அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
தமிழ் பேசும் முஸ்லிம் சமுதாயத்தின் தவிர்க்க முடியாத காலத்தின் தேவையாக தோற்றுவிக்கப்பட்ட த.மு.மு.க என்ற இயக்கம் இரண்டாக பிளவுபட காரணமாக இருந்த பி.ஜே. என்கின்ற தனிமனிதரின் சமுதாய வரலாற்று துரோகத்தின் பாதிப்பின் முழு பரிமாணத்தை இன்றைய இயக்கம் பேசும் இளைய தலைமுறை தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், த.மு.மு.க. தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் முஸ்லிம் சமுதாயம் கண்ட நெருக்கடியை முதலில் சுருக்கமாக தெரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு பாசிஸ சக்திகள் வேரூன்ற ஆரம்பித்து, அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக வாழ்ந்துக்கொண்டிருந்த இந்து முஸ்லிம் மக்களிடையே தங்களுடைய முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களை பகிரங்கமாக செய்ய ஆரம்பித்திருந்த கால கட்டம். நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அன்னை ஆயிஷா (ரலி) மற்றும் முஸ்லிம்கள் அனைவரையும் தரக்குறைவாக மேடைகளில் பகிரங்கமாக விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். அரசாங்கமும் இதை கண்டும் காணாமலும் விட்டுக்கொண்டிருந்தது. இவர்களுடைய பேச்சால் கொதிப்படைந்த சில இளைஞர்கள் இதனை எதிர்க்கத் துணிந்தார்கள். காவல்துறை இவர்கள் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்தது. பாபர் மசூதி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோட்டில் இறங்கிய மக்களை காவல்துறை சரமாரியாக கைது செய்து சிறையில் அடைத்தது. பலர் மீது தடா சட்டம் பாய்ந்தது. இதையெல்லாம் தட்டிக் கேட்க, குரல் கொடுக்க சமுதாயத்தில் ஒரு நாதியும் இல்லை. ஒரு சமுதாயம் அநியாயமாக பாதிக்கப்படும்போது அந்த சமுதாயத்திற்காக ஜனநாயக முறையில் போராடி அரசாங்கத்தை உலுக்கி நியாயம் கேட்கக்கூடிய வகையில் ஒரு வலுவான அமைப்பு அப்பொழுது தமிழக முஸ்லிம்களிடத்திலே இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்ப தோற்றுவிக்கப்பட்டதுதான் த.மு.மு.க.
இங்கே ஒரு தன்னிலை விளக்கத்தை கொடுக்கவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படுகிறது.
சென்ற பதிவில் ஜாக் அமைப்பை குறிப்பிட்டிருந்தேன். இந்த பதிவில் த.மு.மு.க. பற்றி குறிப்பிடுகின்றேன்.
எந்த ஒரு இயக்கத்தையும் இதுதான் சரியான இயக்கம் என்றோ, அதற்கு ஆதரவாகவோ எதிர்த்தோ அல்லது அதற்கு நற்சான்றிதழ் கொடுக்கும் விதமாகவோ, அதன் கொள்கைகள், செயல்பாடுகள் அன்றும் இன்றும் உள்ள நிலை பற்றி விமர்சனத்திற்கு உட்படுத்தியோ நான் இந்த பதிவை எழுத முற்படவில்லை. அது இப்பொழுது தேவையும் இல்லை. தோற்றுவிக்கப்பட்ட சமுதாயங்களிலேயே மிக உன்னத சமுதாயம் என்று அல்லாஹ்வால் சிலாகிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் பாதிப்புக்குள்ளாகும்போது, அதில் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய நமக்கு அந்த பாதிப்பு ஏன் ஏற்பட்டது என்ற உண்மை நமக்கு தெரிந்திருக்குமானால் விருப்பு வெறுப்பின்றி உள்ளதை உள்ளபடி மக்களிடத்திலே எடுத்து வைக்கவேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை நாம் யாரும் மறுக்க முடியாது. நான் சொல்லப்போகின்ற செய்திகள் யாருக்கும் தெரியாத புதிய செய்திகள் ஒன்றும் இல்லை. தவ்ஹீதின் ஆரம்ப காலங்களிலும், த.மு.மு.க வின் ஆரம்ப காலங்களிலும் இதன் செயல்பாடுகளில் தன்னை உட்படுத்திக்கொண்ட தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரிந்த செய்திதான். ஏன் இதை இத்தனை வருடங்களுக்கு பிறகு மீட்டுச் சொல்கிறேன் என்றால், நாளை இந்த சமுதாயத்தை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த முறையில் வழிநடத்தி செல்லவேண்டிய இளைஞர்கள் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும். இந்த சமுதாயம் இப்படி பிரிந்து கிடக்கிறதே என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், முதலில் நீங்கள் ஒற்றுமையாகி காட்டுங்கள் பிறகு எங்களை பேசுங்கள் என்று எகத்தாளம் பேசுபவர்களுக்கும் நாம் செய்த தவறுகள் இனியாவது ஒரு படிப்பினையாக இருக்கட்டும் என்பதற்காகத்தான் இதை எழுதுகிறேன்.
