உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, January 31, 2014

செடியன் குளத்தில் ADT நடத்திய மழை தொழுகையில் பெரும்திரளானோர் பங்கேற்பு !

செடியன் குளத்தில் ADT நடத்திய மழை தொழுகையில் பெரும்திரளானோர் பங்கேற்பு !

அதிரைக்கு மழை வேண்டி வறண்டு காணப்படும் நமதூர் செடியன் குளத்தில் இன்று காலை 9 மணியளவில் அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

அடிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சிறுவர்கள், பெண்கள் உட்பட பெரும்பாலானோர் திரளாக வருகை தந்து கலந்துகொண்டனர்.

முன்னதாக மார்க்க பிராச்சாரகர் அப்துல் ஹமீது அவர்களால் மழை தொழுகை குறித்து விளக்கத்தில் 'சட்டையை திருப்பி அணிந்து தொழுகும் படியும், மழை வேண்டி இறைவனிடம்  இரு கைகளின் புறங்கைகளை உயர்த்தி பிரார்த்தியுங்கள்' என குறிப்பிட்டு பேசினார்.

ஒழு செய்வதற்காக ட்ரம்களில் தண்ணீர் நிரப்பி வைத்து இருந்தனர். ஆங்காங்கே தண்ணீர் பாக்கெட்களும் விநியோகம் செய்யப்பட்டன. தொழுவதற்காக வந்திருந்த பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தொழுகை முடிந்தவுடன் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக நீடித்த இந்த பிரார்த்தனையில் தொழுகையில் கலந்துகொண்ட அனைவரும் இறைவனிடம் மனம் உருகி தனித்தனியே பிரார்த்தனை செய்தார்கள்.







 
Thanks to: Adirai News 
http://theadirainews.blogspot.com/2014/02/adt.html
 
 குறிப்பு:
அன்பான அதிரை சொந்தங்களே! இணைய, வலைதள நிர்வாகிகளே!

ADT அழைப்பை ஏற்று தொழுகையில் கலந்து கொண்டதுடன் ஊரின் நலனுக்காக மார்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து பிரார்த்தித்த ஈர நெஞ்சங்களே! செய்தி வெளியிட்டு கடமையாற்றிய இணைய சகோதரர்களே! உங்களின் மானமார்ந்த பிரார்த்தனையை ஏற்று எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூரின் மீதும் இன்னும் தேவையுடைய அனைத்து பிரதேசங்களின் மீதும் மழையை வருஷிப்பானா! உங்கள் ஒவ்வொருவர் மீது தன் பேரருளையும் இரக்கத்தையும் பொழிவானாக! என இருகரமேந்தி இறைஞ்சுகிறோம்.
 

Wednesday, January 29, 2014

01.02.2014 அன்று அதிரைக்கு மழை வேண்டி தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் செடியன்குளத்தில் மழைத் தொழுகை


நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில்,

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை (01/02/2014) அன்று, அதிரைக்கு மழை வேண்டி தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் செழியன் குளத்தில் 'மழைத் தொழுகை' நடத்த முன்னேற்பாடுகளை அதிரை தாருத் தவ்ஹீத் (ADT) செய்து வருகின்றது.

அனைவரும் திரண்டு வாரீர் என அன்போடு அழைக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு:
சகோதரர் ஜமாலுதீன் 9488111121



Monday, January 20, 2014

உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறக் கூடாது!

மோடிக்கு ஒரு திறந்த மடல் - க.கனகராஜ் (CPI-M) - ஜூனியர் விகடன் / 15 Jan, 2014 - உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறக் கூடாது!‏



அன்புள்ள மோடி!

வணக்கம்.

அன்புள்ள என்பது சம்பிரதாயம் அல்ல. நாகரிகம் அடைந்த மனிதனால் இன்னொரு மனிதனை வெறுக்க முடியாது. ஒருவருடைய கருத்துக்கள் தவறானவை எனில், அவற்றை வெறுக்கலாம். மனிதனை அல்ல!


தங்களது வலைப்பூவில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் யாரையும் உலுக்கிவிடும். நானும் விதிவிலக்கல்ல. அனைவரையும் சகோதர, சகோதரிகளே என்று அழைத்திருக்கிறீர்கள். சகோதர, சகோதரிகளின் உரிமைகளில் ஏற்றத்தாழ்வு இருக்க முடியாது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் அப்படித்தான் தாங்கள் கருதுகிறீர்களா? ''இந்தியாவில் உள்ள இந்துக்கள் அல்லாதோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள்... அனைவரும் இந்துக்களாக மாற வேண்டும் அல்லது, இரண்டாந்தர குடிமக்களாக அடங்கியிருக்க வேண்டும்'' என்கிற உங்கள் தாய் ஸ்தாபனத்தின் கருத்துக்களை மறுதலிக்கிறீர்களா? அப்படி வெளிப்படையாக நீங்கள் பேசாத பட்சத்தில், இந்த வார்த்தைகள் உணர்வல்ல; வெறும் வார்த்தைகள் மட்டுமே. இவை கபடத்தனமானவை; பெரும் துயரத்துக்கான அழைப்பு என்பதைத் தவிர வேறில்லை.

