அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு
த.மு.மு.க ஆரம்பித்தவுடன் அனைத்து செயல்பாடுகளும் மசூரா அடிப்படையில் தலைவர்களின் ஒருமித்த கருத்துடன் நடைமுறைபடுத்தப்பட்டது.
சிறு சிறு மாற்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும் அவை ஆரோக்கியமான
முறையில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டதை அறிய முடிந்தது.
தலைவர்கள் ஒன்றாக அமர்ந்து விவாதித்து வலம்வருவதை பார்க்கையில் அங்கு பணி
புரிந்துக் கொண்டிருந்த எங்களுக்கு சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தது. சமுதாய நலனை குறிக்கோளாகக் கொண்டு சிறப்பாக செயல்படத்துவங்கிய த.மு.மு.க
தலைவர்களுக்குள் முதன்முதலாக பிணக்குகள் தோன்ற ஆரம்பித்து அது ஒருமித்த
முடிவுக்கு வராமல் போனது அல் உம்மா பாஷா விவகாரத்தில்தான் என்பது என்னுடைய
பார்வை.
அப்போது பல்வேறு
வழக்குகளில் சிறையில் இருந்தவர்களை பிணையில் எடுக்க வேண்டும் என்று
முடிவானது. த.மு.மு.க ஆரம்பிக்கப்பட்ட நோக்கங்களில் இதுவும் ஒன்று என்பது
குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் அல் உம்மா பாஷா அவர்களை வெளியில்
கொண்டு வருவது குறித்து பேசப்பட்டது. இதற்கு அனைத்து தலைவர்களும் ஒப்புதல்
தந்தாலும் பி.ஜே. அவர்கள் மட்டும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக அறிய
முடிந்தது. அப்போது அது உண்மைதானா என்பது எனக்கு தெரியாது. பல
சந்தர்பங்களில் மற்ற தலைவர்கள் இது குறித்து கவலையுடன் பேசிக்கொண்டதை கேட்க
முடிந்தது. முதன்முதலாக தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு
ஏற்பட்டிருக்கும் அறிகுறி முதன்முதலாக தெரிய ஆரம்பித்தது. என்ன காரணத்தால்
எதிர்த்தார் என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. பாஷா மட்டுமல்ல பல
பொய் வழக்குகளில் கைதாகி சிறையில் இருப்பவர்களை பிணையில் எடுப்பதற்கும்,
வழக்குகளை நடத்துவதற்கும், அவர்கள் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யவும்
த.மு.மு.க. முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
இமாம் அலி அவர்களையும்
பிணையில் எடுக்க முயற்சி மேற்கொண்டார்கள். அப்போது சென்னை மத்திய சிறையில்
இருந்த இமாம் அலியை ( பெங்களூரில் என்கௌன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டவர் )
சந்திப்பதற்காக த.மு.மு.க. சார்பாக ஹைதர் அலி அவர்கள் சென்றார். நிருபர்
என்ற முறையில் இமாம் அலியை பேட்டி எடுப்பதற்காக என்னையும் உடன் செல்லுமாறு
பேரா. ஜவாஹிருல்லாஹ் சொன்னார்கள். இதிலிருந்து நான் தெரிந்துக்கொண்டேன்
சிறையில் இருக்கும் அனைவருக்கும்தான் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது
என்பதை.
இறுதியாக ஒருநாள் பாஷா அவர்கள் பிணையில் விடுதலையாகி த.மு.மு.க அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அதுவரையில் த.மு.மு.க என்பது முஸ்லிம்கள் மத்தியில்தான்
பேசப்பட்டுக்கொண்டிருந்ததே தவிர, வெகுஜன ஊடகத்தில் மீடியாக்களில் த.மு.மு.க
வின் தாக்கம் அப்போது பெரிதாக ஒன்றும் இல்லை. பாஷா அவர்கள் த.மு.மு.க
அலுவலகத்தில் வந்து தங்கியவுடன் மீடியாக்களின் பார்வை த.மு.மு.க அலுவலகம்
நோக்கி திரும்பியது. அந்த வாரம் வெளியான ஜூனியர் விகடனில் பாஷா அவர்களின்
முழு உருவ படம் கம்பீரமாக நிற்பதுபோல் அட்டையில் போடப்பட்டு அவர்களின்
ஆணித்தரமான பேட்டியும் வெளியாகி இருந்தது. அந்த ஒரே நாளில் பாஷா அவர்கள்
பொதுமக்களிடத்திலே குறிப்பாக முஸ்லிம் இளைஞர்களிடத்திலே மிகவும் பிரபலமாகி
விட்டார்கள். அதை தொடர்ந்து அப்போது மக்களிடத்திலே மிகவும் பிரபலமாக இருந்த
சன் டி.வி.யின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பாஷா அவர்கள் பங்கு பெற்று
ஒரே இரவில் உலகம் முழுவதும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மத்தியில்
பிரபலமாகி விட்டார்கள். இவரை பற்றி அறிந்துக் கொள்வதில் மக்கள் ஆர்வம்
காட்டியதால் பத்திரிகைகள் போட்டிபோட்டுக் கொண்டு இவருடைய பேட்டியை
வெளியிடுவதில் ஆர்வம் காட்டின. எந்த அளவிற்கு என்றால் சன் டி.வி.
