உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, August 13, 2012

கண்ணியமிக்க நாள்

நிச்சயமாக நாம் அதை லைலத்துல் கத்ரில் இறக்கினோம். மேலும் லைலத்துல் கத்ர் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க நாள் ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் தம் இறைவனின் கட்டளையின்படி சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி, அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.‘ (அல்குர்ஆன் 97:1-5)Post image for கண்ணியமிக்க நாள்
இந்த லைலத்துல் கத்ர் நாள் எப்போது? அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும்? என்பதை அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் காட்டிய வழியில் ஆய்வு செய்வோம்.
லைலத்துல் கத்ர் நாள் ரமழான் மாதத்தின் 27ஆம் நாளில்தான் என இஸ்லாத்தில் பெரும்பான்மையான மக்கள் விளங்கி வைத்துள்ளனர்.  இஸ்லாமிய மார்க்கத்தை ஓர் சடங்கு மார்க்கமாக கருதிய பலர், ரமழான் மாதத்தின் ஒரு சில குறிப்பிட்ட நாட்களில் (அதாவது வெள்ளி, திங்கள், மற்றும் 27ஆம் இரவு ஆகிய நாட்களில்) பள்ளிகளில் நிரம்பி வழிவர். குறிப்பாக இருபத்தி ஏழாம் இரவில் மாத்திரம் அதுவரை கண்டிராத கூட்டம் பள்ளியில் அலைமோதும். அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பழங்கள் குவியும்.
பள்ளியில் தங்கி இருத்தல் (இஃதிகாஃப்)
அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தின் கடைசி பத்து நாட்களிலும் பள்ளியில் தங்கி இருந்து, லைலத்துல் கத்ர் நாளை அடைவதற்காக இஃதிகாஃப் இருப்பதோடு, அந்த நாட்களில் மற்ற நாட்களை விட அதிகமான அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் நாளைப்பற்றி ஏதேனும் கூறியதை நீங்கள் கேட்டீர்களா? என்று அபூ ஸயீத்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்,‘ஆம்’ நாங்கள் ரமழானின் நடுப்பத்து நாட்களில் நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். நாங்கள் இருபதாம் நாள் சுபுஹ் நேரத்தில் வெளியேறினோம். இருபதாம் நாள் சுபுஹ் நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், கத்ருடைய நாள் (லைலத்துல் கத்ர்) எனக்கு அறிவிக்கப்பட்டது. அதை நான் மறந்து விட்டேன். எனவே, அந்த நாளை கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்களில் தேடுங்கள். அந்த நாளில் ஈரமான களிமண்ணில் நான் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன். எனவே யார் அல்லாஹ்வின் தூதருடன் இஃதிகாஃப் இருந்தீர்களோ,அவர் மீண்டும் திரும்பட்டும் எனக் கூறினார்கள். மக்கள் மஸ்ஜிதிற்கு மீண்டும் திரும்பினார்கள். திரும்பியபோது வானத்தில் சிறு மேகத்தைக் கூட நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் வந்து மழை பொழிந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்தார்கள். அவர்களின் நெற்றியிலும் மூக்கின் மீதும் களிமண்ணைக் கண்டேன்’ என்று விடையளித்தார். நூல்:புகாரி 2036
ரமழானின் கடைசிப் பத்து நாட்களில் நுழைந்து விட்டால் நபி அவர்கள் தன்னை தயார் செய்து கொள்வார்கள். அந்த நாளை உயிர்ப்பிப்பார்கள். அந்நாட்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட தம் குடும்பத்தினரை எழுப்பி விடுவார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) நூல்கள்:புகாரி 2024, முஸ்லிம்.
நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை இவ்வாறு இருக்க, நம் மக்களில் பலர் 27ஆம் இரவில் மட்டும் ஏனோதானோ என்று பள்ளிக்கு வருவதும், மற்றுமுள்ள நாட்களிலும் இறை மன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, வீட்டில் தூங்கி கழிப்பதும் சரியானதா?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த இஃதிகாஃப் இன்று நம் மக்களின் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் ஏனெனில் இஃதிகாஃப் இருக்கும்போது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இறைநினைவுடன் தங்கியிருந்த முறை மக்களுக்கு சரியாக எடுத்துக் காட்டப்படாததுமே ஆகும்.
லைலத்துல் கத்ர் எந்த நாள்?
‘தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள நாளிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.‘(44:2-4)
‘லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடன் ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்து விட்டேன். எனவே அதை கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்‘.
(அறிவிப்பவர்:அபூஸயீத் (ரலி) நூல்:முஸ்லிம், அஹ்மத்,புகாரி 2023)
‘லைலத்துல் கத்ரு நாளை ரமழானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான நாட்களில் நீங்கள் தேடுங்கள்‘. (ஆயிஷா (ரலி) நூல்:புஹாரி 2017)
லைலத்துல் கத்ர் நாளின் சிறப்புகள்
‘யார் லைலத்துல் கத்ரு நாளில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்‘.
(அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்:புஹாரி 2008, முஸ்லிம்)
லைலத்துல் கத்ரும் பிரத்யேகத் தொழுகையும்
லைலத்துல் கத்ர் நாளுக்கென்று நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையும் காட்டித் தரவில்லை. அவ்வாறு பிரத்யேகத் தொழுகை எதுவும் இல்லை என்பதற்கு கீழக்காணும் ஹதீஸே போதிய ஆதாரமாகும்.
‘ரமழானில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை எவ்வாறு இருந்தது என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டபோது,ரமழானிலும், ரமழான் அல்லாத மாதங்களிலும் நபி (ஸல்) அவர்கள் பதினொரு ரக்அத் (8+3) மேல் தொழுததில்லை என்று விடையளித்தார்கள்.‘
(அறிவிப்பவர்:அபூஸலமா (ரலி) நூல்:புஹாரி 2013, முஸ்லிம், திர்மிதி).
மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி (ஸல்) அவர்கள் –தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல்,ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழ வேண்டும். அதை விட்டுவிட்டு, இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லாத வணக்கவழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்து வருவது எதன் அடிப்படையில் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.
லைலத்துல் கத்ர் நாளில் சொல்ல வேண்டிய பிரார்த்தனை
‘அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ர் எந்த நாள் என்று நான் அறிய நேர்ந்தால், அந்த நாளில் நான் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு,
‘அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ‘
(யா! அல்லாஹ்! நீ மன்னிக்கக் கூடியவன். மன்னிப்பை விரும்புபவன். என்னை நீ மன்னித்து விடு!) என்று கற்றுக் கொடுத்தார்கள்.‘
(அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி) ஆதாரம்:அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதி)
லைலத்துல் கத்ர் நாளிலும், ரமழானின் கடைசி பத்திலும், அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் அனுமதித்தவைகளை நடைமுறைப்படுத்துவோம். அனுமதிக்காதவைகளை தவிர்த்து நடப்போம். அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த வழியில் நம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம்.

jaqh.in

thanks to readislam.net

No comments:

Post a Comment