உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, November 16, 2012

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 2

சென்ற தொடரில் தண்ணீருக்காக நாம் கண்ணீர் வடிக்க வேண்டிய சூழலின் நமதூர் குளங்களின் இன்றைய நிலைகளை கண்டோம்.
 
இத்தொடரில் ராஜாமடம் காட்டாறு மற்றும் நமதூரை சுற்றியுள்ள ஏரி மற்றும் வாய்க்கால்களின் நிலைகளை சற்று அலசலாம்.
 
ராஜாமடம் காட்டாறு


 
நிலத்தடி நீருக்கு அடுத்து, பட்டுக்கோட்டை ஓடை என்றழைக்கப்பட்டு, கிராமங்கள் ஊடாக தொக்காலிகாடு கிராமத்திற்குள் ராஜாமடம் காட்டாறு என்ற பெயரில் நுழையும் மஹாராஜா சமுத்திரம் ஆறு தான் அதிரையின் பிரதான நீர் ஆதாரம்.
 
மஹாராஜா சமுத்திரம் அணை



தொக்காலிக்காடு மஹாராஜாசமுத்திரம் அணைக்கட்டில் நீர் தடுக்கப்பட்டு ஒர் கிளை வாய்க்கால் மூலம் விவசாயம் மற்றும் வழியில் உள்ள குளங்களை நிரப்ப காலங்காலமாக திருப்பப்பட்டு வந்தது. (பாகம் 1ல் இதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
 
 
கிளை வாய்க்கால்

ராஜாமடம் பாலம்
 
சறுக்கை





கர்நாடகத்தின் தமிழகத்திற்கான காவிரி நீர் கைவிரிப்பில் துவங்கிய CMP வாய்க்கால் பயன்பாட்டை நமதூர் புண்ணியவான்கள் சிலர் சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்தி குளத்திற்கு நீர் செல்லும் சிறு, குறு கிளை வாய்க்கால்களை பொறுப்பாக மூடி விட்டனர்.
 
இச்செயலால் செடியன், மரைக்கா, செக்கடி, ஆலடி, மண்ணப்பன் என மக்கள் பயன்பாட்டில் இருந்தவை இன்று காட்சிப் பொருளாகும் நிலைக்கு சென்றுவிட்டது. ஆதாங்க நம்ம விரலை எடுத்தே நம்ம கண்ண குத்திக்கிட்டோம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.
 
சின்ன ஏரி

பெரிய ஏரி

ராஜாமடம் காட்டாறாக மாறி மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டை நிறைத்து விட்டு வழிந்தோடி வரும் வழியில் இன்னொரு கிளை வாய்க்கால் மூலம் ராஜாமடம் ஏரியையும் நிறைக்குதுங்க. இந்த தண்ணீர் தான் விவசாயம் போக, நம்மூர் காலேஜ் வடிகால் வாய்க்கால் வழியா அப்பப்ப பிலால் நகரை ஒரு கை பார்த்துட்டு கடல்ல போய் வீணா சங்கமம் ஆகுதுங்க.
 
இந்த வாய்க்காலை ஒரு பொறுப்பான திட்டமிடல்களுடன் ஊருக்குள் மீண்டும் கொண்டு செல்லலாம், அதாவது ரயில்வே லைன் வழியாக அந்த தண்ணீரை மகிழங்கோட்டையில் அதே பழைய CMP வாய்க்காலில் இணைக்க முடியும்.
 
ராஜாமடம் ஏரி காலேஜ் வடிகால் வாய்க்கால்



 
இந்த மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டு, ராஜாமடம் காட்டாறு, ஆடதொட செடிகளால் சூழப்பட்டும், தோப்புக்காரர்களால் ஓரங்களில் அரிக்கப்பட்டும் வரும் ராஜாமடம் பெரிய ஏரி, சின்ன ஏரி, வழிமறைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள சறுக்கை, வடிகால் வாய்க்கால் என சீசன் குளியலுக்கு இன்னும் பயன்படுவது ஆறுதலான செய்திங்க.
 