இரண்டாவதாக மிக மோசமாக பூகம்பத்தின் பாதிப்பையும் முஸ்லிம் மக்கள் மீதான அழித்தொழிப்பு நடவடிக்கையையும் நளினமாகவும் லாகவமாகவும் இணைத்திருக்கிறீர்கள். அதன் மூலம் இரண்டும் இயற்கையானவை; தடுத்திருக்க முடியாதவை என்று நம்பவைக்க முயற்சிக்கிறீர்கள்.

இரண்டும் ஒன்றுதானா? பேரழிவின் உக்கிரம், உயிரிழப்பு, பொருட்சேதம் இவையெல்லாம் ஒப்பிடத்தக்கவையே. ஆனால், காரணம் ஒப்பிடத்தக்கதா? பி.ஜே.பி-யின் அதிகாரப்பூர்வ ஊடகத் தொடர்பாளராக இருந்த வி.கே.மல்கோத்ரா, 'குஜராத் படுகொலைகளுக்காக நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்றால், பூகம்ப அழிவுகளுக்காக கேசுபாய் பட்டேல் பதவி விலகியிருக்க வேண்டுமா?’ என்று கேட்டார். அதே மனநிலையில்தான் தாங்களும் இன்று இருக்கிறீர்கள் என்பதை உங்களால் மறைக்க முடியவில்லை.

மூன்றாவதாக, 'நான் அடியோடு கலங்கிப்போனேன். துக்கம், வருத்தம், துயரம், வலி, மனவேதனை, துயரம் இந்த வார்த்தைகள் எதுவும் அந்த மனிதாபிமானம் அற்ற செய்கையை உணர்ந்தவர்களின் துயரத்தை பிரதிபலிக்க சக்தி அற்றவை’ என்று உங்கள் கடிதம் கூறுகிறது.

அது உண்மையானால் மிக்க மகிழ்ச்சி. ஆனால், நீங்கள் உண்மையாகப் பேசியிருக்கிறீர்களா...? ''குஜராத்தின் ஒட்டுமொத்த மக்களும் ஆத்திரப்பட்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டால் (வன்முறைகள்) இன்னும் மோசமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது'' என்று பேசியிருக்கிறீர்கள். இன்னும் மோசம் என்றால் எதை எதிர்பார்த்தீர்கள்? குஜராத்தின் எந்த மூலையிலும் யாதொரு முஸ்லிமும் இல்லாத அளவுக்கான அழித்தொழித்தலையா? ஒருவேளை நீங்கள் சொல்லக்கூடும், இது எங்கள் கணிப்பென்று. ஆனால், 2002 மார்ச் 3-ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கூறினீர்களே... அந்த அவக்கேடான வார்த்தைகள் உண்மையான மோடியை உலகுக்குக் காட்டியது. 
 
'இத்தனை காட்டுமிராண்டித்தனங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதே?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, உங்கள் அறிவியல் அறிவை வெளிப்படுத்தி விளக்கினீர்கள். நியூட்டனின் மூன்றாவது விதியைக் கூறினீர்கள். ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்ச்செயல் நடக்கும் என்று கூறினீர்கள். இதுதான் தாங்கள் துயரத்தை வெளிப்படுத்திய முறை. தாங்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்த கதையை, இந்த ஒற்றை வாக்கியம் பளிச்சென்று சொல்கிறது.

பல பேரைக் கொன்றவர்கள், குழந்தைகளைக் கொன்றவர்கள், காமக்கொடூரர்கள் இவர்களையெல்லாம் விசாரித்து தூக்கில் போடும்போதுகூட, தூக்கிலிடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்கூட, ஒரு உயிர்போவதைக் கண்டு, மரணத்தின் வலி கண்டு உடைந்து நொறுங்கியிருக்கிறார்கள். அப்பாவிகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதை, கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவை ஆயுதத்தால் குத்தி கூட்டமாய் நின்று நெருப்பில் பொசுக்கியதை, நியூட்டனைத் துணைக்கு அழைத்து நியாயப்படுத்துவதுதான் நீங்கள் துயரம் அடைந்ததை வெளிப்படுத்தும் முறையா... அல்லது, நாகரிகம் வளர்கிறபோது காண்டுமிராண்டித்தனமும் கூடவே வளரும் என்று சொல்லும் முறையா?

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இஷான் ஜாஃப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் 19 பேரும், அந்த அடுக்குமாடியில் இருந்த 68 பேரும் உயிரோடு கொளுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். அது குறித்து பத்திரிகைகள் கேட்டபோது அவர் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதால்தான் கொளுத்தப்பட்டார் என்று கூறினீர்கள். ஏன் சுட்டார் என்ற கேள்விக்கு, அது அவருடைய இயல்பான குணமாக இருக்கலாம் என்றீர்கள். பின்னர் பத்திரிகைகள் எழுதின... 'இஷான் ஜாஃப்ரி சிறந்த நூலகம் ஒன்றை வைத்திருந்தார். அந்த நூலகத்தில் சிட்டுக்குருவி கூடுகட்டி அடைகாத்திருந்தது. ஃபேன் சுற்றினால் பறக்கும் குருவிக்கு காயம் ஏற்படும் என்பதால், ஃபேன் சுவிட்சையே ஆன்செய்ய முடியாமல் ஒட்டி வைத்திருந்தார் என்று.

