உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, November 17, 2014

கரை ஏறுங்கள் 'கறை' நீங்கும் - அதிரை கடற்கரை தெரு சகோதரர்களின் ஆதங்கம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய கடற்'கரை'த் தெரு சகோதரர்களுக்கு,

இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு.  இதன் விளைவு சாதகமா பாதகமா என்பதைப் பற்றி என்னால் கணிக்க முடியவில்லை. இருப்பினும், இனியும் தாமதித்தால் அதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சி என்னை வதைக்கும்.

நான் அதிரை வாசி.  கடற்'கரை'த்தெரு என் பிறப்பிடம். வளர்ந்தது படித்தது என்று என் சிறு பிராயத்து மற்றும் இளமைக் காலத்து சந்தோஷங்கள் எல்லாம் எனக்கு அள்ளித் தந்தது கடற்'கரை'த் தெருவின் பாரம்பர்யம் மிக்க வாழ்க்கை முறை.
 
ஒரு பிரச்னை என்று வந்துவிட்டால் யாரையும் விட்டுக் கொடுக்காமல் ஒன்று சேர்ந்து கொள்ளும் ஒற்றுமை; யாரையும் ஏமாற்றத் தெரியாமல் உழைப்பைக் கொண்டு மட்டுமே உயரும் ஆண்மை மிக்க ஆண்கள்; புறத்து ஆண்களால் அதிகம் அறியப்படாத மார்க்கம் பேணும் பெண்கள், மொத்த தெருவும் ஒரே குடும்பம் என்னும் பாங்கினாலான அன்பு, பாசம், தோழமை. சகோதரத் தெருக்களுக்குத் தீய சக்திகளால் ஏதும் பிரச்னை என்றால் ஆதரவாக வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கும் துணிவு என்று மகிழ்ச்சியான சமூக அமைப்பு என்றுமே நம் தெருவை சிறப்பாகவும் வித்தியாசப்படுத்தியும் காட்டும். இத்தனை சிறப்பு வாய்ந்த நம் தெருவின் அவமானமாகச் சின்னமாக, பலரது கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாக வைத்திருக்கும் விஷயத்தைப்பற்றிதான் இக்கடிதம்.

என் சிறுபிராயத்தில் நம் தெருவில் எனக்கு மிகவும் பிடித்தவற்றில் முக்கியமானவை இரயில் நிலையம்இ கடற்'கரை', கஸ்டம்ஸ் கட்டடங்கள், உப்பளங்கள், ஏரி, ஏரியின் வடிகால்களான சிற்றோடைகள், குளங்கள், புளிய மர மேடைகள், பள்ளிவாசல் மற்றும் தர்ஹா.

மற்ற விஷயங்களைப் பற்றி பிறிதொரு சமயத்தில் பேசலாம். ஏனெனில், இக்கடிதம் எழுதக் காரணமாக அமைந்த தர்ஹாவைப்பற்றி மட்டும் பேசவே இதை இந்தச் சமயத்தில் எழுதுகிறேன்.

சொல்வதற்கு சற்று மிகையே என்றாலும், அரேபியாவின் ஜாஹிலியாவைப் போன்றே என் வயதையொத்த பலரது அதிரை தினங்கள் கழிந்தன. என் பிள்ளைப்பிராயத்து நினைவுகள் என்றுமே என்னிடம் பசுமையாக நினைவில் நிற்கும்.  ஹந்தூரி காலம் வந்துவிட்டால் தெருவே கலை கட்டும்.  நம் தெருவுக்கு இது மூன்றாவது பெருநாளோ என்று சொல்லும் அளவுக்கு ஹந்தூரி ஏற்பாடுகள் மிக சிரத்தையாக மேற்கொள்ளப்படும்.  ஹந்தூரி படு விமர்சையாக அமைய வேண்டும் என்கிற ஆசை நம் தெரு வாசிகள் எல்லோர் நெஞ்சிலும் நிலைத்து இருக்கும்.

கொடிமரம் ஏற்றும் நாளிலிருந்து கூட்டு இரவு வரை நம் தெருவாசிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் அழ்ந்து போவார்கள்.  ஏதோ அல்லாஹ்வின் கட்டளையை இனிதே நிறைவேற்றிவிட்டதுபோல் திருப்தி மனதில் நிலவும். வாப்பா உம்மா மற்றும் உஸ்தாது கற்றுத் தந்த மார்க்கத்தில், வேறு எந்த மதத்திற்கும் குறைவில்லாத அளவுக்கு கேளிக்கைகளும் கூத்தும் கும்மாளமும் நம் தெருவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நடந்தேறும்.

எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரை எனக்கும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களாகத்தான் பட்டன. பெரியவர்கள் வழியைப் பின்பற்றுதலே இஸ்லாம் என்று மூளைச் சலவை செய்யப்பட்ட சந்ததியாகவே நாங்கள் வளர்க்கப்பட்டோம். காலங்கள் செல்லச் செல்ல் நான் வளர என்னோடு சேர்ந்த இயல்பாகவே அறிவும் வளர்ந்தது. மொழிபெயர்க்கப்பட்ட குர்ஆன், ஹதீஸ் தொகுப்புகள் வாசிக்கக் கிடைத்தன. ஏன் எதற்கு என்று கேள்விகள் பிறந்தன. எல்லாவற்றிலும் இணைவைப்பின் தீமை பற்றி மிக விளக்கமாகச் சொல்லப்பட்டிருந்தது.  தர்ஹா இணைவைப்பின் அடையாளம் என்பது விளங்கிற்று.  எனக்குத் தெரிந்ததை என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் சுலபமாக எத்தி வைத்து அவர்களிடம் மாற்றம் கொணற முடிந்தது. ஆனால், வயதில் மூத்தவர்களில் பலர் தர்ஹா கலாச்சாரத்திலிருந்து வெளிவர விரும்பவில்லை.  அதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட மார்க்க கிரியையாகவே கண்டனர்.  அதனால், அறியாமல் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.  கால ஓட்டத்தில் ஹந்தூரி தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தாலும் இன்னும் முழுமையாக இல்லாமல் போகவில்லை.

பெருத்த வணிகமாகிவிட்ட நாகூர் அஜ்மீர் போன்ற தர்ஹாக்களை அனுகுவதே பெரும் சவாலாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் ஒரு சமுதாயச் சீர்திருத்தத்திற்கான புரட்சி வித்தாக நம் தெருவின் ஹந்தூரியை நடத்த விடாமல் நிறுத்த வேண்டும்.  முடியவில்லை என்றால் குறைந்த பட்சம் அதற்கு ஆதரவு கொடுக்காமல் எதிர்க்க வேண்டும்.

என் சகோதரா,  ஹந்தூரி ஒரு இஸ்லாமியச் சமூகத்தின் கலாச்சாரச் சீர்கேடு என்பதை அறிந்து கொள். கேளிக்கைகளின்மீதான மனிதனின் இச்சையை வெளிப்படுத்தும் ஒரு அலங்கோலம் ஹந்தூரி. ஒரு சில சுயநலமிகளின் பொருளாதாரத் தேவைகளுக்காக நடத்தப்படும் நாடகம் ஹந்தூரி. நரக நெருப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஹந்தூரியிலிருந்து உன்னைக் காப்பாற்றிக்கொள்.

அவுலியாவிடம் உன் வேண்டுதல் – அது

முகவரி தவறிய கடிதமே

தீர்வுகள் வேண்டிய இறைஞ்சலை – நீ

தீர்ப்பவன் இடமே கேட்கவும்!


 
அன்புடன்,

சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


Thanks to New Source: 
http://adirainirubar.blogspot.ae/2014/11/blog-post_18.html

No comments:

Post a Comment