உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, December 18, 2013

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் பாகம் 1 & 2 (மீள்பதிவு)

 அதிரையில் சமூக ஆர்வலர்கள் தண்ணீருக்காக கரங்கோர்த்துள்ள இன்றைய நல்ல சூழ்நிலையில் நாம் சென்ற வருடம் இரு பாகமாக எழுதிய தொடரை மீள்பதிவு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என கருதுகிறோம். 

 

(மீள்பதிவு)

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 1

கடந்த வருட விடுமுறையில் யோசித்து, இந்த வருட விடுமுறையில் மூன்று நாட்களை செலவழித்து, அலைந்து, திரிந்து, சேற்றில் வழுக்கி விழுந்து, சில இடங்களில் ஆனந்தக் குளியலிட்டும் உங்களுக்காகவே சுட்ட நம்ம ஊரு ஏரி, குளங்களை புகைப்பட ஆவணமாக தருவதில் மெய்யாலுமே சந்தோஷங்க.
சினிமா நகைச்சுவை காட்சியொன்றில் 'கிணத்த காணல' என்று காவல்துறையில் புகார் அளிப்பார் ஒருவர், அது கற்பனை
ஆனால்
அதிரையில் 'ஏகப்பட்ட குளங்களை காணல' என்பது உண்மையிலும் உண்மைங்க ஆனா புகார் தான் யாரும் பண்ணலீங்க.
நானறிந்து காணாமல் போன குளங்களும் அதன் இன்றைய நிலையும்

பங்களா குளம்    -     மேலத்தெரு (புகாரி கடை அருகில்)
 இத்தி குளம்        -    மேலத்தெரு
நாரக்குளம்        -    மேலத்தெரு (வாவாங்கனி லைன்)
 பள்ளிவாசல் குளம்    -    நெசவுத்தெரு
பள்ளக்குளம்        -    எம்.எஸ்.எம் நகர் பின்புறம்
  பறையங்குண்டு    -    மேலத்தெரு (அப்டுடேட் பாதி குளம் சுவாகா)
 எம்.எச்.குட்டை    -    மேலத்தெரு 
(தனியாருக்கு சொந்தமானது – எம்.எச் கொல்லை)

கர்நாடக அரசியலுக்கும், காவிரி தண்ணீருக்கும், காவிரியின் கடைமடையான அதிரையின் ஏரி, குளங்களுக்கும் நேரடி தொடர்பிருக்குங்க. அந்தக்கால அரசியல்வாதி காமராஜ் அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு இருந்த நீர்வள அக்கரையில் 1 சதவீதம் கூட இந்தக்கால (மறைந்த)குல்லா, தாத்தா, ஐயா, அம்மாக்களுக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பதை கீழே வரும் படத்தை பார்த்தாலே தெரிஞ்சுக்குவீங்க.

 நம்ம ஊரு CMP வாய்க்காலுக்கு தண்ணிர் திறந்து விட பயன்பட்ட ஷட்டர்
நமதூரை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி நீர்வளத்தை சேமிப்பதன் மூலம் விவசாயமும் தழைத்தோங்கும், நிலத்தடி நீரும் பெருகும், முக்கியமா 'நிலத் திருடர்களின்' ஆக்கிரமிப்பிலிருந்தும் ஏரி, குளங்கள் கொஞ்ச காலமாவது தப்பிக்குமுங்க.

முடிந்தவரை ஏரி குளங்களை அதன் ஒரிஜினல் பெயரிலேயே குறிப்பிட்டுள்ளேன், சிலவற்றை அதன் தெரு மற்றும் இடங்களின் பெயரால் அடையாளப்படுத்தியுள்ளேன். விபரம் அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னால் திருத்திக்குவேனுங்க.

அதிரையின் குளியல் குளங்கள் எல்லாம் காலவதியாகி கீழே வரும் வெறும் 3 குளங்கள் மட்டுமே குளியலுக்காக பயன்பாட்டில் இருப்பது அதிர்ச்சிகரமான செய்திங்க.