ஒரு வாதத்திற்காக அவர் சுட்டார் என்று வைத்துக்கொண்டால்கூட, அந்தக் குடும்பத்தில் இதர 19 பேர் (குழந்தைகளும் அடக்கம்) என்ன பாவம் செய்தார்கள்? இதுதான் நீங்கள் வார்த்தைகளால் சொல்ல முடியாமல் வருத்தத்தை அனுபவித்த முறையா?

இதேபோன்று பந்வாரா கிராமத்தில் 38 முஸ்லிம்கள் எரித்துக் கொல்லப்பட்டதை ஷினீணீறீறீ ஞிவீstuக்ஷீதீணீஸீநீமீ என்று குறிப்பிட்டதுதான் உங்கள் சொல்ல முடியாத துயரமா?

நான்காவதாக, சிறுபான்மை மக்களின் மீது ஒரு அழித்தொழித்தல் நடவடிக்கை நடந்துகொண்டிருந்தபோது என்றாவது, 'அதை நிறுத்துங்கள்’ என்று நீங்கள் பேசியது உண்டா? அப்போதைய பிரதமர் திரு.வாஜ்பாய் கூட 'இந்த தேசத்தின் நெற்றியில் கரும்புள்ளி’. 'இந்தப் படுகொலையில் குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட்டது உலகின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைக் குறைத்துள்ளது’ என்று குறிப்பிட்டார். தாங்கள் எப்போதாவது அப்படி பேசியது உண்டா? வன்முறை என்கிற வார்த்தையைக்கூட பயன்படுத்தியது இல்லையே? ''இயற்கையான கோபத்தின் வெளிப்பாடு'' என்றல்லவா கூறினீர்கள்.

இறந்தவர்களின் குடும்பத்துக்கான இழப்பீட்டில்கூட ஓரவஞ்சனை காட்டினீர்கள். ரயில் எரிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு இரண்டு லட்ச ரூபாயும், வன்முறையில் எரித்தும் வெட்டியும் உயிரோடு புதைத்தும் கொல்லப்பட்டவர்கள் குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாயும் என்று அறிவித்தீர்கள். கடுமையான எதிர்ப்புக்குப் பின்னர் அனைவருக்கும் ரூ.1 லட்சம் என்று அறிவித்தீர்கள். ரூ.2 லட்சம் என்றால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே குறைத்தீர்கள்.

உங்கள் கரிசனத்தில்கூட சரிசமம் இல்லை என்பதை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். இதுதான் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வலியின் வெளிப்பாடா? காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை உங்கள் காவல் துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. உங்கள் காவல் துறைத் தலைவர் சமூக உணர்வு காவல் துறையிலும் பிரதிபலிக்கும் என்று நியாயப்படுத்தினார். போலீஸ் வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல; பல இடங்களில் காட்டுமிராண்டித்தனமான கும்பலுக்குத் துணைபோனதை ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

போலீஸ் வண்டியைப் பார்த்து கலவரக்காரர்கள் தயங்கியபோது போலீஸ் அவர்களை ஊக்கப்படுத்தி கைக்காட்டியதும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில் பங்கு வாங்கிச் சென்றதும்கூட பதிவு செய்யப்பட்டிருக்கிறது. யார் மீதாவது நீங்கள் நடவடிக்கை எடுத்தது உண்டா? மோடி அவர்களே... துக்கம் தொண்டையடைக்க இன்று வரை செய்வதறியாது நிற்கிறீர்களோ?
உங்கள் காவல் துறை கலவரத் துறையாகிவிட்டது. ராணுவம் வந்தது. ஆனால், அதை நீங்கள் பயன்படுத்தாமல் காலம் தாழ்த்தினீர்கள். ஏனென்று கேட்டால், 'ராணுவத்துடன் ஒரு மேஜிஸ்திரேட் செல்ல வேண்டும். மேஜிஸ்திரேட் கிடைக்கவில்லை’ என்றீர்கள். இதுவெல்லாம் உங்கள் மனவேதனையின் வெளிப்பாடுதான் என்கிறீர்களா?

இவையெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் இந்த 10 காலத்தில் இந்த குற்றங்களுக்காக உங்கள் அரசாங்கம் தானே முன்வந்து யாரையேனும் தண்டித்திருக்கிறதா? இல்லையே!

மாறாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த மாயாபென் கோட்னானி - அவர் மகப்பேறு மருத்துவரும்கூட - கொலைகாரர்களைத் தூண்டிக்கொண்டிருந்தார் என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆனால், அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அலங்கரித்தீர்கள். கொலை செய்தால் அமைச்சர்! என்னே உங்கள் காருண்யம்!