இரண்டாவது முறையாக நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இவரை இடம்பெற வைத்தது. பாஷா
அவர்களை பார்ப்பதற்கும், சந்தித்துப் பேசுவதற்கும் த.மு.மு.க
அலுவலகத்திற்கு நிறைய பேர் வர ஆரம்பித்தார்கள். பாஷா அவர்களை த.மு.மு.க
வின் ஒரு முக்கிய பிரமுகராக ஊடகங்களும், மக்களும் பார்க்க ஆரம்பித்தார்கள்.
பாஷா அவர்களும் த.மு.மு.க வில் ஒரு முக்கிய பொறுப்பை எதிர்ப்பார்க்க
ஆரம்பித்தார்.
அப்போது த.மு.மு.க அலுவலகத்தில் பாஷா பாய்
அவர்களுடன், நான், DTP ஆபரேட்டர் ஜாகிர் ஆகியோர் தங்கி பணி செய்துக்கொண்டு
இருந்தோம். அப்போது இரவுகளில் பாஷா பாய் அவர்களிடம் நாங்கள்
பேசிக்கொண்டிருப்போம். அவர்களின் பழைய வாழ்க்கை, தற்போதைய தன் நிலை
அனைத்தையும் மனம் விட்டு சொல்வார்கள். அப்படித்தான் ஒரு நாள் சொன்னார்கள்,
நான் இங்கு இருப்பது பி.ஜே. அவர்களுக்கு பிடிக்கவில்லை. என்னை இங்கிருந்து
வெளியேற்ற நினைக்கிறார். இதனால் அவர்களுக்கும் மற்ற நிர்வாகிகள்
சிலருக்கும் வாக்கு வாதம் ஏற்படுகிறது என்று சொன்னார். காரணம் தெரியாமல்
என்னால் இதை நம்புவதற்கு முடியவில்லை. என்ன காரணம் என்று அவரிடத்திலே
கேட்டேன். பி.ஜே. அவர்களுக்கும் பாஷா அவர்களுக்கும் ஏற்கனவே அறிமுகம்
இருந்ததும், பி.ஜே. அவர்களின் உத்தரவின் பேரில் பாஷா சமுதாயத்தின்
நலனுக்காக செய்த சில காரியங்களையும் விரிவாக சொன்னார். அதில் இருவருக்கும்
சில பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் அதனால் பி.ஜே. தன் மீது பகைமை
பாராட்டுவதாகவும் சொன்னார். அதனால் தன்னை பிணையில் எடுப்பதையும் பி.ஜே.
எதிர்த்தார் என்று சொன்னார். பி.ஜே. குறித்து அவர் சொன்ன செய்திகளை
முழுமையாக இங்கு சொல்லவோ,அவர் சொன்னது உண்மையா? பொய்யா? என்பது குறித்து
ஆராயவோ, அலசவோ நான் இங்கு முற்படவில்லை. அல்லாஹ்தான் அறிந்தவன். கோவையில்
விறகு கடை வைத்திருந்து, தப்லீக் ஜமாத்தில் மிகுந்த ஈடுபாடுடன்
செயல்பட்டுக்கொண்டிருந்த பாஷா அவர்கள் பின்பு அதிலிருந்து விலகி,
அக்காலகட்டத்தில் தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரம் எழுச்சிப் பெற்றுக்
கொண்டிருந்த நேரத்தில் பிரச்சார களத்தில் முழுமையாக இறங்கிய பிறகு அவர்
வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை விவரித்தபோது அது எனக்கு வியப்பாக இருந்தது.