 செடியன்குளம்
வெட்டிகுளம் - கடற்கரை தெரு
புள்ள குளம் (ரெட்டகுளம்) – சுரைக்கா கொல்லை

CMP வாய்க்கால்ல தண்ணீர் வரலைன்னு குளியல் போட்ட குளங்களை காயப்போட்ட நாம மாற்று ஏற்பாடுகளாய் நமதூரை சுற்றியுள்ள ராஜாமடம் காட்டாறு, ராஜாமடம் ஏரி, மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி, மாளியக்காடு செல்லிக்குறிச்சி ஏரி போன்ற ஏரிகளிலிருந்து மாற்றுவழிகள் எளிதாக இருந்தும் தண்ணீர் நிரப்ப முயற்சிக்காமல் அலட்சியம் செய்துள்ளோமுங்க. 

 எல்லா பாதைகளும் ரோமாபுரியை நோக்கி என்ற அடைமொழிக்கேற்ப நம்ம ஊரு ஏரி தண்ணிகள் எல்லாம் கடலை நோக்கி வீணாய் சென்று கலப்பதை குறித்து கவலைப்பட ஆளில்லைங்க.


ஆட்டை போடப்பட்ட குளங்கள் போக மீதமுள்ள அதிரை நீர்நிலைகளின் காட்சியும் சாட்சியும்

செடியன்குளம் - இது அதிரையின் அடையாளங்களில் ஒன்று

காட்டுக்குளம் - சி.எம்.பி லைன் பின்புறம் மிலாரிகாடு போகும் வழி, இதன் மரத்தடியில் சுண்ணாம்பு கலவாய் ஒன்றும் இயங்கி வந்தது.


கரிச்சமணி குளம் - ஏரியாக இருந்து குளமாக சுருங்கி இன்று சாக்கடை குட்டையாக ஷிஃபா மருத்துவமனை முன் தேங்கி நிற்கிறது.


வெள்ளக்குளம் - பட்டுக்கோட்டை ரோட்டில், இமாம் ஷாஃபி பள்ளி அருகில் உள்ளது.



ஆலடிக்குளம் - வண்டிப்பேட்டை முக்கம், பெண்களுக்கென சிறப்பான, மறைவான படித்துறையை கொண்டிருந்த சரித்திர மிச்சம்.

மண்ணப்பங்குளம் - அதிரையின் ஒரே (முன்னாள்) குடிநீர் குளம், பெட்ரோல் பங்க் பின்புறம், வண்டிப்பேட்டை.



புள்ளகுளம் - இது இரண்டு குளங்களின் இணைப்பு, ரெட்டை குளம் எனவும் அழைக்கப்படுகிறது, ஒரு குளத்தில் ஆண்களும் மற்றொரு குளத்தில் பெண்களும் குளித்து வருகின்றனர், சுரைக்கா கொல்லை.


ஆணைவிழுந்தான் குளம் - சேர்மன்வாடி அருகில், அரசு மருத்துவமனை முன்புறம், மூச்சுப்பயிற்சி எடுக்க சிறந்த இடம் (தாங்கமுடியாத நாத்தம்).


ஆஸ்பத்திரிதெரு குளம் - புதுப்பள்ளி பின்புறமுள்ளது, ஒரு காலத்துல இங்கயும் தான் குளிச்சாங்க.

பஸ் ஸ்டாண்ட் குளம் - போலீஸ் ஸ்டேசன் எதிரில், பேரூராட்சி அலுவலகம் அருகில், தலைவர், துணை தலைவர், அனைத்து கவுன்சிலர்களும் தினமும் போற பாதையில ஊர் மாணத்த ஏலம் போடுற இடம்.


மாரியம்மன் கோயில் குளம் - கரையூர் தெரு கோயில் அருகில்.

கினியாங்குளம் - தரகர் தெரு, முறையான கரையோ, துறையோ, வழியோ இல்லாத வித்தியாசமான, சுத்தமான குளம், குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் கொல்லைபுறங்களே இக்குளத்துக்கு செல்லும் வழி என்பதால் வீடுகள் நடுவே அமைந்துள்ள ஓர் தண்ணீர் தீவு எனவும் சொல்லலாம்.



