நேற்று (23.01.2015) வெள்ளி மாலை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் துபை, நாஸர் ஸ்கொயர் பகுதியில் அமைந்துள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில் மிகக் குறுகியகால எற்பாடான CMN சலீம் அவர்களின் பயன்மிக்கதொரு கல்விக் கருத்தரங்கம் மிகச்சிறப்புடன் பவர்பாயிண்ட் திரை விளக்கத்துடன் நடந்தேறியது.
எதிர்காலம் இனி விவசாயத்திற்கே என்ற நிறுவலுடன் துவங்கிய நிகழ்ச்சியில் முஸ்லீம்கள் நம் எதிர்கால சந்ததியினருக்காக மிகக்கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய விடயங்களான மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் ஆய்வுடன் கூடிய இயற்கை உணவுமுறை கல்வி, இஸ்லாம் கூறும் இயற்கை மருத்துவக்கல்வி, இயற்கை சக்தி, இஸ்லாமிய வங்கிமுறை மற்றும் இஸ்லாமிய சிந்தனையுடன் கூடிய ஆசிரிய பெருமக்களை வார்த்தெடுக்கும் பணி என்பன போன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்த ஊர்கள் தோறும் தியாக உணர்வின் அடிப்படையில் இஸ்லாமிய கோட்பாட்டுடன் அமைய வேண்டிய பாலர் கல்வி நிலையங்கள், உயர் கல்வி மற்றும் கலைக்கல்லூரிகளின் தேவைகளை உணர்த்தினார்.
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வேளாண்துறையில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வுப்படிப்பு என முழுமையாக படிக்கவைத்து அவர்களின் 26 வது வயதில் மனிதகுலத்திற்கு தீர்வு தரும் ஒரு இயற்கை வேளாண் விஞ்ஞானியாக உருவாக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். கல்வி ஆளுமை நிறைந்த மனிதர்களை உருவாக்க வேண்டும் மாறாக ஊதியத்திற்கு வேலை பார்க்கும் அடிமைகளை அல்ல என்பது CMN சலீம் அவர்களின் உரையின் மையப்பொருளாக இருந்தது.
மேலும், வரலாற்று பக்கங்களிலிருந்து இரண்டாம் உலகப் போருக்குப் பின் கீழத்தேய நாடுகளில் 1965க்குப்பின் திணிக்கப்பட்டுள்ள விஷ உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள், மரபணு மாற்ற விதைகளால் ஏற்படும் கேடுகள், அரசின் அலட்சிய போக்குகளால் தற்கொலை செய்து கொண்டுள்ள 4 லட்சத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அதற்கான காரணங்கள், எதிர்கால உணவு பாதுகாப்பின் தேவையையும் விவசாயத்தின் அருமையையும் உணர்ந்துள்ள பாலைநாடுகளான அரபுநாடுகள் ஆப்ரிக்க நாடுகளில் பல லட்சம் ஏக்கர் நிலங்களை விவசாயத்திற்காக குத்தகைக்கு எடுத்துள்ள முன்னேற்பாடுகள், கடல்நீரை ரசாயனங்கள் மூலம் சுத்திகரிக்கும் நிலையங்கள் பெருகிவரும் நிலையில் ஓர் தமிழ்ச்சகோதரி இயற்கை முறையில் கடல்நீரை சுத்திகரிக்க மேற்கொண்டு வரும் ஆய்வுகள், ஆந்திராவை சேர்ந்த பாத்திமா என்ற முஸ்லீம் சகோதரி 5 கிராமங்களை ஒருங்கிணைத்து இயற்கை விவசாயத்திற்கு மாற்றி வெற்றி கண்டுள்ள விபரங்கள், குமார் என்ற ஆந்திரா இளைஞர் பாலைவனமான அல் அய்ன் மண்ணில் நெல் விளைவித்து அறுவடை செய்துள்ள புரட்சி, ஆங்கிலேயரின் மனனம் செய்து வாந்தியெடுக்கும் மதிப்பெண் கல்வி முறையால் ஏற்பட்டுள்ள கேடுகள் போன்ற அரிய பல தகவல்கள் வழங்கியதுடன் முஸ்லீம்களால் மட்டுமே தீமைகளை ஒழித்து இஸ்லாம் வழிகாட்டியுள்ளபடி மனிதகுலத்திற்கு தேவையான கல்வியின் பக்கமும் உண்மையான வளர்ச்சியின் பக்கமும் கொண்டு செல்ல முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்தி அதற்கேற்றவாற நமது சந்ததிகளை தயார்படுத்த வேண்டி நிறைவு செய்தார்.
இந்நிகழ்ச்சிக்கான எற்பாடுகளை தமிழ்நாடு முஸ்லீம் கல்வி இயக்கம் - துபை கிளையை சேர்ந்த சகோதரர்கள் இம்ரான் கரீம், முஹமது மாலிக், சிராஜூதீன், தாஜூதீன் ஆகியோர் செய்திருந்தனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
========================================================================
முன்னதாக, 22.01.2015 வியாழன் பின்னேரம் துபை, தெய்ரா பகுதியில் அமைந்துள்ள மலபார் ஹோட்டல் அரங்கில் 'தமிழ் மீடியா ஃபோரம்' அமைப்பினரால் பத்திரிக்கை துறையில் ஆர்வமுள்ளவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ' ஊடகமும் முஸ்லீம்களின் இன்றைய தேவையும்' என்ற பொருளில் சலீம் அவர்கள் விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.
1885 ஆம் ஆண்டுகளில் தயானந்த சரஸ்வதி என்பவரால் விதைக்கப்பட்டு 1925 ஆம் ஆண்டுகளில் அமைப்புரீதியாக இந்தியாவெங்கும் கட்டமைக்கப்பட்டு இன்று பெரும்பான்மை பலத்துடன் மனிதகுல விரோத 'அந்த இந்துத்துவ' கனவு ஆட்சி கட்டிலில் ஏறியுள்ளதையும், அவர்களை முறியடிக்க அவர்கள் பாணியிலான நீண்டகால செயல்திட்டமும் அதற்கான தியாகமும் தேவை என்பதை எடுத்துரைத்தார்.
குறைந்தபட்சம் முஸ்லீம் செய்தியாளர்களை ஒருங்கிணைக்கும், உலகிற்கு உண்மை செய்திகளை எடுத்துச் சொல்லும் நம்பகமாகதொரு ஊடக கட்டமைப்பு விரைவில் கட்டமைக்கப்பட வேண்டிய அவசியத்தை ஆதாரங்களுடன் வலியுறுத்தி பேசினார்.
களத்திலிருந்து
No comments:
Post a Comment