இந்தக் கொலைகள் நடந்து ஒரு வாரம் ஆன பின்பும் படுகொலைகளில் சம்பந்தப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் ஆட்கள் யாரையும் உங்கள் அரசு கைது செய்யவில்லையே என்று கேட்டபோது, யார் மீதும் புகார் வரவில்லை என்றீர்கள். அந்தக் காலத்தில் 72 மணி நேரத்தில் கலவரத்தை அடக்கிவிட்டதாக மார்தட்டினீர்கள். ஒருவேளை உண்மையாக இருக்கக் கூடும். கலவரம் என்றால் இரு தரப்பும் மோதுவது; அரசும் போலீஸும் காட்டுமிராண்டிக் கும்பலுடன் சேர்ந்துவிட்டது. வெட்டப்படுவோரும் எரிக்கப்படுவோரும் எப்படி எதிர்த்து நிற்பார்கள். உண்மையில் இப்படியரு விபரீதத்தை உலகம் கண்டிருக்காதுதான்.

மோடி அவர்களே... இப்போதும்கூட மேற்கண்ட கடிதத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் குறித்து நீங்கள் பேசவில்லை; பேசமாட்டீர்கள்; 2002 செப்டம்பர் மாதத்தில் நீங்கள் பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம். நாம் ஐவர்; நமக்கு இருபத்தைவர் என்று நொந்து கிடந்த மக்களைக் கேலி செய்தீர்கள். நிவாரண முகாம்களின் அவல நிலையைச் சுட்டிக்காட்டியபோது, குழந்தைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் என்று ஏகடியம் பேசினீர்கள். கருணை மழையே, மோடி ராசா! உங்கள் கடிதம் உண்மையும் அல்ல, உண்மை உணர்வும் அல்ல.

அந்தக் கடிதத்தில் உங்கள் நேர்மை வெளிப்படவில்லை. நீங்கள் நியமித்துள்ள 'ஆப்கோ வேர்ல்ட் வைடு’ நிறுவனத்தின் திறமையும், சாகசமும் வெளிப்படுகிறது. ஒப்பனைக்காரர்களின் திறமையால் யாரும் அழகாகிவிட்டதாக சொன்னால், அது உண்மையெனில், நீங்கள் கருணா முர்த்திதான்.

ஆனால் ஒன்று மோடி அவர்களே... உங்களது துக்கமே இந்த நாட்டு மக்களுக்கு இத்தனை பேரழிவைக் கொண்டுவருமென்றால் உங்களது சந்தோஷம் மனித குலத்துக்கே பேரழிவாய் முடியும். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறாதிருக்க நாகரிக சமூகத்தின் மீது நம்பிக்கை கொள்கிறோம்.

இப்படிக்கு,
ஒரு மனசாட்சியுள்ள மனிதன்
க.கனகராஜ் (CPI-M)
ஜூனியர் விகடன்     /     15 Jan, 2014

Monday, January 6, 2014

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆவணமாக வங்கிக் கணக்குப் புத்தகம்: தென் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு

பொதுத்துறை வங்கிகளின் கணக்குப் புத்தகம் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என தென் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் செந்தில் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தங்களின் பொதுத்துறை வங்கிகளின் வங்கிக்கணக்கு புத்தகம் மற்றும் வங்கிக்கணக்கு விவரத்தை ஒரு ஆவணமாக சமர்ப்பிக்கலாம். 

எந்தெந்த வங்கிகள்? : 
அலகாபாத் வங்கி, 
ஆந்திரா வங்கி, 
பாங்க் ஆப் பரோடா, 
பாங்க் ஆப் இந்தியா, 
பாங்க் ஆப் மகாராஷ்ட்ரா, 
கனரா வங்கி, 
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 
காப்ரேஷன் பாங்க், 
தேனா பாங்க், 
இந்தியன் வங்கி, 
இந்தியன் ஓவர்சீஸ் பாங்க், 
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், 
பஞ்சாப் நேஷ்னல் பாங்க், 
பஞ்சாப் அண்ட் சிந்த் பாங்க், 
சிண்டிகேட் பாங்க், 
யூனியன் பாங்க் ஆப் இந்தியா, 
யுனைட்டட் பாங்க் ஆப் இந்தியா, 
யுகோ பாங்க், விஜயா பாங்க், 
ஜடிபிஐ பாங்க், 
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, 
ஸ்டேட் பாங்க் ஆப் பீக்கானிர் அண்ட் ஜெய்பூர், 
ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, 
ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், 
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், 
ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் 
ஆகிய வங்களின் கணக்கு புத்தகங்கள் அல்லது கணக்கு விவரம், பாஸ்போர்ட் பெற ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்.