சேனாங்குளம் - கினியாங்குளத்தோடு ஒட்டி உறவாடும் அசுத்தநீர் தேக்கம், கடற்கரை தெரு தர்கா பின்புறமுள்ளது.



வெட்டிக்குளம் - இன்னும் பயன்பாட்டில் உள்ள கடற்கரை தெரு குளம்.


சமரங்குளம் - புதுத்தெரு, மிஸ்கீன் பள்ளி முன்புறமுள்ளது, கொஞ்சம் கொஞ்சமா மூடிக்கிட்டே வர்றாங்க (வலிக்காம அடிக்கிறாங்களாம்).

செய்னாங்குளம் - கீழத்தெரு, காலேஜ் பின்புறமுள்ளது, செடியனின் வடிகால் குளம்.

புதுக்குளம் - மேலத்தெரு, பேர்ல மட்டும் தாங்க புதுசு, மாடு கழுவ கூட லாயக்கில்லீங்க.

சங்கத்து குளம் - நெசவு தெரு, இதுவும் ஒர் (முன்னாள்) ரெட்டை குளங்க, பள்ளியாகுளம் என்ற பேரும் உள்ளது. இதில் இன்னொரு பகுதி குளத்தில ஆளுக்கு கொஞ்சமா வீடு கட்டிக்கிட்டாங்க. இது குளமாயிருந்த காலத்துல கரையோர பூவரச மரத்துல ஒரு வேடந்தாங்களே வந்து குடியிருக்குமுங்க, மாலை நேரத்துல அடையும் பறவைகளின் ரீங்காரம் இன்னும் காதுலயும், மனசுலயும் அப்படியே நிக்குதுங்க.

செக்கடிகுளம் - நடுத்தெரு, ஊர் மத்தியின் கம்பீரம்.


மரைக்காகுளம் - பெண்களுக்கு மட்டுமே இருந்த பிரத்தியேக குளம். மேலத்தெருவுக்கு இது மொடக்குண்டு, புதுமனைதெருவுக்கு இது மரைக்காகுளம், வருங்காலத்துல எல்லோருக்கும் இது வீட்டுமனை.


பெத்தாங்குளம் - மேலத்தெருவிலிருந்து மகிழங்கோட்டை செல்லும் வழியில், ஆளில்லா ரயில்வே கிராஸிங் கீழே.


அதிரையை பற்றி யாராவது ஆன்லைன் மியூசியம் திறப்பதாக இருந்ததால் தாராளமாக இந்த புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ளலாமுங்க.

 

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 2

சென்ற தொடரில் தண்ணீருக்காக நாம் கண்ணீர் வடிக்க வேண்டிய சூழலின் நமதூர் குளங்களின் இன்றைய நிலைகளை கண்டோம்.
இத்தொடரில் ராஜாமடம் காட்டாறு மற்றும் நமதூரை சுற்றியுள்ள ஏரி மற்றும் வாய்க்கால்களின் நிலைகளை சற்று அலசலாம்.
ராஜாமடம் காட்டாறு


நிலத்தடி நீருக்கு அடுத்து, பட்டுக்கோட்டை ஓடை என்றழைக்கப்பட்டு, கிராமங்கள் ஊடாக தொக்காலிகாடு கிராமத்திற்குள் ராஜாமடம் காட்டாறு என்ற பெயரில் நுழையும் மஹாராஜா சமுத்திரம் ஆறு தான் அதிரையின் பிரதான நீர் ஆதாரம்.
மஹாராஜா சமுத்திரம் அணை


தொக்காலிக்காடு மஹாராஜாசமுத்திரம் அணைக்கட்டில் நீர் தடுக்கப்பட்டு ஒர் கிளை வாய்க்கால் மூலம் விவசாயம் மற்றும் வழியில் உள்ள குளங்களை நிரப்ப காலங்காலமாக திருப்பப்பட்டு வந்தது. (பாகம் 1ல் இதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
 