அதை ஒரு காலப்பதிப்பாக பதிவு செய்யவேண்டும் என்று இயல்பாகவே ஒரு
பத்திரிக்கையாளனுக்குரிய எண்ணம் ஏற்பட்டது. இந்த சம்பவங்களை ( தேவையான
நிகழ்வுகளை மட்டும் ) தொகுத்து புத்தகமாக வெளியிடலாமா என்று கேட்டபோது
அதற்கு அனுமதி அளித்து, அவர் எழுதிய ஹய்ய அலல் ஜிஹாத் என்ற புத்தகத்தையும்
கொடுத்து இதில் உள்ள செய்திகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்.
நிருபர் என்பதால் அப்போது என்னிடம் மைக்ரோ டேப் ரிக்கார்டர்
கொடுத்திருந்தார்கள். அதில் அவர் சொன்ன சம்பவங்களை பதிவு செய்து
வைத்திருந்தேன்.
அப்போது எதிர்பாராவிதமாக ஒரு சம்பவம்
நடைபெற்றது., கொடுங்கையூரில் ஒரு வீட்டில் பெருமளவில் வெடிகுண்டுகள்
கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டு தமிழகம் பரபரப்பானது. அதன் எதிரொலியாக
தாக்கர் தெரு த.மு.மு.க. அலுவலகமும் போலீசாரால் சோதனை செய்யப்பட்டது.
காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து கடுமையான
சோதனையை நடத்தினார்கள். அந்த ஒரு நாள் முழுவதும் வெளியிலிருந்து யாரையும்
உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்தவர்களையும் வெளியே போக விடவில்லை. ஒரு
நாள் முழுவதும் கடும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சந்தேகத்திற்குரியதாக
எதுவும் அங்கே கைப்பற்றப்படவில்லை. ஆனால் இந்த நிகழ்வு ஒரு ஜனநாயக
இயக்கமாக வளர்ந்துக் கொண்டிருந்த த.மு.மு.க. விற்கு பெரும் பின்னடைவையும்
தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தியது.
கொடுங்கையூர் சம்பவத்தை பொறுத்தவரையில் பலருடைய சந்தேகம் பாஷா அவர்களை நோக்கி இருந்தாலும் அவர் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார். கொடுங்கையூர் சம்பவத்தில் போலீஸார் பாஷா அவர்களை அந்த வழக்கில் குற்றப்படுத்தவில்லை. அப்போது பாஷா த.மு.மு.க. அலுவலகத்தில்தான் இருந்தார்.
அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது
செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் நஸ்ருதீன் பாய், பாஷா அவர்களின்
தம்பி, முஹம்மது காமில் ஆகியோர். அந்த வழக்கு இப்பொழுதும் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது.
தாக்கர் தெரு அலுவலகத்தில் முதல் மாடியில்
பாஷாவும் நாங்களும் தங்கி இருந்தோம். கீழே வீட்டில் பி.ஜே. அவர்கள் தங்கி
இருந்தார்கள். அங்கு தங்கி இருந்த நாட்களில் பி.ஜே. அவர்களுக்கும் பாஷா
அவர்களுக்கும் சரியான புரிதல் இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. இதை
மற்ற தலைவர்கள் கவலையுடன் பேசிக் கொள்வதையும் காண முடிந்தது. இது குறித்து
அவர்கள் பேசிய மசூராக்களின் இடையிலேயே பாஷா அவர்கள் பி.ஜே. அவர்களை
விமர்சித்தபடி கோபமாக வெளியேறுவதையும் மற்ற தலைவர்கள் வெளியே வந்து அவரை
சமாதானப்படுத்துவதையும் காண முடிந்தது. பாஷா அங்கு தங்குவதை தர்மசங்கடமாக
உணர ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் பாஷா அவர்கள் அங்கிருந்து வெளியாகி
திருவல்லிக்கேணி தாயார் சாஹிப் தெருவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து
அங்கே தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டார். அவர் செல்லும்போது பி.ஜே.
அவர்கள் தனக்கு துரோகம் செய்து விட்டதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிவிட்டு
சென்றார் என்பது அங்கிருந்த அனைவரும் அறிந்த உண்மை.