Thanks to: Dinamani (07.01.2014)

Thursday, January 2, 2014

''உண்மையான பௌத்தனை தலைகுனியச் செய்யும் செயல்களே இலங்கையில் நடக்கிறது''

நான் ஒரு தூயபௌத்தன். பௌத்த மதக்கோட்பாடுகளையும், புத்த பெருமானுடைய போதனைகளையும் முழுமையாக கடைப்பிடித்து வருபவன். பௌத்த மதக்கோட்பாடுகளுக்கமைய சகல இனமக்களையும் ஒன்றாகவே மதிக்கின்றேன். சகல மதங்களும் நல்லனவற்றையே போதிக்கின்றன. சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் ஒரு மதத்தை நிந்திப்பதை நான் முழுமையாக எதிர்க்கின்றேன். புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார்கள். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது. அவ்வாறு காட்டுவது தான் ஹராம்...'' என ஹலாலுக்கு சார்பாக குரல் கொடுத்தமைக்காக பொது பலசேனாவினால் தாக்குதலுக்கு உட்பட்டவரும், மஹியங்கனை ரொட்டலிவள விகாரையின் தலைமை பிக்குவும், மஹியங்கனை உள்ளுராட்சி சபையின் உறுப்பினரும், ஸ்ரீலங்கா விமுக்தி பலவேகய அமைப்பின் பிரதம காரியதரிசியுமான வட்டரக விஜித ஹிமி அவர்கள் தெரிவித்தார்.
2009ம் ஆண்டு வடக்குக் கிழக்கு யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத மதவாதப் பிரசாரங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அண்மைக்காலமாக முஸ்லிம்களின் வணக்கத்தலங்களை மூடிவிடுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்ல முஸ்லிம்கள் காலாகாலமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் இருந்து அவர்களை வெளியேற்றுவதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளும் நடந்த வண்ணமேயுள்ளன. ஒரு பௌத்த மதத் துறவியைத் தலைவராகக் கொண்ட பொதுபல சேனாவினால் ஹலால் எதிர்ப்புடன் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான செயல்பாடுகள் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் - நிகாப் உடை, மற்றும் மத கலாசார விடயங்கள், முஸ்லிம்களின் வர்த்தகத்தைப் புறக்கணித்தல், முஸ்லிம் மதஸ்தானங்களை தாக்குதல் காலாகாலமாக வாழ்ந்து வரும் பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றும் முயற்சிகள் என வியாபித்து வருகின்றன. இவை தொடர்பாக வட்டரக விஜித ஹிமி அவர்கள் 'விடிவெள்ளிக்கு' வழங்கிய பிரத்தியேக நேர் காணலைக் கீழே தொகுத்துத் தருகின்றேன்.
கேள்வி:- வடக்கு கிழக்கு யுத்தம் முடிந்த பிறகு இலங்கையில் மற்றுமொரு சிறுபான்மை இனத்தவர்களாக வாழக்கூடிய முஸ்லிம்களின் மத, கலாசார, பொருளாதார உரிமைகளைப் பறித்து பௌத்த முஸ்லிம் மக்களிடையே காணப்படும் நல்லுறவைச் சீர்குலைக்க பௌத்த மக்களிடம் புதிதாகத் தோன்றிய சில அமைப்புக்கள் முனைந்து வருகின்றன. ஒரு விகாரையின் தலைமைபிக்குவும்; நீண்டகாலமாக முஸ்லிம் மக்களுடன் நல்லுறவைப் பேணிவருபவருமான நீங்கள் இதனை எத்தகைய கோணத்தில் அவதானிக்கின்றீர்கள்?
பதில்: ஒவ்வொரு உண்மையான பௌத்தனையும் தலை குனியச் செய்யும் ஒரு விடயமாகவே இதனை நான் காண்கின்றேன். பௌத்த முஸ்லிம் மக்களிடையே காணப்படும் நல்லுறவை சீர்குலைக்க 2009ம் ஆண்டின் பின்னர் தோன்றிய சில அமைப்புக்களின் இச் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது பௌத்த மதக்கோட்பாடுகளுக்கு முரணானது. புத்தபெருமான் உலகில் வாழும் அனைத்து மக்களையும் ஒன்றாகவே மதித்தார். எந்தவொரு மனிதனுக்கோ, மதத்துக்கோ, வேறுபாடு காட்டக்கூடாது என்றே போதித்தார். நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கும் போதும் சரியே, நின்று கொண்டிருக்கும் போதும் சரியே, படுத்திருக்கும் போதும் சரியே, நடமாடும் போதும் சரியே சகலருக்கும்; அனைத்து விடயங்களும் நலமாகவே அமையவேண்டுமென்றே நினைத்துக் கொள்ளுங்கள் அனைவரினதும் வறுமை ஒழியவேண்டும், பொருளாதாரம் செழிக்க வேண்டும் இதனூடாக அமைதியும், சாந்தியும், சமாதானமும் நிலைக்க வேண்டும் என்று தான் பௌத்தம் போதிக்கின்றது. இன்னொரு மதத்தாரின் மதக்கலாசாரங்களையும் மதக்கிரியைகளையும் தடைசெய்ய வேண்டுமெனவோ மதஸ்தானங்களை மூடவேண்டும் தாக்க வேண்டும் எனவோ எந்தவொரு இடத்திலும் பிரஸ்தாபித்தில்லை. இவ்வாறாக அந்த அமைப்புகள் மேற்கொள்வது பௌத்த மதத்தையே இழிவுபடுத்தும் ஒரு செயற்பாடாகும். ஒரு தூய பௌத்தன் இதுபோன்ற செயல்களுக்கு என்றும் துணைபோகமாட்டான்.
