உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Sunday, January 18, 2015

அதிரையில் நூற்றாண்டு காணவுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி

அதிரையில் பல்லாயிரம் பேர் ஆரம்பக்கல்வி கல்வியறிவு பெறவும், பல்லாயிரம் மாணவர்களின் உயர்நிலை, மேற்படிப்புக்கான முதல் படியுமாகவும் விளங்கிவரும், ஆங்கிலேயர்கள் காலத்தில் தன்னார்வ தங்க மனிதர்களின் முயற்சியால் 'திண்ணைப்பள்ளியாக' துவங்கி 'ஆரம்பப்பள்ளியாக' தவழ்ந்து பின் 'ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியாக' எழுந்து, இன்று 2003 ஆம் ஆண்டு முதல் 'ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாக' நடந்து கொண்டுள்ள ஆனால் என்றென்றும் சுற்றுவட்டாரவாசிகளால் 'சூனா வீட்டு பள்ளிக்கூடம்' என வரலாற்று பின்னனியுடன் அழைக்கப்படுகின்ற பள்ளிக்கூடம் சத்தமின்றி இன்னும் 5 ஆண்டுகளில் நுற்றாண்டை தொடவுள்ளது அதிரையர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை தானே!

1921 ஆம் ஆண்டுகளில் இன்று MMS தேங்காய்வாடி உள்ள இடத்தில் திண்ணைப்பள்ளிக்கூடமாக துவங்கிய இப்பள்ளிக்கூடம் பின்பு சூனா வீட்டு திண்ணைக்கு இடம் பெயர்ந்து பின் 17.10.1962 ஆம் தேதியில் 'அதிரையின் கல்வித்தந்தை' SMS. ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்கள் அதிரை நகர பஞ்சாயத்து தலைவராக இருந்த காலத்தில் இன்றுள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அன்றைய தமிழக காங்கிரஸ் ஆட்சியில் தொழில்துறை அமைச்சராகவும் பின்னாளில் இந்திய ஜனாதிபதியுமான, அதிரையின் பக்கத்து கிராமம் ராஜமடத்தை சேர்ந்த திரு. R. வெங்கட்ராமன் அவர்களால் 20.09.1964 ஆம் நாள் ஆரம்பப்பள்ளிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த 50 வருட கட்டிடத்தின் இன்றைய பரிதாப நிலை

தற்பொழுது இப்பள்ளிக்கூடத்தில் 2 ஆசிரியர்களும் (ஒருவர் பட்டதாரி மற்றொருவர் இடைநிலை) 5 ஆசிரியைகளும் (இருவர் பட்டதாரி மூவர் இடைநிலை) என எழுவர் பயிற்றுவிக்கின்றனர். மு. தமிழ்ச்செல்வி அவர்கள் தலைமையாசிரியையாக கடமையாற்றுகின்றார். அவர்களில் கலைச்செல்வி என்ற ஆசிரியை 1997 முதல் சுமார் 17 ஆண்டுகளாக இங்கேயே பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இன்றுள்ள பல்வேறு வகுப்பறை தொகுப்பு கட்டிடங்கள்

 
வரலாற்றுப் பெருமைக்குரிய இந்த பள்ளிக்கூடத்தில் வருத்தப்படும் அளவுக்கு மாணவர் சேர்க்கையில் மிகப்பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது குறித்து அரசும், சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்களும், அதிரை பேரூர் நிர்வாகமும், முஹல்லாவாசிகளும், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், பகுதி கவுன்சிலர்களும், முன்னாள் மாணவர்களும் கட்டாயம் இப்பள்ளியின் மறுமலர்ச்சிக்கு மாற்றுத்தீர்வு காண முன்வர வேண்டும்.

உதாரணத்திற்கு, 1997 ஆம் ஆண்டு சுமார் 634 மாணவர்களுடன் 5 ஆம் வகுப்பு வரை இயங்கிவந்த இப்பள்ளிக்கூடம் தரவுயர்வு பெற்று 2003 ஆம் ஆண்டு முதல் 8 வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது ஆனால் மாணவர் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? மொத்தம் 180 மட்டுமே. ஏன் இந்த படுபாதாள வீழ்ச்சி?

பெற்றோர்களின் ஆங்கில மோகமா அல்லது LKG மாணவர்களை கூட CBSE பள்ளியில் சேர்க்க விரும்பும் இன்றைய பெற்றோர்களின் அறியாமையா? அரசுப்பள்ளி என்ற இளக்காரமா அல்லது போதிப்பதில் மக்கள் காணும் குறையா? பாலைவன உழைப்பின் மதிப்பு தெரியவில்லையா? என கேள்விகள் நீள்கின்றன.

பள்ளியின் மாண்பும், மாணவர் சேர்க்கையும், கல்வித்திறனும் மீண்டும் நிலைநிறுத்தப்பட்டால் தான் எதிர்வரும் இப்பள்ளியின் நூற்றாண்டு (விழா) ஓர் அர்த்தமுள்ள ஒன்றாக அமையும் என நம்புகிறோம்.




வேண்டுதல்:
இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் இன்று உலகெங்கும் வியாபித்துள்ளீர்கள். நீங்கள் அனைவரும் உங்கள் ஆசிரியப் பெருமக்களுடனும், இன்னும் ஹயாத்தாக உள்ள ஒரு சில திண்ணைப்பள்ளிக்கூட மாணவர்களை கௌரவப்படுத்தும் வகையிலும், வெளிநாடுவாழ் அதிரையர்கள் அதிகமானோர் பெருநாள் விடுமுறையில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த வருட நோன்பு பெருநாளை தொடர்ந்து வரும் 24.07.2015 வெள்ளிக்கிழமை மாலையில் இப்பள்ளியின் மைதானத்தில் ஒரு ஒன்றுகூடலை நடத்தினால் என்ன? இந்த ஒன்றுகூடல் வழியாக இந்தப்பள்ளி மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க உதவலாமே!

மேலத்தெரு TIYA மற்றும் கீழத்தெரு இளைஞர் சங்கங்களின் தலைமையின் கீழ், அதிரையின் அனைத்து இணையதளங்கள் ஆதரவுடன் 'சூனா வீட்டு பள்ளிக்கூட' முன்னாள் மாணவர்களின் இவ்வொன்றுகூடல் நிகழ்ச்சி இணைந்து நடத்தப்பெற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.

வரலாற்று நினைவூட்டல் ஒன்று:
நேற்று (17.01.2015) மறைந்த தமிழக முதல்வர் MGR அவர்களின் 98வது பிறந்த நாள் அவரது கட்சியினரால் கொண்டாடப்பட்டதை அறிவீர்கள். மேற்காணும் புகைப்படத்தில் பள்ளிக்கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி முதல்வராக இருந்தபொழுது MGR அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இன்றைய பிலால் நகர் பொட்டல் காடாக இருந்தபொழுது தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒருமுறையும், இன்னொருமுறை ஹாஜா நகர் திடலுக்குமாக அதிரைக்கு 3 முறை வருகை தந்துள்ளார் என்ற விபரங்கள் ஒரு தகவலுக்காக பதியப்படுகின்றது.

களத்தொகுப்பு & எழுத்து வடிவம்

ஜமால் (எ) J. ஆசிக் அஹமது
&
அதிரை அமீன்

No comments:

Post a Comment