உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, June 17, 2018

பிறை விவகாரம்: அதிரை ஆலிம்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் (இதுவோர் மீள்பதிவு)

அன்புநிறை சகோதரர்களே!

இந்த பதிவு 2016 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளின் போதும் தற்போதைய தலைமை காஜியால் பிறை அறிவிப்பில் குழப்பம் ஏற்படுத்தப்பட்ட போது நாம் இக்கோரிக்கையை அதிரையின் ஆலிம்களை நோக்கி வைத்தோம். 

இந்த வருட நோன்புப் பெருநாளின் போதும் தலைமை காஜியால் பிறை அறிவிப்பில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் நமது பதிவை அப்படியே மீண்டும் மீள்பதிவேற்றம் செய்கின்றோம்.

எனினும் 2016 ஆம் வருடத்தில் நிலவிய நிலையை கருத்திற்கொண்டு வெளியிடப்பட்ட இந்தப் பதிவிற்கும் தற்போதைய சூழலுக்கும் இடையில் ஓரிரு விஷயங்களில் மிக மெல்லிய கருத்து மாற்றம் தேவையுள்ளதையும் உணர்ந்தே உள்ளோம். 

அதேபோல் இது நம் அதிரையை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தாலும் தமிழகத்தின் பிற பகுதி மக்களுக்கும் பொருந்தக்கூடியதே.

இவண்
(ஆ.ர்)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இதுவோர் மீள்பதிவு!

இந்த வருட ஈதுல் ஃபித்ரு பெருநாளில் தான் எத்தனை சங்கடங்கள்! குழப்பங்கள்!

1. பெருநாளா? மறுநாளா?
2. கொண்டாட்டமா? திண்டாட்டமா?
3. நோன்பு வைப்பதா? விடுவதா?
4. நோன்பை விடுவது அல்லது பெருநாளை விடுவது ஹராமா? ஹலாலா?
5. ஒரே வீட்டினுள் சிலர் முதல் நாளும், சிலர் அடுத்த நாளும் என 2 நாட்கள் பெருநாள் கொண்டாடுவது சரியா?
6. ஒரே ஊருக்குள் 2 பெருநாட்கள் வருவது சரியா? (ஒரு குழுவினர் மிகச்சில வருடங்களுக்கு முன் 3 வது நாளும் தனித்து பெருநாள் கொண்டாடிய அதிசயமும் நடந்துள்ளது)
7. முதல் நாள் பெருநாள் அறிவிக்கப்பட்டதால் பேணுதலுக்காக நோன்பை விட்டுவிட்டு அடுத்த நாள் பெருநாளை மட்டும் கொண்டாடுவது சரியா?
8. 30வது இரவில் மஃரிப் தொழுகை முடிந்தது முதல் பிறை குறித்து (ஏற்று அல்லது மறுத்து) அறிவிப்பு வெளியிடுவார்கள் என இரவின் நெடுநேரம் வரை அதிரை அறிஞர்கள் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் காத்திருந்து கஷ்டப்பட்டது முறையா?
9. கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பெருநாள் தின சிறப்பு சமையல் குறித்து பெண்கள் முடிவெடுக்க முடியாது அல்லாடவிட்டது நியாயமா?
10. ஆண்களில்லா வீட்டிலுள்ள பெண்கள் இரவெல்லாம் அறிவிப்பை எதிர்பார்த்திருந்து விட்டு அடுத்த நாள் காலையில் சமையல் செய்வார்களா? அல்லது பெருநாள் தொழுகைக்கு தயாராவார்களா?

என இன்னும் மக்கள் சந்தித்த சங்கடங்களின் பட்டியலை நீட்ட முடியும் என்றாலும் அதிரை மக்களின் மனங்களை உணர்ந்து கொள்ள இதுவே போதுமானது.

மேற்படி புயலடித்து ஒய்ந்துள்ள இந்த சூழலே பிறை குறித்து நமதூர் ஆலிம்களுக்கு வேண்டுகோள் விடுக்க சரியான தருணமாக கருதுகிறோம். இந்த வருட ரமலான் பெருநாள் பலத்த பெரும் சர்ச்சைகளுக்கிடையே கடந்து சென்று விட்டது. சர்ச்சையின் பிரதான காரணங்களாக நாங்கள் 4 விஷயங்களை கருதுகிறோம்.