கேள்வி:- இருப்பினும் அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கெதிரான பொதுபலசேனாவின் நடவடிக்கைகள் பெரிதும் அதிகரித்து வருகின்றனவே. ஒரு விகாரையின் தலைமை பிக்கு, மற்றும் ஆளும் கட்சியான பொதுசன ஜக்கிய முன்னணியின் மஹியங்கனை உள்ளுராட்சி சபை உறுப்பினர் என்ற வகையில் இந்தப்பிரச்சினையின் உண்மை நிலையை மக்கள் முன் தெளிவுபடுத்த ஏதும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்களா?
பதில்: கடந்த ஆகஸ்ட் மாதம் 02ம் திகதி மஹியங்கனை நகரில் பொதுபலசேனா ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தியது. அக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தினைத் தூண்டக்கூடிய அவர்களின் பிரச்சாரத்தை செவியுற்று நான் மிகவும் வேதனையடைந்தேன். ''உண்மையான பௌத்தனை தலைகுனியச் செய்யும் செயல்களே இலங்கையில் நடக்கிறது'' முஸ்லிம் பெண்களின் நிகாப் ஹிஜாப் ஆடையை கொச்சைப்படுத்தக் கூடிய வகையில் 'கோனிபில்லா எந்தும கலவமு' என்ற பேனர்கள் அடிக்கப்பட்டிருந்தன. மிகவும் மனம் நொந்து போயிருந்த நேரத்தில் ஆகஸ்ட் மாதம் 08ம் தேதி பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மலையக முஸ்லிம் கவுன்ஸிலினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'இப்தார் நிகழ்ச்சிக்'கு என்னை பிரதம அதிதியாக அழைத்திருந்தனர். பொதுபல சேனாவின் இந்த இனவாதப்பிரச்சாரங்களுக்கு அந்த இப்தார் நிகழ்ச்சியே தக்க பதிலை வழங்கத் தருணம் எனத் தீர்மானித்தேன். அந்த இப்தார் நிகழ்ச்சிக்கு பிரதேச செயலர் உட்பட பல முக்கிய அரசியல் தலைவர்களும் அங்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்விலே பொதுபலசேனாவின் இனவாத நடவடிக்கைக்களுக்காக முதலில் குரல் கொடுத்தேன். இதன் விளைவாகத்தான் பொதுபலசேனாவினால் நான் தாக்குதலுக்கு உட்பட்டேன். சுமார் பத்து ஆண்டுகாலமாக வகித்த பௌத்தமத கலாசார அதிகாரி பதவியையும் இழந்தேன். இன்று இருக்க இடமில்லாமல் என் சிஸ்யர்களை பார்க்கமுடியாமல் ஒவ்வொரு பன்சலவிலும் உயிர் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றேன்.
கேள்வி: பொதுபலசேனாவின் நோக்கம் என்னவாக இருக்கலாம்?
பதில்: இனவாதத்தைத் தூண்டி மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவது இவர்களின் நோக்கமாக இருக்கலாம். ஹலால் பிரச்சினையை முன்வைக்கின்றார்கள். ஹலால் என்பதன் சரியான விளக்கத்தை அவர்கள் அறிந்து கொள்ளாமல் கதைக்கின்றார்கள். இனவாதத்தைத் தூண்டி ஓர் இனத்தை பாதிப்புறச் செய்வது, பௌத்த போதனைகளின் அடிப்படையிலும் ஹராம் என்பதை நான் ஆணித்தரமாக அவர்களுக்கு கூற விரும்புகின்றேன். முஸ்லிம்களின் அடையாள உடையாக நிகாப் அணியக்கூடாது என அவர்கள் கூறுகின்றார்கள். நிகாப் அணிந்து கொண்டு அரச விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக பிரச்சாரம் செய்கின்றார்கள். நான் அறிந்த வரை நிகாப் அணிந்து கொண்டு இலங்கையில் வன்முறைகள் நடந்தமைக்காக எந்தவித ஆதாரங்களுமில்லை. சில நேரங்களில் வேண்டுமென்றே சில சக்திகள் செயற்பட்டாலும் கூட இலங்கை முஸ்லிம் பெண்கள் வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களுமில்லை. இன்று எமது சில பௌத்த இளம்பெண்கள் அரைகுறை ஆடைகளில் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றார்கள். புனித தளதா மளிகைக்குள்ளே