அந்த கால
கட்டங்களில் பாஷா அவர்களிடம் நான் நிறைய பேசி இருக்கிறேன். அப்போதிருந்த
நிலையில் அவரிடம் பெரிய அளவில் ஆள் பலமோ, பொருளாதார பலமோ கிடையாது. சில
வருட சிறை வாழ்க்கை அவரை மாற்றி இருந்தது. த.மு.மு.க. வில் இணைந்து ஜனநாயக
பாதையில் பயணிக்கவே விரும்பினார். ஆனால் த.மு.மு.க. அலுவலகத்திலிருந்து
தாயார் சாகிப் தெரு வீட்டிற்கு சென்றவுடன் அவருடைய செயல்பாடுகள்
என்னவென்பதை அல்லாஹ்வே அறிந்தவன்.
கொடுங்கையூர் சம்பவ சோதனைக்கு
பிறகு தாக்கர் தெருவிலிருந்து மண்ணடி இப்ராம்ஸா தெருவிற்கு ( ஜான் டிரஸ்ட்
அருகில் ) த.மு.மு.க. அலுவலகம் மாறியது. பி.ஜே. அவர்களுக்கும் பாஷா
அவர்களுக்கும் இணக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று தலைவர்கள் முயற்சிகளை
மேற்கொண்டனர். ஒரு நாள் பாஷா அவர்கள் பி.ஜே. அவர்களை சந்திப்பதற்காக அங்கே
வந்தார். மற்ற தலைவர்கள் அவரை வரவேற்றனர். ஸலாம் சொல்லி கை நீட்டிய பாஷா
அவர்களுக்கு பி.ஜே. அவர்கள் ஸலாமும் சொல்ல வில்லை, கையையும் நீட்டவில்லை.
மற்ற தலைவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பேச மறுத்து விட்டார்.
அவமானப்பட்ட நிலையில் பாஷா அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்நிகழ்வு மற்ற
தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. இதை பார்த்துக்கொண்டு இருந்த
எனக்கு மனதில் தோன்றியது, நபி (ஸல்) கற்றுத்தந்த பண்பாடு மக்களுக்கு சொல்ல
மட்டும்தானா? நாம் கடைப்பிடிக்க இல்லையா?
நாம் எதற்காக இங்கே இதை பதிவிடுகிறோம் என்றால் ஒரு மாபெரும் இயக்கமாக வளர ஆரம்பித்திருந்த த.மு.மு.க.வின் தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடுகளின் அறிகுறி தோன்ற ஆரம்பித்தது இந்த சம்பவத்திலிருந்துதான் என்ற உண்மை அங்கிருந்த சூழ்நிலைகளிலிருந்தே தெரிந்துக்கொள்ள முடிந்தது.
இதற்கு காரணம் பாஷா
அவர்கள் திடீரென்று புகழின் வெளிச்சத்திற்கு வந்ததை சகித்துக்கொள்ள
முடியாத பி.ஜே. அவர்களின் மனோபாவம் தான் காரணம் என்பதை புரிந்துக்கொள்ள
முடியும். நான் இப்படி சொல்வதால் அவரின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினாலோ,
அல்லது தனிப்பட்ட வேறு ஏதோ காரணங்களினாலோ அவர் மீது அநியாயமாக, அவதூறாக
அல்லாஹ்வுடைய அச்சம் இல்லாமல் குற்றச்சாட்டை சுமத்துகிறேன் என்று சிலர்
நினைக்கக்கூடும். இதை அப்பொழுது நாம் சொல்லி இருந்தால் இவர்கள் நினைப்பதில்
ஒரு நியாயம் இருந்திருக்கும். ஆனால் பி.ஜே. அவர்கள் த.மு.மு.கவில்
இருந்தபோதும் சரி, இப்பொழுது ததஜவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் போதும்
சரி நீண்ட வருட அவரின் செயல்பாடுகளில் வெளிப்படையான நடவடிக்கைகளைக் நியாய
உணர்வுடன் சீர்தூக்கி பார்த்தீர்களானால் நாம் சொல்லுவதன் நியாயம்
உங்களுக்கு புரியும்.
தான் ஒரு இயக்கத்தில் இருக்கும்போது தன்னை
விட இரண்டாவது நிலைக்கு ஒருவர் மக்களால் பிரபலமடைய ஆரம்பித்தால் பி.ஜே .
