உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, May 11, 2012

கப்ருகளில் ஸியாரத் (ADT வெளியீடு : 002/2012)

அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களிலும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் எழுதிய நூல்கள் அனைத்திலும் “زيارة القبور கப்ருகளை ஸியாரத் செய்வது” எனும் பாடத் தலைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்தத் தலைப்பிலுள்ள “கப்ருகள்” எனும் பன்மைச் சொல்லானது நம் கவனத்திற்குரியது மட்டுமின்றி இவ்வெளியீட்டின் கருப்பொருளுமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “… கப்ருகளை ஸியாரத் செய்யுங்கள். அது, மறுமையை உங்களுக்கு நினைவூட்டும்”  - அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி);  நூல் : முஸ்னது அஹ்மது.

மேற்காணும் ஹதீஸில் இடம்பெற்றுள்ள “கப்ருகள்” என்பன, கப்ருஸ்தான் எனும் பொது மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்ருகளைக் குறிப்பதாகும்.

கப்ருகளை ஸியாரத் செய்வதற்காகப் பொது மையவாடிகளுக்குச் செல்பவர்கள், அங்கு அடக்கமாகி உள்ளவர்களுக்காக ஸலாம் கூற வேண்டும். அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். ஆனால் அவர்களிடம் துஆக் கேட்கக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள், பொது மையவாடிகளுக்கு வருகை தரும்போதும் அவற்றைக் கடந்து செல்லும்போதும், “அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன் வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்” (முஃமினான மண்ணறைவாசிகளே! உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும்! திண்ணமாக நாங்களும் அல்லாஹ் நாடும்போது உங்களைப் பின்தொடர்ந்து வரக்கூடியவர்களே!) என்று கூறுவார்கள். - அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி); நூல்கள் : முஸ்லிம், அஹ்மது, நஸயீ.


வேறோர் அறிவிப்பில், “அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிமீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன். நஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆஃபியா” (முஃமினான - முஸ்லிமான மண்ணறைவாசிகளே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ் நாடும்போது திண்ணமாக நாங்களும் உங்களைத் தொடர்ந்து வரக்கூடியவர்களே! உங்களுக்கும் எங்களுக்கும் அல்லாஹ்விடம் நல்வாழ்வை வேண்டுகிறோம்) என்று கப்ருகளைக் கடந்து செல்லும்போது கூறும்படி ஸஹாபாக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தார்கள்.  - அறிவிப்பாளர் : புரைதா (ரலி); நூல்கள் : முஸ்லிம், அஹமது, இப்னுமாஜா.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கற்றுத் தந்தவற்றைப் புறக்கணித்துவிட்டு, மார்க்கத்தால் தடை செய்யப்பட்ட விதத்தில் கட்டடம் கட்டப்பட்டு, எழுத்துகள் எழுதப்பட்டு, விளக்குகள் ஏற்றப்பட்டு, ஆண்டுதோறும் கந்தூரி விழாக்கள் எடுக்கப்படும் கப்ருக்குச் சென்று ஸியாரத் என்ற பெயரால் வழிபாடுகள் செய்வதும் அந்தக் கப்ரில் அடக்கப்பட்டவரின் பெயரால் நேர்ச்சைகள் செய்வதும் அல்லாஹ்விடம் மன்னிப்பைப் பெறமுடியாத மாபெரும் குற்றங்களாகும்.

“கப்ருகள் பூசப்படுவதையும் கப்ருகளுக்குக் கட்டடம் கட்டப்படுவதையும் கப்ருகளில் எழுதப்படுவதையும் அங்கு விளக்குகள் ஏற்றப்படுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்”

“உயர்த்திக் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கப்ரையும் தரைமட்டமாக்கிவிடு” என்று அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அன்பானவர்களே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்த எல்லா அம்சங்களும் ‘அவ்லியா’ என்பவரின் கப்ருக்காகச் செய்யப்படுன்றன. ‘அவ்லியா’ என்பவரின் கப்ரு உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. கப்ருக்கும் மேல் பெரிய கட்டடம் கட்டப்பட்டு, ஆண்டு தோறும் வெள்ளையடித்துப் புதுப்பிக்கப்படுகிறது. சிமெண்ட்டால் பூசப்பட்ட கப்ருக்கு ஆண்டு தோறும் சந்தனமும் பூசப்படுகிறது. அவருடைய பெயர், பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டுள்ளது. அங்கு விளக்குகள் எரிக்கப்படுகின்றன.