கிளை வாய்க்கால்

ராஜாமடம் பாலம்

சறுக்கை




கர்நாடகத்தின் தமிழகத்திற்கான காவிரி நீர் கைவிரிப்பில் துவங்கிய CMP வாய்க்கால் பயன்பாட்டை நமதூர் புண்ணியவான்கள் சிலர் சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்தி குளத்திற்கு நீர் செல்லும் சிறு, குறு கிளை வாய்க்கால்களை பொறுப்பாக மூடி விட்டனர்.
இச்செயலால் செடியன், மரைக்கா, செக்கடி, ஆலடி, மண்ணப்பன் என மக்கள் பயன்பாட்டில் இருந்தவை இன்று காட்சிப் பொருளாகும் நிலைக்கு சென்றுவிட்டது. ஆதாங்க நம்ம விரலை எடுத்தே நம்ம கண்ண குத்திக்கிட்டோம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.
சின்ன ஏரி

பெரிய ஏரி

ராஜாமடம் காட்டாறாக மாறி மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டை நிறைத்து விட்டு வழிந்தோடி வரும் வழியில் இன்னொரு கிளை வாய்க்கால் மூலம் ராஜாமடம் ஏரியையும் நிறைக்குதுங்க. இந்த தண்ணீர் தான் விவசாயம் போக, நம்மூர் காலேஜ் வடிகால் வாய்க்கால் வழியா அப்பப்ப பிலால் நகரை ஒரு கை பார்த்துட்டு கடல்ல போய் வீணா சங்கமம் ஆகுதுங்க.
இந்த வாய்க்காலை ஒரு பொறுப்பான திட்டமிடல்களுடன் ஊருக்குள் மீண்டும் கொண்டு செல்லலாம், அதாவது ரயில்வே லைன் வழியாக அந்த தண்ணீரை மகிழங்கோட்டையில் அதே பழைய CMP வாய்க்காலில் இணைக்க முடியும்.
ராஜாமடம் ஏரி காலேஜ் வடிகால் வாய்க்கால்



இந்த மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டு, ராஜாமடம் காட்டாறு, ஆடதொட செடிகளால் சூழப்பட்டும், தோப்புக்காரர்களால் ஓரங்களில் அரிக்கப்பட்டும் வரும் ராஜாமடம் பெரிய ஏரி, சின்ன ஏரி, வழிமறைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள சறுக்கை, வடிகால் வாய்க்கால் என சீசன் குளியலுக்கு இன்னும் பயன்படுவது ஆறுதலான செய்திங்க.
செல்லிக்குறிச்சி ஏரி


இதுல தண்ணி வழிந்தால் நேரா கரிச்சமணிக்கு வரும்
அடுத்து, சுமார் 5, 6 கிலோ மீட்டர் பரப்பளவில் பள்ளிகொண்டான் முதல் மாளியக்காடு வரை விரிந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரி நீர் அதிரையின் கரிச்சமணி குளம் வரைக்கும் வருதுங்க.

கரிச்சமணியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கினா, 100 மீட்டர் தூரத்துல ஆலடி குளத்தையும் நிரப்பலாம். உபரி நீரை 50 மீட்டர் தூரத்துல உள்ள CMP வாய்க்காலிலும் விடலாம். செல்லிக்குறிச்சி ஏரியும் பிளாட் ஆகுமுன்பாக ஆழப்படுத்தப்பட வேண்டும் இதனால் வருட முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதுடன் விவசாயமும் நிலத்தடி நீரும் கணிசமா உயருமுங்க.


மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி

செல்லிக்குறிச்சி ஏரி நீர் மூலமும் மழைநீர் மூலமும் நிரப்பப்படும் மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரியும் நம்ம ஊரு ஏரி தாங்க, பேருதாங்க மழவேனிற்காடு ஆனா இருப்பது வண்டிப்பேட்டை பக்கத்துலங்க.

ஒரு காலத்தில் கடல் ஜாவியா வரை இருந்தது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை, இக்கூற்று உண்மை என்றால் அதிரையில் மறைந்து வரும் (மறைந்து விட்ட) நீர் ஆதாரங்களில் சேர்க்கத் தகுதியானதே என்றாலும் ஜாவியா வரை கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும் கழிமுகம் (வாய்க்கால்) முன்பு இருந்திருக்கக்கூடும் இதையே கடல் ஜாவியா வரை இருந்ததாக சிலர் நம்ப காரணமாக இருக்கலாம்.






செம்படவர் தெரு கழிமுக வாய்க்கால்
(இந்த வாய்க்காலின் தொடர் தான் அந்த காலத்துல ஜாவியா வரை நீண்டும், சற்று அகலமாகவும், ஆழமாகவும் இருந்திருக்கக்கூடும்)

 
குறிப்பு :

ஜாவியாவிற்கு பின்புறம் செய்னாங்குளம் செல்லும் இறக்கத்தில் (தோணி) வத்தை கட்டும் தொழில் பல்லாண்டுகள் இயங்கி வந்தது என் கருத்திற்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன், கடலுக்குச் செல்லும் கழிமுக வாய்க்கால் அருகே இருந்ததனால் தான் இத்தொழிற்கூடம் இங்கே இயங்கி இருக்கலாம்.

இப்பவும் இருக்கிற காலேஜ் வாய்க்காலுக்கும் ஜாவியாவுக்கு எவ்வளவு தூரம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். காலப்போக்கில் வாய்க்காலும் போச்சு! வத்தை கட்டும் தொழிலும் போச்சு!!

நீர்நிலை குறித்த ஆக்கம் என்பதால் நமதூர் கடல் காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

நமதூரை சுற்றியுள்ள ஏரிகளால் பயன்கள் ஏராளம் ஆனா பயன்படுத்தத் தெரியாத ஏமாளிங்க நாமங்கிறது தான் ஒட்டு மொத்த உண்மைங்க என ஈனஸ்வரத்தில் முனகி என் ஆதங்கத்தை முடிக்கிறேங்க.

தொகுப்பு : அதிரைஅமீன்
படங்கள் : ஆசிக் அகமது
இவர்களுடன் நாளைய செய்தியாளர் அஸ்அத்

Sunday, December 15, 2013

JAQH மாநிலத் துணைத் தலைவர் சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் துபை, அபுதாபி நிகழ்ச்சிகள்

12.12.2013 வியாழக்கிழமை பின்னேரம் இரவு 9.15 மணிமுதல் 10.45 மணிவரை துபை, தெய்ரா பகுதியில் அமைந்துள்ள மதுக்கூர் தவ்ஹீத் மர்கஸில் 'தவ்பா' என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


13.12.2013 வெள்ளியன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரை அமீரகம் வாழ் அதிரையர்களுக்காக சிறப்பு தர்பியா பயிலரங்கம் துபை, தெய்ரா, நைஃப் ரோட்டில் அமைந்துள்ள 'தவ்ஹீத் இல்லத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், அமீரகத்திற்கு குறுகிய கால வருகை புரிந்துள்ள JAQH மாநிலத் துணைத் தலைவரும் இஸ்லாமிய அழைப்பாளருமாகிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'அன்றாட வாழ்வில் ஆயிரமாயிரம் நன்மைகள்' என்ற பொருளில் ஈடிணையற்ற அருளாளன் அல்லாஹூத்தஆலா அடியார்களாகிய நம்மீது கருணை கொண்டு வாரி வழங்கும் நன்மைகளை பட்டியலிட்டு ஏடுகளிலும் உள்ளத்திலும் பதிவேற்றிக் கொள்ளச் செய்தார்கள்.

http://www.youtube.com/watch?v=JM6i-YeTsDU 



ஒழுச் செய்வதில் தொடங்கி பாங்கு சொல்லும் வரையிலான நமது ஒவ்வொரு சிறு அசைவுக்கும் கிடைக்கும் அளப்பெரிய நன்மைகளை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் மிகத் தெளிவாக விளக்கி ஆரம்ப வகுப்பை நிறைவு செய்தார்கள்.