செல்லும் போது சில பெண்களுக்கு வெள்ளை ஆடை அணிவித்தே பாதுகாப்புத் துறையினர் உள்ளே அனுப்புகின்றனர். சில பெண் பிள்ளைகள் அமரும் போது தனது மானத்தை மறைத்துக்கொள்ள ஒரு பத்திரிகையை தொடையின் மீது வைத்துக்கொள்கின்றனர். ஆனால் முஸ்லிம் பெண்களின் ஆடை அணிகள் மிகவும் கௌரவமாகவே இருக்கின்றன. இதை உணராத நிலையிலேயே பொதுபலசேனா அமைப்புகள் நிகாபுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்கின்றனர். ஒன்றைப்பற்றி சரியான விளக்கத்தைப் பெற்றுக்கொள்ளாமல் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்வது இனங்களுக்கடையே முரண்பாடு ஒன்றைத் தோற்றுவிப்பதற்கேயன்றி வேறு ஒன்றுக்குமில்லை.
கேள்வி:- பௌத்த மதத்தின் போதனைகளின் படி பன்சில்பத பஹ (பஞ்சசீலக் கோட்பாடு) எனும் மூலாதாரக் கோட்பாடுகளுக்கமைய பொதுபலசேனாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: இல்லவே இல்லை. பன்சில்பத பஹ (பஞ்சசீலக் கோட்பாடு) என்பது பௌத்தமதப் போதனைகளில் மூலவேர். ஒவ்வொரு தூயபௌத்தனும் இந்த கோட்பாடுகளுக்கமையவே வாழவேண்டுமென புத்தபெருமான் போதித்துள்ளார். பௌத்த மதத்தின் எதிர்பார்ப்பும் அதுதான். சகல மதங்களும், மனிதனுக்கு நல்லதையே உபதேசிக்கின்றன. பஞ்சீலக் கோட்பாடு பற்றி சுருக்கமாக குறிப்பிடுவதாயின் ''பானதிபாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - அதின்னாதானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - காமே சுமிச்சாஸாரா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - முஸாவாதா வேரமணி சிக்காபதங் சமாதியாமி - சுராமேரயா வஜ்ஜா பமா தட்டானா வேரமணி சிக்காபதங் சமாதியாமி'' -இதன் உட்கருத்தைச் சுருக்கமாக குறிப்பிடுவதாயின் 'ஒரு தூய பௌத்தன் ஏனைய உயிரினங்கள் மீது கருணை கொள்ளுதல் வேண்டும். அடுத்தவருக்கு சொந்தமானதை அபகரித்துக் கொள்ளாமலும், ஆசைப்படாமலும் இருக்க வேண்டும். காமத்தைப் பிழையாக அணுகாதிருத்தலுடன் சூது வாதுகளை விட்டும் விலகியிருத்தல் வேண்டும். ஒருவரைப்பற்றி புறம் சொல்லாதிருப்பதுடன் ஒருவரை ஏமாற்றாதிருத்தல் வேண்டும். மது போதையில் இருந்தும் விலகிக் கொள்ளவேண்டும்.' இதனையே அனைத்து மதங்களும் போதிக்கின்றன. மதத்தால் விலக்கப்பட்டவைகளைச் செய்வதே ஹராம். இதனை பொதுபலசேனா உணர்ந்து கொள்ளவேண்டும்.
கேள்வி: தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனவாதத் தூண்டல் நடவடிக்கையின் பின்னணியில் ஏதாவது சக்திகள் செயற்படுகின்றன என நீங்கள் கருதுகின்றீர்களா?
பதில்: பொதுபலசேனாவின் பிரதான நிர்வாகிகளின் வெளிநாட்டுப் பயணங்களைப் பற்றியும், அங்கு அவர்கள் நடந்து கொள்கின்ற முறைகள் பற்றியும் இணையத்தளங்களிலும், ஊடகங்களிலும் நாம் பார்க்கின்றோம். இதிலிருந்து வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் இருக்குமென்பதை அனுமானிக்கக் கூடியதாக இருக்கின்றதே.
கேள்வி: உண்மை நிலைகள் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் பிரஸ்தாபிப்பதைப் போல, பௌத்த மக்கள் மத்தியிலும் நீங்கள் இப்பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை முன்வைத்து வருகின்றீர்களா?
பதில்: உண்மையை அனைவரிடமும் கூறவேண்டும். கூறிவருகின்றேன். இதனால் தான் எனக்கு கொலை அச்சுறுத்தல் கூட விடுக்கப்பட்டவண்ணமுள்ளது. பொதுத்தொலைக்காட்சியொன்றில் பொது பலசேனாவின் தலைவரை விவாதமொன்றுக்கு வரும்படி நான் பொது அழைப்பினைக்கொடுத்துள்ளேன். அதற்கு அசூசிகள் நிறைந்த பன்றிகளுடன் நான் விவாதத்துக்கு வரத்தயாராயில்லை என தெரிவித்திருந்தனர். அவர்களுக்குப் பயம். உண்மையான பௌத்தவிளக்கங்களைக் கூறினால் யார் அசூசியால் குளித்துக் கொள்ளப் போவதென அவர்களுக்குத் தெரியும். இப்போதும் நான் பகிரங்கமாக அழைப்புவிடுக்கின்றேன். தொலைக்காட்சியொன்றில் பொதுபலசேனா பகிரங்க விவாதமொன்றுக்கு என்னுடன் வாருங்கள். ஹலாலையும், ஹராத்தையும் நான் கூறித்தருகின்றேன். பொது பலசேனா நினைப்பதைப் போல சோயா மீட் பெக்கட்டிலும், கோழி இறைச்சியிலும் மாத்திரம் தான் ஹலால் உள்ளதென்பதல்ல. குடித்து விட்டு அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவது பன்சில்பதபஹவிலும் ஹராம். இஸ்லாத்திலும் ஹராம்.
