Saleem Karaikal
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
த.மு.மு.க. விலிருந்து பி.ஜே. அவர்கள் வெளியேற்றப்பட்டப்பிறகு, அவர் வைத்த குற்றச்சாட்டுகளில் பிரதானமான குற்றச்சாட்டு த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக இருக்கிறது என்று ஜவாஹிருல்லாஹ் கூறினார். அதை எழுத்துப்பூர்வமாகவும் தந்தார். ஆகவே தான் விலகுவதாக சொன்னார். உண்மையில் த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாகத்தான் இருந்ததா? பி.ஜே. அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மைதானா? என்பது குறித்தெல்லாம் யூகத்தின் அடிப்படையில் இல்லாமல், விருப்பு வெறுப்பு இல்லாமல் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் பார்க்க வேண்டும்.
என்பதை அறிவதற்கு முன் ஒன்றை நாம் தெளிவாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
த.மு.மு.க. என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தவ்ஹீதை பிரச்சாரம் செய்வதற்காக அல்ல. முஸ்லிம்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டதுதான் த.மு.மு.க. இந்த அஜெண்டாவை பி.ஜே. அவர்களும் ஒப்புக்கொண்டு, தவ்ஹீதை சமரசம் செய்துக்கொண்ட நிலையில்தான் அதன் நிறுவனராக இருந்தார் என்ற உண்மை த.மு.மு.க. வின் ஆரம்ப நிலை நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் தெரியும். தவ்ஹீதை பிரச்சாரம் செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்து, அங்கே தவ்ஹீதை பேசவிடவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தால் அதிலே நியாயம் இருந்திருக்கும் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
த.மு.மு.க. வின் நிறுவனர் என்றவுடன், த.மு.மு.க. என்ற இயக்கம் பி.ஜே. அவர்களின் சிந்தனையில் உதித்தது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. முஸ்லிம்களுக்கு வலுவான ஒரு அரசியல் இயக்கம் வேண்டும் என்று சிந்தித்தவர்கள் ஜவாஹிருல்லாஹ் அவர்களும், பாக்கர் அவர்களும்தான். சிந்தனைக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தபோதுதான் பி.ஜே. அவர்களை இதில் சேர்த்துக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதே பேச்சுவார்த்தையில் இருந்தது. தவ்ஹீத் என்ற பெயரில் சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்துகிறார். இந்த இயக்கத்திற்கு இவர் பொருத்தமானவர் இல்லை என்பதே அப்போதைய கருத்தாக இருந்தது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு சமுதாயம் குறித்த அக்கறையுடன் வலிமையாக தன் கருத்துக்களை அல்ஜன்னத்தில் எழுதுகிறார். தவ்ஹீத் கொள்கையை மட்டும் எழுதவில்லை.அவருடைய சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று பாக்கர் அவர்கள்தான் இவருக்காக பரிந்துரைத்தார். இறுதியாக பாக்கர் அவர்களின் வற்புறுத்தல் காரணமாகவே பி.ஜே. இதில் ஒருவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். இந்த உண்மையை பி.ஜே. அவர்களால் கூட இன்றைக்கு மறுக்க முடியாது.
அப்போதைய நிலையில் பி.ஜே. அவர்களுக்கும் தன் பாதுகாப்புக்காக ஒரு அரசியல் இயக்கம் தேவைப்பட்டது. தவ்ஹீதை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கிறார்கள், த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் தடையாக உள்ளது என்றெல்லாம் இன்றைக்கு குற்றச்சாட்டுகளை வைக்கும் பி.ஜே. அவர்கள் அன்று தன்னுடைய பாதுகாப்புக்காக தவ்ஹீத் கொள்கையை சமரசம் செய்துக்கொண்ட நிலையில்தான் அதில் தன்னை இணைத்துக்கொண்டார் என்ற உண்மை த.மு.மு.க. வின் ஆரம்ப நிலை நிகழ்வுகளில் பங்கெடுத்துக்கொண்ட அனைவருக்கும் தெரியும்.
