உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, August 14, 2016

அமீரக விடுமுறையில் 'ஜபல் அல் ஜைஷ்' மலையேற்றம்! (படங்களுடன்)


மீண்டும் ஒரு பயணப்புராணம் மூலமாக உங்கள் அனைவரையும் 'உசுப்பேத்துவதில்' பேரானந்தம்.

புனித ரமலானிலேயே ஹஜ் பெருநாள் விடுமுறையில் ஊருக்குச் செல்ல பலரும் திட்டமிட்டு தயாராகி இருப்பீர்கள் என்றாலும் மலையளவு உயர்ந்துள்ள விமான கட்டணத்தால் ஊர் போகும் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளவர்களுக்காக ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்கு ஜாலி டிரிப் சென்றுவர சில டிப்ஸ்...
முன்னெச்சரிக்கை! ரசனையில்லாதவர்களை உடன் அழைத்துச் செல்லாதீர் ஏனென்றால் 'பூனையை மடியில் கட்டிக் கொண்டு போன நிலை' உங்களுக்கும் வரக்கூடாது என்ற அனுபவ நல்லெண்ணம் தான். பொதுவாக பெருநாள் விடுமுறை காலங்கள் மற்றும் அரிதாய் அமையும் அமீரக அரசு விடுமுறை காலங்களில்  சுற்றிப் பார்ப்பதற்கென்றே துபையிலும், அல் அய்னிலும், அபுதாபியிலும், ஃபுஜைராவிலும் அனேக இடங்கள் உள்ளன என்றாலும் இதுவரை செல்லாதவர்கள் மற்றும் மலைப்பாதையில் காரிலோ, பைக்கிலோ பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் ராஸ் அல் கைமாவில் உள்ள 'படைகளின் மலை' எனப் பொருள்படும் 'ஜபல் அல் ஜைஷ்'.கடந்த ஈகைத் திருநாள் விடுமுறையில் நமது தாயகத்தின் ஊர் பகுதிகளையும் கிராமங்களையும் நினைவூட்டும் ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்குச் செல்லலாம் என்று கிளம்பிய போது 'இந்த வயசுல இது தேவையா? என கமெண்ட் அடித்த இலங்கை சகோதரர் ஒருவரையும் வம்படியாக இழுத்துப் போட்டுக் கொண்டு பயணித்த காலமோ அமீரகத்தில் நிலவும் கடும் கோடைகாலம் என்றாலும் ஆசையே வென்றது.பசுமையான மரங்கள் நிறைந்த மலையல்ல, வெறும் பாறைகள் மட்டுமே பாட்டுப்படிக்கும் இந்த மலைக்கும் ஓர் ஈர்ப்பு உண்டு. லைலா என்ற கருப்பான பெண் மஜ்னு என்பவனுக்கு பேரழகியாக தெரிந்தாள் அல்லவா அந்த அரேபிய கதையை போல் தான் இயற்கையையும் மலைப்பாதையில் வாகனம் ஒட்டுவதையும் ரசிப்பவர்களுக்கு ஏற்ற இடம் மருந்துக்கு கூட புல் பூண்டுகள் இல்லாது பாறாங்கற்களாலும் பள்ளத்தாக்குகளாலும் வித்தியாசமாக அமைந்துள்ள இந்த மலை. மண்முகடுகள் நிறைந்த மலையடிவாரத்தில் மட்டும் விதிவிலக்காக சில பாலைவனச் செடிகள்.முதன்முறையாக செல்பவர்களை ஏமாற்றும் அறிவிப்பு பலகை. அல் ஜைஷ் 17 கி.மீ என்ற அறிவிப்பு பலகை ராஸ் அல் கைமாவிலிருந்து இந்த மலைக்கு செல்லும் பாதையில் தென்படும்; ஆனால் அது மலையடிவாரம் வரை செல்வதற்கான அறிவிப்பு மட்டுமே.

அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்ல புதிய, அழகிய இருவழிப் பாதை ஆனால் கன்னித்தீவை நினைவூட்டும் முடிவில்லா தொடர்... சாலை. ஒருவழியாய் உச்சிக்கு சென்று திரும்பும் வரை கடைகள் ஏதும் கிடையாது அதனால் தேவையான தண்ணீருடனும், உணவுடனும் செல்வது நலம். பாகிஸ்தானியர், அரபியர்களைப் போல் உணவுப் பொருளை எடுத்துச் சென்றும் மலையடிவாரங்களில் சமைப்பது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது. ஆங்காங்கே சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும் அதை முறையாக பயன்படுத்தத் தெரியாதவர்களே அதிகம்.
பெருநாள் விடுமுறைகள் போன்ற பொது தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் அதனால் வாராந்திர விடுமுறை தினங்களில் சென்றுவர வாய்ப்புள்ளோர் பயன்படுத்திக் கொள்க. 

தொடர் பொது விடுமுறை நாட்களில் ஏற்படும் வாகன நெரிசல் ராஸ் அல் கைமாவிலேயே தொடங்கி அடிவாரம் வரை 15 கி.மீ அளவுக்கு நீடிக்கும் என்பதால் காலையிலேயே மலையேறச் செல்வது தான் சிறந்தது. 

வாராந்திர விடுமுறை நாட்களில் சுமார் மாலை 2 அல்லது 2.30 மணியளவில் ராஸ் அல் கைமாவிலிருந்து உங்கள் பயணத்தை துவங்கினால் மலையடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் அஸர் தொழலாம் மேலும் மஃரிப் தொழுது விட்டு மலையிலிருந்து இறங்கினால் பயணம் சிறப்பாக அமையும் ஏனெனில் இதுவரை மலைப்பாதையில் ஒரு குச்சி பல்பு கூட போடப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

மலையேறும் போதும் இறங்கும் போதும் அழகிய இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டும் கேமராவில் பதிந்து கொண்டும் செல்லலாம். மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள ஓய்வெடுக்கும் பகுதிகளில் குழந்தைகள் ஒடி விளையாடலாம். ஜபல் அல் ஜைஷ் மலையில் ஏறி இறங்க உவப்பான காலம் வரும் ஹஜ் பெருநாள் விடுமுறை தொடங்கி மார்ச் மாதம் முடிய, அப்புறம் சூடு தான்.

தொடர்கதையாய் செல்லும் தார்ச்சாலை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இன்னும் முறையாக செப்பனிடப்படாத கரடுமுரடான சாலையாக நீளும், இவற்றில் 4வீல் டிரைவ் வாகனங்களில் மட்டுமே செல்வது உசிதம் என்பதை விட உங்கள் பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

வழமைபோல் அப்துல் காதர் மற்றும் அஷ்ரப் உதவியுடன்
அதிரை அமீன்

No comments:

Post a Comment