செல்லிக்குறிச்சி ஏரி


இதுல தண்ணி வழிந்தால் நேரா கரிச்சமணிக்கு வரும்

அடுத்து, சுமார் 5, 6 கிலோ மீட்டர் பரப்பளவில் பள்ளிகொண்டான் முதல் மாளியக்காடு வரை விரிந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரி நீர் அதிரையின் கரிச்சமணி குளம் வரைக்கும் வருதுங்க.

கரிச்சமணியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கினா, 100 மீட்டர் தூரத்துல ஆலடி குளத்தையும் நிரப்பலாம். உபரி நீரை 50 மீட்டர் தூரத்துல உள்ள CMP வாய்க்காலிலும் விடலாம். செல்லிக்குறிச்சி ஏரியும் பிளாட் ஆகுமுன்பாக ஆழப்படுத்தப்பட வேண்டும் இதனால் வருட முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதுடன் விவசாயமும் நிலத்தடி நீரும் கணிசமா உயருமுங்க.


மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி


செல்லிக்குறிச்சி ஏரி நீர் மூலமும் மழைநீர் மூலமும் நிரப்பப்படும் மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரியும் நம்ம ஊரு ஏரி தாங்க, பேருதாங்க மழவேனிற்காடு ஆனா இருப்பது வண்டிப்பேட்டை பக்கத்துலங்க.

ஒரு காலத்தில் கடல் ஜாவியா வரை இருந்தது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை, இக்கூற்று உண்மை என்றால் அதிரையில் மறைந்து வரும் (மறைந்து விட்ட) நீர் ஆதாரங்களில் சேர்க்கத் தகுதியானதே என்றாலும் ஜாவியா வரை கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும் கழிமுகம் (வாய்க்கால்) முன்பு இருந்திருக்கக்கூடும் இதையே கடல் ஜாவியா வரை இருந்ததாக சிலர் நம்ப காரணமாக இருக்கலாம்.






செம்படவர் தெரு கழிமுக வாய்க்கால்
(இந்த வாய்க்காலின் தொடர் தான் அந்த காலத்துல ஜாவியா வரை நீண்டும், சற்று அகலமாகவும், ஆழமாகவும் இருந்திருக்கக்கூடும்)

 
குறிப்பு :

ஜாவியாவிற்கு பின்புறம் செய்னாங்குளம் செல்லும் இறக்கத்தில் (தோணி) வத்தை கட்டும் தொழில் பல்லாண்டுகள் இயங்கி வந்தது என் கருத்திற்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன், கடலுக்குச் செல்லும் கழிமுக வாய்க்கால் அருகே இருந்ததனால் தான் இத்தொழிற்கூடம் இங்கே இயங்கி இருக்கலாம்.

இப்பவும் இருக்கிற காலேஜ் வாய்க்காலுக்கும் ஜாவியாவுக்கு எவ்வளவு தூரம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். காலப்போக்கில் வாய்க்காலும் போச்சு! வத்தை கட்டும் தொழிலும் போச்சு!!

நீர்நிலை குறித்த ஆக்கம் என்பதால் நமதூர் கடல் காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

நமதூரை சுற்றியுள்ள ஏரிகளால் பயன்கள் ஏராளம் ஆனா பயன்படுத்தத் தெரியாத ஏமாளிங்க நாமங்கிறது தான் ஒட்டு மொத்த உண்மைங்க என ஈனஸ்வரத்தில் முனகி என் ஆதங்கத்தை முடிக்கிறேங்க.

தொகுப்பு : அதிரைஅமீன்
படங்கள் : ஆசிக் அகமது
இவர்களுடன் நாளைய செய்தியாளர் அஸ்அத்

1 comment:

  1. // நம்மூர் காலேஜ் வடிகால் வாய்க்கால் வழியா அப்பப்ப பிலால் நகரை ஒரு கை பார்த்துட்டு கடல்ல போய் வீணா சங்கமம் ஆகுதுங்க.//

    100 % உண்மைதான்...இதில் சிலரின் சுய நலத்தால் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமணம் செய்து தங்களின் மாட மாளிகைகளுக்கும் அதனைச் சுற்றியிருக்கும் நிலம் புலன்களுக்கு எல்லைக்கல் இட்டும் விரிவாக்கம் செய்துவிடுகின்றனர்.

    குளங்களை வைத்து நல்லதொரு விழிப்புணர்வு !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete