உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, November 30, 2014

நியாய உணர்வுள்ள TNTJ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் - ஒரு மனம் திறந்த மடல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ளுதல் என்ற நிலையை அடிப்படையாகக்கொண்டுதான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. நம் சமுதாயத்தின் இன்றைய தேவையும் இதுதான், மறுமையில் நமக்கான வெற்றியும் இதில்தான் அடங்கியிருக்கிறது என்பதால்தான் இந்த இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தன்னலம் பாராது இதில் இணைய ஆரம்பித்தனர். இந்த கொள்கை நிலை வெற்றிபெற வேண்டுமென்பதற்காக தங்களுடைய உழைப்பை தந்தனர். தங்களால் இயன்ற பொருளாதாரத்தை அள்ளி அள்ளி கொடுத்தனர். பல இன்னல்களையும் கஷ்டங்களையும் அனுபவித்தனர். இயக்கம் மாபெரும் வளர்ச்சி கண்டது.

ஆனால் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக் கொள்ளுதல் என்ற நிலையை அடிப்படையாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கத்தின் இன்றைய நிதர்சன நிலை என்ன ?

ஆரம்பத்திலேயே நான் சொல்லி விடுகிறேன். இந்த மடல் TNTJ என்ற இன்றைய இயக்கத்தை இஸ்லாத்தின் வரம்புகளை கடந்து வெறித்தனமாக ஆதரித்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கான மடல் அல்ல இது. மறுமை வெற்றியை குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் TNTJ சகோதரர்களுக்கான மடல் இது. காய்தல் உவத்தல் இன்றி நீங்கள் அங்கம் வகிக்கும் இன்றைய TNTJ என்ற இயக்கத்தின் செயல்பாடுகளை நடுநிலையோடு எடை போட்டு சிந்தித்துப்பாருங்கள்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ளுதல் என்றால் என்ன ?

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ளுதல் என்ற நிலையை மட்டும் இஸ்லாம் முன்வைக்கவில்லை. அறிந்துக்கொண்டு அதை செயல்படுத்துதல் என்பதுதான் மிக முக்கியமான ஒன்று. கற்றுக்கொண்டவைகளை செயல்படுத்தும் பண்புகளின் (character) அடிப்படையில்தான் மறுமையின் வெற்றி எழுதப்படுகிறது. ஒவ்வொருவரின் பண்பு நலன்கள் குறித்தும் மறுமையில் கடுமையான விசாரணை உண்டு என்பதை நாம் யாரும் மறுக்கமுடியாது.

இதை நாம் எங்கிருந்து பெற வேண்டுமென்றால், நம் உயிரினும் மேலான நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்ததுதான் நமக்கான பாடம்.

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தை எடுத்துப் பாருங்கள். ஒரு சில திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட நிலையிலேயே பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தார்கள். திருக்குர்ஆன் வசனங்கள் முழுமையாக அருளப்படுவதற்கு முன்பே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களை தாண்டியது. இரண்டு காரணங்களால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை பன்மடங்கை தாண்டியது. முதல் காரணம் நபி (ஸல்) அவர்களின் அற்புதமான பண்பு. இரண்டாவது அப்போதைக்கு சிறிது சிறிதாக இறங்கிக்கொண்டிருந்த வலிமையான திருக்குர்ஆன் வசனங்கள்.

நபி (ஸல்) மக்களால் எவ்வாறு அறியப்பட்டார்கள் என்பதுதான் இஸ்லாம் என்ற மாபெரும் சத்திய மார்க்கம் மேலோங்குவதற்கு அஸ்திவாரமாக அமைந்தது என்பதை வரலாறு மறுக்காது. உண்மையாளர் என்று மக்களால் போற்றப்பட்டார்கள். அவர்களின் நேர்மையை யாராலும் குறை சொல்லவோ விமர்சிக்கவோ முடியவில்லை. அவர்கள் பொய் பேச மாட்டார்கள். அவர்கள் வாயிலிருந்து அவதூறான வார்த்தைகள் ஒரு போதும் வராது. யாரையும் குறை கூறி பேச மாட்டார்கள். எதிரிகளிடத்திலும் கனிவு காட்டினார்கள். பிறர் குற்றங்களை மன்னிக்கக் கூடியவர்காளாக இருந்தார்கள். எதிரிகளாலும் குறை காண முடியாத இந்த சீரிய பண்புகள்தான் அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னபோது மக்கள் இஸ்லாத்தை நோக்கி ஈர்க்கப்பட்டார்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு எப்படியெல்லாமோ இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு சிறந்த பண்பாளர்களாக மாறினார்கள்.

அபூதர் (ரலி) அவர்கள் வாழ்க்கையை பாருங்கள். வியாபார கூட்டத்தை வழிமறித்து தாக்கக்கூடிய கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருந்தவர்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு சிறந்த பண்பாளராக மாறினார்கள். ஒருவரின் தாயை அபூதர் (ரலி) அவர்கள் பழித்துப் பேசியபோது, அபூதரே இன்னும் நீர் அறியாமை காலத்திலேயே இருக்கிறீரா? என்று நபி (ஸல்) கண்டித்தவுடன் தன் வார்த்தைக்காக உடனே மனம் வருந்தினார்கள்.

முரட்டு சுபாவம் கொண்டவர்களாக பார்க்கப்பட்ட உமர் (ரலி) அவர்களை இஸ்லாம் மென்மையை கடைபிடிக்கக் கூடியவர்களாக மாற்றியது. இப்படி எண்ணற்ற சம்பவங்களை இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொண்டவர்கள் வாழ்க்கையில் காண முடியும்.

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொண்டவர்களின் வாழ்க்கையை, அவர்களின் பிரச்சாரத்தை இப்படித்தான் வரலாறு பார்த்தது, பதிவு செய்தது.

இன்றைக்கு நம்மிடத்தில் அல்லாஹ்வுடைய வேதம் முழுமையாக அதன் தூய வடிவில் உள்ளது. அல்லாஹ்வுடைய தூதரின் சொல், செயல், அங்கீகாரம் பாதுகாக்கப்பட்ட நிலையில் முழுமையாக நம்மிடம் உள்ளது.

உண்மையில் TNTJ என்ற இயக்கம் இந்த இரண்டையும் தூய வடிவில் அதனை பற்றி பிடித்து வளர்ந்திருக்குமேயானால் அதனுடைய கணிசமான ஆண்டுகளின் உழைப்பில் தன் தொண்டர்களை எவ்வாறு வார்த்தெடுத்திருக்க வேண்டும். இஸ்லாத்தை ஆய்வு செய்து பாண்டித்தியம் பெற்ற எண்ணற்ற சிறந்த அறிஞர்களை உருவாக்கி இருக்க வேண்டும். நபி (ஸல்) கற்றுத்தந்த சிறந்த பண்புகளை சீரிய முறையில் கடைபிடிக்கக் கூடிய கணிசமான பண்பாளர்களை உருவாக்கி இருக்க வேண்டும்.

TNTJ சகோதரர்களிடம் இப்பொழுது நியாயமான ஒரு கேள்வியை நான் கேட்கிறேன். நேர்மையாக நீங்கள் பதில் சொல்லுங்கள். உங்கள் TNTJ இயக்கத்தில் குர்ஆன் ஹதீஸை ஆய்வு செய்யக்கூடிய சிறந்த அறிஞர்கள் இன்றைய நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள். பட்டியல் தாருங்கள். M.I.சுலைமான் அவர்களை சொல்வீர்கள். பிறகு நீண்ட யோசனைக்கு பிறகு அப்துன் நாசர் அவர்களை பலகீனமாக சொல்வீர்கள். வேறு யாராவது இருக்கிறார்களா? கையளவு கற்றதை வைத்துக்கொண்டு ஆவேசமாக பயான் செய்யக்கூடியவர்கள் நிறையவே இருக்கிறார்கள். தலை சிறந்த மார்க்க அறிஞர்களை உருவாக்கக்கூடிய பல்கலைகழகமாக உங்கள் இயக்கம் உருவாகியுள்ளதா? சகோதரர்களே சிந்தித்துப்பாருங்கள். அல்லது சிறந்த பண்பாளர்களை அடையாளம் தந்திருக்கிறதா?

சமீபகால நிகழ்வுகளை பாருங்கள். TNTJ இயக்கத்தின் அதிகாரபூர்வ தலைமையாக வெளிச்சவட்டத்தில் இரண்டு பேர்தான் காட்டப்படுகிறார்கள். ஒருவர் கலீல் ரசூல் மற்றொருவர் செய்யது இப்ராஹீம். அதிராம்பட்டினம் விவாதத்திலும், அப்பாஸ் அலி விவாத ஒப்பந்தத்திலும் இவ்விருவரும் நடந்துக்கொண்ட முறையையும், உதிர்த்த வார்த்தைகளையும் மக்கள் பார்த்தார்கள். நீங்களும் பார்த்திருப்பீர்கள். இதுதான் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொண்ட முறையா? சக மனிதர்களிடம் நடந்துக்கொள்ளக் கூடிய அடிப்படையான மனிதாபிமான பண்பும், வார்த்தைகளும் இவர்களிடம் இருந்ததா? இத்தனை வருட TNTJ பயிற்சி இவர்களுக்கு இதைத்தான் கற்றுக் கொடுத்ததா?

TNTJ இயக்கத்தில் நல்லவர்கள், பண்பாளர்கள் இருக்கிறார்கள். நான் இல்லையென்று ஒட்டுமொத்தமாக சொல்லவில்லை. நிச்சயமாக பண்பாளர்கள் இருக்கிறீர்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் இயக்கத்தின் தலைவர்கள் என்று யாரை மக்களிடத்திலே வெளிக்காட்டுகிறீர்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றுதானே மக்கள் பார்ப்பார்கள்.

TNTJ இயக்கத்திலுள்ள நல்லவர்கள் பண்பாளர்கலெல்லாம் எங்கே?

இயக்க மோகத்தினால் இஸ்லாத்தின் அற்புதமான பண்புகள் இவர்களிடம் அற்றுப்போய் விட்டது என்பதை அப்பாஸ் அலி விவாத ஒப்பந்தத்தில் நான் இருந்தபோது காண நேரிட்ட ஒன்றை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். ஒப்பந்தத்தை பதிவு செய்ய நாங்கள் அழைத்து சென்றிருந்த வீடியோ பதிவாளர் சாதாரணமான கேமராவை எடுத்து வந்திருந்தார். பதிவிற்கான ஒரு சிறிய தொழில் நுட்ப உதவியை TNTJ சார்பாக வந்த வீடியோ பதிவாளரிடம் கேட்டார். அவரும் செய்ய முன்வந்தார். சகோதரர் யூஸுப் அவர்களும் உதவி செய்யச் சொன்னார். ஆனால் மற்ற இருவரில் ஒருவர் உடனே யூஸுப் அவர்களை இடைமறித்து, நாம் ஏன் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி தடுத்துவிட்டார். இது ஒரு சிறிய விஷயமாக தெரியலாம். ஆனால் நாம் அழைத்து சென்றிருந்த வீடியோ பதிவாளர் முஸ்லிமல்லாத ஒரு சகோதரர். நம்மைப் பற்றி அவர் என்ன நினைத்திருப்பார்? இதுதான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்ட பண்பாடா?

ஒரு சூனியக்காரனிடம் ஒப்பந்தம் போட்டபோது அவனிடம் சகஜமாக சல்லாபித்துக்கொண்டு பேசினார்கள். மார்க்கம் சம்பந்தமான விவாத ஒப்பந்தம் போடச்சென்ற அப்பாஸ் அலியிடம் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி கடுமையாக நடந்துக்கொண்டார்கள். இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு போதித்திருக்கிறார்களா? நியாய உணர்வுள்ள மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அதிராம்பட்டினம் விவாதத்தில் இந்த இருவரை தவிர்த்து TNTJ இயக்கத்திலுள்ள வேறு யாராவது இருவர் வந்திருந்தால் அந்த விவாதம் ஆரோக்கியமாக நடந்திருக்கும். அப்பாஸ் அலி ஒப்பந்தம் அமைதியாக முடிந்திருக்கும். போலிஸ் வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது..

இஸ்லாத்தை பேணி வாழ்ந்து மறுமை வெற்றியை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கக்கூடிய TNTJ சகோதரர்களிடம் நான் கேட்கிறேன், மார்க்கம் நமக்கு போதித்த நல்ல பண்புகள், வார்த்தைகளில் நாகரீகம் இவை எல்லாம் அற்றுப்போய்விட்ட இவர்களை எப்படி தலைவர்களாக ஏற்று செயல்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.

ஒப்பந்த வீடியோவை வெட்டி, ஒட்டி உண்மையை மறைத்து அப்பாஸ் அலி சொன்னதை தவறாக சித்தரித்து உங்களையும் மக்களையும் முட்டாள்களாக்கினார்களே.... இது மார்க்கத்தை பேணக்கூடிய ஒரு தலைமை செய்யக்கூடிய நேர்மையான செயலா? உங்களில் யாராவது ஒருவர், ஏன் இப்படி செய்தீர்கள் என்று தட்டி கேட்டீர்களா? சிறிதளவும் இறையச்சம் இல்லாமல் நேர்மையற்று நடந்துக்கொண்ட இவர்கள் ஹதீஸ்களை நேர்மையாக ஆராய்வார்கள் என்று நீங்கள் எப்படி நம்புகிறீர்கள்?

ஹதீஸ் அறிவிப்பாளர்களில் இடம்பெற்ற ஒருவர் நேர்மையற்றவராக அறியப்பட்டால், மற்ற அறிவிப்பாளர்கள் நேர்மையாளர்களாக இருந்தாலும் அந்த ஹதீஸின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் என்பதுதானே ஹதீஸ் கலையின் இலக்கணம். அதேபோல ஹதீஸ்களை ஆய்வு செய்து மக்களிடத்திலே அதை பிரச்சாரம் செய்பவர்களும் பொதுவாழ்க்கையில் நேர்மையாளர்களாக இருக்க வேண்டாமா?

பொதுவாழ்க்கையில் நேர்மையற்று செயல்படும் ஒரு தலைமையின் கீழ்நின்று எவ்வாறு மார்க்கத்தை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நாளை அல்லாஹ் இதை பற்றி உங்களிடம் கேள்வி கேட்க மாட்டானா? மார்க்கத்தின் வரம்புகளை மீறிய தலைமையின் செயல்களை எல்லாம் நியாயப்படுத்திக்கொண்டு செய்வதுதான் சமுதாய சேவையா? பொது சபைகளில் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி கீழ்தரமாக நடந்துக்கொள்ளும் இவர்கள்தான் உங்களை வழிநடத்தும் தலைவர்களா?

இறையச்சமுள்ள ஒரு முஸ்லிமின் நிலை எப்படி இருக்க வேண்டும். ஒரு தீமையை காணும்போது அதை கைகளால் தடுக்க முயற்சிக்க வேண்டும். சொல்லி அவர்களை திருத்த வேண்டும் அதுவும் முடியவில்லை என்றால் மனதால் வெறுத்து ஒதுங்க வேண்டும். இது ஈமானின் கடைசி நிலை. நபி (ஸல்) நமக்கு போதித்த அறிவுரை பயான்களில் பேச மட்டும்தானா?

நியாய உணர்வுள்ள TNTJ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்.

 Saleem Karaikal

 https://www.facebook.com/salimkaraikal/posts/612225838900551?fref=nf

1 comment:

  1. "நியாய உணர்வுள்ள TNTJ சகோதரர்கள் சிந்திக்க வேண்டும்."

    அப்டீன்னு யாராவது இருந்தால்தானே... எள்ளளவேனும் யாரிடமாவது அது துளிர் விட்டால், அவர்கள் 'அவுட்'....! 'செத்த மாட்டிலிருந்து உன்னி இறங்குவது போல' என்ற உதாரணம் நினைவுக்கு வருகின்றதா?

    ReplyDelete