இதன் தொடர்ச்சி, இன்ஷா அல்லாஹ் சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் மீண்டும் அமீரகம் வரும் போது தொடரும். இத்தர்பியாவின் பயனை நீங்களும் பெற்றிட நம்முடைய வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள காணோளியை பாருங்கள், அடுத்தவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.


13.12.2013 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா ஐகாட் சிட்டி 1ல் அமைந்துள்ள ஓர் தனியார் கார்கோ கம்பெனி பின்புறம் அமைந்துள்ள பள்ளிவாசலில் இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை 'உள்ளத்தை வெல்வோம்' என்ற தலைப்பின் கீழ் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.


இறுதியாக, 14.12.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா ஐகாட் சிட்டி 2ல் அமைந்துள்ள போர்ஸிலான் கம்பெனி பள்ளிவாசல் வளாகத்தில் பிற மத சகோதரர்களுக்கான இஸ்லாமிய தஃவா நிகழ்ச்சி இரவு 8 மணிமுதல் 9.30 மணிவரை நடைபெற்றது. இஸ்லாமிய இறைநம்பிக்கையுடன் பிற மத நம்பிக்கைகள் ஒப்பீடு செய்யப்பட்டு இறுதியாக இஸ்லாத்தினை தழுவிட பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. சொற்பொழிவுக்குப் பின் பிற மத சகோதரர்களின் கேள்விகளுக்கு தெளிவான விளக்கங்கள் கூறப்பட்டன.

களத்திலிருந்து
அதிரைஅமீன்

Tuesday, December 10, 2013

அமீரக அதிரையர்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி

AIM வலைத்தளம் வழங்கும் அமீரக அதிரையர்களுக்கான சிறப்பு தர்பியா நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு அமீரகம் வாழ் அனைத்து அதிரை சகோதரர்களுக்காக மிகவும் பயனுள்ளதோர் தர்பியா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோது அனைத்து அதிரை சகோதரர்களும் தவறாது கலந்து நற்பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

வழங்குபவர்
 தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
(இஸ்லாமிய அழைப்பாளர்)

நாள்   
13.12.2013    வெள்ளிக்கிழமை

நேரம்
காலை 9 மணிமுதல் 11 மணிவரை

இடம்  
தவ்ஹீத் இல்லம்
அறை எண்: 109
அல் ஜர்வானி பில்டிங்
அல் புத்தைம் மஸ்ஜித் எதிர்புறம்
 டல்ஃப் [DULF] ஹோட்டல் பின்புறம்
 நைஃப் ரோடு
தெய்ரா, துபை.

மேலும் விபரங்களுக்கு
S. அப்துல் காதர்    055 2829759
A. முஹமது அமீன்    050 8519008

குறிப்பு :
இத்தர்பியா நிகழ்ச்சியில் எத்தகைய வசூலும் செய்யப்படாது மேலும் யாரை குறித்தும் கண்ணியக்குறைவாகவும் பேசப்படாது என உறுதியளித்து, ஈருலக பயன் பெற திரண்டு வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை இஸ்லாமிக் மிஷன் வலைத்தளம்
www.aimuaeadirai.blogspot.com

Monday, December 9, 2013

அபுதாபியில் நடைபெற்ற சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

06.12.2013 வெள்ளியன்று இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா, பனியாஸ், சைனா கேம்ப் பகுதியில் அமைந்துள்ள MBM கேம்ப் பள்ளியில் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'மறுமை வாழ்க்கை' எனும் தலைப்பில் உருக்கமானதோர் உரை நிகழ்த்தினார்கள்.

07.12.2013 சனிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின் முஸஃபா, சாபியா 12ல் அமைந்துள்ள சகோதரர் அதிரை மாலிக் அவர்களுடைய இல்லத்தில், 'நன்மைகளை பெற்றுத்தரும் நல்லமல்கள்' என்ற தலைப்பில் சிறப்பு வகுப்பு நடைபெற்றது. அரிய பல நற்செய்திகளை எடுத்துக் கூறி அமல்களை அதிகமதிகம் செய்திட ஆர்வமூட்டினார்.