இவை அனைத்தும் நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு எதிரானவை என்பதை நாம் சிந்தித்து உணர்ந்துகொள்ள வேண்டுமல்லவா?.

இவை மட்டுமின்றி, ‘அவ்லியா’ என்பரின் பெயரால் ஆண்டுதோறும் கந்தூரி எனும் பெயரில் விழாக்கள் எடுத்து, கூத்து-கொண்டாடங்கள் நடத்துவது, அவற்றில் ஆண்களும் பெண்களும் இளைஞர்களும் இளம்பெண்களும் கலந்து கொள்வது ஆகியவை இஸ்லாத்தை இழிவு படுத்துவது மட்டுமின்றி நம்முடைய சமுதாயத்தை வழிகேட்டுக்கு இட்டுச் செல்வதுமாகும்.

கப்ருகளை ஸியாரத் செய்யச் செல்லும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். - அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி); நூல்கள் : அஹ்மத், இப்னுமாஜா, திர்மிதீ, இப்னு ஹிப்பான்.

சிந்தித்துப் பாருங்கள்! தன்னைப் பெற்றெடுத்த பாசமான தகப்பனோ, தனக்கு வாழ்வளித்த அன்பான கணவனோ, தனக்கு உதவி-ஒத்தாசைகள் செய்த உடன்பிறந்த சகோதரனோ மரணித்துவிட்டால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள கப்ருகளை ஸியாரத் செய்வதற்குப் பொது மையவாடிக்குப் போகக்கூடாது என்று தெரிந்துவைத்திருக்கும் நமது சமுதாயப் பெண்கள், நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ‘அவ்லியா’வின் கப்ருக்கு ஸியாரத் என்ற பெயரால் கந்தூரிக் காலங்களில் சர்வசாதாரணமாகச் சென்று வருகின்றனர். இது பாவமல்லவா? நாமும் நம்முடைய குடும்பப் பெண்களும் திருந்த வேண்டாமா?

நபி (ஸல்) அவர்களின் சாபத்துக்கு இலக்காகிவிட்டால், நமக்கு ஈடேற்றம் என்பது ஏது?

“தங்களுள் ஒரு நல்லவர் மரணித்துவிட்டால், அவருடைய அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கிவிடும் யூத-நஸ்ரானிகள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நபி (ஸல்) சபித்தார்கள். இது, யூத-நஸ்ரானிகளுக்கு மட்டும் உரித்தான சாபமன்று. அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக மாற்றி வழிபடுகின்ற அனைவருக்கும் உரியதுதான் என்பதை நாம் மறந்துவிடலாகாது.

“எனது அடக்கத்தலத்தை விழாக் கொண்டாடும் இடமாக ஆக்கிவிடாதீர்கள்!” என்று தம் தோழர்களுக்கு நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். - அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி); நூல் : அபூதாவூத்.

மேலும், “இறைவா! எனது அடக்கத்தலத்தை வணக்கத்தலமாக ஆக்கிவிடாதே!” என்று நபி (ஸல்) அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள்.

அழைத்துப் பிரார்த்திக்கும் வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரித்தானது.

நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற (அல்லாஹ்வின்) அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்! (7:194).

(நபியே!) அல்லாஹ்வை விடுத்து, அவர்கள் அழைத்துப் பிரார்த்திக்கிறவர்களால் எந்த ஒன்றையும் படைக்க முடியாது. அவர்களும் படைக்கப்பட்டவர்களே!. அவர்கள் இறந்துவிட்டவர்கள்; உயிருள்ளவர்களல்லர். மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறியமாட்டார்கள். உங்களுடைய வணக்கத்திற்குரியவன் ஒரே நாயன்தான்; எனவே, மறுமையை நம்பாதவர்களுடைய உள்ளங்கள் (இவ்வுண்மையை) மறுதலிப்பவையாக இருக்கின்றன - மேலும் அவர்கள் (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களாக இருக்கிறார்கள் (16:20-22).

அன்பானவர்களே! மறுமை என்பது நமக்கு மிகவும் அண்மையிலுள்ளது. அல்லாஹ் நமக்களிக்கும் பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அவனுடைய நேர்வழியின் பக்கம் திரும்புவோம், வாருங்கள்:

ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள் உங்கள் இறைவனின் பக்கம் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் (எவராலும்) உதவி செய்யப்படமாட்டீர்கள் (39:54).

அதிரை தாருத் தவ்ஹீத் ட்ரஸ்ட்
வெளியீடு : 002/2012

No comments:

Post a Comment