1. நம்பகமற்றவர்களாக மக்களால் கருதப்படும் ஒரு குழுவினரால் முதலில் பிறை அறிவிக்கப்பட்டது.
2. நம்பகமானவராக தெரிந்த தலைமை காஜியின் பிறை அறிவிப்பு பல்வேறு காரணிகளால் மக்களின் நம்பிக்கையை தகர்த்தது.
3. காயல்பாட்டிணத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த மதுஹப் ஆதரவு மக்களின் நம்பகமான பிறை அறிவிப்புகளை, மக்களின் கவனத்திற்கு கூட கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
4. எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி, பிறை காணும் முன்பாகவே பெருநாள் விடுமுறை நாளாக வியாழக்கிழமையை (செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கெல்லாம் அரசு அலுவலகங்களில் சுற்றறிக்கை மூலம்) திணித்து விட்ட தமிழக அரசினரின் காரணம் அறிவிக்கப்படாத நிர்ப்பந்தம். (உண்மை நிலையை இதன் விபரமறிந்த த.ந.அரசு ஊழியர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது)

மேற்படி காரணிகளை பலரும் பலவாறாக ஆய்ந்துவிட்ட நிலையிலும், தூவானமாய் சிலர் அப்பாடா! நல்லவேளை எங்கள் கட்சி தற்போது ஆட்சியிலில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் மேலும் எங்கள் பங்கிற்கு உரசிக் கொண்டிருக்காமல் அதிரை ஆலிம்களிடம் சமர்ப்பிக்க நினைக்கும் எங்கள் கருத்தினுள் நுழைகிறோம்.

வரலாற்றுபூர்வமாக நம் அதிரை மக்கள் பிறை விஷயத்தில் நமதூர் ஆலிம்களின் தீர்ப்பை பின்பற்றியே நோன்பையும் பெருநாளையும் கடைபிடிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளோம்.

நமதூர் ஆலிம்கள் பிறை பார்க்க வேண்டிய நாட்களில் அன்றைய 'மரைக்கா பள்ளியில்' கூடி உள்ளூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது வெளியூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது அதிரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரமேயுள்ள இலங்கை பிறையின் (அன்றைய காலத்தில் நம் தொடர்பு எல்லைக்குள்ளிருந்த ஒரே சர்வதேச பிறை) அடிப்படையிலோ இன்றுபோல் தொலைத்தொடர்பு வசதிகளற்ற முந்தைய காலங்களில் பிறை அறிவிப்பை விடுத்து வந்தனர். 

இலங்கை பிறை என்பது பலமுறை இலங்கை வானொலியின் அறிவிப்பை 'கேட்டு' ஏற்பதாகவே இருந்ததும் உண்மை. ஊருக்கு ஒரு சில போன்கள் மட்டுமே அபூர்வமாக இருந்தபோதும் அவற்றினூடாகவும் பிறை பார்த்தலை கேட்டு உறுதி செய்து கொண்டுள்ளோம். நமதூர் ஆலிம்களின் மசூரா அடிப்படையிலான பிறை அறிவிப்பை மதுக்கூர், முத்துப்பேட்டை, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற நமது பக்கத்து ஊரார்களும் ஏற்று செயல்படுத்தி வந்தனர் என்பதும் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.

ஏன் அப்போது சர்ச்சைகள் எழவில்லையா? எழுந்தன, ஆனால் அவை ஏன் எங்கள் பகுதிக்கு நேரத்தோடு தகவல் சொல்லி அனுப்பவில்லை? ஏன் மிகத் தாமதமாக அறிவிக்கின்றீர்கள் என்ற அளவிலேயே இருந்தன என்றாலும் மக்கள் ஆலிம்களிம் பிறை தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் அறிந்து ஒரேயொரு வருடம் மட்டும் தகவல் அறிவிப்பு அவர்களிடம் நேரத்திற்கு சொல்லப்படாத காரணத்தால் ஆலிம்களின் பிறை அறிவிப்பை சில தெருக்கள் மட்டும் ஏற்கவில்லை என்பதாக எங்கள் ஞாபகம். சர்ச்சைகள் எத்தனை எழுந்து அடங்கினாலும் அதிரைக்கு பெருநாள் தினம் என்பது ஒரே தினமாகத் தான் இருந்தது.