08.12.2013 ஞாயிறன்று இஷா தொழுகைக்குப்பின் முஸஃபா, ஐகாட் சிட்டி 2ல் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க அமர்வில், 'இஸ்லாம் வளர்ந்த வரலாறு' என்ற தலைப்பில், ஸஹாபாக்களின் தியாக வரலாற்றை நினைவு கூறி பொடுபோக்கில் வாழும் நம் நெஞ்சங்களை தட்டியெழுப்பினார்.

மேற்காணும் நிகழ்வுகளில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அதிரைஅமீன்

துபையில் நடைபெற்ற மவ்லவி. இஸ்மாயில் ஸலஃபி (இலங்கை) அவர்களின் நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

தர்பியா

06.12.2013 வெள்ளியன்று காலை 9 மணி முதல் 11 மணி வரை துபை, தெய்ரா, அல்பரஹா பகுதியில் அமைந்துள்ள அல் மனார் சென்டர் கிளையில், கருத்து வேறுபாடுகளை களைவது எப்படி? என்ற தலைப்பின் கீழ் மார்க்க விவகாரங்களை எவ்வாறு அணுக வேண்டும்? குர்ஆன் ஹதீஸ்களின் முரணாக நமக்கு தெரிபவற்றை எவ்வாறு விளங்க வேண்டும்? கருத்து வேறுபாடுகள் என்பது புதிதா? அல்லது ரஸூல் (ஸல்) அவர்களின் காலத்திலேயே இருந்த ஒன்றா? ஸஹாபாக்கள் இடையே ஏற்படும் இருவேறு கருத்துக்களின் போது எவ்வாறு நடந்து கொண்டார்கள் என பல்வேறு விடயங்களையும் மிக மிகத் தெளிவாக குர்ஆன் ஹதீஸ் ஒளியில் எடுத்துரைத்தார்கள்.



மார்க்க சொற்பொழிவு

06.12.2013 வெள்ளியன்று இஷாவுக்குப்பின், அல்கூஸ் பகுதியில் அடைந்துள்ள அல்மனார் சென்டரில் 'வாழ்க்கையே வணக்கமாக' என்ற தலைப்பின் கீழ் இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மார்க்க அறிஞர் இஸ்மாயில் ஸலஃபி அவர்கள் அழகியதொரு அறவுரை நிகழ்த்தினார்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் வாழ்க்கை வேறு, வணக்கம் வேறல்ல மாறாக ஒவ்வொரு செயலுமே இறை வணக்கம் தான் என பல்வேறு தரவுகளை கூறி நிறுவினார்கள். உதாரணமாக, நம்முடைய தொழுகை மட்டுமல்ல வணக்கம் தனிப்பட்ட தேவைகளான உணவு சாப்பிடுதல், வியாபாரம், கழிப்பிடம் செல்லுதல், இல்லறம், உறக்கம் என ஒவ்வொன்றும் எவ்வாறு வணக்கமாக அமையும் விளக்கினார்கள்.

இறுதியாக, பேசப்பட்ட தலைப்பிலிருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நீண்ட நாட்களுக்குப்பின் நல்லதொரு சொற்பொழிவினை செவிமடுத்த நிறைவுடன் நிறைந்த அரங்கினர் கலைந்து சென்றனர், அல்ஹம்துலில்லாஹ்.












அதிரைஅமீன்

Sunday, December 1, 2013

நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன்; நீ என்னிடம் ஏமாறு

AMWAY பகல் கொள்ளை

"AMWAY" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.
இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பண்றிங்களா?". இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் 'உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க' என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று. இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.

FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான். அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.

இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.

ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை. நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும்.
உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30% தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான். மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர், விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)

மேலும் சில ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.
TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30% தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:
►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம்.
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான், நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் (ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.

இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள். அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிறுவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும். இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV, அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.

லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.

இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை, ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான். இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.

இந்த பதிவைப் படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
"நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன்; நீ என்னிடம் ஏமாறு" என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்..