உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, January 10, 2012

தொழில் தரும் தன்னம்பிக்கை


நமது நாட்டில் பெரும்பாலான குழந்தைகளும், இளைய தலைமுறையினரும் தக்க கல்வியறிவுபெற்று வருவது பெருமைக்குரியதே. அவர்கள் தம் பெரும்பாலான நேரத்தைப் படிப்பு, விளையாட்டு, தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்ப்பது என்றே செலவிடுகின்றனர்.
மிகச் சிலரைத் தவிர, பிறர் தங்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சிறு வேலைகளைக்கூட (உதாரணமாக அவர்களது துணிகளை அவர்களே சலவை செய்வது, இஸ்திரி போடுவது, காலணிகளைத் தூய்மையாய்த் துடைத்து பாலிஸ் போடுவது, உடைந்த பட்டன்களை மாற்றுவது தங்களது வாகனங்களைத் தூய்மையாய்த் துடைத்துப் பராமரிப்பது போன்றவைகளை செய்ய முன்வருவதும் இல்லை. செய்வதும் இல்லை.
படிப்பைத்தவிர, நேர்மையான ஏதாவது ஒரு தொழிலை, படிக்கும் காலத்திலேயே, கற்றுத் தன்னம்பிக்கையை வளர்த்துப் பயன்பெறுவோம் என்ற ஆர்வத்தில், பெற்றோர் செய்யும் நல்ல புதிய தொழிலையோ அல்லது நேர்மையான பரம்பரைத்தொழிலிலேயோ தங்களை ஈடுபடுத்திக் கொள்வபர்கள் எத்தனைபேர்?  மிகச் சிலர்தான் என்பதில் ஐயமில்லை.
காரணம், உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் எந்த நல்ல பரம்பரைத்தொழிலாயினும், பெருவாரியானவர்கள் அதனை மதிப்பதில்லை. நன்கு வேளாண்மை செய்யும் விவசாயிகூட, தனக்குப் பின்னர், தன் வாரிசுகள் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்வதை விரும்புதில்லை. எப்பாடுபட்டேனும் தனது மக்கள் படித்துப் பட்டம் பெற்று, மின் விசிறிக்கடியில் குறைந்த உழைப்பில் அதிகம் சம்பாதிப்பதையே விரும்பிச் செயல்படுகின்றனர்.
படிக்கக் குழந்தைகளை அனுப்புவதன் நோக்கமே, கல்வியறிவோடு ஒழுக்கம், நேர்மை, உழைப்பு, தேசப்பற்று போன்ற உயரிய குணங்களையும் கற்று, மனிதனாய் முழுமை பெறத்தான்.
நல்ல தொழிலுக்காக மட்டுமே கல்விகற்பதில் பயனில்லை.  கற்ற கல்வியால் நல்ல தொழிலைத் தேர்ந்தெடுக்கலாம்.  அல்லது தெரிந்த தொழிலை கற்ற கல்வியால் மேம்படுத்தி வெற்றி காணலாம்.  கற்றவர் அனைவருக்கும் அரசாங்கம் வேலை தருவது என்பது இயலாத காரியம்.

நேர்மையான முறையில் செய்யும், எந்த் தொழில் ஒரு குடும்பத்தைக் காக்ககிறதோ. அத்தொழிலைப் பெற்றோர்கள் தம் வாரிசுகளுக்கு பள்ளிப் பருவத்திலேயே பயிற்றுவித்து ஓரளவு அதில் பண்டிதனாக்குவதும் அவசியம்.
இதனைக் கற்றுக்கொண்ட இளைய தலைமுறைக்கு எதிர்காலத்தில் படிப்பு முடித்தவுடன் ஏற்ற வேலை கிடைக்காவிடினும்கூட, தன்னம்பிக்கையோடு இவ்வுலகில் வாழ்ந்துகாட்ட தொழில் இருக்கிறது என்ற மனோபாவம் வரும்.
ஆதலால், ஒரு விவசாயி வேளாண்மை பற்றியும், முடிவெட்டும் தொழிலாளி, சலவைத் தொழிலாளி, செருப்புத் தைக்கும் தொழிலாளி எல்லாம் தம் வாரிசுகளுக்கு தொழிலைக் கற்றுக்கொடுப்பது எள்ளளவும் கேவலமில்லை. இதனைக்  கேவலாமாய் நினைப்பவர்கள் அறிவிலிகள்.
இத்தொழிலைக் கற்றால் இதையே செய்ய வேண்டுமென்ற அவசியம் இல்லை.  அவன் திறமைக்கும் கல்விக்கும் வேறு தொழில் கிடைத்தால் நிச்சயம் செய்யட்டும். ஆனால் இதுவும் ஒரு தகுதியாய் இருப்பது அவனுக்கு மேலும் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
நேர்மையான எந்தத் தொழிலிலும் கேவலமில்லை என்ற மனப்பக்குவம், தளராத முயற்சி, சலைக்காத உழைப்பு இவையெல்லாம் முன்னேற்றப்படியின் முக்கியப் படிக்கட்டுக்கள்.
ஆக, பெற்றோர்களே!  ஒவ்வொரு வாரிசுக்கும் பள்ளிப் படிப்பு முடியும் முன்னரே தக்கதொரு தொழிலைக் கற்றுக்கொடுங்கள். மாணவ மாணவியரே!  நீங்களும் சிரமம்  பாராது, விருப்பத்தோடு கற்றுக்கொள்ளுங்கள்.
பெற்றோரின் தொழில் கற்க (உதாரணமாக தூர அலுவலகங்களில் பணி புரிவோர்) வாய்ப்பில்லையெனில், அருகிலுள்ள அச்சகம், கணிப்பொறி மையம், வாகனப் பட்டறை, தையற்கூடம், இயந்திரத் தொழிற்கூடம், பலபொருள் விற்பனையங்காடி, எலக்ட்ரானிக் சாதனங்களைப் பழுதுபார்க்கும் கூடங்கள் போன்ற ஏதாவதொரு தொழிலகத்திற்குச் சென்று கற்றுத்தேறலாம்.
கற்றுத்தெளிவோம் என்ற ஏக்கத்தோடு கண்ணைத் திறவுங்கள்! ஏரளமான, தொழிலுக்கான வாய்ப்புகள், சற்றே மறைந்திருப்பதைக் காணலாம்.
அட ஒன்றம் இல்லையென்றால்கூட, நமது வீட்டிலேயே துவைத்தல், இஸ்திரிபோடுதல், சமைத்தல், குழந்தைகளுக்கு முடிவெட்டிப் பார்த்தல், வீட்டைப் பெருக்கித் தூய்மையாய் வைத்திருத்தல் போன்ற வேலைகளை திறம்படத் தெரிந்து வைத்திருந்தால்கூட இதனை அடிப்படையாக்க் கொண்டு, தொழில் தொடங்க அல்லது வேலையில் சேர நிறைய வாய்ப்புண்டு.
ஒவ்வொரு வேளை உணவை உண்ணுவதற்கு முன்னர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் உண்பேன், என்ற கோட்பாட்டைக் கடைப் பிடித்தால் நாட்டில் சோம்பேறிகளும் இருக்கமாட்டார்கள். நாடும் வேகமாய் முன்னேறிவிடும்.
தொழிலுக்கும், உழைப்புக்கும் தக்கவாறுதான் ஊதியம் ஒவ்வொருவருக்கும் கிட்டும் எல்லோரும் இந்நாட்டின் முதல்வராவதோ முதலாளியாவதோ, மருத்துவ பொறியாளர் என்றாவதோ இயலாத காரியம்.  எல்லாத்துறைகளிலும் தக்கவாறு உழைக்க, உழைப்பாளி இருந்தால் தான் நாடு முன்னேறும்.

படிப்புக்குத் தக்க வேலை கிடைக்கவில்லையே என்று தாடி வளர்த்து வருந்திப்பயனில்லை. பத்தாயிரம் ரூபாய் மாதச் சம்பளத்திற்கு முயற்சிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவரை வெட்டியாய் பொழுதைப் போக்கி காலங் கழிக்காமல் நூறு ரூபாய் தின வேலைக்குப் போவதிலும் தப்பில்லை.

கிராமத்தில் பிறந்து வேளாண் தொழிலையும்,, பள்ளிப் பருவத்திலேயே செய்து வந்தமையால் இன்றும் கூட மருத்துவத் தொழில் விட்டு என்னால் திறம்பட விவசாய வேலைகளையும் செய்து முன்னேற முடியும்.
வாழ்வில் எந்த நிலையிலும், இடிந்து போய் தளர்ந்து விடாமல் எப்படியும் உழைத்து வாழ்ந்து காட்டும் மனோதைரியமும், தன்னம்பிக்கையும் எனக்குத் தந்ததே இளமையில் வறுமையும், அதிலிருந்து மீளக் கற்றுக்கொண்ட கடுமையான தொழில்களும்தான் என்றால் அது மிகையாகாது.
துடிப்புமிக்க இளைஞர்களை உருவாக்கி இந்தியாவை முன்னேற்ற இளஞ்செடிக்கு உரமிடுவோம்! இளையதலைமுறையைத் தொழில் கற்கச் செய்வோம்!

Thanks to Ameen (MKR)

No comments:

Post a Comment