பல வருடங்கள் மக்கள் சுபுஹூக்குப்பின் காலை வேளையை அடைந்த நிலையில் வெளியூர்களில் பிறை பார்த்த நம்பகமாக செய்திகள் தாமதமாக கிடைத்து அதிரை ஆலிம்களால் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதற்கு அல்லாஹ்வின் அருளால் இன்னும் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வாழும் சாட்சி.

மேலும், தலைமை காஜி அல்லது மாவட்ட காஜி அல்லது டவுன் காஜி அல்லது உள்ளூர் காஜி என்பன போன்ற தமிழக அரசு ஊழியர்களின் அறிவிப்பின் அடிப்படையில் அதிரையில் பிறை அறிவிப்புகள் செய்யப்பட்டதே இல்லை என்பதையும் பிறை ஆலோசணை அமர்வுகளில் பங்கு கொண்டு வந்த, இன்னும் அல்லாஹ்வின் அருளால் ஹயாத்துடன் உள்ள ஆலிம்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம். ஒருவேளை இத்தகவல் பிழையென்றால் எங்கள் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்.

அரசு காஜிகள், அமைப்பு காஜி, (அரசியல் கூட்டணி தர்ம) ஹிலால் கமிட்டி, அனைத்து தேசிய, மாநில இயக்கங்களின் பிறை அறிவிப்புகள், கணிப்புகள் போன்ற குழப்பங்கள் பெருகியுள்ள நிலையில் அவைகளின் அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், அதேவேளை இன்று தகவல் தொழிற்நுட்பங்கள் பெருகியுள்ள நிலையில், திறந்த மனதுடன் சர்வதேசப் பிறை முதல் உள்ளூர் பிறை வரை நாம் ஏற்று ஆலோசித்து அதிரையில் முன்பு அமல்படுத்தியவர்கள் என்ற கடந்த கால வரலாற்றை மீண்டும் நம்மால் செயல்படுத்திட இயலும் என்ற இறை சார்ந்த நம்பிக்கை மேலோங்குவதாலும் அதிரை ஆலிம்கள் மீண்டும் அதிரைக்கான ஒரு பிறை கமிட்டியை ஏற்படுத்தி அதின் புற உறுப்பினர்களாக பள்ளிக்கு ஒருவரையும், உங்களோடு பிறை விஷயத்தில் ஒத்துவருகின்ற உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இடம் பெறச்செய்து, பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் சர்வதேசம் முதல் உள்நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், உள்ளூர் என அனைத்து நம்பகத் தகவல்களையும் திறந்த மனதுடன் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆய்ந்த மசூரா முடிவினை அதிரைக்கான பிறை மற்றும் பெருநாளாக அறிவிக்க முன்வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.

இனியொரு முறை இயக்கங்களோ, காஜிகளோ, அரசோ நமது அதிரையின் பிறை நாட்களை தீர்மானிக்க நாம் இடமளிக்க வேண்டாம். பிறை பார்த்த, பார்த்ததை கேட்ட நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் நோன்பை நோற்கவும், பெருநாளை கொண்டாடவும் மீண்டும் அதிரையர்கள் அனைவரும் முன்வர வேண்டும் அதற்கு முன்முயற்சிகளை அதிரை ஆலிம்கள் இப்போதே துவங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

வரும் ஹஜ்ஜூப் பெருநாளாவது அதிரையர் அனைவரும் முன்பு போல் ஒரே நாளில் கொண்டாடிய பெருநாட்கள் போல் அமைய எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கின்றோம்.

வேண்டுதல்: 
ஆலீம்களுடன் தொடர்புடைய உள்ளூர் சகோதரர்கள் இந்த வேண்டுகோளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இது பல நல்ல புரிந்துணர்வுகளுக்கு இனிய துவக்கமாய் அமையட்டும்.

இவண்
அமீரகம் வாழ் அதிரை சகோதரர்கள்