chennai – 600001.
Fax : +91-44-25248888
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த 18.1.2013 அன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு தர்ஹாவின் பெண்கள் வளாகத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு முரணாகவும் வக்ஃபு விதிமுறைகளுக்கு எதிராகவும் திடீரென்று புதிதாக உருவாகியுள்ள கபுரை அகற்றுவதற்கு உத்தரவிட்டு ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
முகவரி :
"--------- " --------- " --------- "--------- "--------- "--------- "--------- "--------- "-------- "--------
வெளியீடு : 5/0113 ; நாள் 25.1.2013
No comments:
Post a Comment