கேள்வி: தற்போதைய பிரச்சினைகளின் போது முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்து வரும் நீங்கள் இப்பிரச்சினைக்கு முன்பும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளீர்களா?
பதில்: நியாயத்துக்காக நான் என்றும் குரல் கொடுத்தே வந்துள்ளேன். முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவரும் அமைச்சருமான நான் நேசிக்கும் தலைவர்களில் ஒருவரான காலம் சென்ற எம் எச் எம் அஸ்ரப் அவர்கள் என் நெருங்கிய நண்பர்களுள் ஒருவர். முஸ்லிம் சமுதாயம் பிரச்சினைகளைச் சந்தித்த நேரங்களில் அவருடன் இணைந்து நான் குரல் கொடுத்துள்ளேன். தீகவாவி பிரச்சினை உட்பட. உண்மைக்காக என்றும் நான் உயிருடன் உள்ள வரை குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.
கேள்வி:- பொதுபலசேனாவினால் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களில் பாரிய உடனடித் தாக்கங்கள் ஏற்படாவிடினும் கூட படிப்படியாக தாக்கங்கள் உருவாகி வரக்கூடிய நிகழ்தகவு உண்டு. 'அண்மையில் எமது பிரதேசத்தைச் சேர்ந்த சில்லறைக்கடையொன்றில் ஒரு சிறுவன் ஹலால் இலச்சினை இல்லாத சோயாமீட் பெக்கட் ஒன்றைத் தரும்படி கேட்டான். அந்த சிறுவனுக்கு ஹராம், ஹலால் என்பதற்கு விளக்கம் தெரியாமல் இருக்கும். அவனிடம் கேட்டபோது தான் செல்லும் 'தஹம் பாடசாலை'யில் பொருட்களை வாங்கும் போது ஹலால் சான்றிதழ் போடப்பட்ட பொருட்களை வாங்கவேண்டாம் என போதித்ததாக கூறினான். இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் என்னவென்றால் பிஞ்சு வயதிலேயே இனவாதம் விதைக்கப்படுகின்றது. இதைப்பற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்.
பதில்:- சிந்திக்கவேண்டிய விடயம்தான். பிஞ்சு உள்ளங்களில் இத்தகைய விச எண்ணங்களை விதைப்பதை அனுமதிக்க முடியாது. பொதுபலசேனாவின் பிரச்சார நடவடிக்கைகள் அனேக சந்தர்ப்பங்களில் புஸ்வானம் ஆகிவிட்டாலும் கூட, அவர்களால் விதைக்கப்பட்ட நச்சு உணர்வுகள் பாமரமக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி பரவி வருவதை மறுக்கமுடியாது. தஹம் பாடசாலைகள் நல்லதையே போதிக்க வேண்டும். பஞ்சசீலக் கோட்பாடுகளுக்கு முரணானவற்றைப் போதிக்கக்கூடாது. ஒரு இனத்தின் மீதோ அல்லது தனிப்பட்ட நபர்கள் மீதோ குரோதத்தை வளர்க்கக் கூடாது. அப்படி மேற்கொள்ளப்படுமாயின் அது பஞ்சசீலக் கோட்பாடுகளுக்கு முரணானது. இதனை அனுமதிக்க முடியாது.
கேள்வி: இந்நிலையில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?
பதில்: உண்மை விளக்கங்களை பௌத்தகுருமார் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும், தஹம் பாடசாலை போதனைகளிலும் முன்னெடுக்கவேண்டும். இதற்காகவே நாம் 'ஸ்ரீலங்கா விமுக்தி பலவேகய' எனும் அமைப்பினை உருவாக்கியுள்ளோம். இதன் பிரதம காரியதரிசியாக நான் செயல்படுகின்றேன். இனங்களுக்கிடையே நல்லுறவைப் பேணுதல், பஞ்சீலக் கோட்பாடுகளுக்கமைய பௌத்த மக்களின் வாழ்வியலை ஒழுங்குபடுத்தல், மாற்று மதத்தாரையும் அவர்களது உரிமைகளையும் மதிக்கும் ஒரு சமுக அமைப்பினை ஏற்படுத்துதல் போன்றன தொடர்பான திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

- புன்னியாமீன்
கொழும்பு
(இந்த நேர்காணல் ஜனவரி 02, 2014 'விடிவெள்ளியில்' இடம்பெற்றது)

Read more at: http://tamil.oneindia.in/cj/puniyameen/lankan-buddist-monk-slams-fascists-190659.html

Thanks to: Thatstamil