தமிழக முஸ்லிம்களின் எழுச்சியாக ஆரம்பிக்கப்பட்ட த.மு.மு.க. சென்னை புரசைவாக்கம் தாக்கர் தெரு அலுவலகத்தில் தனது பயணத்தை தொடங்கியபோது உணர்வு பத்திரிக்கையின் நிருபராக, ஒரு சிறு துரும்பாக என்னையும் நாம் இணைத்துக்கொண்டேன். த.மு.மு.க. ஒரு வெகுஜன இயக்கமாக பரிணமிக்க ஆரம்பித்தவுடன் அதன் ஒவ்வொரு அசைவையும் ஒரு பத்திரிக்கையாளனுக்குரிய பார்வையுடன் மிக உன்னிப்பாக பார்த்து வந்திருக்கிறேன்.
ஜாக் ஆரம்பிக்கப்பட்டபோது மக்கள் மத்தியில் என்ன ஒரு தோற்றம் இருந்ததோ அதே தோற்றம் த.மு.மு.க ஆரம்பிக்கப்பட்டபோதும் இருந்தது. த.மு.மு.க வின் அஸ்திவாரத்தை எழுப்பியவர்களில் அப்போது பி.ஜே. மட்டுமே பிரபலமானவராக இருந்தார். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பாக்கர், ஹைதர் அலி, குணங்குடி ஹனிபா, ஒ.யு. ரஹ்மத்துல்லாஹ், ஏ.எஸ். அலாவுதீன் போன்றவர்கள் மக்களிடத்திலே அவ்வளவாக அறிமுகமாகியிருக்கவில்லை, பிரபலமாக இல்லை. தவ்ஹீத் பிரச்சாரத்தின் மூலம் மக்களிடையே பிரபலமாகி இருந்த மௌலவிகளில் ஒருவர் கூட த.மு.மு.கவின் முக்கிய பொறுப்புக்கு வரவில்லை. அவர்களில் பெரும்பாலோர் பி.ஜே. அவர்களுடன் நல்ல தொடர்பில் இருந்தும், த.மு.மு.க உருவாக்கத்தில் பங்கெடுத்திருந்தும் கூட ஏனோ அவர்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வரவில்லை. பொறுப்புகளிலிருந்த மற்றவர்களை விட பி.ஜே. மட்டுமே மக்களிடத்தில் பிரபலமாக இருந்ததால் த.மு.மு.க என்றாலே பி.ஜே. தான் என்பது போன்ற தோற்றம் தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியிலும், ஏனைய முஸ்லிம்கள் மத்தியிலும் இருந்தது. ஆனால் உண்மை என்னவெனில் மற்ற நிர்வாகிகள் மக்களால் அறியப்படாமல் இருந்தாலும் பிரபலம் இல்லையென்றாலும் த.மு.மு.க வை கட்டமைத்ததில் இவர்களின் பங்கு மகத்தானதாக இருந்தது. அல்லாஹ் அற்புதமான ஒரு கட்டமைப்பை உருவாக்கி தந்திருந்தான்.