அவர்களால் அதை சகித்துக்கொள்ள முடியாது. அவரை ஒன்றும் இல்லாமல்
ஆக்கிவிடுவார். நான் சொல்வதை TNTJ தொண்டர்களால் ஜீரணித்துக்கொள்வது சிரமமாக
இருந்தால் சமீப கால நிகழ்வு ஒன்றை அவர்கள் நியாய உணர்வுடன் சிந்தித்துப்
பார்க்க வேண்டும். பொதுவாக TNTJ வில் யார் யார் பொறுப்புக்கு வரவேண்டும்
என்பதை தீர்மானித்துக் கொண்டுதான் பொதுக்குழுவுக்கு வருவார்கள். அந்த
பெயர்களை அறிவிப்பார்கள் அல்லாஹ் அக்பர் என்று சொல்லி மற்றவர்கள்
ஆமோதிப்பார்கள். இதுதான் நடக்கும். சென்னை காமராஜர் அரங்கத்தில் நடந்த
பொதுக்குழுவில் இவர்கள் முடிவு செய்து வந்ததற்கு மாற்றமாக அப்போது தனது
பேச்சாற்றலால் தொண்டர்களிடையே பிரபலமாகி பி.ஜே. அவர்களுக்கு அடுத்த
இரண்டாவது தலைவராக பார்க்கப்பட்ட அல்தாபியை தொண்டர்கள் ஏகோபித்து
முன்மொழிந்தனர். அப்பொழுதும் தொண்டர்களிடம், அல்தாபி பயான்தான் பண்ணுவார்.
நிர்வாகம் என்பது வேறு என்றெல்லாம் பி.ஜே. சொல்லிப்பார்த்தார். தொண்டர்கள்
கேட்கவில்லை. பி.ஜே.க்கு பிறகு அல்தாபிதான் என்பதை சூசகமாக காட்டினார்கள்.
அல்தாபி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் என்ன நடந்தது. பொதுக்குழு முடிந்து
சிறிது நாட்களிலேயே அல்தாபி தூக்கப்பட்டு எம்.ஐ. சுலைமான்
தலைவராக்கப்பட்டார். இன்று வரை அல்தாபி டம்மியாக்கப்பட்டு விட்டார்.
இப்பொழுது எப்படி ததஜவிலுள்ள மற்ற மௌலவிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு செய்யது இப்ராஹீமை தூக்கி பிடிக்கிறாரோ இதற்கும் மேலாக அப்பொழுது தன்னுடன் தொடர்பில் இருந்த மௌலவிகளை பின்னுக்கு தள்ளிவிட்டு மற்ற த.மு.மு.க. நிர்வாகிகளை பாஷா உட்பட வானளாவ புகழ்ந்து தலையில் தூக்கிவைத்து கொண்டாடியவர்தான் பி.ஜே. அவர்கள் என்பது எல்லோருக்கும்தான் தெரிந்த உண்மைதான். யாரும் இதை மறுக்க முடியாது.
பி.ஜே. அன்றைக்கு தன்னுடைய
மனோஇச்சை போக்கையும், பழி வாங்கும் போக்கையும் விட்டு விட்டு உண்மையில்
சமுதாய நலன் கருதி செயல்பட்டு இருப்பாரேயானால் இன்றைக்கு த.மு.மு.க. என்பது
அரசியலில் தமிழக முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும்
தவிர்க்க முடியாத மிகப்பெரும் சக்தியாக விளங்கி இருக்கும். ஜாக் அமைப்பை
உடைத்து தவ்ஹீத் பிரச்சாரத்தை நீர்த்துப் போகச்செய்தார். த.மு.மு.க. வை
உடைத்து தமிழக அரசியல் போக்கை தீர்மானிப்பதிலும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு
சிம்ம சொப்பனமாகவும் திரள ஆரம்பித்த தமிழக முஸ்லிம்களின் எழுச்சியை
நீர்த்துப்போகச் செய்தார். சமுதாயத்திற்கு ஒரு வரலாற்று துரோகத்தை இழைத்து
விட்டு இன்றைக்கு இட ஒதுக்கீடு கேட்டும், தீவிரவாதத்திற்கு எதிராக தீவிர
பிரச்சாரம் செய்வதும் TNTJ என்ற தன்னல இயக்கத்தை வளர்ப்பதற்குத்தான் உதவுமே
தவிர முஸ்லிம் சமுதாயத்திற்கு இதனால் ஒரு நன்மையும் கிடைக்காது. இந்த தூர