வில்லாபுரம் என்ற ஊரில் முஸ்லிம் பேரவை என்ற பெயரில் முஸ்லிம்களுக்கான அரசியல் இயக்கம் தோற்றுவிப்பது குறித்து பேசுவதற்காக ஒன்று கூடினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் முக்கியமானவர்கள் ஜவாஹிருல்லாஹ், பாக்கர், ஜே.எஸ்.ரிபாய் ஆகியோர் ஆவார்கள். பி.ஜே. அவர்களும் அதில் கலந்துக்கொண்டார்கள். தவ்ஹீதை பிரச்சாரம் செய்வதற்காக கூடிய கூட்டம் அல்ல இது என்பது அப்பொழுதே பி.ஜே. அவர்களுக்கு நன்றாக தெரியும். எப்படி சொல்கிறோம் என்றால், அதில் கலந்துக்கொண்டவர்கள் அத்தனை பெரும் தவ்ஹீத் சிந்தனை உள்ளவர்கள் கிடையாது. அதில் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பேரில் திண்டிவனம் இடிமுரசு இஸ்மாயில் போன்றவர்கள் அப்பொழுது இஸ்லாத்தின் அடையாளங்களிருந்தே தூரமாகி இருந்தவர்கள். மௌலவி இஸ்மாயில் நாஜி அவர்கள் மத்ஹபை பின்பற்றக்கூடியவர்கள். ஜாக் அமைப்பில் இருந்தபோதும், இப்பொழுது ததஜ வில் செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதும் இந்த பின்னணி உள்ளவர்களுடன் பி.ஜே. அவர்கள் தன்னை இணைத்துக்கொள்வாரா? நிச்சயமாக மாட்டார். பிறகு ஏன் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டார் என்பதை மக்கள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
அதன் பிறகு த.மு.மு.க. இறுதி செய்யப்பட்டு அதன் அறிமுக நிகழ்ச்சி மெஜெஸ்டிக் ஹோட்டலில் நடைபெற்றபோது நிகழ்ச்சி ஆரம்ப கிராஅத் ஓதியபோதும், நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் முழக்கங்கள் எழுப்பியபோதும் அதை ஆட்சோபிக்காமல் மேடையில் பி. ஜே. அவர்கள் அமர்ந்திருந்தது த.மு.மு.க.விற்காக தவ்ஹீத் கொள்கையை சமரசம் செய்துக்கொண்ட நிலையில்தான் என்பதை இப்பொழுது தவ்ஹீதுக்காகத்தான் பி.ஜே. பிரிந்து வந்தார் என்பதை நம்பிக்கொண்டிருக்கும் தவ்ஹீத் சகோதரர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும். அதுமட்டுமல்ல மாநில, மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளில் தவ்ஹீத் கொள்கையை ஏற்றுக்கொள்ளாதவர்களும் இருந்தனர். பி.ஜே. அவர்கள் இதை ஒப்புக்கொண்டுதான் த.மு.மு.க. தலைமை பொறுப்பை ஏற்றிருந்தார்கள்.
அதுமட்டுமல்ல இவர் தவ்ஹீதை மட்டும் பிரச்சாரம் செய்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் பல ஊர்களில் இவர் உள்ளேயே நுழையமுடியாத நிலை இருந்ததை யாரும் மறுக்க முடியாது. த.மு.மு.க. ஆரம்பிக்கப்பட்ட பிறகுதான் த.மு.மு.க. பேனரில் பல ஊர்களுக்கு சென்று தவ்ஹீதை பிரச்சாரம் செய்ய இவரால் முடிந்தது என்ற உண்மை இன்றைக்கு தந்திரமாக மறைக்கப்பட்டு, தவ்ஹீதிற்கு த.மு.மு.க. தடையாக இருந்தது என்ற பொய்யை தவ்ஹீத் சகோதரர்களை நம்பவைத்து இன்றைக்கு சமுதாயத்தை இரண்டாக பிளந்து ஒரு வரலாற்று துரோகத்தை பி.ஜே.அவர்கள் செய்திருக்கிறார் என்பதை மக்கள், குறிப்பாக தவ்ஹீத் சகோதரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உண்மை நிலை என்னவென்பதை ஜவாஹிருல்லாஹ் அவர்கள் சற்று மாற்றி சொல்லிவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். த.மு.மு.க. வளர்ச்சிக்கு தவ்ஹீத் ஒருபோதும் தடையாக இல்லை. ஆனால் பி.ஜே. என்ற தனி மனிதர் இந்த சமுதாயத்தில் எப்படி அறியப்பட்டார், பெரும்பாலான முஸ்லிம்களிடத்தில் அவர் குறித்தான பார்வை எப்படி இருந்தது என்பதுதான் தடையாக இருந்தது. தார்மீக முறையில் இதை சொல்வதற்கு எனக்கு கடமை இருக்கிறது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நான் சொல்கிறேன் என்றால் உணர்வு நிருபராக நானும், புகைப்பட நிபுணர் சகோதரர் உசேன் ( இவர் தற்போது விகடன் குழுமத்தில் முதன்மை புகைப்பட நிபுணராக உள்ளார் ) அவர்களும் களத்தொகுப்பு செய்திகளுக்காக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு சென்றபோது சமுதாயத்தில் இவர் மீதான பார்வை எப்படி இருந்தது என்பது கண்கூடாக தெரிந்தது. குறிப்பாக பழனிபாபா அவர்கள் கொலை செய்யப்பட்டு தமிழகத்தில் கொந்தளிப்புகள் ஏற்பட்டபோதும், கே.கே.நகர் இமாம் கொலை செய்யப்பட்டபோதும், கோவை குண்டுவெடிப்பு நிகழ்ந்து அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டபோதும்.........
இன்ஷா அல்லாஹ் உண்மை வரலாறு தொடரும்....
முந்தைய தொடர்களை
வாசிக்க கீழுள்ள சுட்டியை சுட்டுங்கள்.
No comments:
Post a Comment