த.மு.மு.க வை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பி.ஜே. பிரச்சார பீரங்கியாக செயல்பட்டார். பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இந்த இயக்கம் முஸ்லிம்கள் மத்தியில் மட்டும் முடங்கி விடாமல் அரசியல்ரீதியாக, வெகுஜன ஊடகங்கள், சமூக ஆர்வலர்கள் இன்னும் சொல்லப்போனால் இந்திய அளவில் இந்த இயக்கத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டார்கள். காவல் நிலையம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மட்ட பிரச்சனைகளை ஹைதர் அலியும், பாக்கரும் பார்த்துக்கொண்டார்கள். அலுவலக நிர்வாகத்தை ஒ.யு. ரஹ்மத்துல்லாஹ், ஏ.எஸ். அலாவுதீன் ஆகியோர் பார்த்துக்கொண்டார்கள். உணர்வு பத்திரிக்கையை பி.ஜே., ஜவாஹிருல்லாஹ் வழிகாட்டுதலுடன் நான், DTP ஆபரேட்டர் ஜாகிர், புகைப்படக்காரர் ஹுசைன் ( இவர் தற்போது விகடன் குழுமத்தில் முதன்மை புகைப்படக்காரராக இருக்கிறார் ), பி.ஜே. அவர்களின் தம்பி ஹாஜா பாய், ஏ.எஸ். அலாவுதீன் ஆகியோர் பார்த்துக்கொண்டோம்.
இதை ஏன் நான் இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால் த.மு.மு.க வை வழிநடத்திச்சென்ற தலைவர்களுக்குள் அப்போது எவ்வித ஈகோவும் இல்லாமல் சமுதாய நலன் மட்டுமே கருத்தில்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருந்த கால கட்டம். அற்புதமான கட்டுகோப்புடன் சமுதாயத்தின் எழுச்சியாக உருவாகி செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு இயக்கம் பிறகு எதனால் இரண்டாக உடைந்தது.
பி.ஜே என்கின்ற ஒரு தனி மனிதரின் மனஇச்சை போக்கினாலும், தான் இருக்கக்கூடிய இடத்தில் தனக்கு இரண்டாவது இடத்தில் கூட இன்னொருவர் வந்துவிடக்கூடாது என்ற இறுமாப்பினாலும், தானே எல்லாம் என்ற அகம்பாவத்தினாலும் த.மு.மு.க உடைந்தது என்ற கருத்திற்கு வெளிப்படையான ஆதாரமாகவும், பி.ஜே. அவர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் மனக்கசப்பும் பனிப்போரும் ஆரம்பித்ததற்கான அடையாளமாகவும் அல்-உம்மா பாஷா அவர்கள் விஷயத்தில் பி.ஜே. அவர்கள் நடந்துக்கொண்ட முறைதான் பிணக்கு ஏற்பட ஆரம்பமாக இருந்தது என்பதை அப்போது அங்கிருந்து பார்த்தவர்களால் இன்றைக்கும் மறுக்க முடியாது.
த.மு.மு.க ஆரம்பித்த சில நாட்களில் அல்–உம்மா பாஷா பாய் அவர்கள் சிறையிலிருந்து பிணையில் வெளியாகி பி.ஜே. அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் தாக்கர் தெரு அலுவலகத்தில் வந்து தங்கினார்கள். மக்களுக்கு கோவை பாஷா என்றால், இராம கோபாலனை ரயில் நிலையத்தில் கத்தியை வீசி கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டு, கொலை வழக்கில் சிறையில் இருக்கிறார் என்ற அளவில்தான் அப்போது சிலருக்கு தெரியும்.
இன்ஷா அல்லாஹ் உண்மை வரலாறு தொடரும்...
முந்தைய தொடரை வாசிக்க கீழுள்ள சுட்டியை சுட்டுங்கள்.
No comments:
Post a Comment