நோக்கு பார்வை இல்லாமல் இன்றைக்கு பி.ஜே.வின் தீவிர ஆதரவாளர்கள் தாங்கள்
தனித்து விளங்குவதாகவும், எங்களுக்குத்தான் கூட்டம் வருகிறது என்றும்,
அவர்களாகவே சத்தியம் என்று ஒன்றை தீர்மானித்துக்கொண்டு, சத்தியத்தை நான்
எதிர்ப்பதாகவும், என் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்து அவதூறாக பேசியும்
முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள். இவர்களின் சிறுபிள்ளைதனத்தை பார்த்து
சிரிப்பதா? அழுவதா என்று தெரியவில்லை. தவ்ஹீத் என்றால் என்ன? இந்த சத்திய
கொள்கையின் மூலம் எப்படி அனைத்து தரப்பு மக்களையும் வென்றெடுக்க வேண்டும்
என்று நபி (ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் நிகழ்த்திக் காட்டிய வரலாற்று
படிப்பினைகளை அரையும் குறையுமாக தெரிந்துக்கொண்டதும், TNTJ உறுப்பினர்கள்
தவிர உலகத்து முஸ்லிம்கள் அனைவரும் காஃபிர்கள் என்று இவர்கள் தலைவர்
கொடுத்த விபரீதமான தீர்ப்பை தக்லீத் செய்ததுதான் காரணம்.
தவ்ஹீத்
பிரச்சார களத்தில் எதிரி யார் என்பதை தீர்மானித்து செயல்படுவதில்தான் அதன்
வெற்றி இருக்கிறது. அல்லாஹ்வையும், தூதரையும், இஸ்லாத்தையும் யாரெல்லாம்
எதிரியாக பாவித்து செயல்படுகிறார்களோ அவர்களுக்கு எதிராக இறங்குவதுதான்
தவ்ஹீத் பிரச்சாரம். ஆனால் TNTJ என்ற அமைப்பு தன்னுடைய பரம எதிரிகளாக யாரை
களம் காணுகிறது என்றால், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை, தவ்ஹீதை
பின்பற்றுபவர்களை, அல்லாஹ்வையும், தூதரையும் ஏற்றுக்கொண்டவர்களை எதிரியாக
பாவித்து களம் இறங்குவதுதான் தவ்ஹீத் பிரச்சாரமா? இதுதான் சமுதாய சேவையா?
தன் இனத்தை தானே எதிரிகளாக்கி கொண்டதற்கு ஒரே காரணம் பி.ஜே. என்ற மனிதர்
அவர்களை எதிரியாக பார்த்ததும், TNTJ என்ற இயக்கம் அவர்களை எதிரியாக
பார்த்ததும்தான் காரணமே தவிர இஸ்லாத்திற்காக இல்லை என்பதை நடுநிலை
உணர்வுள்ள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பாஷா அவர்கள் சகாப்தம் முடிந்தது.
அடுத்ததாக த.மு.மு.க. பெரும் ஜனநாயக இயக்கமாக எழுச்சியுற்று மக்களிடம்
செல்வாக்கு பெற ஆரம்பித்தது. மற்ற தலைவர்கள், ஜவாஹிருல்லாஹ், ஹைதர் அலி,
பாக்கர் இவர்களெல்லாம் மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும், அரசியல்
அரங்கத்திலும், வெகுஜன ஊடகங்களிலும் பிரபலமடைய ஆரம்பித்தார்கள்.
பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கும் பி.ஜே. அவர்களுக்கும் பனிப்போர்
ஆரம்பித்ததற்கான அறிகுறி தென்பட ஆரம்பித்தது. த.மு.மு.க வளர்ச்சிக்கு
தவ்ஹீத் தடையாக உள்ளது என்று ஜவாஹிருல்லாஹ் சொன்னதால் த. மு.மு.க
விலிருந்து வெளியேறி TNTJ ஆரம்பித்ததாக பி.ஜே. குற்றச்சாட்டை வைத்தார்.
இந்த குற்றச்சாட்டின் உண்மை நிலை என்ன?
இன்ஷாஅல்லாஹ் உண்மை வரலாறு தொடரும்....
முந்தைய தொடர்களை வாசிக்க கீழுள்ள சுட்டியை சுட்டுங்கள்.
அப்படியா...?
ReplyDeleteஅப்படியா...!
அப்படியா...?